Saturday 25 February 2017

மார்க்ஸிம் கார்க்கி - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

மார்க்ஸிம் கார்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு – அகல் வெளியீடு – ரஷ்ய மொழி கதையை தமிழில் மொழிப்பெயர்த்திருப்பவர்கள் பூ. சோமசுந்தரம் & நா. முக்கம்து ஷெரீபு.

பதினான்கு சிறுகதைகள் அடங்கிய இந்த தொகுப்பில், சில கதைகள் குறுநாவல் என்றே சொல்லலாம். பெரும்பாலான கதைகள் செவி வழி கேட்ட கதைகளாகவும், நாடோடிகளின் வாழ்க்கையை பேசும் கதையாகவும் இருக்கிறது. அந்த கால ரஷ்ய பிரபுத்துவ வாழ்க்கையை சில கதைகள் பிரபலித்தாலும், பெரும்பாலான கதைகள் நாடோடிகள் மற்றும் அடிதட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்கிறது.

ஒரு சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை முதல் கதை வாசகரை ஈர்க்குமாறு அமைந்தால், அந்த மொத்த தொகுப்பும் வாசித்து முடிக்கும் வரை எதிர்பார்ப்புகள் இருக்கும். மார்க்ஸிம் கார்கியின் இந்த தொகுப்பில் முதல் கதை என்று இல்லை அனைத்து கதைகளும் வெவ்வேறு தளத்தில் நின்று சாமானியனின் உள்ளத்து உணர்வுகளையும், அவர்கள் சிக்கல்களையும், அடிமை வாழ்க்கை முறைகளையும் பேசுகிறது.

முதல் கதையான ஜிப்சி என்ற நாடோடி இனத்தவரின் வாழ்க்கை முறையையும், அவர்களில் அழகான பெண் ஒருத்தியின் வீரத்தையும், அவள் காதலனை தேர்ந்தெடுக்கும் விதம், அவள் காதல் அவனை கிறங்கடித்து அவன் அறிவை அழித்து அவள் முன் மண்டியிட வைக்கும் என்று சொல்லி காதலித்தாலும் ஏற்க மறுக்கும் ராத்தா, அவளில்லாமல் வாழ முடியாது அவளை அடைந்தாலும் வீரனாக இருக்க முடியாது என்று அவளை கொன்று, அவள் தந்தையின் கையால் மரித்து போகும் லோய்கோ என்று செவி வழி கதையாக கேட்ட ஜிப்சி கதையை இந்த முதல் கதை பதிவு செய்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் ஜிப்சி இனத்தவரின் காதலும், வீரமும் தனித்த ஒரு உணர்வு தளத்தில் வெளிப்பட்டுள்ளது.

இஸெர்கீல் கிழவி கதை பெண் ஒருத்தி தன் வாழ்க்கையை ஒரு நாடோடிக்கு சொல்கிறாள். அவள் வாழ்வில் சந்தித்த காதலன்களை, அவர்களை சர்வ சாதரணமாக சூழலுக்காகவும், தன் சுயநலத்துக்காகவும் கொலை செய்தத ஒருத்தி இறுதியில் ஒருவனிடம் காதல் வயப்பட்டு அவனுக்காக பைத்தியம் போல அலைகிறாள். ஆனால் அவனோ இவள் காதல் மூலம் சிறையில் இருந்து தப்பிவிட்டு பின் இவளை புறக்கணித்து செல்கிறான். இந்த கிழவியின் கதை வாசிக்கும்போது பல்வேறு உணர்வுகள் பெண்ணின் காமம், காதல் சார்ந்து நமக்குள் விதைத்து செல்கிறது. முதலில் கதை கேட்டவன் நம்ப முடியாதது போலவே பல இடங்களில் இப்படியா இப்படியா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

