Saturday, 31 December 2016

சாமத்தில் முனகும் கதவு

சாமத்தில் முனகும் கதவு” கே.ஜே.அசோக்குமாரின் சிறுகதை தொகுப்பு. இந்த ஆண்டு வாசகசாலை வாசகர்களால் சிறந்த சிறுகதை தொகுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு. இவரின் கதையை முதன் முதலாக இப்போது தான் வாசிக்கிறேன்.

இந்த தொகுப்பில் பதினெட்டு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான கதைகள் வாழ்வியல் துயரங்களை சொல்கிறது என்றாலும் அந்த துயரங்களை பதிவு செய்திருக்கும் மொழியில் ஆசிரியரின் கதைகள் ஒவ்வொன்றும் ஆழ்மனதில் அடுத்தடுத்து உணர்வலைகளை எழுப்பி சில நிமிடம் ஸ்தம்பிக்க செய்கிறது.

சிறுவனின் பார்வையில் சொல்லும் ”கைக்கு எட்டிய வானம்” கதையிலும், ”ட்ரேடு” கதையிலும் சிறுவர்களின் உலகத்துக்குள் நுழைந்து சொல்லி செல்லும் இடத்திலும் பேண்டஸியும், குழந்தைகளின் பயமும், குழந்தைகள் பெற்றோர்களால் படும் மனக்கஷ்டங்களும், அதிலிருந்து வெளியே வர அவர்கள் கையாளும் உபாயத்தை முதல் கதையிலும், குடும்பத்தார் மீது ஏதோ ஒரு கணத்தில் துளிர்விடும் வெறுப்பு ஆலகால விஷமாக உள்ளேயே தங்கி விடுவதை ட்ரேடு கதையிலும் பதிவு செய்திருக்கிறார்.

”வெளவால்கள் உலவும் வீடு”, “அப்ரஞ்ஜி” இரண்டு கதையின் மாந்தர்களை போன்ற மனிதர்களை நான் தரிசித்திருக்கிறேன். மனித மனத்தின் சிக்கு பிடித்த மனதை துல்லியமாக பதிவு செய்திருப்பார் இதில் ஆசிரியர். குடித்தே தன்னை அழித்துக்கொள்ளும் ஒரு அண்ணன், அவன் மீது அலாதி பிரியம் வைத்திருக்கும் அவன் தம்பி அண்ணனின் இறுதி நாட்களின் போது அவனை காண வருகிறான். தம்பியின் நினைவிலிருந்து மேலேழும்பும் அண்ணனின் நினைவு, தன்னுடைய சிறுவயதில் எல்லாரையும் கவனித்து கொண்ட அண்ணன், கவனிப்பாரற்று கந்தல் துணியாக கிடப்பதை கண்டு ஆற்றாமையிலும், இயலாமையிலும் மனம் வெதும்புகிறான்.

உள்ளூரிலேயே இருக்கும் சகோதர சகோதரிகள் எட்டி கூட பார்க்காமல் இருப்பது, தம்பியை பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல அண்ணன் இறந்து விட அவனுக்கு இறுதி சடங்கை செய்கிறான் தம்பி. உயிருடன் இருந்த வரை அந்த வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்காத  உடன் பிறந்தவர்கள் அந்த பரம்பரை விட்டுக்காக எட்டி பார்க்கிற போது எரிச்சலைடையும் தம்பி அதிரடியாக முடிவு எடுப்பதுடன் கதை முடிகிறது. இந்த கதை மனிதர்களின் சுயநலத்தை அப்பட்டமாக பதிவு செய்கிறது.

அது போல அப்ரஞ்ஜி கதை தொன்னூறு வயது விதவையின் கதையை பேசுகிறது. இந்த அப்ரஞ்ஜிகளை எண்பது தொன்னூறுகளில் பார்த்திருக்கிறேன். கல்யாண வீடுகளில் வேலை செய்தும், சாதாரண நாட்களில் ஒரு காபிக்காகவும் ஐந்து ரூபாய் காசுக்காகவும், ஒரு மரக்கால் மாவை முறுக்கு சுற்றி கொடுக்கும் அப்ரஞ்சிகள், அப்பளம் இட்டுக்கொடுக்கும் அப்ரஞ்ஜிகள், துளி கூட அவர்கள் உழைப்பை உரிஞ்சுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவர்களிடம் பத்திய லேகியம் இடிக்கும் வேலையிலிருந்து, பூ கட்டி வாங்கி கொள்வது உட்பட ஏகப்பட்ட வேலைகளை வாங்கிக்கொள்வர். நீ இல்லைன்னா ஒரு வேலையும் ஓடல என அங்கலாய்த்து, ஒரு வேலை பாக்கி இல்லாமல் வாங்கி கொண்டு, வீட்டில் மிச்சம் மீது இருக்கிறதை கொடுப்பதையே பெரிய தானமாக கொடுக்கும் மகராசிகள் தான் பெரும்பாலான மனிதர்கள்.

உன்னை போல உண்டா என்று கொண்டாடும் அதே வாய், அவர்கள் ஒரு பத்து ரூபாய் பணத்தை தயங்கி தயங்கி கேட்டால், சொத்தையே கேட்டது போல முணு முணுத்து கடுகடுக்கு மனிதர்களை பார்த்திருப்பதால் அப்ரஞ்ஜி கதை மனதை நெகிழச்செய்தது.

