Tuesday, 28 October 2014

உறவுகள் மதிப்பு

செக்ஸ் கல்வி வேண்டும் வேண்டாம் என்பது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். மனித உறவுகளின் மதிப்பீடுகள் குறித்து நாம் நம்முடன் ஏறக்குறைய முன் பின் வயதில் இருப்பவர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் கண்டிப்பாக சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இன்றைய சமூக வலைதளங்களும் ஊடகங்களும் நம்மை இட்டு செல்கிறது.

முன்பு எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரளவு அதிகம் வெளி உலகுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருந்த உறவு பிறழ்ச்சி (இந்த வார்த்தை பிரயோகம் சரியா என்று தெரியவில்லை) இன்று சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக மாறி வருவது, சமூகமும் தனிமனிதனும் அதை பெரிதுபடுத்தாமல் இதெல்லாம் தவறே இல்லை என்பது போன்ற மாயையை உருவாக்கி குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட மனிதனுக்கு இல்லாமல் செய்கிறதோ என தோன்றுகிறது.

“ ஆண்ட்டி” என்ற வார்த்தையே கேவலப்படுத்தபட்டு விட்டது. முப்பத்தைந்து வயதை கடந்த திருமணமான பெண்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் திருப்தி இல்லாது அலைவது போலவும் யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்பது போலவும் ஊடகங்களும், இணைய தளங்களும் சித்தரித்து கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த லிஸ்டில் அக்கா என்ற உறவையும் சேர்த்தது கொடுமை.

தோழி ஒருவர் இன்பாக்ஸில் லிங்க் அனுப்பி ப்ளாக் செய்ய சொன்ன ஒரு தளத்துக்கு க்ளிக் செய்து ப்ளாக் செய்ய முற்பட்ட போது அதிர்ச்சி. சொல்லவே நா கூசுகிறது அந்த முகநூல் பக்கத்தின் தலைப்பே தாயுடன்.. அருவெருப்பின் உச்சமும் மனதுக்குள் சொல்ல முடியா கோவமும்.. மிருகத்திடம் கூட இல்லாத இந்த வக்கிரம் எப்படி மனிதனுக்குள்?

ஆண்களை மட்டும் குறைசொல்லவில்லை.. ஆண் பெண் ஈர்ப்பு என்பது பொதுவானது. ஆனால் அதை தாண்டி உறவுகளின் மதிப்புகளை பற்றி இரு பாலருமே உணர வேண்டாமா?

உங்களின் தனிப்பட்ட வக்கிரங்களுக்கும், உணர்வுகளுக்கும் உறவுகளை பலியாக்காதீர்கள். அக்கா, அம்மா என்ற வார்த்தைகளை ஆண்கள் அந்த உறவுக்கு உரிய மதிப்பை கொடுக்க முடியும் என்றால் சொல்லுங்கள் இல்லை தயவு செய்து சொல்லாதீர்கள்.. பெண்களுக்கும் அதே தான் உங்களால் ஒரு அண்ணன், தம்பி, மகன் என்ற உறவுக்கான மதிப்பை கொடுக்க முடியுமானால் அப்படி அழையுங்கள். அதை விடுத்து வெறும் வார்த்தைகளாக உபயோகப்படுத்தி பிறரை ஏமாற்றுவதாக நினைத்து உறவின் மதிப்புகளை குறைக்காதீர்கள். நம் அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களை கொடுக்கிறோமோ இல்லையோ உறவுகளின் மதிப்புகளையாவது கொண்டு சேர்ப்போம்..

ஆண்கள் சரியில்லை. பெண்கள் சரியில்லை என்று பஞ்சாயத்துக்காக இந்த பதிவை இடவில்லை.. இருப்பாலரும் உறவுகளின் மதிப்புகளை பற்றி கொஞ்சம் யோசியுங்கள் என்று சொல்ல தான்..

No comments:

Post a Comment