திருடன் கதை, திருட்டையே பிழைப்பாக வைத்திருக்கும் ஒருவனை வாழ்வில் நேர்மையான, கடவுளின் சட்ட திட்டங்களுக்கு பயந்த ஒருவன் சந்திக்கிறான். திருடனுடைய தொழிலில் உதவி செய்கின்ற வேலை என்று தெரியாமலே திருட்டு வேலைக்கு ஒத்து கொள்கிறான். ஒரு நாள் இரவு திருட்டில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்து திருடன் திருடி வர அவனுக்கு துடுப்பு வலிக்கும் வேலைக்காக ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளம் பேசி திருடனுடன் செல்கிறான் . அவன் திருடும் போது இவனுக்கு தன்னை திருடன் தனது தொழிலுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளான் என்பது தெரிகிறது. தன் புனிதம் கெட்டுவிட்டதாக அழுது புலம்பும் இவன் பின்பு திருடிய பொருளை விற்றுகிடைக்கும் பணத்தின் மீது ஆசைப்பட்டு திருடனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். அதிர்ந்து போகும் திருடனின் அக உணர்வும், கடவுளின் பெயரால் ஒழுக்க விதிகளை பின்பற்றும் ஒருவனின் அக உணர்வும் அவர்களுக்குள் இருக்கும் முரணை விவரித்திருக்கும் பாங்கும்,  அந்த திருட்டை அப்போதைய பயணத்தை சாகசத்தை விவரித்திருக்கும் இடம் எல்லாம் வாசகர்களை கதையில் கட்டி போடுகிறது.

சலிப்பை போக்க கதை, ஒரு கிராமத்தில் ரயில் நிலையத்தையும் அதில் பணி புரிபவர்களையும் பற்றி பேசுகிற கதை. ஒரு ரயில் வந்து போகும் போது சில நேர பரபரப்பு மட்டுமே அந்த ஊர் மக்களின் பொழுதுபோக்கு வேறு பொழுது போக வழியில்லாத அந்த கிராமத்தில் ரயில் நிலைய தலைவரின் வீட்டில் பணி செய்யும் அழகற்ற பெண். அம்மை தழும்புகளும், சீரற்ற அங்க அமைப்புகளும் கலந்து அருவெறுப்பான தோற்றத்தின் காரணமாகவே திருமணம் நடக்காமல் இருக்க சமையல்காரியாக அந்த நிலைய தலைவரின் மனைவிக்கு குழந்தைகளை கவனித்து கொள்ளும் சேடியாக வேலை செய்கிறாள் அந்த அழகற்ற பெண் அரினா.

அவளை அந்த ரயில்வே நிலையத்தில் பணி புரியும் இன்னொரு ஊழியனான கமோஸான் கவனிக்கிறான். அவளிடம் தன் சொந்த வேலைகளை ஏவுகிறான். அவளும் ஒரு வித அடிமை போல அதையெல்லாம் செய்கிறாள். ஒரு நாள் பேச்சு வாக்கில் அவள் தனியானவள், அவளின் உருவம் காரணமாக யாரும் நெருங்கவில்லை என்பதெல்லாம் கமோசானுக்கு தெரிய வருகிறது. தன் வீட்டுக்கு இரவு பத்து மணிக்கு யாருக்கும் தெரியாமல் வருமாறு அவளை அழைக்கிறான், அவளிடம் கடனாக பெற்ற பணத்தை அப்போது தருவதாக கூறுகிறான். அவளும் செல்கிறாள். விடிந்து தான் திரும்புகிறாள்.

கமோசான் அதன் பின் அவளை அழைக்கவில்லை, அவளிடம் கடனாக பெற்ற பணத்தையும் கொடுக்கவில்லை. தானாகவே அவள் அவனை தேடி போனாள். அவளிடம் இந்த உறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என உத்தரவிடுகிறான். அவள் மூலம் வேறு என்னென்ன வேலைகள் எல்லாம் பெற்று கொள்ள முடியுமோ அத்தனையும் பெற்று கொள்கிறான். அவள் கிட்டத்தட்ட அடிமை போல அவன் இட்ட வேலைகளை செய்தாள். அவன் அவளுக்கு ஏதோ பிச்சை இடுவது போல அவள் அவலட்சணத்தை குத்தி காட்டுவான். அவள் சில நாட்கள் போகாமல் இருந்தால் இன்று வா என்று யாருக்கும் தெரியாமல் முணுமுணுத்துவிட்டு செல்வான். அவளும் உடனே கட்டளைக்கு கீழ்படிந்து செல்வாள்.

