”அந்நியன்” ஆல்பெர் காம்யூ எழுதிய ப்ரெஞ்ச் நாவலை ஸ்ரீராம் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.
க்ரியா பதிப்பகம் வெளியீடு. இந்நாவலின் கதை
பற்றி ஒற்றை வரியில் சொல்லவேண்டுமென்றால் மனிதன் என்பவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று
இந்த சமூகம் விதித்திருக்கும் வரைமுறைகளில் இருந்து விலகி செல்பவன் இந்த உலகில் வாழ
தகுதியில்லாதவனாக முடிவு செய்யப்படுகிறான்.
நூற்றி
ஐம்பது பக்கங்களுக்குள் முடிந்துவிடும் இந்த புத்தகம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம்
மிகப்பெரியது என்று தான் சொல்ல வேண்டும். கதை நாயகனான் மெர்ஷோவின் அம்மா இறந்துவிடுகிறாள்,
அவளை காணச்செல்கிறான் மகன் எந்த உணர்வுமில்லாமல், அவனை அவனின் தாயின் மரணம் பாதிக்கவில்லை
. தாயின் மீது வெறுப்பா என்றால் இல்லை. அவன் தாயின் மரணத்தை ஏற்றுகொள்கிறான் அவ்வளவு
தான். அவனுக்கு அழுகை வரவில்லை மிக இயல்பாக இருக்கிறான் இறந்து கிடக்கும் தாயின் அருகில்.மறுநாள்
அவன் தாயின் ஈமச்சடங்கு நடக்கிறது. மெர்ஷோவுக்கு அதெல்லாம் அர்த்தமற்றதாக தோன்றுவதுடன்,
அவை எல்லாம் போலித்தனமாக இருக்கிறது. அந்த இடத்தை விட்டு அகன்றால் போதுமென்று நினைக்கிறான்.
அழாமல் வெகு இயல்பாக இருக்கும் அவனை இந்த சமூகம் விசித்திரமாக பார்க்கிறது.
தாயின்
அடக்கம் முடிந்தவுடன் வீட்டுக்கு வரும் அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லை. வீட்டுக்கு
வருகிறான் நன்கு தூங்குகிறான், சாப்பிடுகிறான், அவன் அறையில் இருந்து தெருவை வேடிக்கை
பார்க்கிறான், பின் மறுநாள் தன் தோழியை வரசொல்லுகிறான். அவளுடன் சினிமாவுக்கு செல்கிறான்,
விளையாட்டுகளில் ஈடுபடுகிறான் விடுமுறை முடிந்து அலுவலகத்துக்கு சென்று வழக்கம்போல
காரியங்களை கவனிக்கிறான்.
நாயகனின்
இந்த போக்கு குழப்பத்தை கொடுத்தாலும், கொஞ்சம் நம் மனதை திறந்து ஆழமாக பயணித்தால் அதிர்ச்சியாக
இருக்கிறது. நாமும் ஓரளவு மரணங்களை கடந்து தான் வந்திருப்போம், அந்த மரணங்களில் துயரங்கள்
இருந்திருக்கலாம், வலி இருந்திருக்கலாம் ஆனால் நிகழ்ந்துவிட்ட மரணத்தின் சடங்கில் நம்
எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை எந்த முகமூடியும் இல்லாமல் அலசி இருக்கிறார்
ஆசிரியர்.
அடுத்து
நாயகனின் தோழி அவனை காதலிக்கிறாள், திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்கிறாள். காதலிக்கிறேன்,
எப்போதும் காதலிப்பேன் என்று எல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை ஆனால் நீ விரும்பினால்
நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான். பெண்ணின் உடல் இன்பம் தேவையாக இருக்கிறது
ஆனால் காதல் பற்றி எல்லாம் அவனுக்கு பெரிய பிரச்சனை இல்லை. திருமணம் செய்வதும் செய்யாததும்
ஒன்று தான் அவனை பொறுத்த வரை.
மெர்ஷோ
நல்லவனா, கெட்டவனா என்று முடிவுக்குள் வாசிப்பவர்களை இழுத்து செல்லாமல் நாயகனின் போக்கில்
அவன் எண்ணங்களை, அவன் செயல்களை விவரிக்கிறார். அதிகம் யாருடனும் பேசுவதில்லை, பேசுபவர்களுடன்
உண்மையாக தான் பழகுகிறான். எதற்கும் உணர்ச்சி படுவதில்லை. நான் இப்படி என்று காதலி
உட்பட யாரிடமும் அவன் புரியவைக்க முயற்சிக்கவில்லை.
வாழ்க்கையில்
பிடிப்பு இல்லாதவனா என்றால் அப்படியுமில்லை, பெரிய எதிர்பார்ப்போ, பெரிய லட்சியங்களோ
இல்லாமல் அந்தந்த கணங்களில் வாழ்கிறான் இன்னும் சொல்லப்போனால் சந்தோசமாகவே. அவன் குடியிருக்கும்
பகுதியில் இருக்கும் ஒருவன் நண்பனாக ஏற்றுகொள்வதாக கூறி அவனை அழைத்துசெல்கிறான் அவனின்
காதலி துரோகம் செய்துவிட்டதாக புலம்பும் அவன் அவளை அவமானப்படுத்த விரும்புகிறான். ஒரு
கடிதம் எழுத மெர்ஷோவின் உதவியை நாடுகிறான். மெர்ஷோவும் செய்கிறான்.
