Friday, 16 August 2013

பாட்டி


கண்ணாத்தா (கண்ணம்மா) தான் என் பாட்டி பெயர். நாங்கள் ஆயி என்று தான் கூப்பிடுவோம். பாட்டி விதவை என்பதால் உள்ளிருக்கும் காம்பரா வீடு கூடத்தை ஒட்டி இருக்கும் வீட்டு ஆண்கள் வெளியே செல்லும் வரை அந்த அறைவிட்டு வெளியே வரமாட்டார்கள். அறையில் இருந்து கூடம் எல்லாம் பார்க்கலாம். அங்கு தான் பாட்டி அறை. ஆண்கள் எல்லாரும் வெளியே சென்றவுடன் தான் தாழ்வாரத்தில் வந்து உட்காருவார்கள். காலையில் எழுந்தவுடன் பல் விளக்கி காபி குடிக்க பாட்டியுடன் போய் உட்கார்ந்துகொள்வேன்.

பாட்டி தலைமாட்டில் இருக்கும் விபூதி மடலில் இருந்து விபூதி எடுத்து மூன்று விரலால் “ எந்த லட்சுமி போனாலும் தைரிய லட்சுமி மட்டும் போக கூடாது” என்று சொல்லி நெற்றியில் பட்டையாக தீட்டுவார்கள்.. ஏன் ஆயி இதையே எப்பவும் சொல்றே என்று கேட்டால் பாட்டி சொல்வது எந்த லட்சுமி போனாலும் தைரிய லட்சுமி கூட இருந்தா போதும் எல்லாவற்றையும் மீட்டுடலாம் ஆனா அவ போயிட்டா வேறு எந்த லட்சுமி இருந்தாலும் பயன் இல்லை என்று சொல்வார்கள்.. இன்று வரை எனக்கு அந்த பாட்டியின் ஆசீர்வாதம் தான் பல இக்கட்டிலும் இருந்து என்னை மீட்டுள்ளதோ என்று தோன்றும்...

மெத்தை உபயோகிக்க மாட்டார்கள். அதற்கு பதில் கீழே வெள்ளை கோணி (கித்தான்) விரித்து சின்னாளம்பட்டி சேலை வாயில் புடவை நான்கு ஐந்து போட்டு அதன் மேல் தான் பாட்டி படுத்து கொள்வார்கள். என் பாட்டியின் தோல் சுருங்கி தொட்டாலே ஒரு குளுமை ஒட்டி கொள்ளும் அந்த மென்மையும் குளுமையும் இன்னும் மனதில் உள்ளது.

நான் சிறு வயதில் இருக்கும்போது பூரான் சடை, தாழம்பூ வைத்து தைத்தல் என்று பாட்டியின் கை வண்ணத்தில் பராமரிப்பில் தலை முடி மிளிரும்... நான் ஏதாவது வேண்டுமென்று கேட்டால் உடனே செய்து தருவார்கள்.. வீட்டில் யாராவது செய்து தர சோம்பேறித்தனபட்டால் திட்டிவிட்டு தானே செய்வார்கள்.. அதுவும் அந்த வயதில் போளியும், இடியாப்பமும் தான் என்னுடய பேவரிட்.. இன்று கேஸ், கரண்ட் அடுப்பு என்று எல்லா சௌகரியமும் இருக்கும் போதே அதை செய்வது எவ்வளவு கடினம் என்று தெரிகிறது..ஆனால் நான் எனக்கு இப்போ வேண்டும் என்று சொல்லி எந்த நேரமாக இருந்தாலும் அதை செய்து தந்தது என் பாட்டி மட்டுமே..வெண்கல உருளியில் பருப்பை சமைத்து நெய் விட்டு செரிமானத்திற்கு மிளகு, சீரகம் பொடி கொஞ்சம் உப்பு சேர்த்து என் பாட்டி ஊட்டிவிட்ட பருப்பு சாதத்தின் ருசியை இன்னும் தேடி கொண்டு இருக்கிறேன்..

பாட்டிக்கு பல் இல்லாததால் முறுக்கு எல்லாம் அம்மியில் பொடி பண்ணி குடுக்க வேண்டும்.. அது தான் என்னுடைய பேவரிட்.. வயதானவர்களையும் , கர்ப்பிணிகள், குழந்தைகளை வெறும் கையில் பார்க்ககூடாது என்று ஊர் பக்கம் யார் வந்தாலும் பாட்டிக்கு என்று ஏதாவது வாங்கி வருவார்கள். அதில் எனக்கு என்று ஒரு பங்கு இருக்கும் அதுபோல பாட்டியின் சாப்பாட்டிலும். பாட்டிக்கு என்று தனியாக பக்கத்தில் ஒரு சொம்பு மூடியுடன் அதில் எப்போதும் வெந்நீர் இருக்கும்.. இன்றும் அந்த சொம்பு சொல்லும் செய்தி ஏராளம் நான் அப்பாவுக்கு பிறகு அதிக நேரம் செலவிட்டது என் பாட்டியுடன் தான். எல்லா தப்பும் செய்துவிட்டு ஓடிவந்து பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கொள்வேன்..