இவர்களின் உறவு அங்கு பணி புரியும் ஊழியன் மூலம் தெரியவர ஒரு நாள் அரினா கமோசான் அறைக்குள் இருக்கும்போது பூட்டிவிடுகிறான். அப்படி மாட்டிக்கொண்ட அன்று இரவு கமோசான் திட்டி தீர்க்கிறான் அரினாவை. தன் மானமே போய்விட்டதாக குமைகிறான். மறுநாள் காலை கதவை திறக்கும் ரயில் நிலைய அதிகாரி, ஊழியர்கள்,அனைவருக்கும் தங்கள் சலிப்பை மறக்க ஒரு விஷயம் கிடைத்த சந்தோசத்தில் இருவரையும் கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். ஏற்கனவே கமோசானின் வார்த்தையாலும் அவமானத்தாலும் சுருண்டிருந்த அரினா ஊர் மக்களின் கிண்டல் கேலியால் மேலும் மனதுக்குள் உடைந்து போய் தற்கொலை செய்து கொள்வதாக கதை முடிகிறது. 

இந்த கதை என்னை மிகவும் உலுக்கியது.  இதில் பகிரப்பட்டிருக்கும் ஆண் மனதின் ஆதிக்க உணர்வு, ஆதரவற்ற அழகற்ற பெண்ணை உபயோகப்படுத்தி கொள்ளும் ஆண் அவளையே பாவத்துக்கு காரணமானவள் என்று ஏசுமிடம், அழகற்ற தன் உடல் மீதும் ஒருவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவதை பெரிய அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளும் பெண் அவன் அடிமையாக மாறும் விதம் அவளின் உணர்வு போராட்டம் ,  பொதுபுத்தி அனைத்தையும் இந்த கதை பேசுகிறது.

நான் சில  கதைகளை மட்டுமே பகிர்ந்தேன் . மார்க்ஸிம் கார்க்கியின் எழுத்துகளின் ஆழம் , அகச்சிக்கல்கள்ளை நுணுக்கமாக பதிவு செய்திருக்கும் விதத்தில் நிறைய இடங்களில் நம் அகத்தை ஒப்பு நோக்கி கொள்ள முடிகிறது. இவரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு இவரின் தாய் புத்தகத்தை வாங்கியுள்ளேன். மார்க்ஸிம் கார்க்கி கண்டிப்பாக தவற விட கூடாத எழுத்தாளர்.