அதே
குடியிருப்பில், சொறி நாய் ஒன்றை மட்டும் துணையாக வைத்து கொண்டு வாழும் மனிதனுடனும்
அவன் இயல்பாக பழகுகிறான். அவன் தாயை முதியோர் இல்லத்தில் விட்டதை பற்றி கேட்கும் போது
எங்கள் இருவருக்குள்ளும் பேச விஷயங்கள் இல்லை, மேலும் எனக்கு மிகப்பெரிய பொருளாதார
வசதியுமில்லை இல்லத்தில் இருந்தால் அவள் வயதையொத்த மனிதர்களுடன் இருப்பதில் வெறுமை
இல்லாமலாவது இருப்பாள் என்கிறான். அவரும் ஆமோதிக்கிறார்.
இந்நிலையில்
புதிதாக நண்பனானவுடன் தன் காதலியுடனும் விடுமுறை நாளை கழிக்க கடற்கரை செல்கிறான். மிக
சந்தோசமாக குடித்து, காதலியுடன் நீந்தி விளையாடி களிப்புற்று இருக்கும் அவன் ஒரு அரேபியனை
எதிர்பாராமல் கொலை செய்துவிடுகிறான். திட்டமிட்டு எல்லாம் அந்த கொலை நடக்கவில்லை. ஒரு
சின்ன தகராறு கொலையில் முடிகிறது. முதல் பாகம் கொலையுடன் முடிகிறது.
இரண்டாம்
பாகம் கொலையான அவன் கைதாகி அவன் மீது நடக்கும்
வழக்கு, விசாரணைகள் , விசாரணையின் முடிவு அவ்வளவு
தான். ஆனால் இந்த அத்தியாயத்தில் இந்த சமூகத்தின் பொதுபுத்தியையும் அதில் இருந்து விலகி
இருப்பவனை சமூகம் பார்க்கும் பார்வையையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கும் விதம் அலாதி.
மனம் நம்மை இயக்குகிறது என்று தான் நம்பி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் மனம் மட்டுமா
நம்மை இயக்குகிறது. நம்மை சுற்றியுள்ள புறச்சூழல்களே நம்மை இயக்கிறதோ என்று சந்தேகம்
மெர்ஷோ கொலையானதை நினைத்து பார்க்கும் போது வாசிப்பவருக்கு தோன்றுகிறது.
மெர்ஷோவை
கொலை குற்றத்துக்காக விசாரிக்கிறார்கள் நீதிமன்றத்தில், கொலையை விட்டுவிட்டு மெர்ஷோவின்
குண இயல்புகளை விசாரிக்க தொடங்குவதில் மெர்ஷோ சலிப்படைகிறான். அவன் செய்த கொலை பற்றிய
விசாரணைகளவிட அவன் தாய் இறந்த போது இயல்பாக இருந்தது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
அதற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போதும், அவன் தாய் இறந்த மறுநாளே
பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது, தாயின் மரணத்தில் அழாதது, தாயின் சடலம் அருகில் அவன்
காபி குடித்தது என்று நுணுக்கமாக அவன் சராசரிகளில் இருந்து வேறுபட்டு இருப்பது அலசப்படுகிறது.
தெய்வ நம்பிக்கை இல்லாதவன் என்பதும் அவனுக்கு எதிராக போகிறது. அப்படி இருந்ததாலேயே அவன் மனிதன் இல்லை அவன் கொடூர
மனம் கொண்டவன் என்று அவனுக்கு கொலை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம்.
சிறை
வாசத்தில் அவன் வாழ்க்கையும், அதனை அவன் எதிர்கொள்ளும் விதமும், அவனது எண்ண ஓட்டங்களும்
விவரித்திருக்கும் விதத்தில் நம்மையும் அறியாமல் நம் சுய அலசலுக்குள் நுழைந்துவிடுகிறோம்.
இறுதி வரை பாவ மன்னிப்பு கேட்க சொல்லும் அவனை சந்திக்க நினைக்கும் பாதிரியாரை சந்திக்க
மறுக்கிறான். சந்திக்கும்போது அவரிடம் நாயகன் முன் வைக்கும் விவாதத்தின் உண்மை நம்மையும்
கேள்வி கேட்க வைக்கிறது. இறுதிவரை கடவுள் நம்பிக்கையை ஏற்க நாயகன் யாராக இல்லை.
நாயகன்
சமூகத்தின் பொதுபுத்தியில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறான். அதுவொன்றே அவனுக்கு
மரண தண்டனை வழங்குவதற்கு போதுமானதாகிறது.
அந்நியன்
உணர்வுபூர்வமாக பாதிக்கும் வகை கதையில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் அந்நியனை நமக்கு
அடையாளம் காட்டுகிறது.
No comments:
Post a Comment