“தனிமைத் தளிர்” ஆர். சூடாமணி அவர்களின் சிறுகதை தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.
அறுபத்திமூன்று சிறுகதைகள் தொகுப்பில் இடம்
பெற்றுள்ளன. மனிதர்களின் அன்பு கருணை என்று வெளிச்சமான பக்கங்களை தான் அதிகம்
காட்டியிருக்கிறார். அதற்காக யதார்த்தத்துக்கு முரணாக இல்லாதவாறு கருவை
தேர்ந்தெடுத்து அழகிய கதையாக பின்னி அதில் மனதின் இருண்ட பக்கங்களையும் அழகாக
காட்டி இருக்கிறார். கடினமான இலக்கிய நடை இல்லை என்றபோதிலும் அவர் சொல்ல வந்த
கருத்தை எந்த சமூக போலித்தன வரையறைக்குள்ளும் உட்படுத்தாமல் சொல்லியிருப்பதில்
அவரின் எழுத்தின் வலிமை தெரிகிறது.
இவர் எழுதியிருக்கும் கதைகளில் சில மட்டுமே
புனைவு வகையை சாரும். மற்ற எல்லாமே நிதர்சனம் தான். கதைகள் பெரும்பாலும்
நுண்ணர்வுகளை மையப்படுத்தியே. விளையாடும் சின்ன பிள்ளையின் மனநிலைகள் அவர்கள்
உலகம் எப்படி இருக்கும் அவர்கள் உலகத்தின் நியதிகள் அவர்கள் உணர்வுகள் அவர்களின்
உளவியல் அதை தாண்டி பதின்பருவம் வரும்போது ஆணகுழந்தையும் பெண் குழந்தையும் என்ன
மாதிரி மனநிலைக்கு உள்ளாகும், பெண்ணின் தாய்மை, அந்த தாய்மைக்கு பின் இருக்கும்
சுயநலம், பொறாமை, சென்சிடிவ்னஸ், அமைதியான வன்மம், குரூரம், அவளின் தேடல்,
தியாகம், என்று எல்லாவற்றையும் பேசுகிறார்.
மனித மனத்தின் சிக்கல்கள் பல எழுத்தாளர்கள்
எழுதியது தான் எனும்போதும் சொல்லப்படும் விதத்தில் தான் அதற்கான முக்கியத்துவம்
கிடைக்க பெறுகிறது. இவரது காலகட்டத்தில் இருந்த பெண் எழுத்தாளர்கள் ஒரு
குறிப்பிட்ட தளத்துக்குள் தன்னை பொதித்துகொள்ள இவர் எல்லா இடங்களிலும்
பயணித்திருக்கிறார். அறிவான பெண்ணின் தேடலை சொல்லும் “நான்காம் ஆசிரமம்”
ஆகட்டும், பெண்ணின் அமைதியான வன்மத்தை சொல்லும் “ பெருமையின் முடிவில் கதை, உரிமையை
நிலைநாட்ட குழந்தையின் மீது தாய்மை என்ற பெயரில் காட்டும் ஆதிக்கத்தை சொல்லும்
“உரிமைப் பொருள்” கதை, விடலைப்பருவத்தில் ஆண் கொடுத்த காதல் கடிதத்தை வைத்து கொண்டு
விழிக்கும் விடலை பருவத்து பெண்ணின் உணர்வுகளை சொல்லும் “கடிதம் வந்தது”
கதை, விவரம் தெரியா வயதில் அம்மாவின் மறுமணத்தை மறுத்த மகன் அம்மாவின்
மரணப்படுக்கையில் அந்த அம்மாவை நேசித்த மனிதரை தேடி கண்டடைய முயற்சிப்பதும் அந்த
மனிதர் அம்மாவை மரண தருவாயில் சந்திக்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கான நேரத்தை
கொடுத்து விலகி நின்று தவறை நினைத்து புழுங்கும் மகனின் உணர்வுகளை “ இறுக மூடிய
கதைகள்” கதையில் என்று ஒவ்வொரு கதையில் இவர் தொட்டிருக்கும் ஆழ்மன உணர்வுகள்
அசாத்தியமானது.
இந்த அறுபத்திமூன்று கதைகளில் ஒன்றிரண்டு
கதைகள் தான் கொஞ்சம் வலிய திணிக்கப்பட்ட உணர்வுகளை சொல்வதாகப்படுகிறது.. மற்ற
எல்லாமே படித்து முடித்தவுடன் நம் அகத்தை கூறு போட்டு பார்ப்பது போன்ற உணர்வை
தரும்.
