Friday, 29 July 2016

அவமானம் - சாதத் ஹசன் மண்ட்டோ

வரலாறுகள் எல்லாமே ரத்தததால் தான் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரத்தத்தை மதங்கள் தான் ரத்தக்காட்டேறியாக உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன். இத்தனை வரலாறுகள் பார்த்த பின்னும் ரத்தம் குடிக்கும் மதத்தின் தாகம் மட்டும் தணியவில்லை.

மதம் மனிதனை பிளவுப்படுத்தியது போல வேறேதுவும் பிளவுப்படுத்தவில்லை. . மதக்கலவரம் என்ற பெயரில் மனிதன் தன் மனதின் வக்கிரங்களை, குரூரங்களை நிறைவேற்றிக்கொள்கிறான். மதம் மனிதனின் மூளையை மழுங்கடித்துள்ளது என்பதை மாண்ட்டோவின் எழுத்துகள் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. இவரின் கதைகளை வாசித்து முடிக்கும்போது, மனிதத்தை நேசிக்கும் மனது, மதத்தின் மீது  அசூயை காட்டுகிறது. 

சாதத் ஹசன் மண்ட்டோ இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பான காலகட்டத்தில் பிறந்தவர். உருது எழுத்தாளரான இவர் 1947-ஆம் ஆண்டு  இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மதம் ஆடிய கோரத்தாண்டவத்தினை மிகச் சரியாக எம் மதச்சார்புமின்றி நடுநிலையாக தமது எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ. வேறு வழியின்றி பாகிஸ்தானில் வாழ வேண்டிய நிர்பந்தத்தால் கனத்த இதயத்தோடு பாகிஸ்தான் சென்றவர்.

எழுத்தாளர்களுடன் ஒட்டி பிறந்த வறுமையிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இறுதி வரை வாழ்ந்தார். மண்டோவின் எழுத்து நடையில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும் அப்போது வெளி வந்த  மனித மனதின் இருண்ட பக்கங்களும், அதை தாங்கி கொள்ள முடியாமல் மனிதம் நேசிப்பவர்கள் இருபக்கமும்  இயலாமையுடன் அல்லாடியதையும், நல்ல பண்புகள் கொண்டவர்களையும் மதம் என்னும் டிராகுலா  கடித்து வைக்க அவர்களும் ரத்த காட்டேறிகளாக அலைந்ததை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ.

“திற” கதை ஆபாசம் என்று நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு வழக்குகளை சந்தித்ததாம். உண்மையை என்றுமே நமது சமூகத்தால் ஏற்க முடியாமல் தான் இருந்திருக்கிறது. பெண்ணின் மீதான அத்தனை துவேசங்களும், பாலியல் வக்கிரங்களும் கலவரங்களில் தான் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. எந்த வரலாற்று போரையும், இன மத கலவரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.

மதக்கலவரத்தில் தன் குடும்பத்தை பறிகொடுக்கும் சிராஜூதின், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் மனிதர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாமில் தன் மகளை தேடுகிறார். ஆனால் அவள் இல்லை . அப்போது அங்கிருக்கும் இளைஞர்கள் வண்டியில் சென்று தங்கள் மக்களை அழைத்து வர செல்கிறார்கள். அவர்களிடம் தன் மகளின் அடையாளத்தை கூறி தேட சொல்கிறார். கண்டிப்பாக தேடி அழைத்துவருகிறோம் என்று ஆறுதல் சொல்லி செல்லும் அவர்கள் வெற்றி பெற அல்லாவின் பெயரால் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை காண்கின்றனர் , அவள் இவர்களது வாகனத்தை கண்டவுடனேயே மிரண்டு ஓடுகிறார். அவரை சமாதனப்படுத்தி தந்தையை பற்றி சொல்லி அழைத்து வருகின்றனர். நம்பிக்கையடைந்து இவர்களுடன் வண்டியில் ஏறும் அந்த பெண் தனது கைகளால் மார்பகத்தை மூடியபடி அவஸ்தையுடன் பயணிக்கிறார். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவன் தனது கோட்டை கழட்டி கொடுக்கிறான்.

