Sunday, 11 January 2015

சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று - புத்தக விமர்சனம்



சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று ஆசிரியர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் – தமிழில் யூமா. வாசுகி.  

ஒரு பத்திரிகை நிருபரிடம் மலைகளில் சரக்கு ஏற்று செல்லும் லாரி டிரைவர் ஒருவர் தன் கதையை ஒரு இரயில் பிரயாணத்தில் பகிருவதில் கதை லாரி ட்ரைவரின் பார்வையில் தொடங்குகிறது.

மலைகளில் கடுமையான சவால்களை சந்திக்கும் தன் தொழிலை விரும்பி நேசிக்கும் டிரைவர் இலியாஸ் ஒரு கிராமத்தில் இருக்கும் கூட்டு பண்ணைக்கு செல்ல நேரிடும் போது அங்கு சந்திக்கும் அசேல் என்ற பெண்னை முதல் பார்வையிலேயே தன் காதலியாக வரித்து அவளுக்காக உருகி தவிப்பதில் ஆரம்ப்பிக்கிறது கதை. அவள் ஏற்கனவே வேறு ஒருவருக்கு நிச்சயமாகி இருக்க அப்போதும் அவளை காதலிப்பதை நிறுத்த முடியாமல் தவிக்கிறார். அசேலை தினமும் சந்திக்க கூட்டுபண்ணைக்கு தினமும் வருகிறார். அவளும் இலியாஸ் மீது காதல் கொள்ள ஒரு நாள் அவளை தான் ஒட்டி வரும் லாரியில் ஏற்றிக்கொண்டு ஊரைவிட்டு கூட்டி செல்கிறான். அவர்கள் செல்லும் போது அந்த உணர்வை ஆசிரியர் விவரிக்கும் விதம் அழகு.

வானமும், சாலையும் எங்களது மகிழ்ச்சியையும் தவிர வேறொன்றும் பிரபஞ்சத்தில் இல்லை  எங்கு போகிறோமென்று தெரியாமல், எதற்கு போகிறோமென்று தெரியாமல் நாங்கள் நீண்டு கிடந்த தொலைதூரம் சென்றோம்.. களைப்போ சிரமமோ இல்லை. ஒருவரையொருவர் பார்த்து ஒட்டியுரசி அமர்நிதிருப்பது பேரானந்தமாக இருந்தது.. உலகில் உள்ள அனைத்தும் ஜீவசக்தி பெறுவதாக தோன்றியது. என்று இன்னும் விரிவாக அழகாக விவரிக்கிறார்..மலையின் உச்சியில் இருக்கும் ஒரு ஏரிக்கரையில் மனமொப்பி இருவரும் இணைவதில் முடிகிறது.

மிக சந்தோஷமான தம்பதிகளாக வாழ்வை ரசிக்கும் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. இதற்கிடையில் அவரது தொழில் டிப்போவில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியை தன்னால் சமாளிக்க முடியும்  என்று யார் யோசனையும் சட்டை செய்யாமல் எல்லாரின் எதிர்ப்பையும் மீறி  அங்கு இருக்கும் கதீஜா என்ற பெண்ணின் உதவியுடன் துணிச்சலான ஒரு காரியத்தில் இறங்குகிறார். ஆனால் அது படுதோல்வியில் முடிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார். வேலை இடத்தில் கேலிக்குள்ளாக மனம் வெதும்பி குடித்து தன்னிலை மறந்து போதையில் திளைக்க அப்போது உள்ளூர இலியாசை நேசிக்கும் கதீஜா ஆதரவாக இருக்க ஒரு கட்டத்ததில் தன்னிலை மறந்து அவளுடன் இணைகிறார்.

குற்ற உணர்வு தாக்க அசேலிடம் சொல்ல முடியாமல் தவித்து மருகி அதிகம் குடிக்க தொடங்க ஒரு கட்டத்தில் அசேலுக்கு இவரின் வேறு ஒரு பெண்ணுடனான உறவு தெரிய வர குழந்தையை தூக்கி கொண்டு பிரிகிறார். காதலி எங்கு போனாள் என்று தெரியாமல் தேடி அலைந்து பணி புரியும் இடத்திலும் இருக்க பிடிக்காமல் கதீஜாவை கூட்டி கொண்டு வேறு இடத்துக்கு பயணமாகிறான். இருவரும் சந்தோசமாகவே வாழ்ந்தாலும் காதல் மனைவியின் நிலை என்னவென தெரியாமல் மருகி ஒரு கட்டத்தில் கதீஜாவுடனும் வாழ மன்மொப்பாமல் கதீஜாவிடம் மன்னிப்பு கேட்டு அவளையும் பிரிகிறான்.

நான்கு வருடங்கள் உருண்டோடி இருக்க பழைய இடத்திலேயே திரும்பவும் பணிக்கு சேருகிறான். அவளை தேடி அவள் அம்மா வீட்டுக்கு போக அவளுக்கு வேறு ஒருவருடன் மணமாகி இருப்பது தெரிய வர வாழ்வு சூன்யமாகிறது. இருந்தாலும் நம்பிக்கையுடன் தன் தொழிலை நேசித்து வாழ்க்கையை நகர்த்தும் இலியாஸ் ஒரு சாலை விபத்தில் அடிபட அங்கு சாலை பணியாளர் இவனை அவர் வீட்டுக்கு கூட்டி செல்கிறார். அங்கு அசேலையும் தன் மகனையும் கண்டும் ஒன்றும் பேச முடியாமல் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் அசேல் தவித்து மருகுவதை ஆசிரியர் அசத்தலாக சொல்லி இருக்கிறார்..

சொந்த மகனே மாமா என்று கூப்பிட அந்த மகனை காண்பதற்காக அந்த பகுதியில் தினமும் பயணித்து விளையாடும் மகனை சிறிது தூரம் லாரியில் உட்கார வைத்து ஒட்டி சந்தொசப்படுத்துகிறான். அந்த குழந்தை மட்டுமே தனது சந்தோசமாக வாழ்வை நகர்த்த அதற்கும் ஒரு முற்று புள்ளி விழுகிறது. இது லாரி ட்ரைவரின் பகுதி

அடுத்து அசேலை மணந்து கொண்டது எப்படி என்பதை அடுத்த பகுதியில் மணந்து கொண்டவர் நிருபரிடம் சொல்வதுடன் கதை முடிகிறது..

எல்லாரின் உணர்வுகளையும் உணர்வு போராட்டங்களையும் ஆசிரியர் கொஞ்சம் கூட மிகைப்படுத்தாமல் அப்படியே விவரித்திருப்பது கூடுதல் பலம். நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் சில விஷயங்கள் மனதுக்கு கொடுக்கும் இதம் வார்த்தையில் சொல்ல முடியாது.. வாசித்து அனுபவிக்க வேண்டும்...

1 comment:

  1. தென்றலை இன்று தான் அறிந்தேன்

    ReplyDelete