Monday, 28 March 2016

அன்னா கரீனினா

“அன்னா கரீனினா” இந்த பெயரை இனி உச்சரிக்கும்போதே மனதில் தோன்றும் கலவையான உணர்வை எப்படி வெளிப்படுத்துவது அன்னா கரீனாவில் கொஞ்சமாவது கரைந்தால் மட்டுமே உணர முடியும்.

லியோ டால்ஸ்டாய் எழுதிய உலகின் சிறந்த நாவல். ஆம் உண்மையிலேயே மிக சிறந்த நாவல் தான் எல்லா காலத்திலும் நிலைத்திருக்கும் மனித உணர்வை, அன்பை, காதலை, அகச்சிக்கலை பேசுகிறது நாவல். இதை எழுதிய போது ஆசிரியர் ஏதோ ஒரு மோன நிலைக்குள் ஆழ்ந்து தன்னை எதற்குள்ளும் திணித்து கொள்ளாது கரைத்து கொண்டு நம்மையும் கரைய வைத்திருக்கிறார். 

நாவலின் மையப்புள்ளி அதீத காதல் என்ற ஒற்றை புள்ளி தான். ஆனால் அந்த மையத்தை சுற்றி டால்ஸ்டாய் வரைந்திருக்கும் வட்டங்கள், அவற்றின் பரிணாமங்கள் வெறும் காதலா என்று பார்த்தால் ஆம் என்றும் சொல்ல தோன்றுகிறது. இல்லை என்றும். காதலுடன் நாட்டின் வரலாற்றையும், அதன் பொருளாதார சிக்கல்களையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் விரிவாக அலசுகிறார். லெவின் பாத்திரம் மூலம் டால்ஸ்டாய் அரை நூற்றாண்டில்ரஷ்ய வரலாற்றில் நடந்த திருப்புமுனையின் இயற்கை தன்மையை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு நுணுக்ககமாக எப்படி ஒரு ஆணாக டால்ஸ்டாய்யால் சொல்ல முடிந்தது என்ற பிரமிப்பிலிருந்து இன்னும் விலக முடியவில்லை.. அன்னா கரீனா பாத்திரத்துக்குள் செல்லும் முன்னமயே டாலி மூலம் பெண்ணின் உணர்வு தளத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். அன்னாவின் அண்ணன் ஸ்டீவ்க்கும் அவன் மனைவி டாலிக்கும் இடையே பிரிந்து வாழும் அளவு போய்விட்ட பிணக்கை தீர்க்க அன்னா ஊரிலிருந்து வருகிறாள். அவள் அண்ணன் அவள் குழந்தைகளுக்கு ஆசிரியையாக வரும் பெண்ணின் அழகில் மயங்கி அவளுடன் உறவு வைக்க அது டாலிக்கு தெரியவருகிறது ஒரு கடிதத்தின் மூலம். அந்த கடிதத்தை பார்த்து மனம் உடையும் டாலி ஆவேசமாகி கணவருடன் சண்டையிடுகிறாள்.

அவளின் ஆவேசம் கண்டு மருளும் கணவன் அவன் பக்க நியாயத்தை மிக சாதாரணமாக அலசுகிறான். இவளுக்கு வீட்டுக்கு என்ன குறை வைத்தோம். ஒரு பெண்ணின் அழகில் ஈர்க்கபட்டு இப்படி நடப்பது சகஜம் தானே என்றும் உள்ளுக்குள் மனைவி மீது இருக்கும் பாசம் அப்படியே தானே இருக்கிறது என்ற ரீதியில் தன்னை சமாதனப்படுத்தி மனைவி அறைக்கு செல்கிறான். ஆனால் அவளின் முகத்தில் தெரியும் வெறுப்பு, ஆவேசம் அவனை நிலை குலையச் செய்கிறது. அவள் கோலம் இதற்கு நான் தானே காரணம் என்று கூச அழுகிறான்.

ஆண்களின் ஆயுதமான குழந்தைகளை காரணம் காட்டி மன்னிக்க சொல்கிறான். அவள் நீங்க என்னை காதலிக்கவே இல்லை. இதயம் கிடையாது. இதோ நான்கு நாட்களாக நான் துரோகத்தில் குமைய உங்களை சிறிதாவது பாதித்திருக்கா. இப்போது கூட என்னை பார்த்தவுடன் உங்களுக்கு வந்திருப்பது இரக்கம் காதலல்ல போய்விடுங்கள் என்று கத்துகிறாள்.

