சிலுவையில் தொங்கும்
சாத்தான். - கூகி வா தியாங்கோ – கென்ய எழுத்தாளர்.
தமிழில்
- அமரந்த்தா – சிங்கராயர்
இந்நூல் ஆசிரியர் ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் இருந்த போது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது.1980 ஆம் ஆண்டில் கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் கண்ட இந்த நூலை 1982 ஆம் ஆண்டு கூகி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
இடது சாரி இலக்கியத்தை பேசும் இந்த புத்தகம், காலனி ஆட்சியில்
இருந்து விடுதலை பெற்றாலும், இன்றும் அவர்களின் கீழ் தான் இருக்கிறோம் என்பதை பற்றி
பேசுகிறது. ஆப்ரிக்கா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதையும், அவர்கள் விடுதலை என்பதை
பெயரளவில் வழங்கிவிட்டு, முதலாளித்துவம் மூலம் நம் மக்களின் வியர்வையை, உழைப்பை நம்மவர்களே
உறிஞ்சுவதை, நம் மக்களாலேயே நாம் சுரண்டுப்படுவதை
பற்றி தெளிவாக கூறுகிறது.
வரியங்கா என்ற பெண்ணின் மூலம்
தொடங்கும் கதை அவளைமையப்படுத்தி நகர்கின்றது. நைரோபியில் ஸ்டெனோவாக வேலை பார்க்கும்
அவள் முதலாளியின் சுகர் கேர்ளாக (ஆசைநாயகியாக) இருக்க மறுத்ததற்காக வேலையிலிருந்து
நீக்கப்பட்டு, வசிக்கும் வீட்டிலிருந்தும் துரத்தப்படுகிறாள். காதலனிடம் சென்று தான்
சுகர் கேர்ளாக இருக்க மறுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டதை தெரிவிக்க, அவன் அவளை
கீழ்தரமான வார்த்தைகளால் திட்டுகிறான். அவள் சிறுவயதிலேயே பரிசு பொருட்களுக்காக கிழவனுடன்,
உறவு வைத்து கொண்டு பிள்ளை பெற்றவள் தானே, உன் முதலாளியிடமும் இருந்துகொண்டு பலருடன்
தொடர்பு வைத்திருந்திருப்பாய். அது தெரிந்ததால் தான் முதலாளி வேலையை விட்டு நீக்கியிருப்பான்
என கூசாமல் சொல்கிறான். மனம் நொந்து தனது சொந்த ஊருக்கு போக முடிவெடுத்து மன உளைச்சலுடன்
தெருவில் மயங்கி சரியும் அவளை ஒருவன் காப்பாற்றுகிறான். அவன் விடைபெறும்போது சாத்தானின்
விருந்திற்கான அழைப்புக்கான நோட்டீஸ் ஒன்றை கொடுத்து செல்கிறான். அந்த விருந்து அவள்
சொந்த ஊரான இல்மொராக்கில் நடக்கிறது.
அந்த நோட்டீஸில் நவீன திருட்டிலும், கொள்ளையிலும் பேர்போன ஏழு
நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நடப்பதாக பகிங்கிரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விழாவில் கலந்து கொள்ள அடிப்படை தகுதிஒரு முறையாவது கோடிக்கணக்கில் திருடி இருக்க
வேண்டும் என்று அச்சிடப்பட்ட காகிதத்தை கண்டு வரீயங்கா திகைக்கிறாள். இப்படியெல்லாம்
கூட நடக்குமா என்று குழப்பமும், சந்தேகமுமாக அது பொய்யாக தான் இருக்கும் என நினைத்து
அதை தனது கைப்பையில் போட்டு விட்டு ஊருக்கு போக ஆயுத்தமாகிறாள்.
மட்டாட்டுவில்
(பயணிகளை ஏற்றி செல்லும் வாகனம்) தனது சொந்த ஊருக்கு பயணம் செய்கிறாள் வரியங்கா. அவளுடன், முதூரி என்கிற முதியவர் ஒருவரும்,
ஆங்கில படைக்கு எதிராக போராடிய பெண்ணான வங்காரியும், கல்லூரியில் நாட்டுப்புற இசை
பற்றி படிக்கும் மாணவனான கத்தூய்ரியாவும், சாத்தானின் விருந்தில் கலந்து கொள்ள
செல்லும் உள்நாட்டு முதலாளியான முகிராயும் பயணிக்கின்றனர். மாட்டுடாவை ஓட்டும் டிரைவராக
முவாரா. இவர்களின் கலந்துரையாடலில் கென்ய
விடுதலை போராட்ட வரலாற்றையும், விடுதலைக்கு பின்னான நிலையையும் பேசப்படுகிறது.
