சேப்பியன்ஸ் நான் வாசித்த முதல் Non-fiction புத்தகம்
என்று கூட சொல்லலாம். வால்கா முதல் கங்கை வரை நாவல் தாய் வழி சமூகமாக மனிதன்
பரிணமத்தில் இருந்து பயணித்ததை பேசிய நாவல். நாவல் நமது நாட்டை பற்றி பேசிய
நிலையில் சேப்பியன்ஸ் உலகத்தில் ஆதி மனிதனுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்து
தொடங்குகிறது. அதாவது விலங்காக இருந்து மனிதனாக பரிணமித்த்தில் இருந்து ஆரம்பித்து
தற்போதைய அறிவியல் யுகம் வரை படிப்படியாக மனிதன் புவியில் நிகழ்த்திய மாற்றங்களை
பதிவு செய்துள்ளது.
சுமார் 450
கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமி உருவானதாக கூறும் ஆசிரியர் அதன் பின்னர் சுமார்
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்ரிக்காவில் இப்போதிருக்கும் மனிதருக்கு முந்தைய
இனமான ஹோமோ நியாண்டர்தாஸ், ஹோமோ எரெடெக்ஸ், ஹோமோ சோலோ என்ஸிஸ் உள்ளிட்ட மனித
இனத்தின் பல்வேறு வகையினர் தோன்றியதாக கூறுகிறார். பின்னர் அவர்கள் மெல்ல பல்வேறு இடங்களுக்கு
பரவுகின்றனர். அதன் பின் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் சேப்பியன்ஸ்
என்று இப்போதிருக்கும் மனித குலத்தினர் தோன்றியதை ஆதாரபூர்வமாக விளக்குகிறார்
ஆசிரியர்.
பின்னர் இந்த சேப்பியன்ஸ்க்கு ஏற்படும்
அறிவுப்புரட்சியால் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து, சுமார்
எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவுக்கு வெளியே பரவ தொடங்குகின்றனர்.
இப்படி பரவ தொடங்கும் இவர்கள் தங்கள் அறிவால் பிற விலங்குகளை அழிப்பதுடன், தங்கள்
மூதாதையர்களான நியாண்டர்தால் இனத்தவரையே பூண்டோடு அழித்ததாக கூறுகிறார். இப்படி
பல்வேறு மனித இனத்தை அழிக்க இறுதியில் தற்போதுள்ள சேப்பியன்ஸ் இனம் ஆகிய நாம்
மட்டுமே எஞ்சியிருக்கிறோம். அதன் பின் மனிதன் அறிவால் கண்டுபிடிக்கப்பட்ட விவசாயம்
மனிதனை எவ்வாறு மாற்றியது அதனை தொடர்ந்து நிரந்தர குடியேற்றம் அதன் தொடர்ச்சியாக
மன்னராட்சி என்று இப்போதிருக்கும் நிலை வரை அனைத்தையும் ஆசிரியர் நோவா ஹராரி
விளக்கும் போது அடுத்தடுத்த பக்கங்களை விறுவிறுப்பாக நகர்த்தி கொண்டே செல்ல
முயலும் ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
பணம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், பேங்க என்ற
நிறுவனத்தின் தொடக்கமும் தனி மனித மகிழ்ச்சி, மதங்கள் உருவான கதை குறித்த
ஆசிரியரின் பார்வையும் உண்மையில் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய பக்கங்கள் எனலாம்.
எல்லாம் மாயை என்ற எண்ணம் நம் அனைவருக்கும் எப்போதாவது தோன்றும். இந்த புத்தகம்
வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த புத்தகம் முழுவதுமே வரலாறு கட்டுரை வடிவில்
இருப்பதால் இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலமே அது நமக்குள் ஏற்படுத்தும் திறப்புகளை
உணர முடியும்.
No comments:
Post a Comment