பதினொரு நிமிடங்கள் (லெவன் மினிட்ஸ் - Eleven
Minutes) - பாவ்லோ கொய்லோ (Paulo Coelho)-வின் புத்தகம். தமிழில் க.சுப்ரமணியன் எதிர்
வெளியீடு.
விபச்சாத்தை தனது தொழிலாக செய்த மரியா என்ற பெண்ணின்
கதையை பேசுகிறது நாவல். பிரேசிலில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து மரியாவுக்கு புரியாத
வயதில் ஒரு காதல் வருகிறது. ஆனால் அது தோல்வியில் முடிய காதல் குறித்த ஏக கற்பனையில்
இருந்த மரியா அந்த வலியால் துவண்டு போகிறாள். ஆனாலும் உண்மையான காதலுக்கு ஏங்குகிறாள். பள்ளி படிப்பு
முடிந்தவுடன் அந்த கிராமத்திலேயே ஒரு கடைக்கு வேலைக்கு போகிறாள். அவள் அழகில் மயங்கும்
அந்த கடை முதலாளி அவளை காதலிக்கிறான். ஆனால் அவள் கனவோ நகரத்துக்கு செல்ல வேண்டும்
என்று இருக்கிறது.
ஓரளவு பணம் சேர்த்து பக்கத்தில் இருக்கும் ரியோ நகரத்தை
நான்கு நாட்கள் சுற்றி பார்க்க செல்கிறாள். அவளிடம் நல்ல உடையோ, செருப்போ கூட இல்லை.
இவளிடம் இருக்கும் அரத பழசான ஒரு நீச்சலுடையில் குளிக்க இவளின் அழகை வைத்து நல்ல வியாபாரம்
செய்யலாம் என நினைக்குமொருவன் இவளை ஜெனீவாவுக்கு கூட்டி செல்கிறான். அங்கு காபரே டான்ஸராக
ஒப்பந்த ஆளாக இவள் வேலை செய்ய நகர வாழ்க்கை இவள் நினைத்தது போல சந்தோசமாக இல்லை. டான்ஸராக
போதிய பணம் சம்பாரிக்க முடியாது என்பதை உணர்ந்து ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் ஒப்பந்தத்தால்
அங்கேயே தங்க நிர்பந்தம்.
சில நாளிலேயே சந்திக்கும் ஒருவன் மூலம் இவளை ஜெனீவாவுக்கு
அழைத்து வந்தவனை வழக்கு போடுவேன் என மிரட்டி கொஞ்சம் பணத்துடன் அவன் விடுதியிலிருந்து
வெளியேறுகிறாள். பெரிய மாடலாக வர முயற்சிக்க ஆனால் பணம் சம்பாரிக்கும் நிர்பந்தம் இவளை
விபச்சாரியாக மாற்றுகிறது.
பல ஆண்களை சந்தித்தாலும், பாலுறவை ஒரு தொழிலாக வாடிக்கையாளரை
திருப்திபடுத்த என்னவெல்லாம் செய்யலாம் அதன் மூலம் அதிகம் பணம் சம்பாரிப்பது என்கிற
ரீதியிலேயே சிந்திக்கிறாள். பாலுறவு அவளை பொறுத்தவரை விருப்பு வெறுப்பெல்லாம் கடந்த
ஒன்றாக தான் பார்க்கிறாள். அவள் ஆசை எல்லாம் கொஞ்சம் பணத்துடன் பிரேசில் சென்று பண்ணை
ஒன்று, வீடு, அம்மா அப்பாவுடன் என்பதாக குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பாரிக்க வேண்டிய
பணம் ஒன்றே லட்சியமாக இருக்கிறது.
ஓரளவு பணம் சம்பாரித்து ஊருக்கு திரும்ப முடிவெடுக்கும்
நேரம் வரும் போது இரண்டு ஆண்களை சந்திக்கிறாள். இருவராலும் பெரிதும் ஈர்க்கப்படுகிறாள்.
அதில் ஒருவன் ஓவியன், மற்றொருவன் சாடிஸ்ட். சாடிஸ்ட் மூலம் அவள் காணும் உலகை, வலியின்
மூலம் உணரும் உணர்வை தான் உச்சம் என்று நினைக்க ஓவியன் அது இல்லை உண்மையான வலி எது
என்பதை அவளை உணர வைக்கிறான். வோட்காவின் துணையுடன் அடையும் உச்சத்தை கேள்விக்குள்ளாக்கும் ஓவியன், அவளுக்கு வேறு விதத்தில் உச்சம் காட்டுகிறான். ஓவியன் , சாடிஸ்ட் இருவரின் மூலமும் இரு வேறு அனுபவங்களை பெறுகிறாள் மரியா. வீனஸ் இன் ஃபர் கதையின் சில இடங்க்ளை மேற்கோடிட்டு காட்டி சாடிஸ்ட் கூறும் வார்த்தைகளும் உண்மைக்கு பக்கத்திலேயே இருக்கிறது உண்மையைவிட கவர்ச்சிகரமாக.