எறும்புடன் ஒரு கதை புனைவு தான் எனும்போதும் வாசிக்கும் வாசகனை  எறும்பின் நியாயத்துக்குள் கொஞ்சம் ஹாஸ்யமாக கடத்த முனைந்திருக்கிறார். அது போல புனைவு வகை எழுத்தை அழுத்தமாக சொல்லி இருக்கும் வருகை கதையும் என்னை ஈர்த்த கதைகள். எறும்பு கதைக்குள் எறும்பை பேச விட்டு மனிதனின் குணத்தை பதிவு செய்திருக்கும் ஆசிரியர் புலி கதையில் சமூகத்தின் குணத்தை பதிவு செய்திருப்பதாக தான் நான் பார்க்கிறேன். வாசிப்பவர்களை பொறுத்து இது வேறுபடலாம் என்று தோன்றுகிறது.

முகங்கள் கதை மிக சுவராஸ்யமான கதை. எனக்கு மனித முகங்களை நினைவு வைத்துக்கொள்வது போல கடினமான விஷயம் ஏதுமில்லை. இதில் ஆசிரியர் ஒவ்வொருவர் முகத்தையும் வகைமை படுத்தி, ஒப்பு நோக்கி நினைவு கொள்ளும் மனிதனை பற்றி பேசுகிறார். இணையம் மூலம் பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட அப்போது அவர்கள் முகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆச்சரிய தக்க வகையிலும், சில முகம் அதிர்ச்சி தரும் வகையிலும் இருக்கிறது. இதிலிருந்து மீளாமல் இருக்கும் ஆசிரியரின் நீண்ட நாள் நெருங்கிய நட்பு ஒருவரை பற்றி தகவல் தெரிய அவரை காண கஷ்டப்பட்டு அவர் இருக்கும் இடத்தை தேடி செல்லும் ஆசிரியர் வீட்டுக்கு அருகில் போனதும் நட்பாக இருந்த அந்த பிம்பத்தின் மீது வேறு பிம்பத்தை பொருத்தும் தைரியம் இல்லாமல் திரும்பி விடுவதாக கதை முடியும்.. கொஞ்சம் ஆழமாக இதற்குள் இருக்கும் உளவியலை யோசித்தால் நம்மால் சில மாற்றங்களை ஜீரணிக்கமுடியாத தன்மையை இந்த கதை பிரதிபலிப்பதாக கொள்ளலாம்.

வாசமில்லா மலர் கதை பதிவு செய்யும் பெண்ணின் பொறாமை என்னும்  இருண்ட பக்கத்தை பதிவு செய்கிறது. ஒரு அக்கா, தங்கைகளுக்குள் ஏற்படும் பொறாமையை நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். சில பெண்களிடம் இருக்கும் இந்த குணங்களை, அழகு தரும் கர்வத்தையும், கூட பிறந்தவளை கூட அலட்சியப்படுத்துவதையும், அகங்காரத்தையும் சந்திரகலா என்கிற கேரக்டர் மூலமும், பெண்ணிடம் இருக்கும் இன்னொரு குணமான எதையும் வரும் போக்கில் எதிர்கொள்ளும் பெண்ணின் குணத்தை சூர்யகலா என்ற இரு சகோதரிகள் மூலம் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

மாங்காச்சாமி கதையும் வேறோரு தளத்தில் பேசுகிறது. கூட்டுக்குடும்பத்தின் சிதைவுக்கு காரணமாக இருக்கும் மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. ஆனால் அந்த குழந்தையை வெளியில் வெறுத்தாலும் உள்ளுக்குள் அந்த குழந்தை மீது இருக்கும் பாசம் வெளிப்படும் இடம் ஆச்சரியப்படுத்துவதுடன், மனித மனதின் ஆழத்தை எளிதில் இனம் காண முடியாததை பேசுகிறது.

வாசலில் நின்ற உருவம் கதையில் படுத்த படுக்கையாய் கிடக்கும் மனிதன், இறப்பை எதிர்கொள்ளும் நொடிகளுக்கு முன் இருக்கும் சில காலம் வரை அவனுக்கு நடக்கும் மனப்போராட்டமும், ஒருகட்டத்தில் மரணம் அவனை சுவீகரிக்க கையாலாகத்தனத்துடன், அதனை எதிர்கொள்ள பயந்து ஆனால் வேறு வழியின்றி மரணத்தின் பிடிக்குள் இழுத்துச்செல்லப்படும் மனிதனின் கதை.

இத்தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு உணர்வை அழுத்தமாக பதிவு செய்கிறது. மொழியும் நடையும், கதையை கொண்டு செல்கிறது என்றாலும் சில கதைகளில் நடை தொய்வாகவும் இருக்கிறது. சாமத்தில் முனகும் கதை வீரியமான கதை என்றாலும் அது தீவிர இலக்கிய வாசகர்களுக்காகவே எழுதப்பட்டது போல தோன்றியது. பிணவாடை கதையும் இதே உணர்வை ஏற்படுத்தியது. எளிய கதையை  அடர்த்தியான மொழி நடைக்குள் புதைத்து வைத்தது போன்ற உணர்வு.. மற்றபடி பல்வேறு உணர்வுகளை, பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் அழகாக பதிவு செய்திருக்கும் விதம் வாசிப்பவர்களை பொறுத்து பல்வேறு சுவைகளையும், பல்வேறு கோணங்களையும் முன் வைக்கும் ஒரு தொகுப்பு..

1 comment:

  1. நல்ல தொகுப்பு. எழுதுவதைத் தொடர்க

    ReplyDelete