விளையாடிவிட்டு லேட்டாக வந்தாலும் சரி இல்லை தங்கை தம்பி யாரையாவது சண்டையில் அடித்துவிட்டு வந்தாலும் சரி.. எனக்கு தெரிந்து உலகில் பாதுகாப்பான இடம் அதை தவிர வேறு எதுவும் இல்லை அப்போது. என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் என்னை செல்லம் கொடுத்து குட்டி சுவராக்குவதில் பாட்டியின் பங்கும் உண்டு என்று பொருமி செல்வார்கள் அதை தாண்டி பாட்டியிடம் நெருங்க முடியாது..

பாட்டி பக்கத்தில் அவரின் அணைப்பில் படுத்து கொள்ளும் சுகம் இருக்கே சொல்லவே முடியாது..அந்த பாட்டியின் புடவை மெத்தைக்கு இணையான மெத்தை இன்று வரை எனக்கு கிட்டவில்லை...

என் வீட்டில் இன்று கூட நான் அடிகடி உபயோகிக்கும் வார்த்தை நான் யாரு தெரியுமா கண்ணாத்தா பேத்தி என்கிட்டயே வா என்று..

நான் முதன் முதலில் பார்த்த இறப்பும் என் பாட்டியின் இறப்பு தான்.. முதல் நாள் எண்ணெய் தேய்த்து குளித்தார்கள் மறுநாள் அதனால் ஜனனி என்றார்கள்.. டாக்டர் வீட்டுக்கே வந்தார் பாட்டி யாருக்கும் ரொம்பம் சிரமம் வைக்கவில்லை உயிர் பிரிந்துவிடும் தகவல் சொல்லுங்கள் தெரிந்தவர்களுக்கு எல்லாம் என்று சொல்ல பதின் பருவத்தின் ஆரம்பத்தில் இருந்த நான் மலங்க மலங்க விழித்து கொண்டு இருந்தேன். 

ஆண்கள் இருக்கும் போது நடுக்கூடம் வராத பாட்டி கட்டிலில் கூடத்தில் கிடத்தபட்டார்கள். சுயநினைவு தப்பி கொண்டு இருந்த பாட்டி அப்போது கூட ஆண்களாக சுற்றி இருக்கிறார்கள் அவர் புடவையை இழுத்து போர்த்த சொல்லி சொல்ல முதன் முதலில் ஒரு பெண்ணுக்கு சாகும் வரை உடை, உடல் பற்றிய விழிப்பு எப்படி திணிக்கப்பட்டு இருக்கிறது என்பது பின்னாளில் யோசிக்கும் போது புரிந்தது..

நான் ஒரு தூண் ஓரம் உட்கார்ந்து விட்டேன். ஓதுவார் வந்து தேவாரம் பாட அந்த அமைதியான சூழலில் அவரது கணீர் குரல் மட்டுமே யாரும் பேசவில்லை...எல்லாரின் கண்களிலும் கண்ணீர் அதை தேவாரம் தந்ததா இல்லை பாட்டியின் நினைவு தந்ததா தெரியவில்லை.. கடைசியாக எல்லாரையும் பார்க்க பாட்டி ஆசைப்பட ஜாடையில் சொல்ல எல்லாரும் கட்டிலை சுற்றி நான் பாட்டியின் கை பிடித்து கொண்டு ஒவ்வொருவராய் பார்த்து கொண்டே வந்து என்னை பார்த்து கொண்டே கண்கள் அப்படியே நிலை குத்தி நின்று விட்டது.. முதலில் நேரில் பார்த்த மரணம்...

இன்றும் சில சமயம் நினைவில் பாட்டி பற்றிய நியாபகம் வரும் பருப்பு சாதம் சாப்பிடும் போது, என்னுடைய போளி, அடை பாட்டியை நினைவுபடுத்துவதாக அம்மா வீட்டில் அனைவரும் சொல்லும் போது, தைரியம் இழந்து நிற்கும் போது எந்தலட்சுமி போனாலும் தைரிய லட்சுமி போககூடாது என்ற வார்த்தைகள் என நிறைய விஷயங்களில் என் பாட்டி இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்.....

No comments:

Post a Comment