சில கதைகளில் சொல்லப்பட்ட உணர்வுகளை அது
எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் பகிர்கிறேன்.
“இரண்டின் இடையில்”
என்ற சிறுகதையில் விடலை பருவத்தில் அடி எடுத்து வைக்கும் பதினாலு வயது பையனின்
மனதில் இருக்கும் குழப்பம் உணர்வுகள், ஆசிரியை மீது அவனுக்கு வரும் விடலைக் காதல்
அது உடையும் போது அவனின் கண்ணீர் அதை எதிர்கொள்ளும் அவன் தாயின் முதிர்ந்த மனநிலை
என்று ஒரு ஆண் பிள்ளையின் விடலை பருவத்து உணர்வுகளை ஆசிரியர் சொல்லி இருக்கும்
விதம் அழகாக இருக்கும்.
“அன்னையின் முகத்துப் புன்னகை”
என்ற கதையில் இளவயதில் கைக்குழந்தையுடன் விதவையாகும் அவனை சுற்றி தன் உலகத்தை
சிருஷ்டித்து கொள்ளும் தாய் மகன் வளர்ந்து திருமண பருவம் வர அவள் அடையும் பதட்டம்
ஆனால் அந்த பதட்டத்தை வெளியே காட்டாமல் போடும் வேஷம், என்று அந்த தாயின்
உணர்வுகளின் சுயநலத்தை அது தெரியாமல் நாடக மேடை வசனம் போல தனக்கு மகனின்
திருமணத்தை முடிப்பதில் ஆர்வம் காட்டுவது போல நடிக்கும் அவளின் உணர்வை அவள் மனதை
படிக்கும் மகன் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதும் இறுதியில் கதையின் முடிவை
வாசகரின் ஊகத்துக்கு விட்டு முடித்திருக்கும் விதம் எழுத்தின் தனித்தன்மையை
காட்டுகிறது. இக்கதையில் பெண்ணின் தாய்மைக்குள் ஒளிந்திருக்கும் சுயநல உணர்வை இது
போன்ற வேறு சில கதைகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“மன்னிப்புக்காக”
எனற கதையில் தன் மனைவி இறந்துவிட அவளின் சடலத்தை அணைத்து கதற துடிக்கும் அவன்
உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இந்த சமூகம் சடங்குகள் என்ற பெயரில் அவன் மகனையும்
ஏனைய உறவுகளையும் வைத்து செய்ய தன மனைவியின் பிரேதத்தை தொட முடியாமல் தவிக்கும்
அவன் இறுதியல் எதற்க்காக மன்னிப்பு கேட்க நினைத்தானோ அதே இடத்திற்கு சென்று கதறி
அழும் கதையில் சொல்லப்பட்டிருக்கும் உணர்வுகள் இந்த சமூகம் சடங்கு சம்பிரதாயம்
என்ற பெயரில் எப்படி மனிதனின் ஆழ மன தவிப்பை புறக்கணிக்கிறது என்பதை பதிவு
செய்திருக்கிறார்.
நான்காம் ஆசிரமம் கதை எழுபதுகளில் ஒரு பெண்
படைப்பாளியால் துணிச்சலுடன் சொல்லப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியம். ஏன் இந்த
படைப்பாளி அதிகம் பேரால் அறியப்படாமல் போனார் என்பது அதைவிட ஆச்சரியம்.
உணர்ச்சியும் கனவும் உயிர்சிலிர்ப்பும் அரும்பிய வயதில் மனோகரன் என்பவனை மணக்கும்
சங்கரி அவன் இறப்புக்கு பின் மூர்த்தி என்பவரை மணந்து இயல்பான தாம்பத்யம் நடத்தி
குழந்தைகளையும் பெறுகிறாள். உடலாய் பெண்ணாய் தாயாய் அவள் பூரனம்டைந்தாலும் உடல்
தாண்டி அறிவும சிந்தனையும் உள்விரிவும் அலைகழிக்க மூர்த்தியை விவாகரத்து
செய்துவிட்டு அவளுக்கு அறிவின் சுவையை காட்டும் வயதான ப்ரொபசர் ஒருவரை மணக்கிறாள்.
அறிவையும் கடந்து “தான்” என்கிற தனிமையில் மட்டுமே நிறைவடைகிற முதிர்ச்சி வந்த பின்
ப்ரோபசரிடமிருந்து மண விலக்கு கோருகிறாள். ஆனால் அவரால் அவளை விட்டு விலக
முடியாமல் விவாகரத்துக்கு மறுக்க தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த கதையில்
தனித்துவமான ஒரு பெண்ணின் உணர்வை இரு ஆண்களின் பார்வையில் ஆசிரியர் சொல்லி
இருக்கிறார்.
