Wednesday, 10 June 2015

சிதம்பர நினைவுகள் - புத்தகம் பற்றி ஒரு பார்வை..

“ சிதம்பர நினைவுகள்” மலையாளத்தில் பாலசந்திரன் எழுதிய சுள்ளிக்காடு என்ற புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. ஏற்கனவே சைலஜாவின் கல்பபட்டா நாராயணன் நாவலின் மொழி பெயர்ப்பான “சுமத்ரா” வாசித்திருக்கிறேன். என்னை மிகவும் ஈர்த்தது சைலஜாவின் தமிழ் மொழிபெயர்ப்பு நடை. அதனாலேயே இந்த புத்தகத்தில் சைலஜாவின் பெயரை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.
சிதம்பர நினைவுகள் என்ற இந்த நூல் பாலசந்திரன் என்கிற கவிஞர் எழுத்தாளரின் வாழ்க்கை தொகுப்பு. கொஞ்சம் கூட ஒளிவு மறைவின்றி மனத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் வல்லமை இருப்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்னை பொறுத்த வரை.. நம்மால் அப்படி வாழ்வில் ஒரிருவரிடமாவது இருக்க முடியுமா என்பதே சந்தேகம். ஆனால் பாலசந்திரன் அப்படியே மனதில் உள்ள அவருடைய இயலாமையை, வறுமையை, அவமானத்தை, அசிங்கத்தை, காமத்தை, காதலை, சலனத்தை, கொடூரத்தை, அன்பை, எல்லாம் தாம் சந்தித்த மனிதர்களிடம் எதிர்கொண்டதை எல்லாம் சொல்லி இருக்கிறார்.

ஒரு மனிதன் ஒரே பிறப்பில் நல்லவனாக, கேவலமனாவனாக நம்பிக்கைக்குரியவனாக, மட்டமானவனாக எல்லாமாகவும் இருக்கிறான். காலமும் சூழ்நிலைகளும் தான் ஒரு மனிதனை தீர்மானிக்கிறது.. பாலச்சந்திரன் என்கிற மனிதனின் வாழ்க்கை தான்..

மொத்தம் இருபத்தி ஒரு கதைகள் இல்லை கதைகள் இல்லை அவர் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் அவருக்கும் அந்த மனிதர்களுக்கும் இடையே இருந்த வாழ்வியல் தான் அழகிய ஓவியமாக மலர்ந்திருக்கிறது.

முதல் சிதம்பர நினைவுகளில் வயது முதிர்ந்த ஒரு தம்பதியரை நெருங்கி சிதம்பரத்தில் சந்திக்கும் ஆசிரியர் அவர்களுக்கிடையில் இருக்கும் அன்பையும் அன்யோன்யத்தையும் பிரியத்தையும் அந்தவயதிலும் பின்னி பிணைந்திருக்கும் அவர்களிடம் பேசி அவர்கள் கதையை கேட்டு அறிந்த பின் ஆசிரியருக்குள் நடக்கும் ஆத்ம நிறைவும் அவர்களை விட்டு விலகி நாட்கள் கடந்த பின் அந்த இருவரில் முதலில் யார் இறந்திருப்பார்கள் என்று எண்ணி மருகுவதுடன் விடையில்ல்லா கேள்வியாக முடிந்திருக்க்றது..

அப்பா கதை அவருக்கும் அவர் அப்பாவுக்குமான உறவு, அவர் இறந்த பின் அவருக்கு ஈமக்கிரியைகள் நடத்தி வைப்பதும் அப்போது அவரின் மனதில் ஓடும் எண்ணங்களும், துக்கமும் எல்லாம் அவரின் அஸ்தியை கரைக்கும்போது மூழ்கி எழுவதுடன் முடித்திருக்கிறார்.

தீப்பாதி கதையின் சாஹினா பள்ளியில் படித்த காலத்தில் அவளின் அழகில் மயங்கி அவளுக்கு அவளிடம் ஒரு முத்தம் பெற அவள் பள்ளிக்கு செல்லும் படகை கவிழ்த்துவிடுவதாக பயம் காட்டி எல்லார் முன்னிலையிலும் அவளிடம் மிரட்டி வாங்கும் முத்தத்தை திருப்பி கொடுக்கும் அவளுக்கு கொடுக்கும் இடம் சாஹினாவைவிட படிக்கும் நம்மை நெகிழ்த்துகிறது..

காலடிச்சுவடுகள் கடவுளின் பெயரை சொல்லி பிச்சை எடுக்கும் ஒரு வயதான பெண்மணியின் கதை. அவள் மீது பரிதாப்பட்டு அவளுக்கு உணவு கொடுக்கும் ஆசிரியரிடம் அவள் கதையை சொல்லி அழும் அவள் செல்லும் போது விட்டு செல்லும் காலடிச்சுவடுகளை ஆசிரியர்சொல்கிறார்.