அவளை சமாதனப்படுத்த தெரியாமல் , நம்பிக்கை முழுதும் அற்று , தன் தங்கை வந்து ஏதாவது செய்ய மாட்டாளா என்று வெளியேறுகிறான்.

அன்னா வருகிறாள். அவள் அண்ணிக்கும் அவளுக்கும் நடக்கும் உரையாடல் க்ளாஸ். டாலி அன்னாவிடம் அவளின் வேதனைகளை சொல்லி உனக்கு என் வலி ,உணர்வு புரிகிறதா என்று கதற அதை முழுதும் உள்வாங்கி அவளை அழுது அணைத்து தேற்றும் அன்னாவின் வார்த்தைகள் அன்னாவின் மேல் மையல் கொள்ள செய்கிறது. நான் என் அண்ணணுக்காக பரிந்து பேசவோ, ஆறுதல் கூறவோ வரவில்லை. ஆனால் உன் நிலை என் இதயத்தின் ஆழத்தில் வேதனைப்படுத்துகிறது என டாலியிடம் கரைந்து ப்ரச்சனைக்கு தீர்வு காண முயல்வோம் என படிப்படியாக டாலி மனதுக்குள் நுழைகிறாள்.

அன்னாவுக்கு ஈடான உணர்வு தளத்தில் இயங்கும் பெண் டாலி. ஆரம்பத்தில் கணவரின் காதல் தன்னிடம் இல்லை வேறு பெண்ணுடன் என்று தெரிந்து வெறுத்து அவனிடம் இருந்து விலகி போய்விட  போராடினாலும் குழந்தைகள் நலம் கருதியும், சமூகத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாமலும் தனக்கு துரோகமிழைத்த கணவரை சகித்து கொள்கிறாள்.

அன்னா துணிச்சலுடன் விரான்ஸ்கியை காதலித்து அவனுடன் சென்றுவிட மேட்டுகுடி சமூகம் அவளை வெறுத்து ஒதுக்க தனது அன்பை அன்னாவிடம் பதிவு செய்ய டாலி செல்லும் இடங்களில் தன்னை சுய அலசலக்குள் உட்படுத்தி அன்னாவின் முடிவை மனதார பாராட்டி அவளை நேசிக்கிறாள். தன் மீதும் கழிவிரக்கம் கொள்கிறாள். குழந்தைகள் எல்லாம் விட்டுவிட்டு அவள் வண்டியில் தான் மட்டும் தனியாக அன்னாவை காண வரும் அந்த பயணத்தில் பெண்ணின் அந்த கால அடிமை வாழ்க்கை முறையையும் அதில் கட்டுண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் பெண்ணின் உள்ள கிடக்கையும் அந்த தனிமையான சிறிது தூர பயணத்தில் அவள் அடையும் சுதந்திர உணர்வை எல்லாம் பதிவு செய்துவிடுகிறார் ஆசிரியர்.

லெவின் கடவுள் நம்பிக்கை அற்றவன். ஆனால் நல்லவன் . சமூகம் வகுத்திருக்கும் அறத்துக்குள் உண்மையாக பொருந்தி போக ஆசைப்படுகிறான். பெண்ணின் காதல் உணர்வுக்கு சற்றும் குறைந்தது அல்ல என்று லெவினின் காதல் மூலம் உணர வைக்கிறார். டாலியின் தங்கையான கிட்டி லெவின் காதலை முதலில் மறுக்க அவளை மனதார காதலிக்கும் அவன் அதை ஏற்று கொள்ள முடியாமல் உடைந்து ஊருக்கு போய் தன்னை முழுதும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தி கொண்டு அதில் கரைத்து கொள்ள முயற்சிக்கிறான். பின் கிட்டியின் காதல் கிடைக்க முதலில் அதை சந்தேகப்பட்டு குழப்பிகொண்டு பின் காதலில் கரைய தொடங்கும் அந்த புள்ளியில் இருந்து ஆணின் காதல் உணர்வுகளை, அவனின் தடுமாற்றத்தை, அவன் சந்தோசத்தை, அவன் பைத்தியாகாரத்தனமான காதலை பதிவு செய்திருக்கிறார். பெண்ணின் பொஸசிவ்னெஸ்க்கு சற்றும் குறைந்ததில்லை ஆணின் பொஸசிவ்னெஸ் என்பதை லெவின் கதாப்பாத்திரம் மூலம் நிறுவுகிறார்.

