“ அமிர்தம்” தி.ஜானகிராமனின் முதல் நாவல். முத்ல் நாவல் என்பதாலோ என்னவோ ரொம்ப
எளிய கதையை எளிய நடையில் எழுதி இருக்கிறார். இவரது மரப்பசு, அம்மா வந்தாள்,
உயிர்த்தேன் இதெல்லாம் பார்க்கும்போது இது அதிகமாக அகத்துக்குள் பிரயாணிக்காமல்
ஒரு நாவலாகவே நின்று விடுகிறது.. தி.ஜா வின் இலக்கிய டச் ரொம்ப பிடிக்கும் இந்த
நாவலிலும் அதெல்லாம் அழகாக கொடுத்திருக்கிறார்.
தாசிக்குலத்தில் பிறந்த அமிர்தம் அந்த
வாழ்க்கை பிடிக்காமல் ஒருவனை காதலித்து திருமணம் புரிந்து வாழும் குடும்ப வாழ்கையை
விரும்புகிறாள். ஆனால் அவளது தாய் அதற்கு சம்மதிக்காமல் அவளை சபேச முதலியார்
என்பவளுக்கு அரங்கு பண்ண பணம் வாங்கி விடுகிறாள். அமிர்தத்தின் அழகில் மயங்கும்
நாற்பது வயது சபேச முதலியாரை ஏற்று கொள்ள அமிர்தத்தால் முடியவில்லை அம்மாவிடம்
எவ்வளவோ சண்டையிட்டும் அம்மா தன் முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
அமிர்தம் சபேச முதலியாரிடமே பேசி தன
மனமாற்றம் வரும் வரை கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என்கிறாள். அவரும்
சம்மதிக்கிறார். இதற்க்கிடையில் அமிர்தத்தின் தாயார் இறந்துவிடுகிறார். சபேச முதலியார்
கொஞ்ச நாள் அவள் துக்கம குறையட்டும் என்று பொறுமை காக்கிறார்.
அமிர்தம் இதற்கிடையில் அந்த ஊருக்கு
வரும் ஒரு இளைஞனை பார்த்து மையல் கொள்கிறாள். அவனிடம் தான் அந்த தாசி குலத்தில்
பிறந்தாலும் இதுநாள் வரை அந்த தொழிலில் ஈடுபடாததை சொல்லி அவனும் திருமணத்துக்கு
சம்மதிக்க எதிர்பாராத திருப்பம் வருகிறது.
முடிவில் அமிர்தம் சொத்துக்களை எல்லாம்
அநாதை ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்து விட்டு சென்னைக்கு சென்று விடுகிறாள்
ஆசிரியையாக..
தி.ஜா வின் சில வரிகள் சபேச முதலியார் அமிர்தம்
வீட்டுக்கு வந்துவிட்டு அவள் செயல்களால் புரியாமல் இரவு தனியே நடந்து வரும் போது
அவரது மனநிலையை சொல்லி இருக்கும் விதம் அலாதி..
“ அந்த மையிருட்டில் துல்லிய வெள்ளை
உடையுடன் முதலியார் ஆவி போல நடந்து போனார். இருளில் பார்வையிழந்த செருப்பு
மேட்டிலும், பள்ளத்திலும் சாணத்திலும் விழுந்து தடுமாறி அவரைச் சுமந்து
போய்க்கொண்டிருந்தது. எதிரே நடமாட்டமே தெரியவில்லை. கும்மிருட்டுத் தெருவில் போகும்போது,
மனிதனாகப் பிறந்த எவனும் சிகப்பு அல்லது கறுப்புச்சேலை உடுத்தியவர்கள் மீதோ,
இருட்டில் உலக நினைவற்றுப போய் நிம்மதியாக மூன்றாம் ஜாமத் தூக்கம் தூங்கும் நாய்
மீதோ மோதி மிதிக்கும் அனுபவத்தை அடைந்து தானாக வேண்டும். இந்த அனுபவத்திலிருந்து
தப்ப முயன்று கொண்டே சென்ற முதலியார் அமிர்தத்தின் நினைவிலிருந்தும்
தப்பியிருந்தார்.
அடுத்த தெருவில் விளக்குகள் கருணையுடன்
எரிந்து கொண்டு தீராப் பழியாகக் கடமையைச் செலுத்திக் கொண்டிருந்தன. அந்த தெரு வெளிச்சத்தில்
வந்ததும், மழை நின்றவுடன் ஒதுங்கியிருந்தவன் மீண்டும் தெருவுக்கு வருவது போல
அமிர்தமும் அவர் மனதில் நடக்க ஆரம்பித்தாள்.”
இது போல ஆங்காங்கு வரும் தி.ஜா வின்
எழுத்து நடைக்காக இந்த நாவலை ரசித்து வாசிக்கலாம்...
Great collections ...nice review dear Kamali....
ReplyDelete- Gayathri Karthik....
thanks dear
ReplyDeleteஇனி உங்கள் வலைப்பூவை regular ராக வாசிக்க முடிவு செய்துவிட்டேன் .....
Delete