Friday 24 February 2017

சிதைவுகள் - சினுவ அச்சிபி

சிதைவுகள் – சினுவ அச்சிபி “Things fall apart “ என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம். வின்செண்ட் மொழிப்பெயர்த்திருக்கிறார். எதிர் வெளியீடு. முதன் முதலில் ஆப்ரிக்க இனத்தின் கலாச்சார, பண்பாட்டு கூறுகளை ஆப்ரிக்கர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார் ஆங்கிலத்தில்.. இந்த நாவலை வகைமைப்படுத்துவது சற்று சிரமம். ஏனென்றால் இலக்கியம் வரையறுக்கும் வரையரைகளுக்கு அப்பால் ஆப்ரிக்க இனத்தவரின் வாழ்விடத்துக்கு நம்மை கூட்டி செல்லும் ஆசிரியர். அவர்களுடனேயே இருத்தி விடுகிறார்.
உலகெங்கும் மிக வேகமாக பரவிய கிருஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும், பழங்குடியினரின் ஆன்மாவை திருகி போட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏனைய மதங்கள் மிக எளிதாக ஊடுருவ காரணமாக அமைவது அம்மக்களிடம் இருந்த சில மூடநம்பிக்கைகளும், காட்டு மிராண்டிதனங்களும் தான் என்று தேற்றிக்கொண்டாலும், அவர்களின் காட்டு மிராண்டித்தனத்துக்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் நிகழ்த்துகிறது கிருஸ்துவின் பெயரை சொல்லி உள்ளே நுழையும் கிருஸ்துவ மதம்.
ஆப்ரிக்க பழங்குடி மக்களின் ஒருவனான ஓக்கோங்கோ என்ற மல்யுத்த வீரனின் இளமை பருவத்திலிருந்து அவன் இறப்பு வரை நடக்கும் சம்பவங்கள். அவனை சுற்றி உள்ள மனிதர்கள், அவர்களின் சமூக பழக்க வழக்கங்கள், அவர்களின் குடும்ப அமைப்பு, அவர்கள் வழிபடும் தெய்வங்கள், அசைக்க முடியாத நம்பிக்கைகள், கட்டுபாடுகள், என்று ஆசிரியர் நம்மை நைஜீரிய பழங்குடியினருடன் வசிக்க வைக்கிறார் நாவலில்.
வீரமே தங்கள் இனக்குழுவின் முக்கியமாக கருதப்படுவதுடன் அதற்காக போராடுபவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் தான் அந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தாக கருதப்படுகிறது.
ஓக்காங்கோவின் தந்தை உனேக்கா மிக மென்மையான மனதுடையவராக இருக்கிறார். மகனின் பார்வையில் சோம்பேறி. வெறுமனே புல்லாங்குழல் வாசித்து சமூகத்தில் பட்டங்கள் எதுவும் வாங்காமல், கடனாளியாக இறந்து போகிறார். தன் தந்தை போல தான் இருக்க கூடாது என்பது மட்டுமே சிறுவயதிலிருந்து ஓக்காங்கோவின் லட்சியமாக இருக்கிறது. கரடுமுரடாக தான் வளர்கிறார் .வீரத்தால் பட்டங்ககள் வாங்குகிறார். கடினமாக உழைக்கிறார். அந்த இபோ கிராமத்திலும், அவர்கள் சமூகத்திலும் உயர்ந்த அந்தஸ்துக்கு நகர்கிறார். மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்கிறார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி குடிசைகள் தனக்கென் ஆபி என்று வாழ்க்கையில் கடின உழைப்பால் முன்னேறுகிறார்.
இவரின் வாழ்க்கை முறையை விவரிக்கும்போது அம்மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை, பெண்களின் நிலை, அவர்கள் உரிமைகள்,  வைத்திய முறை, பிறப்பு முதல் இறப்பு வரை பின்பற்றப்படும் சடங்குகள , போர்கள், பஞ்சாயத்துகள் அனைத்தும் எளிய முறையில் விவரித்து விடுகிறார் ஆசிரியர். ஆசிரியரின் எழுத்து நடையால் நாமும் அந்த ஊர் மக்களுடன் நம்மை பிணைத்து கொள்வது எளிதாகிறது. என்னை மிகவும் ஈர்த்தது, அவர்களின் குட்டி குட்டி நாடோடிக்கதைகள், அதில் ஒன்று கொசு ஏன் காதருகே ரீங்காரமிடுகிறது .