கடவுள் நம்பிக்கையற்ற லெவின் மனைவியின் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட கடவுளிடம் கதறுவதும், (மனைவி பிரசவத்தில் ஆண் அனுபவிக்கும் மன வலியை, துன்பத்தை இவ்வளவு நுட்பமாக வேறு யாரும் பதிவு செய்ததில்லை) அதன் பின் அவள் நலமாகி குழந்தையுடன் வந்த பின் கடவுள் நம்பிகையற்ற தான் ஏன் அப்போது கடவுளை நாடினோம் என்று தன் அக தேடலுக்கும், ஆன்ம விகாரத்துக்கும், தேடலுக்கும், தத்துவ விசாரத்துக்கும் இடையில் அல்லாடி குழம்பி தீர்வு காண துடிப்பதும் மிக யதார்த்தமாக கடவுள் நம்பிக்கைக்கு, நம்பிக்கையின்மைக்கு ஊடாடும் மனதை, ஆன்மீக தேடலை பதிவு செய்திருக்கிறார் டால்ஸ்டாய். 

அன்னா ஆன்மாவில் மலரும் பெண். கணவர் நல்லவர். ஆனால் தன் உணர்வுகளுக்கும் உயிர் துடிப்பான ஜீவனுக்கும், வடிகால் இல்லாமல் வெற்று வாழ்க்கையில் தன் மொத்த அன்பையும் குழந்தைக்கு அர்பணித்து குழந்தைக்காக வாழ்கிறாள். இந்நிலையில் தான் விரான்ஸ்கியை சந்திக்கிறாள். விரான்ஸ்கியை சந்திக்கும் வரை கணவருடன் வாழும் வெற்று வாழ்க்கை பெரிதாக தெரியவில்லை. ஆனால் விரான்ஸ்கியை சந்தித்த பின் கணவருடன் வாழும் வாழ்க்கையில் காதல் இல்லை என்பதை தெரிந்து கொண்டவுடன் விரான்ஸ்கியின் காதலுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிகிறாள் அன்னா.

அவளின் காதலின் முன் எல்லாமே துச்சமாக தான் படுகிறது அவளுக்கு. தன் கணவரை பிரிவதால் சமூகம் சுமத்தும் அத்தனை அவமானங்களையும் சுமக்கிறாள். தன் அன்பு மகனை பிரிகிறாள். விவாகரத்து தர மறுக்கும் கணவரால் விரான்ஸ்கிக்கும் அவளுக்கும் இடையில் ப்ரசனைகள் முளைத்து அது மெல்ல சண்டையாக விஸ்வரூபமெடுத்து காதலை புரட்டி எடுக்கிறது. இருவருக்குமே காதல் இருந்தும் விதி விளையாடும் விளையாட்டின் கைப்பொம்மைகளாக ஏதும் செய்ய இயலாதவர்களாக மனம் நிறைய துக்கத்தை காதலில் மூடி மறைக்க பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால் இவை எல்லாம் செய்தும் விரான்ஸ்கிக்கு தன் மீதான காதல் குறைய வருகிறதோ என்ற சந்தேகத்தில் தனக்குள் பிளவுபடுகிறாள் அன்னா.

இறுதியாக விரான்ஸிக்கும் அவளுக்கும் வரும் சண்டையின் போது அவளை சமாதனப்படுத்தாமல் விரான்ஸ்கி தன் அம்மாவை பார்க்க செல்கிறான். அவனுக்கு தன் மீது காதல் சுத்தமாக இல்லை என்று முடிவு செய்யும் அன்னா தாங்கவியலா மனஉளைச்சலுக்கு ஆளாகி மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள். இறப்பு மட்டுமே தனக்கு நிம்மதி தரும் என்று முடிவு செய்கிறாள்.