நாட்கள் நகர்கின்றன. சிராஜூதின் அங்கிருந்து புறப்படும் வண்டிகளிடம் தன் மகள் அடையாளத்தை சொல்ல தேட சொல்லி அவர்களை ஆசிர்வதித்து அனுப்புகிறார். அப்போது ஒரு பெண் மயக்கத்துடன் தண்டவாளம் அருகே கிடப்பதாக அகதிகள் தங்கி இருக்கும் மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வருகின்றனர். தன் மகள் என்பதை அடையாளம் கண்டு சிராஜூதின் அருகே ஓடி டாக்டரிடம் என் மகள் என்று கதறுகிறார்.

டாக்டர் பெண்ணின் நாடித்துடிப்பை பார்க்க அது அடங்கி இருக்கிறது என உதட்டை பிதுக்குகிறார். சிராஜூதினிடம் “திற” என்று ஜன்னலை பார்த்து கூறுகிறார். அப்போது இறந்த உடலின் கைகள் திற என்ற சத்தத்தை கேட்டவுடன் தன்னிச்சையாக தனது இடுப்பில் இருக்கும் சுடிதாரின் நாடாவை அவிழ்த்து துணியை கீழே இறக்க அவரது தந்தை டாக்டரிம் என் பொண்ணு உயிரோட தான் இருக்கா என கதறுகிறார்.

அந்த பெண்ணையே பார்த்து  கொண்டிருந்த டாக்டருக்கு வியர்த்து கொட்டுகிறது. இதை விட போரின் போது பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை சொல்ல முடியுமா? முஸ்லீம் முஸ்லீம் பெண்ணை கற்பழித்தான், இந்து முஸ்லீம் பெண்ணை கற்பழித்தான் என்று எல்லாம் நான் பார்க்கவில்லை.. இங்கு பெண் என்பவள் மதமாக, இனமாக எல்லாம் பார்க்கப்படவில்லை. ஆணின் வக்கிரத்துக்கும், குரூரத்துக்கும், வெறியாட்டத்துக்கும் மதங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, ஆண்டாண்டு காலமாக ஆண் பெண்களை சிதைப்பதை தான் பார்க்கிறேன்.

எந்த மதமும், எந்த இனமும் பெண்களை மதித்ததில்லை. மதிப்பதாக சொல்வது எல்லாம் அப்பட்டமான பொய்.. எந்த மதத்தில் பிற பெண்ணை சிதைக்க சொல்லி இருக்கிறது. ஆனால் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நடக்கும் எல்லா கலவரத்திலும் அதிகபட்ச வன்முறையை எதிர்கொள்வது பெண்கள் தான்.  இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் மதத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் பெண்கள் மதத்தை உதறி வெளியே வர வேண்டும், எல்லா மதமும் பெண்ணுக்கு அநீதி தான் இழைக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தோன்றியது இந்த கதையை வாசித்து முடித்த போது. 

இந்து, முஸ்லீம், இரண்டு மதங்களுமே மதம் கொண்டு ஒன்றை ஒன்று வெட்டி சாய்த்ததை பதிவு செய்திருக்கும் விதத்தில் தனித்து தெரிகிறார் மாண்ட்டோ.

சஹாய் கதையில் ஆசிரியர் பதிந்திருக்கும் வரிகள் வைர வரிகள்

/// ஒரு லட்சம் இந்துக்களும், ஒரு லட்சம் முஸ்லீம்களும் இறந்து போனார்கள் என்று சொல்லாதீர்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்து போனார்கள் என்று சொல்லுங்கள். இரண்டு லட்சம்  பேர் இறந்து போனதில் துயரம் கொள்ள எதுவுமில்லை. உண்மையில் துயரம் கொள்ள வைப்பது கொல்லப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் ஒரே வகையை சேர்ந்தவர்கள் தான். ஒரு லட்சம் இந்துக்களை கொன்றதன் மூலம் இந்து மதத்தை அழித்துவிட்டதாக முஸ்லீம்களும், ஒரு லட்சம் முஸ்லீம்களை கொன்றதன் மூலம் இஸ்லாம் மதத்தை அழித்துவிட்டதாக இந்துக்களும் மகிழ்ச்சியில் நடனமாடலாம்.  உண்மையில் ஆயூதங்களால்  மதத்தை ஒழித்துவிடலாம் என நினைப்பவர்கள் முட்டாள்கள். ///////

