Sunday, 16 March 2014

கணக்குகள்

உன் பொண்ணு ஊரில் இருந்து வந்திருக்கா
இந்தா கீரையும் நாட்டு கத்திரிக்காயும்
எப்போ ஊருக்கு போகும் சொல்லு
சுண்டைக்காய் வத்தலும் மணத்தக்காளி வத்தலும்
கொண்டு வந்து தரேன்

தினமும் முடுக்கத்தான் வேண்டாம்
வாரம் இரண்டு முறை கொடு போதும்
நாளை மணத்தக்காளி கீரையும் வெள்ளரி பிஞ்சும்
எடுத்து வாரேன் 
என வாழைபூவும் வாழை தண்டும் அள்ளி
அம்மாவிடம் கொடுத்து செல்லும்
நம்மை அறியாமலே
பாசம் காட்டும் காய்காரம்மாவிடம்
ஐம்பது ரூபாய் நீட்ட

எதுக்கு என்று கேட்க
வற்றல் கொண்டு வந்து தருகிறேன்
என்று சொன்னீர்களே
என சொன்னவுடன்
வயலில் விளைந்து கிடக்கு
பறித்து காய வைத்து கொண்டு
வந்து கொடுக்க காசா

கிராமத்தில் இருந்து ஊருக்கு எடுத்து சென்று
விற்பதற்கு முன் தலை சுமை இறக்கி வைக்க
விற்காத காய் பழத்தை உங்க வீட்டில் வைத்து விட்டு
வெறுங்கை வீசி ஊருக்கு செல்கிறேன் ..
மாலை வந்தால் இருப்பதை கொடுத்து
சாப்பிட்டு போக சொல்லும்
அய்யாவுக்கும் அம்மாவுக்கும் இன்னி வரை கூலி
கொடுத்ததில்லை தாயி
எல்லா கணக்கும் இந்த தாளில் வராது
அதை பத்திரமா நீயே வச்சுக்கோ
என்று சொல்லி சென்றவரின்
கணக்குகள் புரிய தான் இல்லை .....

No comments:

Post a Comment