அதற்கு முன் தன்னை அலசுகிறாள். விரான்ஸ்கிக்கும் தனக்குமான உறவை சிந்தித்து பார்க்க தொடங்குகிறாள். அவர் என்னிடத்தில் எதை எதிர்பார்த்தார். அவரிடத்தில் இருந்தது காதல் இல்லை தன் எண்ணம் பூர்த்தியாகவேண்டும் என்ற எண்ணம். தந்திரம் செய்து காரியம் சாதித்து கொள்ள என்னை சுற்றி சுற்றி வந்தார், பின் தன் எண்ணம் நிறைவேறிவிட்ட கொக்கரிப்பும் கர்வமும் மட்டுமே அவனிடம் இருந்த்திருக்கிறது. அதில் சிறிதளவு காதலும் இருந்தது. ஆனால் கர்வம் தான் ஒங்கியிருந்தது.

நாங்கள் இருவரும் இணையும் முன்பு வெகுவாக ஈர்க்கப்பட்டு இணைந்தோம். ஆனால் இப்போது தடுக்க முடியாத அளவு ஆனால் மிக மந்தகதியில் பிரிந்து கொண்டிருக்கிறோம். எப்போதும் அவரது அரவணைப்புக்குள், அவரது கொஞ்சுதல்களுக்குள் இருக்க விரும்புகிறேன், பேராசைப்படுகிறேன். ஆனால் என்னுடைய இந்த விருப்பம் வெறுப்பை தருகிறது அவருக்கு. அவருடைய வெறுப்பு எனக்குள் அவர் மேல் கோவத்தை எழுப்புகிறது.

காதல் இல்லாமல் கடமைக்காக என்னிடத்தில் அன்பு காட்டுவது, நான் எதிர்பார்த்த நேசம் அவரிடத்திலிருந்து கிடைக்காவிட்டால் அது அவரது கோவத்தை விட மோசமானது. இது நரக வாழ்க்கை. அவர் என்னை காதலிப்பதை நிறுத்தி வெகு நாளாகிவிட்டது. எங்கே காதல் அழிந்துவிட்டதோ அங்கே வெறுப்பு ஆரம்பித்துவிடும்.

வாழ்க்கை எங்களை பிரிக்கிறது. என்னுடைய மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு அவர் காரணம், அவருடைய துயரத்துக்கு நான் காரணம். இருவரும் மாறிவிட முடியுமா? இருவருடைய சுபாவங்களையும் திடீரென்று மாற்றி கொள்ள முடியுமா? எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தாகிவிட்டது. நாங்கள் வெவ்வேறு பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் மீது அளவு கடந்த அன்பு இருப்பதாக தானே நினைத்தேன். ஆனால் அவன் மீது எனக்கிருந்த அன்பை இன்னொருவருடைய அன்புக்காக மாற்றி கொண்டேனே. அந்த காதல் திருப்தியளித்த வரையில் நான் குறைப்பட்டு கொள்ளவில்லையே.

நான் அவரை மூர்க்கத்தனமாக காதலிக்கிறேன். அதே நேரம் மூர்க்கத்தனமாக வெறுக்கிறேன். அமைதியின்றி தவித்த அவள் மெல்ல மெல்ல சிதைகிறாள். உணர்வின் மூர்க்கமான பிடியில் சிக்கி தவிக்கும் அவள் அதிலிருந்து மீள முடியா பள்ளத்துக்குள் வீழ்கிறாள்.

வெறும் அழகியலாக மட்டும் சொல்லாமல் உணர்வு தளத்தில் பெண்ணின் உணர்வை பேசுகிறார். அதுவும் துல்லியமாக. அன்னாவுடைய  காதலின் காட்டுத்தீயை அவள் பேரன்பின் துளியை தாங்கவோ கையாளவோ எந்த காலத்திலும், எந்த ஆண்மகனாலும் முடியாது என்று நினைத்தாரோ என்னவோ அன்னாவின் அத்தனை பேரன்பையும், தவிப்பையும், உள்ளகிடக்கையும் பதிவு செய்யவிட்டு அவளை ரயில் சக்கரத்துக்குள் சிதைத்துவிடுகிறார்.

மனதளவில் சிதைந்து போனவள் உடலும் சிதைந்து போவது தானே சரியான முடிவாக இருக்கும் என்று நினைத்தாரோ ஆசிரியர்.