”அவமானம்”  பாலியல் தொழிலாளியான சுகந்தி என்பவரின் கதை. வயிற்றுப்பிழைக்காக உடலை விற்றாலும், காதல்லுக்காக ஏங்கும் கனவு காணும் பெண். காமத்தையும், குரோதத்தையும் அகத்தில் சுமந்து கொண்டு அலையும் மனிதர்களை பற்றி பேசுகிறது கதை. தன் உடலை விற்று பிழைப்பவளிடம் சுரண்டி பிழைக்கும் பெண் தரகர், தைரியமாக பல வக்கிர வாடிக்கையாளர்களை சாமர்த்தியமாக எதிர்க்கொள்ளும் சுகந்தி, மனிதத்தையும் அன்பையும் தன்னை சுற்றிலும் படரவிட்டு தன் வாழ்வை பற்றி பெரிய பிரக்ஞை இல்லாமல் தன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் ஆண்களை அவர்கள் சொல்வது பொய்யென்று தெரிந்தும் யாராவது தன்னை காதலித்துவிடமாட்டார்களா என்ற ஏக்கத்தில் காத்து கொண்டிருக்கிறாள்.

மாது என்கிறவன் வாடிக்கையாளராக அறிமுகமாகி காதலிக்கிறேன் என்கிறான். ஒவ்வொரு முறை வந்து செல்லும்போதும் நீ இந்த தொழிலை விட்டுவிடு நான் ஊரிலிருந்து உனக்கு பணம் அனுப்புகிறேன் என்கிறான். சில முறை நீ இந்த தொழில் பார்த்தால் கொன்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு செல்லும் அவன் பணம் அனுப்ப மாட்டான். மறுமுறை வரும் போது சுகந்தியிடமே ஏதாவது காரணம் சொல்லி பணம் வாங்கி செல்வான். ஆனால் பணம் எப்படி வந்தது என்று கேட்க மாட்டான். நெருங்கி இருக்கும் சமயங்களில் அவளை தனது உடைமை போல பேசுவான். ராம்லால் தரகர் ஏமாறாதே காசை பத்திரப்படுத்து என்று எச்சரிக்கிறான். ஆனாலும் இவள் மாதுவை காதலிக்கிறாள், அவன் காதலிக்கிறேன் என்று சொல்லும் ஒற்றை வார்த்தைக்காக

சுகந்தியின் வீட்டிற்குள் நுழைய மறுத்து , ஆனால் அதே நேரம் பெண்ணிடம் சுகம் அனுபவிக்க காரை எடுத்துக்கொண்டு தெரு முனையில் காத்திருக்கும் கண்ணிய மனிதர் சுகந்தியின் முகத்தை பார்த்தவுடன் நோ என்று சொல்லி அவளை நிராகரிக்கும் இடத்தில் தான் கதை அகத்துக்குள் பிரயாணிக்க ஆரம்பிக்கிறது.  அவளால் அந்த அவமானத்தை ஜீரணிக்க முடியவில்லை . அவமானத்தில் குமைகிறாள். கண்ணாடியில் வந்து தன்னை பார்க்கிறாள். எவ்வளவோ சமாதனப்படுத்தி தனக்குள் நடக்கும் போரட்டத்தில் துவள்கிறாள்.

அப்போது மாது வருகிறான் அவசரமாக ஏதோ பணத்தேவை என்று. ஆணின் சுயநலம் மனதையும் , புத்தியையும் ஒரு சேர தாக்க அப்போது சுகந்தி அவனை கேள்விகளால் குதறி எறிந்து வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறாள். தன்னை சுரண்டும் மொத்த ஆண் வர்க்கத்தையும் உதறி நிராகரிக்கிறாள் மாதுவை விரட்டுவதன் வாயிலாக என்பதாக தான் பார்க்கிறேன். இறுதியில் அவள் வீட்டில் இருக்கும் சொறிநாயுடன்  நிம்மதியாக கட்டிலில் உறங்குகிறாள்.. கதையின் மையமே அவளை நிராகரிக்கும் ஒரு ஆண் மூலம் அவள் கனவுலகத்தில் இருந்து யதார்த்தத்துக்கு வருவது தான். மிக கடுமையான அவமானம் மனிதனை என்ன செய்யும் என்பதாகவும் பார்க்கிறேன்.

