Sunday, 15 September 2013

தடயம்

வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடக்கும் போது அது ஒரு நிகழ்வு மட்டுமே. ஆனால் சில நிகழ்வுகள் சிலரின் வாழ்வில் ஏதோ ஒரு தடத்தை மறக்க முடியாமல் பதித்துவிடுகிறது. அவர்கள் நிகழ்வுக்கு சம்மந்தமே இல்லாத வெற்று பார்வையாளர்ளாக இருந்தபோதிலும் அது அவர்கள் மனதில் மறைவதில்லை.
என்னுடன் படித்த ஒருவரை இம்முறை தோழியின் இறப்பில் சந்திக்க நேர்ந்தது. கிடடத்தட்ட 25 வருடங்களுக்கு பின். சுத்தமாக எனக்கு முகமே மறந்துவிட்டது அடையாளம் காணவே முடியவில்லை. கமலி நல்லா இருக்கீங்களா என்று கேட்ட போது குரல் மட்டும் பரிச்சியம் போல தோன்ற நான் அடையாளம் காண தடுமாற நான் தான் பள்ளியில் படித்த ஜோதி என்றவுடன் ஓரளவு நினைவுக்கு கொண்டு வர முடிந்தது..
பரஸ்பர விசாரிப்புக்கு பின் வீடு பக்கத்தில் தான் கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும் என்று அழைப்பு தர நானும் சென்றேன். ஒரு பெண் ஒரு ஆண் என இரு குழந்தைகள். குழந்தைகள் பெயர் கேட்க பெண் குழந்தைக்கு என் பெயரை சுருக்கி விஷாலி என்று வைத்திருப்பதாக சொல்ல (எனது official பெயர் கமலி அல்ல) எனக்கு ஆச்சரியம்..என் பெயரா ஏன் என்று கேட்டேன்
உனக்கு நினைவு இருக்கா நீ நம் பள்ளிக்கு உன் அப்பாக்கு ட்ரான்ஸ்பர் ஆகி புதிதாக சேர்ந்தே.  பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கிலம் பேச்சு போட்டியில் நீ நன்றாக பேசினாய் உனக்கு தான் பரிசு என்று எல்லாரும் உறுதியாக நம்பி கொண்டு இருந்தபோது ராமநாதன் சார் எம் எல் ஏ பையன் சீனிவாசனுக்கு முதல் பரிசும் உனக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார். நீ உடனே சென்று எனக்கு இரண்டாம் பரிசு ஏன், என்னைவிட சீனிவாசன் பேசியது எந்த விதத்தில் முதல் பரிசுக்கு தகுதி இதை சொன்னால் இரண்டாம் பரிசு வாங்கி கொள்கிறேன் இல்லை விழாவின் போது நான் பரிசு வாங்க வரமாட்டேன் என்று சொன்னாய். அப்போது அந்த தைரியம் எங்களுக்கு எல்லாம் ஆச்சரியம்.. ஆசிரியரிடம் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசும் தைரியம் அப்போது எங்கள் யாருக்கும் இல்லை.. அது போல கடைசி வரை பரிசை வாங்கவே இல்லை.. அதே பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற மன்ற பரீட்சையில் மாவட்டத்தில் முதல் மாணவியாக பரிசு பெற்று அந்த சார் கையாலேயே டிக்சனரி பரிசு வாங்கினாயே அந்த உன்னுடைய பிடிவாதம் தான் எனக்கு உன் மேல் மிகப்பெரிய மரியாதை கொடுத்தது.
ஆனால் நீ யாரிடமும் ஓட்ட மாட்டாய் அதனால் உன்னிடம் பேச நட்பு பாராட்ட எல்லாம் தயக்கம். எட்டி நின்று ரசிப்பேன் உன் விளையாட்டு, சண்டை கோவம் எல்லாம் என்று சொன்ன போது வருடங்கள் பல ஆன பின்னும் மறக்காமல் நானே மறந்துவிட்ட ஒரு நிகழ்வு ஒருவருக்கு மிக பெரிய மரியாதையாக ஆச்சரியமாக நினைவில் ஆழ பதிந்து இருக்கே என்று ஆச்சரியம்.. நம்மை அறியாமல் யார் யார் வாழ்விலோ சிறு தடயத்தையோ அல்லது நினவையோ விட்டுவிட்டு கடந்து போய் கொண்டு இருக்கிறோம்.
வீட்டுக்கு வந்த பின் டிக்சனரியை திருப்பி பார்த்தேன். பத்திரமாக இருந்தது..

 

No comments:

Post a Comment