Monday, 27 January 2014

நானும் சேலையும்

ரொம்ப அழகான ஆடை எது பெண்களுக்கு அப்படின்னா கண்ணை மூடிட்டு சேலை அப்படின்னு சொல்லிடுவாங்க... சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு தொடங்கி செந்தமிழ் நாட்டு தமிழச்சின்னா சேலை உடுத்த தெரிஞ்சிருக்கணும் இல்லைன்னா அவள் தமிழ் பெண்ணே இல்லை என்பது போல பிம்பம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.. ஆனால் அந்த சேலை கட்டி அல்லது கட்டும் ஆரம்ப காலகட்டங்களில் அந்த பெண்கள் அடைந்திருக்கும் மன உளைச்சல்கள் எவ்வளவு தெரியுமா??

ஒன்றா இரண்டு எடுத்து சொல்ல அப்படின்றா போல நிறைய நிறைய,, அம்மா பாட்டி எல்லாம் கட்ட தானே செஞ்சாங்க என்னவோ ரொம்ப தான் அலட்டிக்கிறீங்க அப்படின்றவங்களுக்கு அம்மா பாட்டி எல்லாம் சேலை கட்டிக்கிட்டு காலை ஆறு மணி, ஏழு மணிக்கே சமைத்து வெந்து வேகாததை டப்பால அடைச்சுகிட்டு ட்ரெயன் பஸ் பிடிக்க ஓடல... ஓடுறவங்களுக்கு தெரியும் அது எவ்வளவு கஷ்டம்ன்னு..

திருமணம் வரை சேலை கட்டியதில்லை. திருமணத்தின் போது வந்து இருந்தவர்கள் உறவினர்கள் உபயத்தில் ஏதோ கொஞ்சம் கட்டி, சொருகி அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருந்தேன்.. இரண்டாம் நாள் மறுவீட்டுக்கு வந்த என் கணவர் போர் அடிக்குது என்று சினிமாவுக்கு கூப்பிட நானும் சினிமா ஆசையில் சரி என்று கிளம்பிவிட்டேன்.. திருமணம் ஆகி இரண்டாம் நாள் தான் என்பதால் சேலை தான் கட்டி செல்ல வேண்டும் என்று என் அம்மா சொல்லி சேலையும் கட்டிவிட்டார்கள்.. அவர்களுக்கு பின் பண்ண எல்லாம் தெரியாது.. இறுக்கி பிடித்து கட்டி விட்டார்கள்..

இடைவேளையின் போது கொஞ்சம் இறுக்கம் குறைக்க முயற்சிக்க புடவை அவிழ்ந்துவிட்டது எப்படி கட்ட என்று தெரியவில்லை..ஒரு வழியாக சொருகி சீட்டில் வந்து உட்கார்ந்துவிட்டேன்.. அவஸ்தை ஆரம்பித்து அடி எது நுனி எது புரியவில்லை எப்படி வெளியில் வந்து வீடு போய் சேர போகிறோம் அப்போது எல்லாம் ஆட்டோக்கள், டாக்சிகள் கிடையாது எங்கள் ஊரில் டவுன் பஸ் தான்.. நான் நெளிவதை பார்த்து என் கணவர் என்ன என்று கேட்க புடவை அவிழ்ந்துவிட்டது என்று சொன்னேன் அதற்கு அதனால் என்ன பாத்ரூம் போய் கட்டிவா என்றார் நான் அழுதுவிடுவது போல எனக்கு கட்ட தெரியாது என்றேன்..
என் கணவர் அதுக்கு நீ ஏன் அழுவுற நான் இல்லை அழுவனும் என்று நொந்து கொண்டு சரி வா படம் முடியும் போது கூட்டம் அதிகமாக வெளியே வரும் நாம் இப்போதே கிளம்பிவிடலாம் என்று சொல்ல அள்ளி கையில் பிடித்து கொண்டே வெளியே வந்தேன்.. வெளியே வரும்போது அங்கு பெருக்கும் ஒரு அம்மா தென்பட என் கணவர் போய் விஷயம் சொல்ல அந்தம்மா கட்டிவிட வீடு வந்து சேர்ந்தேன்..

என் கணவர் எப்போ உனக்கு புடவை கட்ட சரியா வருதோ அப்போ கட்டு அதுவரை எது வேண்டுமானாலும் போட்டுக்கோ ஆனால் இப்படி எல்லாம் வந்து அழுவாத என்று சொல்ல அதை வீட்டில் வேறு வந்து சொல்லி வெறுப்பேற்ற சேலை இப்படி தான் டெரராக என் வாழ்வில் நுழைந்தது.. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்தும் இன்று வரை சில பல நேரங்களில் பயமுறுத்தி கொண்டு தான் இருக்கிறது

No comments:

Post a Comment