Wednesday 9 October 2013

வினை பயன்

ஒவ்வோர் வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டன் விதி. அதுபோல நாம் செய்யும் நன்மை தீமைக்கும் பலன் கண்டிப்பாக உண்டு. அது கர்மா, விதி, கடவுள் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லி அழைக்கலாம்.

கதை போலும் நிகழ்வு..

தெருவில் ஒரு நாலு வீடு தள்ளி சுதந்திர போராட்ட தியாகி ஒருவரின் வீடு உண்டு.. செல்வ செழிப்பு மிக்க குடும்பம். பிள்ளைகளுக்கு எல்லாம், நேரு, காந்தி, போஸ் என்று பெயர்கள்.. முத்த மகன் பெயர் நேரு. செல்வ செழிப்பு, அப்பாவின் புகழ் தந்த செல்வாக்கு, செல்லம், கூடா நட்பு, படிப்பில் நாட்டமில்லாமை எல்லாம் அந்த பையனை ஒரு மோசமான மைனர் பையனாக மாற்றியது. குடி, சிகரெட், பெண் சகவாசம் என எல்லா பழக்கங்களும் சேர பெற்றோர் பையனை சரி பண்ண முயற்சி செய்யாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் சரி ஆகிவிடும் என்று பெண் பார்க்க வசதி ஏகமாக இருந்தாலும் உள்ளூரில் அவ்வளவாக பெண் கிடைக்காமல் மதுரை பக்கம் இருந்து இவர்களுக்கு சம அந்தஸ்த்தில் உள்ள குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தார்கள்.

பெண் அதிகம் சத்தமாக கூட பேச தெரியாத அமைதியான பெண். அப்பா கண்டித்தால் பணம் தர மறுத்தால் வந்து மனைவியை அடிப்பான். வார்த்தைகளால் நோகடிப்பான்.. ஆனாலும் அந்த பெண் அழ மட்டுமே செய்வார். மாமனார் மாமியார், கொழுந்தனார் என்று எல்லாரும் அந்த பெண்ணுக்கு சப்போர்ட் செய்ய அதற்கும் மிக கேவலமான காது கூசும் வார்த்தைகளால் அந்த பெண்ணுக்கு திட்டு.. மற்றவர்களின் அன்பால் அந்த பெண் தன் பிறந்தவீட்டிற்கோ, அக்கம் பக்கம் பேசுவதோ கிடையாது.

இதனிடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.. மனைவி மீது இல்லை என்றாலும் பிள்ளை மீது அதிக அன்பு உண்டு.. ஆனால் மனைவியை அடித்து மிரட்டி காசு வாங்கி குடித்து ஊர் சுற்றுவது, பிற பெண்கள் சகவாசத்தை விடவில்லை..ஒரு நாள் இதே போல சண்டை நடக்க அவன் மனைவி என்னிடம் இருக்கும் நகை எல்லாம் அப்பா அம்மாவிடம் கொடுத்துவிட்டேன் பணமும் இல்லை என்று சொல்ல.. பணம் தரலேன்னா பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று மிரட்டினான். சண்டை தெருவுக்கே கேட்டது.. அன்று எங்கள் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு சிறிய கோவிலில் அம்மனுக்கு பாலபிஷேகம் என்று ஸ்பீக்கர் சத்தம் வேறு..

தெரு மக்கள் அவர்கள் வீட்டில் இருந்தவர்கள் உட்பட எல்லாம் தீபாராதனை பார்க்க சென்று விட இவன் மனைவியுடனான சண்டை முற்றி ஒரு வேகத்தில் பெட்ரோல் எடுத்து வந்து ஊற்றி கொளுத்திவிட்டான்.. அக்கம் பக்கம் சத்தம் கேட்டு விஷயம் தெரிந்து வருவதற்குள் பெட்ரோல் காரணமாக அந்த பெண் ஏகத்தில் காயப்பட உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டாள்.

மாமனார், மாமியார் எல்லாரும் ஐயோ ஒரு பெண்ணை இந்த கதிக்கு ஆளாக்கிவிட்டோம் என்று அழ பெண்ணின் மாமனார் அந்த பெண்ணின் காலை பிடித்து என்னை மன்னிச்சுடுமா என்று ஊரே அரற்ற கதறினார்.. போலீஸ் வாக்குமூலம் கேட்க அந்த பெண் வயிற்று வலி தாங்காமல் எல்லோரும் கோவிலுக்கு போய் இருந்த நேரம் நானே தான் தற்கொலை செய்து கொண்டேன் என்று அவரே வாக்குமூலம் கொடுத்தார்..