இந்த புத்தகத்தின் முன்னுரையிலேயே கென்ய விடுதலை போராட்டம் பற்றி தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தூய்ரியா பணக்கார ஆப்ரிக்க
குடும்பத்தில் பிறந்தாலும், கென்ய மக்கள், கென்ய முதலாளிகளால் சுரண்டப்படுவதை எதிர்க்கும்
மனப்பாங்கு உள்ளவனாக இருக்கிறான். மண்ணின் இசையை மீட்டெடுக்க வேண்டி பூர்வகுடிகளின்
இசையை ஆராய்கிறான். இந்த மாட்டுடாவில் பயணிக்கும் அனைவரும் சாத்தான் விருந்துக்கு செல்ல
முடிவெடுக்கிறார்கள். அந்த விருந்தில் நவீன திருடன் கிரீடம் சூட்ட வந்திருக்கும், மக்களை
சுரண்டும் பெருமுதலாளிகள் (நவீன திருடர்கள்) தாங்கள் எப்படியெல்லாம் மக்களிடம் இருந்து
உழைப்பை, பணத்தை சுரண்டுகிறோம் என்பதை எல்லாம் விரிவாக கூறுகிறார்கள். பிரிட்டிஷ் விட்டு சென்ற ஆட்சிக்கு பிரதிநிதியாக மாறி தங்கள், பண
வெறியினால் தங்கள் நாட்டினரையே அடிமைப்படுத்துவதையும் முட்டாளாக்குவதையும் பெருமையாகக்
கருதுகின்றனர். இவர்களின் சொத்துகள், இவர்களுக்கு இருக்கும் கார்கள், பங்களாக்கள்,
மனைவிகள், சுகர் கேர்ள்ஸ், மூலம் தெரியப்படுத்துகின்றனர்.
அந்த நவீன திருடர்கள் பேசும் ஒவ்வொரு
வார்த்தையும் முதலாளித்துவத்தின் கோர முகத்தை பதிவு செய்கிறது. நாமும் சுரண்டப்படும்
ஒரு வர்க்கம் என்பதை வாசிக்கும் போது உணரமுடிகிறது. ஆளும் வர்க்கத்தினரால் ஆளப்படும் வர்க்கம், அடிமைப்படுத்தப்படும்
சுரண்டப்படும் தன்மை வாசிப்பவருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
ப்ரிட்டிஷ் காலனி மதத்தை துணைக்கு
வைத்து மக்களை எப்படி சிந்திக்க விடாமல் மழுங்கடித்தது என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கும்
விதமும், ஆங்கிலேயர்கள் சுரண்டும் வரை சுரண்டிவிட்டு எஞ்சியதை சுரண்ட, தனது கூலியாட்களை
நியமித்து சென்றிருப்பதையும் முகத்தில் அறைந்தாற் போல எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
கென்யாவை எடுத்துவிட்டு இந்தியாவை அந்த இடத்தில் பொருத்தி பார்த்தால், அதே அழிவு நம்மிடையேயும்
அவர்கள் நிகழ்த்தியிருப்பதை உணர முடியும். இந்த நூல் பேசும் அரசியல் முக்கியமானது.
முதலாளித்துவத்துக்கு அடிமையாகிபோய் கிடக்கும் மக்களின் உணர்வுகளை மதம் எப்படி எழ விடாமல்
பார்த்து கொள்கிறது என்பதை தெளிவாக பேசுகிறது.
அரசியல் தவிர்த்து பெண்ணின் நிலையை
பார்த்தால், அவள் மீதான பாலியல் சுரண்டல், தேசம் கடந்தும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக
இருப்பதை தான் வரீயங்கா, வங்காரி கதாபாத்திரங்கள் மூலம் உணர முடிகிறது.
வங்காரி
திருடர்கள் நடத்தும் விருந்துக்கு போலீசாரை கூட்டிவர அவள் கலகம் செய்ய முயற்சிப்பதாக
கைது செய்யப்படுகிறாள். அதிகார வர்க்கம் என்பது சில்லறை திருடர்களை பிடிக்கவே, பெரும்
திருடர்களுக்கு அவை சாமரம் வீசுகிறது என்பதை வங்காரி கைதின் மூலம் ஆசிரியர் பதிவு செய்கிறர்.
நீதியின் பக்கம் சார்ந்து உண்மையின் தளத்தில் நிற்பது
போல தோன்றினாலும், அது ஆளும்வர்க்கத்தின் கைப்பாவை தான் என்பதை வங்காரி கைதின் மூலம்
ஆசிரியர் மறைமுகமாக சொல்கிறார். போராளியாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகளை
வங்காரி கதாப்பாத்திரம் மூலம் சொல்கிறார் ஆசிரியர்.
