Friday, 30 January 2015

“பாகிஸ்தான் போகும் ரயில் ”, - புத்தகம் பற்றி



“பாகிஸ்தான் போகும் ரயில், குஷ்வந்த் சிங் எழுதியது தமிழில் ராமன் ராஜா. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட பாதிப்பை இரண்டு நாடுக்கும் இடையில் எல்லையாக இருக்கும் ஒரு விவசாய கிராமத்தில் சீக்கியர்களும், முஸ்லீம்களும் உறவாக நட்பாக நெருக்கமாக பழகும் நட்பை அரசாங்கமும், அதிகாரிகளும் தங்கள் சுயநலத்துக்காக மக்களை சுரண்ட இந்த பிரிவினையை பயன்படுத்தி கொண்டார்கள் என்பதை எல்லாம் குஷ்வந்த் சிங் தன்னுடைய எழுத்து நடையில் அனாயசமாக சொல்கிறார்.

இக்பால் என்ற கம்யூனிஸ்ட் அறிமுகமும் ஆரம்பத்தில் தன்னை இந்து என்றோ முஸ்லீம் என்றோ சொல்லாமல், இந்திய மக்கள் கட்சி உறுப்பினாராக தொண்டு செய்பவராக,  வரும் அவர் சிந்தனையும் பேச்சும் அறிவுத்திறனும் பின் சிறைபிடிக்கப்பட அவர் படித்தவர் என்பதால் அவருக்கு கிடைக்கும் மரியாதையும், சிறையில் இருந்து அவர் விடுபட்ட பின் கலவரத்தால், ஊரே கிட்டத்தட்ட பீதியில் இருக்க உயிர் பயத்தில் அவரின் கொள்கைகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட சுயநலமாக மதமில்லை என்றவர் சீக்கியர் என்று கூறிக்கொண்டு அதற்கு அவர் தரும் தன்னிலை விளக்கம், மெத்த படித்த அறிவாளிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். குஷ்வந்த் சிங்.

பாகிஸ்தானில் இருந்து ரயிலில் அடைத்து வரும் இந்து சீக்கிய பிணங்கள், கொதித்து எழும் இங்கிருக்கும் சீக்கியர்கள், பாகிஸ்தானுக்கு முஸ்லீம்களை ஏற்றி போகும் ரயிலை அதே போல முஸ்லீம்கள் பிணத்துடன் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க திட்டம் தீட்டுகிறார்கள். அன்று பாகிஸ்தான் போகும் ரயில் அந்த நிலையத்தில் நிற்கும்போது ஒருவர் விடாமல் கொன்று குவிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். எந்த படிப்பறிவுமில்லாத ஒரு திருடன், கொள்ளைக்காரன், ஜக்காத் சிங்  தனி ஒருவனாக வெறிபிடித்த தன் சக சீக்கியர்களிடம் தன் உயிரை தந்து  அந்த ரயில் அந்த நிறுத்தத்தில் நிற்காமல் பாகிஸ்தான் போக வழி செய்கிறான். அவன் மேல் ஏறி பாகிஸ்தான் நோக்கி ரயில் பயணம் தொடர்ந்தது என்று முடித்திருப்பார் ஆசிரியர்.

ஹூக்கும் சந்த என்கிற மாஜிஸ்திரேட், அவரின் வாழ்க்கை முறை, ரயில் முழுக்க வந்திறங்கிய பிணங்களை பார்த்த பின் அவர் அடையும் மன உளைச்சல், ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலை, ஒரு பதினாறு வயது பாகிஸ்தானி பெண் மீது அவருக்கு ஏற்படும் இனம்புரியா உணர்வு என்று அவரின் மன கூறுகளை ஆசிரியர் கூறியிருக்கும் விதம் படித்து பார்த்தால் ஹூக்கும் மீது கோவம் வந்தாலும் இன்னொரு பக்கம் பரிதாபம் வரும்...

நம் கண் முன் உலகறிவில்லா ஒரு அமைதியான விவசாய கிராமத்தையும், மக்கள் தங்களுக்குள் எந்த பெரிய வியாக்யானங்களும் இல்லாமல் சகோதரத்துடன் மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவதையும், கடைசி வரை உணர்வால் ஒன்றுபட்டு இருக்கும் அவர்களை, அதிகாரிகள் தங்கள் சுயநல சுரண்டலுக்காக தங்கள் அறிவால் எப்படி எல்லாம் திரித்து பிரிக்கிறார்கள் என்று குஷ்வந்த் சிங் சொல்லி இருக்கும் விதம் அருமை.

அறிவால் ஆக கூடிய பயன் என்ன என்பதற்கு இக்பால் இறுதியில் தனக்குள் பேசிக்கொள்ளும் விதம் போதும். மெத்த படித்த பேச்சால் அறிவால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று நினைக்கும் ஒருவனால் வெறி பிடித்தலையும் தன் கூட்டத்தை கட்டுபடுத்த தெரியாமல் கையாலாகாத்தனத்துடன் பார்த்து தான் பத்திரமாக உயிருடன் இந்த பட்டிகாட்டை விட்டு நாகரீகமான டில்லிக்கு போக வேண்டும். தன உயிர் முக்கியம் என்று நினைக்க, எந்த அறிவும் இல்லாத ஒருவன் தன் உயிரை துச்சமாக நினைத்து அறிவால் முடியாததை தன உணர்வால் சாதிப்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.

அதிகாரிகளின் சுரண்டல், மக்களின் அறியாமை அதை உப்யோக்படுத்தி கொள்ளும் அரசாங்கம், தன் உயிரை பெரிதாக மதிக்காமல் உணர்வால் வாழும் மக்கள், ஒரு கிராமம் எப்படி இருக்கும் என்பதை எழுத்தின் மூலம் நம்மையும் அந்த கிராமத்துக்கே இட்டு செல்கிறார் ஆசிரியர். காதலுக்கு மதமில்லை என்பதை ஜக்காத் சிங், நூரன் காதல் மூலம் சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக மனதை உலுக்கி போடும் இந்த புத்தகம். ரயிலில் ஏற்றப்பட்டவர்கள் அனுபவித்த சித்ரவதையை படிக்க ஆரம்பிக்க ஆரம்பமே அதிர்ச்சியாக இருக்க அப்படியே அதை கடந்துவிட்டேன் படிக்காமல்.. இனத்தின் பெயரால், மதத்தின பெயரால், மொழியின் பெயரால் தான் எத்தனை எத்தனை கொலைகள்....வரலாறு அழுத்தமாக சொல்லி கொண்டு தானிருக்கிறது ரத்தம் படிந்த கறையை கதையாக ஆனாலும் இன்னும் நமக்கு பிடித்த மதம் போனபாடில்லை......

No comments:

Post a Comment