Wednesday, 28 August 2013

நானும் சைத்தானும்

உள்ளுக்குள் சாதுரியமாய் புகுந்த கொண்ட 
சைத்தான் ஒன்று அறிவு நெருங்க முடியா 
ஆழத்தில் தன்னை புதைத்துகொண்டு 
நான் அசரும் நேரம் பார்த்து காத்திருக்கிறது.

ஆவேசத்துடன் அடித்து விரட்டினாலும்
கழிவிரக்க வேடமிட்டு சிலமுறை
அபலையின் கண்ணீர் வேடமிட்டு சிலமுறை
அன்புக்கு ஏங்குவதாய் பொய்முகம் காட்டி சிலமுறை
என அவ்வப்போது எட்டிபார்க்கிறது

ஏகாந்தத்தில் என்னை கரைக்கும் நேரம்
தனிமையில் என்னை தொலைத்துவிட துடிக்கும் நேரம்
எல்லாம் சத்தமில்லாமல் வந்து எட்டி பார்த்து
எகத்தாளமாக சிரித்து விட்டு செல்கிறது..

என் ஏகாந்தம் குலைக்கும் சைத்தானை கொன்றிட
பகீரத பிரயத்தனம் செய்து கொண்டே இருக்கிறேன்
நான் அசரும் நேரம் சைத்தானும்
அது உறங்கும் நேரமும் நானுமாக கண்ணாமூச்சி விளையாட

இடையில் வாழ்க்கை அதன் போக்கில்
காலடி தடங்களை பதித்து கடந்து கொண்டே இருக்கிறது.
எல்லாம் கடந்து போகும்
ஆனால் கடந்து போகும் நாள் தான் எந்நாளோ???

No comments:

Post a Comment