சிறுமியில் இருந்து இளம்பெண்ணாக
மாறும் நேரத்தில் வரீயங்கா மனதில் சிறகடிக்கும் கனவுகளும், கற்பனைகளும், கள்ளம்கபடமில்லா
அவள் குழந்தைத்தனமும் உலகம் முழுதும் உள்ள பெண்களுக்கான பதின் பருவ உணர்வு. அவளின்
ஆசை, அவளது உள்ளத்தை பற்றி கவலை இல்லாமல்,
அவளின் இளமையால் ஈர்க்கப்படும் பணக்கார கிழவன் ஒருவன் ஆசை வார்த்தைகளால் அவளுக்கு வேறு
ஒரு உலகத்தை காட்டுவதாக பகட்டான உலகத்தை காட்டுகிறான். அந்த பகட்டில் மயங்கும் வரீயங்கா
பணக்காரனின் படுக்கையறை விளையாட்டு பொம்மையாக தான் ஆக்கப்படுவது தெரியாமல் அவனுடன்
சந்தோஷமாக நாட்களை
கடத்துகிறாள். விளைவு எஞ்ஜினீயரிங் கனவில், படிப்பில் முதல் மாணவியாக வரும் அவள் படிப்பின்
மீது நாட்டம் குறைந்து கேளிக்கையில் நாட்டம் கொள்கிறாள். அவனால் கர்பமாகிறாள். அவள்
கர்பமானவுடன் காணாமல் போகிறான், போகும் போது அவளை எளிதில் எவருக்கும் இணங்க கூடிய க்ரீந்தி
என்று சொல்லி செல்கிறான்.
மனமுடைந்து
தற்கொலைக்கு இருமுறை முயற்சிக்க இருமுறையும் காப்பாற்றப்படுகிறாள். அப்பா அம்மாவிடம்
தங்கி ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுக்கிறாள். அம்மாவிடமே குழந்தையை வளர்க்கிறாள்.
யதார்த்த உலகம் புரிபட கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு வருகிறாள். கடுமையாக படித்தாலும்
முன்பு போல முடியாமல் செகரட்ரி வேலைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு வேலையை
தேடி கொள்கிறாள். அப்போது ஒரு இளைஞன் மீது மீண்டும் காதல் வயப்படுகிறாள். அவன் படிப்பு
செலவுக்கு பணம் தருகிறாள் தன் சம்பாத்தியத்தில், அவனின் வார்த்தைகள் மீண்டும் அவளுக்குள்
காதல் மலர செய்கிறது. ஆனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டதும், அவளின் ஆரம்ப கால கதை
தெரிந்த அவன் அவளை க்ரீந்தி (பலருடன் உறவு கொள்பவள்) என்று சொல்லி புறக்கணிக்கிறான்.
இந்த
கதையெல்லாம் தன்னுடன் பயணிக்கும் கத்தூர்யாவிடம் கூறுகிறாள். பின் எதற்காக அவனிடம்
கூறினோம் என்று தன்னை தானே ஆச்சரியத்துடன் கேட்டு கொள்கிறாள். கத்தூர்யாவுக்கும் வரீயங்கா
மீது ஒரு அன்பு மலர்கிறது. அவள் மெல்ல மெல்ல போராடி தனது பொறியியல் பட்டப்படிப்பை முடிக்கிறாள்.
தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்த வரீயங்கா, போராடி பொறியியல் படிக்கிறாள்.
தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்கிறாள். கந்தூர்யவுடன் மலரும் அன்பு அவர்களுக்கிடையேயான
உறவு மிக யதார்த்தமாக உணர்வு தளத்தில் அழகாக நிகழ்கிறது. கந்தூர்யா யார் என்று தெரியுமிடம்
கதையின் மற்றொரு திருப்பம்.
இறுதியில் வரியங்கா சிறுவயதில்
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி ஏமாற்றிய வயதான பணக்காரனை கொல்வதுடன் நாவல்
முடிகின்றது.
இடதுசாரி சிந்தனைகளும், முதலாளித்துவத்துக்கு எதிரான
சிந்தனையும் நாவல் ஒரு சேர பேசுகிறது. மக்கள் பயத்தையும், உழைப்பையும் மூலதனமாக கொண்டு
சுரண்டும் வர்க்கம் வளருவதையும், சுரண்டப்படும் வர்க்கம் மதம், விசுவாசம், என்று ஏதோ
ஒன்றில் கட்டுண்டு கிடப்பதும் பற்றியும் வாசிக்கும் போது உணர முடிகிறது.
சிலுவையில் தொங்கும் சாத்தான் கதையே மறைமுகமாக அழகிய
குறியீடை தாங்கி வருகிறது என்பதை கதையை வாசித்துவிட்டு தலைப்பை வாசிக்கும்போது உணர
முடிகிறது. சினுவ அச்சிபியின் சிதைவுகள், ஆப்ரிக்க மக்களிடம் கிருஸ்துவ மதம் எப்படி
நுழைந்தது என்பதை பதிவு செய்தது. கூகி வா தியாங்கோவின் இந்த படைப்போ மதத்தை கையில்
எடுத்து கொண்டு ஆப்ரிக்காவில் காலடி எடுத்து வைத்த காலனி அரசு, மதத்தின் பெயரால் மக்களை
அடிமையாக்கி மழுங்கடித்ததையும், தங்கள் ஆதிக்கத்தை விட்டு போனாலும், மறைமுகமாக அம்மக்களிடம்
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதையும் பேசுகிறது.
No comments:
Post a Comment