ஆசிரியர் என்னவெல்லாம சொல்லியிருக்கிறார் இந்த நாவலில். உணர்வை, அந்த உணர்வால் விளையும் செயலை, செயலுக்கு பின் இருக்கும் விளைவை, விளைவுகளுக்குள் போய் சிக்கி கொள்ளும் அகத்தை, எதனால் எது விளைந்தது என்று பிரித்து பார்க்க முடியாத சிக்கலை எல்லாவறையும் பேசுகிறார். பெண்ணின் காதலை மட்டுமா சொல்கிறார். ஆணின் காதலை தவிப்பை, அவனின் அக்ச்சிக்கலை, ஆணின் எண்ண ஓட்டத்துக்கும், பெண்ணின் எண்ண ஓட்டத்துக்கும் இடையே இருக்கும் மலையளவு வித்தியாசத்தை, அந்த வித்தியாசத்துக்குள் இருக்கும் பிணைப்பை, சோசியலிசத்தை, அவர் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த அரசியலை, அரசியல் பாதிக்கும் வாழ்க்கை முறையை, விவசாயத்தை, பிறப்பை, மரணத்தை, குதிரை பந்தயத்தை, ஓவியத்தை, மாறும் மனித மனத்தை, அவற்றுக்கு பின் இருக்கும் மனித உணர்வு சிக்கலை, ஆண்களின் கண்ணியத்தை, அறிவை, சமூகத்தின் மீதான கோவத்தை லெவினின் இரண்டு அண்ணன்கள் மூலம், என்று எல்லாம் எல்லாம் சொல்கிறார்...........


பல பெண்களுடன் பழகுவதை தன் வழியில் நியாயப்படுத்தி தனக்கான அறம் கற்பிப்பவன் விரான்ஸ்கி. ஆனால் தான் தோன்றித்தனமாக திரியும் அவனை அன்னாவின் பேரன்பும் காதலும் பட்டை தீட்டி மாற்றுகிறது. அன்னாவுக்காக இராணுவத்தில் தனக்கு கிடைக்கும் பதவி உயர்வை இழக்கிறான். சமுகத்தில் அவனுக்கு கிடைக்கும் அவமானம் எல்லாம் சுமக்கிறான். ஆனாலும் அன்னாவை கையாள தெரியாமல் இறுதியில் அவளை மரணத்துக்கு ஒப்பு கொடுத்துவிட்டு தானும் உயிரற்ற தன் உடலை அழித்து கொள்ள போருக்கு தன்னை ஒப்பு கொடுக்கிறான்.

அன்னாவின் அண்ணன் ஸ்டீவ் மூலம் பெண்ணை போகமாக மட்டும் பார்க்கும் ஆணுக்கு பெண் மீதான பார்வையையும், அதே சமயம் லெவின் என்ற ஆண் மூலம் ஒருவளை காதலிக்கும், அவளுக்காகவே உருகும், அவளிடம் முழுமையடைய துடிக்கும் ஆணின் உயர்வான உணர்வையும், டாலி, அவளின் தங்கை கிட்டி மூலம் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்ணின் உணர்வை நுட்பமாக தொட்டிருக்கிறார்.

ஆசிரியர் டாலி, அன்னா இருவருக்கும் முழுவதுமாக தம்மை ஒப்பு கொடுத்துவிடுவதை ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்கிறது. டாலியின் மனக்குமுறலை, அவளின் ஆற்றாமையை, ஒன்பது வருடங்களாக காதலித்தோமே என்ன குறை வைத்தோம் என்ற அவள் உள்ள கிடக்கை, அவள் புழுக்கத்தை தத்ரூபமாக ஆசிரியர் வடித்திருக்கும் விதத்தில்லும், அன்னாவின் காதலில், அவளில் சுய அலசலில், அவளின் அமைதியின்மையில் ஆசிரியர் கண்டிப்பாக பெண்ணாக தன்னை உருமாற்றி எழுதியிருப்பதாக உணர்கிறேன். ஒரு பெண்ணின் உணர்வுகளை எந்த குற்றப்படுத்தலும் இல்லாமல் அப்படியே உள்வாங்க முடிந்த ஆணால் மட்டுமே டாலியை, அன்னாவை படைக்க முடியும்..