“பெருமையின் முடிவில்”
என்ற கதையில் ஒரு பெண்ணின் அமைதியான வன்மத்தை ஆசிரியர் சொல்லியிருப்பார்.
திருமணமாகி அவள் பிறந்த வீட்டுடன் சண்டை வர அவள் பிறந்த வீட்டுடன் இருக்கும் உறவை
முற்றிலும் துண்டித்தால் தான் தன்னுடன் வாழ இயலும் என கணவன் கட்டளையிடுகிறான்.
ஆறுவயது தம்பி உட்பட தங்கை பிறந்த வீட்டை முற்றிலும் துறந்து வரும் அவள் அதன் பின்
பிறந்த வீட்டை பற்றி எந்த சந்தர்பத்திலும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்
இருக்கிறாள். வருடங்கள் உருண்டோட தம்பி இளைஞனாகிறான். அவள் கணவரின் நண்பர் தம்
மகளுக்கு திருமணம் முடிக்க முயற்சிக்கும்போது வரும் மாப்பிள்ளை ஜாதகத்தில் அவள்
தம்பியின் ஜாதகமும் அவன் ராணுவத்தில் பணி புரிவதும் தெரிகிறது. சில நாட்களில் அவன்
ஒரு போரில் இறந்துவிடுவதும் அந்த நண்பர் மூலம் தெரியவர அவள் அப்போது கூட கணவரிடம்
கதறி அழாமல் தனியாக அழுதுவிட்டு கண்ணீரை துடைத்து கொண்டு கணவரிடம் இயல்பாக பேசும்
போது தான் கணவருக்கு அவள் முழுமையில் அவன் இல்லை மனதளவில் எப்போதோ ஒதுக்கிவிட்டாள்
என்று புரிந்து அதிர்ச்சியில் உறைகிறார். அவரின் உணர்வுகளை பெண்ணின் அமைதியான
வன்மத்தை இதைவிட சிறப்பாக யாராவது எழுதியிருக்க முடியுமா தெரியவில்லை..
“மேதையின் மனைவி”
கதையும் ஒரு புகழ் பெற்ற சங்கீத வித்வானின் மறைவுக்கு பின் அவரை பற்றிய விஷயங்களை
கேட்க வரும் பத்திரிகை நிருபர்களிடம் முகம் கொடுத்து பேச மறுக்கும் அவரின் மனைவி
அதன் பின் தனிமையில் கணவரின் புகைப்படத்தை வெறித்து பார்த்து உலகே கொண்டாடும்
அவரின் மேல் இருக்கும் வன்மத்தையும் அது எவ்வாறு தணிகிறது என்பதையும் வித்தியாசமான
கோணத்தில் சொல்லி இருக்கிறார்.
“வீடு திரும்பினாள்”
கதையில் மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு வரும் ஒரு
மத்திம வயது பெண்ணை அவள் குழந்தைகள் உட்பட எப்படி எதிர்கொள்கிறது என்பதும் அவள்
எப்படி புரிந்துகொள்ளபடுகிறாள் என்பதும் சொல்லப்பட்டிருக்கும்..
பெரும்பாலான கதைகள் வித்தியாசமான கோணத்தில்
உணர்வுகளை பேரன்பை, மனிதர்களின் தனித்தன்மையை பேசுகின்றன. வார்த்தை ஜாலங்களில்
வர்ணிப்புகளில் நம்மை கட்டி போடவில்லை ஆனால் எளிமையில் நேர்மையில் எல்லாரும்
வாசிக்க கூடிய சாதாரண நடையில் எழுதியிருக்கும் சூடாமணி அவர்களின் கதை தொகுப்பு
வாசிப்பின்பத்தை தாண்டி பேரன்பின் ஒரு பகுதியை நம்மில் இருந்து பீறிட்டு எழச் செய்கிறது பல கதைகளில்....
“தனிமைத் தளிர்” ஆர். சூடாமணி அவர்களின் கதைகள் மட்டுமே வித்தியாசமான கோணத்தில் மனிதர்களின் உணர்வுகளையும் பேரன்பையும் , தனித்தன்மை பற்றியும் பேசவில்லை. மதிப்பிற்குரிய கமலியின் நூல் விமர்சனமும் அவ்வாறே அவரின் அழகிய தமிழ் நடையையும் நுண்ணறிவையும் தனித்தன்மையுடன் வெளிப்படுத்தயுள்ளது .
ReplyDelete