சில்லிட்டுப் போன சதைப்பிண்டம் ஐஷர் சிங், தனது மனைவி குல்வந்த கெளர்ரை சில நாட்கள் கழித்து சந்திக்க வருகிறான். அவனிடம் மனைவி இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தாய், கலவரத்தில் நீயும் கலந்து கொண்டாயா என்று வார்த்தைகளால் துளைக்கிறாள். இல்லை என மறுக்கும் அவன் மனைவியுடன் உறவு கொள்ள அவளை முன்விளையாட்டுகளால் மகிழ்வித்து அவள் கேட்கும் கேள்வியில் இருந்து திசை திருப்புகிறான். ஆனாலும் அவள் மனதில் அந்த கேள்வி குடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் முன்விளையாட்டுகளால் குல்வந்த்தை உச்சத்துக்கு கொண்டு சென்று அவன் இயங்க முற்படும் போது முடியாமல் துவளுகிறான்.

இருவருக்கிடையே இதுவரை அப்படி நடந்ததில்லை ஆதலால் வேறு யாரோ ஒருவளுடன் ஐஷர் உறவு கொண்டு தன்னிடம் இருந்து மறைக்கிறான் என அவனை உலுக்கி எடுக்கிறாள் குல்வந்த்... யார் அவள் சொல் சொல் என அவனை கிர்வானி என்ற ஆயூதத்தால் ரத்தம் வர காயப்படுத்துகிறாள். அவைகளை மெளனமாக ஏற்கும் அவன் உனக்கு என் மீது இரக்கம் வரவில்லையா, உண்மையை சொல்லிவிடுகிறேன் என ஆரம்பிக்கிறான் .

கலவரத்தில் முஸ்லீம் குடும்பம் ஒன்றில் ஆறு பேர் இருந்தார்கள் அவர்களில் ஐந்து பேரை  இந்த கிர்மானியால் தான் வெட்டிக்கொன்றேன். ஆனால் அதில் ஒரு பெண் இருந்தாள். அவளை மட்டும் தோளில் தூக்கு போட்டுக்கொண்டு புதர் பக்கம் வந்து அவளை இறக்கினேன். முதலில் முன்விளையாட்டுகளுடன் ஆரம்பிக்க நினைத்த நான் அதன் பின் அலட்சியமாக என்று சொல்ல வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறினான். கேட்டுக்கொண்டிருந்த குல்வந்தின் தசைகள் தீயாய எரிய அவனை எரிப்பது போல பார்க்கிறாள். மேலே சொல்ல முடியாத ஐஷர் அவள் இறந்து கிடந்தாள். சில்லிட்டு போன சதைப்பிண்டத்தை தவிர வேறு ஒன்றுமில்லை என்று சொல்லி முடிக்கும் போது ஐஷர் கையும் சில்லிட்டு போகிறது.

நான் சொல்லியிருப்பது தொகுப்பில் உள்ள மனதை உலுக்கி எடுத்த மூன்று சிறுகதைகளை மட்டுமே ..மிக முக்கிய கதையான சஹாய் பற்றி சொல்வது கடினம். . மனிதனின் தெய்வ குணத்தை விட மிருக குணத்தை மதம் எவ்வாறு தூண்டிவிடுகிறது என்பதை அலசி இருக்கும் ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது உணர முடியும். இந்து முஸ்லீம் என்ற பிரிவினை இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் நண்பர்கள் மனதில் கலவரம் என்ன மாதிரி விஷத்தை ஊற்றுகிறது என்பதை ஜூகல் என்பவன் மூலமும் முஸ்லீம்களால் இறந்து போகும் ஒரு இந்து தரகர் மூலம் ஆன்ம விழிப்பு பெறும் மும்தாஜ் மூலமும் சொல்லி ஜூகல் இறுதியில் அந்த தரகரின் ஆன்மா தனக்கும் வேண்டும் என்பதாக முடியும்..

மண்ட்டோ உங்கள் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். முகத்திலறையும் உண்மைகளை, நமது நல்லவர்கள் பிம்பத்துக்குள் வைத்திருக்கிற பாசி படிந்த மத நம்பிக்கையை நிர்தட்சண்யமாக கேள்விகள் கேட்கிறார். முக்காடிட்டு ஒளித்து வைத்திருக்கிற இருண்ட பக்கத்தை எழுத்தின் மூலம் போகிற போக்கில் விலக்கி வெளிச்சம் பாய்ச்சி மனித அகத்தை படம் பிடித்து காட்டுகிறார்.

பாரதி புத்தகாலயம் வெளியீடான இதை தமிழில் மொழிப்பெயர்த்திருப்பவர் ராமானுஜம். 

1 comment:

  1. எழுத்தாளர்களுடன் ஒட்டி பிறந்த வறுமையிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இறுதி வரை வாழ்ந்தார்.

    ReplyDelete