பின் மாமனாரிடம், இந்த குடும்பத்துக்கு மூத்த மருமகள் நான் என்னால் இந்த குடும்ப மானம் வெளியே போக வேண்டாம் மாமா என்று சொல்லிவிட்டு ஆனால் ஒன்று மட்டும் என் அம்மா அண்ணன் எல்லாம் வரும் வரை நான் உயிரோடு இருப்பேனா தெரியாது.. எனக்கு ஒரே ஒரு உறுதி மட்டும் கொடுங்கள் இந்த பிள்ளை என் அம்மா வீட்டில் தான் இருக்கணும் உங்க பிள்ளை நிழல் கூட அவன் மேல் பட கூடாது என்று சொல்லி இறந்து விட்டாள்...

அந்த குடும்பமே உடைந்தது.. போலீஸ் விசாரணை தண்டனை எதுவும் இல்லை. அந்த பெண்ணின் பெற்றோர் என் ஒரே பொண்ணை குடுத்தேன் அவளை சாம்பலா கொடுத்துட்டீங்களே நல்லா இருங்க என்று சொல்லி குழந்தையை மட்டும் எடுத்து கொண்டு சென்று விட்டனர். 

அந்த குடும்பம் அதன் பின் அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறியது..மாமனார் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கினார். அவரது இன்னொரு மகன் சில வருடங்கள் கழித்து கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற கோவிலின் பிரகாரத்தில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டான்.

அந்த மனைவியை கொளுத்தியவன் பின் வேறு திருமணம் செய்து கொண்டான். ஆனால் அவன் குற்ற உணர்வு அவனை கூறு போட இரண்டாவது மனைவிக்கும் பிறந்த குழந்தைக்கும் சொத்து எழுதி தனியாக இருக்க சொல்லி பிரிந்துவிட்டான்.

இப்போது கிட்டத்தட்ட பைத்தியம் போல பிதற்றி கொண்டு அந்த வீட்டில் அவளை கொளுத்திய அறையில் போய் படுத்து கொண்டு என்னை கூட்டிட்டு போ என்னை ஏன் இன்னும் உயிரோடு விட்டு வச்சிருக்க என்று இரவில் அவன் அலறும் சத்தம் தெருவில் கேட்கிறது.. இம்முறை நான் ஊருக்கு போயிருந்த போது பிள்ளையார் பார்க்க தெருவில் நிற்க, என் மகனை பார்த்தவுடன் பக்கத்தில் வந்தான் நந்தாக்கு (அவன் முதல் மகன் பிறந்த காலகட்டத்தில் தான் என் பெரிய மகனும் பிறந்தான்..)இவன் வயசு தானே இருக்கும்.. நான் கண்ணால கூட பார்க்கல மா என்று சொல்லி சென்றுவிட்டான்..
அவள் இறந்து கிட்டத்தட்ட இருவது வருடங்கள் கடந்துவிட்டது... இன்னும் இவன் செய்த செயல் இவனை பின்னி பின்னி இழுக்கிறது. இவன் போலீஸ் ஜெயில் என்று சென்று இருந்தால் கூட இவ்வளவு தண்டனை அனுபவித்திருக்க மாட்டான் என்று தோன்றியது... இன்னும் அரற்றி கொண்டு சாவை எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்..

இருபது வருடம் முன் ஒரு ஹீரோ போல தெருவை பைக்கில், காரில் வலம் வந்தவன் இன்று அழுது கொண்டே மனநிலை பிரழ்ந்தவனாக யார் வீட்டு திண்ணையிலோ கார் ஷெட்டிலோ, கோவிலிலோ உருண்டு கொண்டு இருக்கிறான். தெருவில் உள்ளோர் எல்லாருக்கும் தெரியும் அந்த கத்தல் குரலின் பின் இருக்கும் நிஜத்தின் வீரியம்.. தெரியாதவர்கள் விசாரிக்க தெரிந்தவர்கள் மௌனமாக கடந்து செல்கிறோம் பார்வையாளராக.....
வார்த்தை கத்திகளை
உன்னை விட நன்றாகவே
குருதி கசிய, கசிவது வெளியே தெரியாமல்
சொருக தெரியும்..

வலியின் வீரியம்
தாங்கியவள் அதனால்
மெளனமாக விலகி செல்கிறேன்..


*********************

அர்த்தமில்லாத விசாரிப்புகள் தான் 
அர்த்தமில்லா பேச்சுகள் தான் 
அர்த்தமில்லா சண்டைகள் தான் 
அர்த்தமில்லா கோபங்கள் தான் 
அர்த்தமில்லா மௌனங்கள் தான் 
ஆனால் இவை யாவும் 
உன்னிடம் அர்த்தமுள்ளதாகிறது...



********