என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள். வா.மு.கோமுவின் சிறுகதை தொகுப்பு. எதிர் வெளியீடு. இவரின் ”இரண்டாம் டேபிளுக்கு காரப்பொறி” நான் வாசித்த முதல் படைப்பு. அந்த கதை களமும், கதை மாந்தர்களும், அவர்களின் வட்டார வழக்கும், ஏதார்த்தமான நடையும் ஈர்க்க “கூப்பிடுவது எமனாக இருக்கலாம்” என்ற நாவல் வாங்கினேன். ஆனால் ஏனோ அந்த படைப்பை முழுதாக வாசிக்க முடியவில்லை. ஓவர்டோஸ் பாலியல் கதைகளமாக தோன்ற பாதியிலேயே நிறுத்திவிட்டேன். இந்த புத்தகவிழாவில் இரு மனதாக தான் இந்த சிறுகதை தொகுப்பை எடுத்தேன். ஆனால் இந்த சிறுகதை தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளில் ஒன்றை தவிர மற்ற எல்லாமே பெரிதும் ஈர்த்தன.
முதலில் ஆசிரியருக்கு வரும் சரளமான பகடி நடை, அதற்கு ஸ்ருதி சேர்க்கின்ற வட்டார வழக்கு, இந்த வட்டார வழக்கு எந்த இடத்திலும் கதையோட்டத்தில் இருந்து துருத்தி தனித்து தெரியாமல் கதையோடு இயைந்து வருவது தான் எழுத்தாளரின் ப்ளஸ். கதையின் மாந்தர்கள் அன்றாடம் நம் வாழ்வில் எதிர்படும் எளிமையான மனிதர்கள். அந்த எளிமையான மனிதர்களின் வாழ்வின் யதார்த்தங்கள், அவர்களின் வலிகள், சந்தோஷங்கள், சிக்கல்கள் அனைத்தும் வாசகர்களை பயமுறத்தாத நடையில் எழுதப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
மொத்தம் 13 சிறுகதைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ”சொல்வதெல்லாம் மடமை” கதை படிப்பவர்கள் கண்ணில் நீர் வர சிரிப்பது உறுதி. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை மரண கலாய் கலாய்த்திருக்கிறார் ஆசிரியர். ”ஸ்னேக சம்மந்தம்” கதை வெகு ஹாஸ்யமாக தொடங்கி இறுதியில் மனதை கனக்க செய்கிறது. ”ஆனந்தி வீட்டு தேனீர்” கதையின் ஆனந்தியை திருமணத்துக்கு முன் தன் ஆதர்சன தீர்க்கதரிசியாக நினைக்கும் அவள் நண்பன், அவளின் திருமணம் முடிந்து அவளை விசாரிக்க போகும் போது நண்பனுக்கு நேரும் அனுபவத்தை, அவனின் ஆதர்ச் நாயகியின் நிலையை பேசுகிறது.
சூரம்பட்டியில் ஒரு இரவு கதை, தொழுவம் புகுந்த ஆடுகள் இரண்டு கதைகளும் எதிர்பாராமல் வாழ்வில் நடக்கும் சுவையான திருப்பங்கள், சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு துயரமாகவும் முடிவதை பேசுகிறது.
இரு மனம் விலகுது கதையின் யதார்த்த அதே சமய சோக முடிவை பகடியாக முடித்திருக்கும் விதமும், அந்த கதையில் காதலை வெகு இயல்பாக, ஹாஸ்யமாக சொல்லி கொண்டு சென்ற விதம் பிடித்தது. புத்தகத்தின் தலைப்பான “என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்” சிறுகதை க்ளாஸ் வகை. பெறாத பிள்ளைக்கு தகப்பனாக மாறும் ஒரு யாழ் போராளியின் கதை. ”நான் ஒருத்தரை மனசுல நெனச்சுட்டேன்” கதை சினிமாத்தனமான முடிவு.
எனக்கு அதிகம் தெரியாத, நான் அதிகம் பழகாத ஒரு பகுதி மக்களுடன் மிக சரளமாக நெருங்கி பழகிய உணர்வை ஆசிரியரின் எழுத்தில் உணர முடிகிறது. கதை மாந்தர்களின் குறைகளை கூட பெரிதுபடுத்த தோன்றாத வகையில் ஹாஸ்ய நடை, கதை மாந்தர்களின் பெயர்கள் பெரிதும் ஈர்க்கின்றன. மிக பொருத்தமாக கதாபாத்திரத்தோடு பொருந்தி போகிறார்கள் அம்சவேணியில் ஆரம்பித்து ஆனந்தி வரை. வா.மு.கோமு வாசிக்காதவர்கள் இந்த சிறுகதை தொகுப்பில் இருந்து ஆரம்பிக்கலாம். மனிதர் எளிமை, பகடி எள்ளலால் அனாயசமாக ஈர்க்கிறார்.
No comments:
Post a Comment