ஓக்காங்கோவின் வாழ்க்கை மிக அழகாக ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு இறப்பு வீட்டில் அவன் தெரியாமல் செய்துவிடும் ஒரு தவறுக்காக மிகுந்த கடுமையான தண்டனைக்குள்ளாகிறான். ஏழு வருடங்கள் அந்த ஊரை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். தனது தாய்மாமன் கிராமத்துக்கு தனது குடும்பத்துடன் குடிபெயருகிறான். இந்த சமூகத்தில் பெண்ணுக்கான இடத்தை ஆசிரியர் மிக அழகாக இந்த இடத்தில் பதிவு செய்கிறார் ஓக்காங்கோவின் தாய் மாமன் மூலம். ஒரு பெண் இறந்துவிட்டாள் அவர்கள் சமூகத்தில் ஏன் பெண்ணை அவளது பிறந்த வீட்டில் புதைக்கிறார்கள் என்பதற்கு கொடுக்கும் விளக்கம்,  அம்மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு மரியாதையை ஏற்ப்டுத்தியது. 
அந்த ஏழு வருடத்திற்குள் கிருஸ்துவ மதம் அவனது இபொ கிராமத்துக்குள் எப்படி நுழைந்து பரவுகிறது என்பது மீதி கதை. வெள்ளையர்கள் கொண்டு வந்த சைக்கிளை இரும்புக்குதிரை என்று அந்த ஊர் மக்கள் பெயரிடுவது, அது போல அவர்களை என்ன காரணத்துக்காக ஊருக்குள் அனுமதிக்கிறார்கள் அனைத்திற்கு நாவல் வாசிக்கும்போது தெளிவு கிடைக்கும்.
ஒக்கோங்கொவின் மூத்த மகன் தங்களது மதத்தில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளாலும், பழக்க வழக்கத்தாலும், மென்மையான மனம் சொல்ல முடியாத துயரத்தில் இருக்க அப்போது கிருஸ்துவ மதத்தினரால் செய்யப்படும் ப்ரார்த்தனையில் நெக்குருகி தன்னை அந்த மதத்தோடு இணைத்து கொள்கிறான். கிருஸ்துவர்களையோ தனது மக்களையோ எவரையும் குறை சொல்லவில்லை, எதையும் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இது தான் நடந்தது என்று ஒரு பார்வையாளனாக அனைத்தையும் நேர்மையாக பதிவு செய்கிறார்.
கிருஸ்துவ மதம் கல்வி, மருத்துவம் என்று ஈர்த்தது, மிக கடுமையான தண்டனைகள் மூலம் அந்த கிராமத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்து கொண்டு தான் உள்ளே நுழைகிறது. பின்னர் படிப்படியாக அந்த மக்களின் கலாச்சாரத்தை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி கொண்டு மிக நேர்த்தியாக ஒரு நியாயம் கற்பித்து கொண்டு அம்மக்களை முற்றிலும் சிதைத்ததை தான் “சிதைவுகள்:” நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வரலாறல்ல . இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த கதை தான். நான் நாவலை ஒரே மூச்சில் படித்தேன். எடுத்த புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. விரிவாக எழுதவில்லை. ஆனால் கிருஸ்துவ மதம் பரவும் முறை மிக நுணுக்கமாக வாசிப்பவர் உள்வாங்கும் போதும் நம் நாட்டில் நடக்கும் மதமாற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து நமக்கு புரியாத ஒரு கோணம் புலப்படும்.

