Thursday, 19 September 2013

விநாயகர் சதுர்த்தி

நீண்ட நெடிய தெரு எங்களுடையது. சீரான இடைவெளியில் மூன்று பிள்ளையார் கோவில்கள். என் அம்மா வீட்டுடன் எங்கள் தெரு முடிவுறும். அங்கு ஒரு சிறு பிள்ளையார் கோவில் (பொய்யாத பிள்ளையார்), அதன் பின் அடுத்த நாற்சந்தியில் நடுத்தெரு பிள்ளையார் கோவில் (வினை தீர்க்கும் விநாயகர்). பின் தெருவின் அடுத்த முனையில் ஒரு பிள்ளையார் (முக்தா செட்டி பிள்ளையார்) பின் எங்கள் தெருவிற்கு இணையாக வரும் தெருவின் (பின் பக்கம்) முடிவில் அரசலாறும் ஆற்றங்கரை பிள்ளையார் கோவிலும் உண்டு.

காலையில் எழுந்து குளித்து வீட்டில் விளக்கேற்றியவுடன் பெரும்பாலும் எல்லாரும் போய் கோவிலிலும் ஒரு விளக்கும் நாலு நெற்றிக்குட்டும் இரண்டு தோப்புகரணமும் போட்டுவிட்டு அவரவர் வேலையை பார்பார்கள். கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒருவரின் வீட்டு உள்திண்ணையில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் தெருவில் உள்ளோர் பால் ஊற்றுவார்கள், கூடையில் பூ , கற்பூரம் என அவரவர் விருப்பத்துக்கு வைத்து செல்வர்.

ஐயர் வரும்போது எல்லாவற்றையும் எடுத்து சென்று கோவிலில் மணியடிக்க இயன்றவர்கள் கோவிலுக்கு சென்று அபிஷேகம், இயலாதவர்கள் வீட்டின் வாயிற்படியில் இருந்தே அபிஷேகம், தீபாராதனை எல்லாம் பார்த்துவிட்டு செல்வர். அநேகமாக அது ஒரு அன்றாட செயல் போல தான் நடக்கும். சதுர்த்தி, மற்றும் சில விஷேச நாட்களில் விஷேச பூஜைகள்.. அநேகமாக அவரும் அந்த தெருவில் உள்ளோரின் ஒரு குடும்ப அங்கத்தினர் போல தான்..

விநாயகர் சதுர்த்தி விழா மட்டும் சிறப்பாக கொண்டாடப்படும்.. இந்த நான்கு கோவில்களில் முதல் மூன்று கோவில் பிள்ளையார்கள் வசதியான பாரம்பரியமும் சொத்துக்களும் உடையவர்கள் அதனால் அன்று இரவு  உற்சவருக்கு நகைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைத்து தெருவில் உள்ளோர் வடம் கயிறு பிடித்து இழுக்க அந்த தெருவை ஒரு வலம் வருவார்கள்.

வாணவேடிக்கை, பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி என்று ஏகதட புடல். இதில் பிள்ளையார்கள் தெரு முனையில் சந்திக்கும் நிகழ்வு இன்னும் அமர்க்களமாக இருக்கும் சந்திக்கும் இரு வாத்தியக்காரர்களும் சேர்ந்து வாத்தியம் இசைக்க பிள்ளையார் இழுத்து வருபவர்கள் ஒரு திண்ணையிலும் மறு திண்ணையில் நாதஸ்வர காரர்களும் இசைக்க அவர்களுக்கு வெற்றிலை சீவல், காபி என்று அந்த வீட்டுக்காரர்கள் உபசாரமும் மரியாதையும் செய்வார்கள். சில சமயம் சிறு குழந்தைகளின் நாட்டிய அரங்கேற்றம் கூட நடக்கும். எந்த மதச்சண்டையோ, சாதி சண்டையோ வந்ததில்லை.

பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். இம்முறை அந்த பழைய நினைவுகளுடன் இருபது வருடம் கழித்து விநாயகர் சதுர்த்தி விழா காண ஆவலுடன் இருந்தேன். வழக்கம் போல தான் மற்றவை எல்லாம் ஆனால் தேர் வடம் பிடிக்க ஆள் இல்லை என்று மோட்டார் பொருத்தப்பட்ட வாகனத்தில் விநாயகர் சர் என்று சத்தமில்லாமல் புறப்பட நாதஸ்வர காரர்கள் மட்டும் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று வாசித்து செல்கிறார்கள். முன்பு போல கூட்டம் இல்லை.

ஆனால் மகாமக குளத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெரிய பெரிய விநாயகர்கள் மத கட்சியினரால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரியில் கரைக்கப்பட்டார். இது போல பெரிய பெரிய விநாயகர் சிலை வைப்பதோ வழிபடுவதோ சென்னையில் தான் பார்த்து இருக்கேன். நான் எதிர் வீட்டில் இருந்த பையனிடம் என்னப்பா இங்க எப்பல இருந்து என்று கேட்க ஒரு ஐந்து வருடமாக இப்படி தான் என்று சொன்னான்..

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு, நன்று தான் என்றாலும் எல்லா இடத்திலும் ரசிக்க முடிவதில்லை..




No comments:

Post a Comment