ஒவியனை காதலித்தாலும், ஒரு அவ நம்பிக்கையிலேயே இருக்கிறாள்.
மரியாவின் அகப்போராட்டங்களும், பாலுறவு குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது எல்லாம் வார்த்தைகளில்
கூற முடியாது. ஓஷோவின் சாயல் கொய்லாவிடம் இருந்தாலும் உணர்வுகளை சொல்லியிருக்கும் விதத்தில்
தனித்து தெரிகிறார் பாவ்லோ.
பெண்ணின் உச்ச கட்டத்தை ஆராய்ச்சிக்கெல்லாம் உட்படுத்தாமல்,
வேறு விதமாக அதன் மூலம் ஆன்மாவின் இருப்பை உணர செய்யும் முறையை மரியாவின் மூலம் நுணுக்கமாக
ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். என்ன அறிவு தளத்தில் உச்சமாக சுதந்திரத்தை விரும்பினாலும், அதை பிறருக்கு கொடுக்க நினைத்தாலும், பொறாமை உட்பட அனைத்து உணர்வுகளையும் எதிர்கொள்ளும் இடத்தில் பெண்மையின் உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறார். அறிவாக சிந்தித்து காதல் வலி கொடுக்கும், சுதந்திரத்தை பறிக்கும் அந்த இனிக்கும் உறவு அலுத்துப்போகும் என்று பலவற்றையும் குழப்பிக்கொள்ளும் மரியா ஓவியனை பிரிய நினைத்து அவனை விட்டு பிரேஸிலுக்கு விமானம் ஏறுகிறாள். ஆனால் இன்னொரு பக்கம் அவனுடன் இருக்க ஏங்கி கொண்டு தன்னை வந்து தடுத்து அணைத்து கூட்டி செல்ல மாட்டானா என்று ஏங்கியவாறே ஒரு இரண்டாம் கட்ட மனநிலையில் பயணிக்கிறாள். அவள் தடுமாற்றத்திலும், எதிர்பார்ப்பிலும் அனைத்து பெண்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார். ஓவியனுடனான பாலுறுவு உச்சத்தின் மூலம்
ஆன்ம சந்திப்பை நிகழ்த்தி இருந்தாலும் சினிமா பாணியில் காதலை எதிர்பார்க்கும் அவள்
மனதை அதை நிறைவேற்றி ஆச்சரியப்படுத்தும் ஓவியன் என்று நிறைவான முடிவு.
பாலுறவின் வலி, இழப்பு , மேன்மை என்று அனைத்து நுணுக்கங்களையும்,
பெண்ணின் நுட்பமான அகச்சிக்கலையும், உடல் சிக்கலையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில்
பேசுகிறது நூல். நூலகரகராகவும், மரியாவின் ஒரே தோழியாகவும் வரும் பெண்ணுக்கும் மரியாவுக்குமிடையேவான பாலுறவு குறித்த உரையாடல்கள் மூலம் பெண்களின் பிரச்சனைகளை அலசி இருக்கும் விதம் அருமை. பாலுறவின் புனிதத்தை ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு பின் புத்தகத்துக்கு பின் கிட்டதட்ட அதே கருத்தையொட்டி
இருக்கும் பதினொரு நிமிடங்கள் பாலுறவு குறித்தான தெளிவான புரிதலை தருகிறது.
ஆசிரியர் சில இடங்களில் அதிகமாக சில உணர்வுகளை குழப்பியிருப்பது
போல தோன்றினாலும் இதில் கூறப்பட்டிருக்கும் பாலுறவு குறித்த பார்வைகளும், மரியாவின் தன்னை கண்டடைய எடுக்கும் முயற்சியும், அவளின் துணிவும், சிந்தனை குழப்பமும் அதற்கு விடை தேடும் விதமும் , சுதந்திர உணர்வும் அனைத்தையும் தொடர்புபடுத்தி கூறப்பட்டிருக்கும் விதமும் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசிக்க தூண்டும்.
No comments:
Post a Comment