பெண்ணின் காமம் தாண்டிய நுட்பமான பெண் உணர்வுகள் ஆண்களால் புரிந்து கொள்ளவோ, கையாளவோ முடியாமல் இன்றளவும் டாலிகள் தங்கள் உள்ள கிடக்கை அடக்கி கொண்டு ஏற்கவும் முடியாமல், விட்டொழிக்கவும் முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்னா போன்ற பெண்கள் துணிச்சலாக தன் விருப்பத்துக்காக போராடினாலும் இறுதியில் வெற்றி அடைய முடியாமல் தங்களை முடித்து கொள்கிறார்கள். 

எதுவாக இருந்தாலும் அன்னா போன்ற பெண்களின் ஆன்மாவை எதிர்கொள்ளும் தைரியம் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் எந்த  காதலனுக்கும், சமுகத்திற்கும் இருக்க போவதில்லை. இறப்பு மட்டுமே அவளுக்கு நிரந்தர அமைதியை தரும். ஆம் அவள் இறந்துவிடட்டும் இந்த இரக்கமில்லாத சமூகத்தில் வாழ்வதை விட இறப்பு விடுதலை அவளின் ஆன்மாவுக்கு மட்டுமல்ல, அந்த ஆன்மாவை நேசிக்கும் அது துடிப்பதை காண சகிக்காத யாருக்கும்.

இந்த உணர்வு கிட்டத்தட்ட நூறு ஆண்டுக்கு முந்தைய பெண்ணின் உணர்வு என்றாலும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வு ஆதலால் இன்னும் நூறு வருடம் கழித்து படித்தாலும் இந்த நாவல் ஈர்க்கும்..





7 comments:

  1. Proved one again your stuff in writing & presenting subject @ Kamali

    ReplyDelete
  2. அன்புள்ள கமலி ...அன்னா கரீனா வுக்குள் நீங்கள் செய்திருக்கும் ஆழ்முகப் பயணம் உங்கள் விமர்சனத்தை வாசிக்கும்போது தெரிகிறது. ஒரு படைப்பின் மேன்மை என்பது ஒரு வாசகன் மேற்கொள்ளும் பயணத்தின் உன்னதம். அதை உங்கள் விமர்சனம் உணர்த்துகிறது. வெகு நாள் வாசிப்பின் தாகத்தில் இருக்கும் எனது விருப்ப நூல்களில் ஒன்று இது.விரைவில் தொடங்குவேன். வாசிப்பு உந்துதலைத் தந்ததற்கு அன்பும் நன்றியும்.

    நேசமிகு....
    எஸ்.ராஜகுமாரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜகுமாரன்.

      Delete
    2. வணக்கம். அன்னா கரீனா குறித்து நீங்கள் எழுதுயிருக்கும் பதிவு நாவலுக்குள் பயணித்த உணர்வை படிக்க வேண்டும் என்ற உந்துதலை அளிக்கிறது. மிக்க நன்றி

      Delete
    3. ஆழமான அலசல் --அற்புதமான விமர்சனம் .அத்தனையும் படித்துவிட்ட ஆனந்தம் -- அருமை ,மிகவும் அருமை

      Delete
  3. அன்னா கரினீனா நாவல் பற்றிய பதிவு மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் எழுதிய பெரும்பான்மை விஷயங்களை நான் படிக்கும் போதும் உணர்ந்திருக்கிறேன். அந்த நாவலைப் படிக்கும் போது அந்த மக்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களின் வாழ்க்கை முறை, அம்மக்களின் பழக்க வழக்கம், அந்த பாத்திரங்களின் மன உணர்வு என அத்தனையும் நம்மை வந்து பற்றிக் கொள்ளும். ஆனால் நீங்கள் அன்னாவின் மனவுணர்வை மிக நுணுக்கமாக எழுதியிருக்கீங்க. நான் அந்த அளவுக்கு நுணுக்கமாக புரிந்து கொள்ள வில்லை. அதை நான் படிக்கும் போது எனக்கு 21 வயது. அந்த வயதில் எந்த அளவு புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தான் புரிந்தது. நீங்கள் எழுதின விமர்சனம் 5 வருடங்களுக்கு பிறகு அந்த நாவலை மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்தது போல் இருந்தது. மீண்டும் அந்த நாவலை படிக்கத் தூண்டுகிறது. நிச்சயம் இன்னும் ஒரு முறை படிப்பேன்.

    ReplyDelete