Tuesday 21 February 2017

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - வா.மு.கோமு

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள். வா.மு.கோமுவின் சிறுகதை தொகுப்பு. எதிர் வெளியீடு. இவரின் ”இரண்டாம் டேபிளுக்கு காரப்பொறி” நான் வாசித்த முதல் படைப்பு. அந்த கதை களமும், கதை மாந்தர்களும், அவர்களின் வட்டார வழக்கும், ஏதார்த்தமான நடையும் ஈர்க்க “கூப்பிடுவது எமனாக இருக்கலாம்” என்ற நாவல் வாங்கினேன். ஆனால் ஏனோ அந்த படைப்பை முழுதாக வாசிக்க முடியவில்லை. ஓவர்டோஸ் பாலியல் கதைகளமாக தோன்ற பாதியிலேயே நிறுத்திவிட்டேன். இந்த புத்தகவிழாவில் இரு மனதாக தான் இந்த சிறுகதை தொகுப்பை எடுத்தேன். ஆனால் இந்த சிறுகதை தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளில் ஒன்றை தவிர மற்ற எல்லாமே பெரிதும் ஈர்த்தன.

முதலில் ஆசிரியருக்கு வரும் சரளமான பகடி நடை, அதற்கு ஸ்ருதி சேர்க்கின்ற வட்டார வழக்கு, இந்த வட்டார வழக்கு எந்த இடத்திலும் கதையோட்டத்தில் இருந்து துருத்தி தனித்து தெரியாமல் கதையோடு இயைந்து வருவது தான் எழுத்தாளரின் ப்ளஸ். கதையின் மாந்தர்கள் அன்றாடம் நம் வாழ்வில் எதிர்படும் எளிமையான மனிதர்கள். அந்த எளிமையான மனிதர்களின் வாழ்வின் யதார்த்தங்கள், அவர்களின் வலிகள், சந்தோஷங்கள், சிக்கல்கள் அனைத்தும் வாசகர்களை பயமுறத்தாத நடையில் எழுதப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

மொத்தம் 13 சிறுகதைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ”சொல்வதெல்லாம் மடமை”  கதை படிப்பவர்கள் கண்ணில் நீர் வர சிரிப்பது உறுதி. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மரண கலாய் கலாய்த்திருக்கிறார் ஆசிரியர்.  ”ஸ்னேக சம்மந்தம்” கதை வெகு ஹாஸ்யமாக தொடங்கி இறுதியில் மனதை கனக்க செய்கிறது. ”ஆனந்தி வீட்டு தேனீர்” கதையின் ஆனந்தியை திருமணத்துக்கு  முன் தன் ஆதர்சன தீர்க்கதரிசியாக நினைக்கும் அவள் நண்பன், அவளின் திருமணம் முடிந்து அவளை விசாரிக்க போகும் போது நண்பனுக்கு நேரும் அனுபவத்தை, அவனின் ஆதர்ச் நாயகியின் நிலையை பேசுகிறது.
சூரம்பட்டியில் ஒரு இரவு கதை, தொழுவம் புகுந்த ஆடுகள் இரண்டு கதைகளும் எதிர்பாராமல் வாழ்வில் நடக்கும் சுவையான திருப்பங்கள், சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு துயரமாகவும் முடிவதை பேசுகிறது.

இரு மனம் விலகுது கதையின் யதார்த்த அதே சமய சோக முடிவை பகடியாக முடித்திருக்கும் விதமும், அந்த கதையில் காதலை வெகு இயல்பாக, ஹாஸ்யமாக சொல்லி கொண்டு சென்ற விதம் பிடித்தது. புத்தகத்தின் தலைப்பான “என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்” சிறுகதை க்ளாஸ் வகை. பெறாத பிள்ளைக்கு தகப்பனாக மாறும் ஒரு யாழ் போராளியின் கதை. ”நான் ஒருத்தரை மனசுல நெனச்சுட்டேன்” கதை சினிமாத்தனமான முடிவு.

எனக்கு அதிகம் தெரியாத, நான் அதிகம் பழகாத ஒரு பகுதி மக்களுடன் மிக சரளமாக நெருங்கி பழகிய உணர்வை ஆசிரியரின் எழுத்தில் உணர முடிகிறது. கதை மாந்தர்களின் குறைகளை கூட பெரிதுபடுத்த தோன்றாத வகையில் ஹாஸ்ய நடை, கதை மாந்தர்களின் பெயர்கள் பெரிதும் ஈர்க்கின்றன. மிக பொருத்தமாக கதாபாத்திரத்தோடு பொருந்தி போகிறார்கள் அம்சவேணியில் ஆரம்பித்து ஆனந்தி வரை. வா.மு.கோமு வாசிக்காதவர்கள் இந்த சிறுகதை தொகுப்பில் இருந்து ஆரம்பிக்கலாம். மனிதர் எளிமை, பகடி எள்ளலால் அனாயசமாக ஈர்க்கிறார்.