Monday, 6 April 2015

"ஏற்கனவே" - யுவன் சந்திரசேகர் எழுதிய கதை பற்றி ஒரு பார்வை

" ஏற்கனவே" யுவன் சந்திரசேகர் எழுதிய கதை தொகுப்பு.. உயிர்மை வெளியீடு. இதில் உள்ள கதைகள் எல்லாமே ஆசிரியர் சொந்த வாழ்வில் நடந்தது அவர் கேட்டது, அவர் நண்பர்கள் கதைகளுடன் சில புனைவு கதைகளும் சில விறுவிறுப்பான நம்ப முடியாத கதைகள் கலந்த தொகுப்பாக உள்ளது. சில கதைகள் அட போட வைக்கிற ரகம். சில கதைகளில் நடை கொஞ்சம் சுவராஸ்யம் குறைச்சலாக இருக்கிறது.

" ஏமாறும் கலை" தான் நான் படித்த யுவனின் முதல் புத்தகம். அதன் பின் யுவன் புத்தகம் இப்போது தான் வாசிக்கிறேன். முதல் கதை

"மீகாமரே..மீகாமரே " ஏதோ மொழி பெயர்ப்பு கதையோ என்று நினைத்தேன். ஆனால் வாசித்து முடிக்கும் போது அழகிய புனைவை நிஜம் போலும் சொல்ல ஆசிரியர் சொல்ல முயற்சித்திருக்கிறார் என்பது புரிந்தது.

"மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு" கதை பதின்பருவத்தில் இருக்கும் ஆண் வேறு ஒரு ஆணால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படும் கதை படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

நூற்றிச் சொச்சம் நண்பர்கள் சற்றே பெரிய சிறுகதை. அதில் நிறைய நுணுக்கமான தத்துவ விசாரங்களை ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.

சோம்பேறியின் நாட்குறிப்பு மொழிபெயர்ப்பு புத்தகங்கள், ஆசிரியர்கள் என்று வேறு புத்தகங்கள் குறித்தும் அதன் ஆசரியர்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கும் கதை.

நார்ட்டன் துரையின் மாற்றம் ஆசிரியர் மாமா தன் வாழ்வில் சநதித்த ஒரு நிகழ்வை கதையாக சொல்வதும் அந்த கதையை அவர் இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி சொல்வதும் என்று கொஞ்சம் ஹாஸ்யமாக நகரும் கதை.

" தெரிந்தவர்" கதை நம் வாழ்வில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு அதை ஆசிரியர் யோசித்து கொடுத்திருக்கும் விதம் தான் நம்மிலிருந்து வித்தியாசப்படுகிறது. தினசரியில் அவர் பார்க்கும் ஒரு அமைச்சரின் முகம் அவருக்குள் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று ஒரு நாள் முழுதும் அவரின் நினைவடுக்கில் இருக்கும் முகங்களுடன் தொடர்பு படுத்தி அவரின் முகத்தை நினைவு கொள்ள முனைவதும் அப்போது அந்த முகங்கள் சம்மந்த்ப்பட்டவர்களுடனான அவருக்கு இருக்கும் தொடர்புகள் என்று நீளும் விவரிப்பு அருமை.. எல்லோருமே இப்படி யாராவது ஒருவரை பார்த்து எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று நினைத்து சில நிமிடங்கள் குழப்பி பின் மறந்து வேறு பக்கம் கவனம் திருப்பிவிடுவோம். அப்படியல்லாமல் ஆசிரியர் அந்த முகத்தை மீட்டெடுக்க பயணிக்கும் தடங்கள் தான் கதையை நினைவில் நிறுத்துகிறது..

"அவமானம்" கதையும் அட்டகாசம். நாம் ஏதாவது ஒரு செயலை செய்துவிட்டு உள்ளுக்குள் குற்ற உணர்வாலும் அவமானத்தாலும் மருகி கொண்டே இருப்போம். அது போல சில சம்பவங்களை செய்துவிட்டு நொந்து கொள்ளும் ஆணின் மருகலும் அவனின் உள்ள உணர்வு தளங்களும் அவனுக்குள் வரும் தத்துவ விசாரங்கள் என இந்த கதையும் மனதில் பதிகிறது.
ஏற்கனவே கதை வாழ்வில் சிலருக்கு நடப்பவை தான் சில சம்பவங்களையோ, சில இடங்களுக்கு செல்லும் போதோ இது நம் வாழ்வில் ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றும். அப்படியாக ஆசிரியருக்கு தோன்றும் சில சம்பவங்களில் கொஞ்சம் புனைவு சேர்த்து தந்திருக்கிறார். அந்த கதையை முடித்திருக்கும் விதம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை வாசித்து போல உணர செய்தது.

விருந்தாளி கதை ஒரு காக்கைக்கும் ஆசிரியருக்குமான உரையாடலாக இருந்த இந்த கதை என்னை அதிகம் ரசிக்க வைத்தது. ஆசரியர் கதை சொல்லியிருக்கும் விதம் தான் காரணம் . ஒரு காக்கை பேசினால் மனிதன் எப்படி ரியாக்ட் செய்வான் காக்கை என்னவெல்லாம் பேசும் என்று யூகிக்கவே முடியாத அளவு அழகாக படு ஹாஸ்யமாக கதை நகரும்.. இனி காகம் பார்க்கும்போது நம் எண்ணம் கொஞ்சம் வேறு விதமாக இருக்க கூடும்..

கரு நிற மை கதை நம்பமுடியவில்லை. புனைவா இல்லை அப்படி ஒரு சம்பவம் உண்டா என்று கொஞ்சம் யோசிக்க தான் வேண்டி இருக்கிறது. வெற்றிலையில் மை போட்டு நம் வாழ்வில் நடந்த பழைய நிகழ்வுகளை அப்படியே வெற்றிலையில் பார்ப்பது பற்றிய ஒரு கதை. ஆசிரியர் அப்படியான ஒரு இடத்துக்கு சென்று தன வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு பின் நினைவுக்கு திரும்பி ஊருக்கு வரும்போது அடையும் குழப்பம் நமக்கும் வரவே செய்கிறது.

No comments:

Post a Comment