பைத்தியக்காரன் கதை மனதை கொஞ்சம் பிசைந்து விட்டது. ஆசிரியரின் இயலாமை மீது கோவம் கொள்ள முடியவில்லை. ஆனால் கோவப்படாமலும் இருக்க முடியவில்லை.. ஆசிரியரின் இளவயதில் உள்ள வசதியான நண்பனை பைத்தியக்காரனாக பார்த்ததும் அதிர்ந்து அவனை அழைத்து போய் குளிக்க வைத்து அழுக்கு ஆடைகளை அகற்றி நல்ல உடைகளை உடுத்த வைத்து அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து கவனிக்கும் ஆசிரியர் அதன் பின் என்ன செய்ய என்று தெரியாமல் அவனை அப்படியே நிராதரவாக விட்டுவிட்டு பேருந்து ஏறி தன் வழி சென்றதை எந்த நியாயப்படுத்தலும் இல்லாமல் சொல்லி இருக்கிறார்.. அதில் தன் நண்பனை பைத்தியமாக பார்க்கும் போது ஆசிரியர் மனதுக்குள் சொல்லும் ஒரு வரி “ வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாக இருந்தது வாழ்க்கை என்று எனக்கு அன்றெனக்கு புரிந்தது”

திருவோணவிருந்து கதையில் பசி என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர்ந்து சொல்லி இருப்பார். “ மதிப்பு மரியாதையும் விடப் பெரியது பசியும் சோறும்தான்” என்று தன் அனுபவத்தை அப்படியே சிறிது கூட மறைக்காமல் சொல்லி இருக்கறார்.

தான் சந்தித்த நல்ல மனிதனான ஜோசப்பண்ணன் என்பவரை பற்றி சொல்லி இருக்கிறார் நாடகந்தானா அதுவில்

கர்ப்பவதம் கதை வறுமையில் போராடிகொண்டிருக்க மனைவி கர்ப்மடைந்துவிட அதை கலைக்க அவளை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பிறக்காத மகனுக்காக கண்ணீருடன் கவிதை எழுதும் கவிஞனின் இயலாமையை சொல்லி இருக்கிறார்.

கவிஞன் வாழ்வில் சந்தித்த பெண்கள் அக்கம்பக்கம் குடும்ப பெண்ணில் இருந்து தெருவோர வேசி வரை அவர்களும் ஆசிரியரும் சந்திக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களுக்கும் இவருக்குமான நிலைப்பாடுகள் தன் பலகீனங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு தன்னை எண்ணி வெட்கப்படுவது வரை அழகாக ஆணாகிய அவரின் உள்ளக்கிடக்கை கொட்டி இருக்கிறார். அதுவும் கடற்கரையில் சந்திக்கும் வேசியுடன் இவர் பழகும் விதம் அந்த பெண் அந்த நடுஇரவில் பாடும் பாட்டு அவள் மடியில் தம்பியாக தலைவைத்து தூங்கிவிடும் மென்மையான அன்பு அவள் அக்காவாக விடைபெறும்போது கவிஞருக்கு பணம் தந்து செல்ல அதையும் பெற்று கொள்ளும் அவரின் மனம் என்று வெவ்வேறு விதமான ஆணின் உணர்வு தளங்களை அனாயசாமாக அப்படியே கொட்டி இருக்கிறார்.

கமலாதாஸ் பற்றி ஒரு கதை. சமீபத்தில் ஒரு நண்பர் தான் என்னை கமலாதாசின் வாழ்கை கதை படிக்க சொல்லி சொல்லி இருந்தார். பனுவலில் இருக்கும் என்றும் சொல்லி இருந்தார். ஆனால் நான் பனுவலில் இந்த முறை கேட்ட போது இல்லை என்றார்கள். இந்த புத்தகத்தில் அவருடனான சந்திப்பை எழுத்தாளரும் அவருக்கு அன்பை தர சொல்லி சொன்ன ஸ்வீடிஷ் கவிஞரும் கண்டிப்பாக கமலா தாசை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிரார்கள்.

சிவாஜியுடன் ஆசிரியருக்கு உண்டான சந்திப்பை அவருக்குள் சிவாஜி என்கிற மாமனிதர் ஏற்படுத்திய பிரமிப்பை அவருடன் விருந்துண்டதை, கவிஞர் என்று தெரிந்தவுடன் சிவாஜி இவருக்கு கொடுத்த மரியாதையை எல்லாம் அந்த பிரமிப்பு மாறாமல் பகிர்ந்திருக்கிறார்..

சிதம்பர நினைவுகள் வாசித்து முடிக்கும் போது ஏற்படும் உணர்வை என்னவென்று சொல்வது.. ஒரு கவிஞனின் மனிதனின் வாழ்வை சைலஜா தன எழுத்தின் மூலம் அப்படியே உணர வைத்திருக்கிறார் பாலசந்திரனை மிக நெருக்கமாக உணர முடிகிறது வாசித்து முடித்த பின் கண்டிப்பாக நீங்களும் உணரலாம்..

No comments:

Post a Comment