Wednesday 8 July 2015

காகித மலர்கள் - ஆதவன்.



பசுபதி என்கிற அரசாங்க உயரதிகாரி அவர் மகன்கள் விசுவம், செல்லப்பா, பத்ரி செல்லப்பாவின் நண்பன் ரமணி,  பத்ரியின் நண்பன் கணேசன், கணேசனின் தந்தை, பசுபதியின் உயரதிகாரி எஸ்.ஏ, என்கிற கதாப்பத்திரங்களின் மூலம் ஆதவன் வெளிப்படுத்தி இருக்கும் ஆண்களின் நுண்ணுர்வுகள் அவ்வளவு நுட்பமானது. என் பெயர் ராம்ஷேசனில் இவ்வளவு நுணுக்கமாக சொல்லவில்லை அல்லது நான் உள்வாங்கவில்லை என்று நினைக்கிறேன்.

அப்பர் மிடில் கிளாஸ் பிராமண குடும்பம் டில்லியில் எழுபதுகளின் கலாச்சாரங்களுடன் எப்படி தங்களை பிணைத்து கொள்கிறார்கள் அவர்களின் அகத்துக்குள்ளும், வாழ்வியலிலும் அதனால் ஏற்படும் மாற்றங்கள், குடும்பத்தில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளின் ஓட்டங்கள் அதற்குள் இருக்கும் முரண்கள் என்று அந்த பாத்திரபடைப்புகளின் மூலம் ஆதவன் தொட்டிருக்கும் ஆழம் அனாயாசம்.

பசுபதியின் மனைவி பாக்கியம், விசுவத்தின் மனைவி பத்மினி மூலமும் பெண்ணின் அகத்தை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் என்ற போதிலும் ஆண்களின் உலகுக்குள் இருக்கும் இருண்ட பக்கங்களை எல்லாம் காட்டியது போல பெண்களின் இருண்ட பக்கங்களின் ஆழம் தொட முயற்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது. கொஞ்சம் பட்டும் படாமல் தான் பெண்ணின் உணர்வுகளை எழுதி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

பாத்திரங்களின் ஊடாக அவர் சொல்லியிருக்கும் உவமைகள் உண்மைகளை பக்கத்தில் தரிசிக்க வழி செய்கிறது. பேருந்து ஜன்னலை மூட முயற்சிக்கும் போது அவை மூட செய்யும் முயற்சிகளை ஒரு உறுதியான தீர்மானத்துடன் எதிர்ப்பதை – சில பழக்கங்களிலும் அபிப்ராயங்களிலும் ஸ்திரப்பட்டுவிட்ட மனிதர்கள் அவற்றை மாற்றிக்கொள்ள மறுப்பதை போல என்று உவமைப்படுத்துகிறார்.

“ஒவ்வொருவரை பற்றியும் நாம் உருவாக்கி கொள்ளும் பிம்பங்கள் பற்றி சொல்லும்போது பத்திரிக்கை கதைகளும் கார்டூன்களும் அப்பா என்றால் இப்படி அம்மா என்றால் இப்படி கலைஞன் என்றால் இப்படி என்று திட்டவட்டமான பிம்பங்களை உருவாக்கி பிரத்யேக இயல்புகளையும் வித்தியாசங்களையும் அடிக்கோடிட்டு காட்டும் முயற்சியில் உண்மைக்குச் சாயமடித்து மறைக்கின்றன. இவை பொய்யாகவே இருந்தாலும் தேவை போலவு தோன்றுகிறது. உண்மையை விட பொய் தான் சுவையானது என்பதால்  ஆம் இது போல பெண்களை பற்றி நூற்றாண்டுகளாக கற்பிதம் செய்ய்பப்ட்டிருகும் பிம்பங்கள் அவற்றுக்கு இடையில் மூச்சு திணறும் பெண்கள் ஒரு பக்கம, இன்னொரு பக்கம் அந்த பிம்பம் தான் உண்மையில் என்று நம்பும் பெண்கள் இரண்டுக்கும் நடுவில் விழி பிதுங்கும் பெண்கள் என்று எத்தனை எத்தனை பிம்பங்களை சுமந்து அந்த சுமையின் எரிச்சலை வேறு வேறு விதமாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இது போல புத்தகம் முழுதும் உண்மைக்கு வெகு அருகில் ஆதவன் நம்மை இட்டு செல்கிறார்.

“ஆணும் பெண்ணும் தம்முடைய இயற்கையான நாற்றங்களை ரசிக்கத தொடங்கினால் காஸ்மெடிக் இண்டஸ்ட்ரியே தவிடு பொடியாகிவிடும்

“ இரண்டு மனிதர்கள் பத்து வருடங்கள் நெருங்கிப் பழகியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் போகலாம், வேறு இருவர் ஒரே கணத்தில் ஒரே பார்வையில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுவிடலாம்

“ அந்ததந்த கட்டங்களில் நிகழ வேண்டியவை நிகழாமல் அமிழ்த்தி வைக்கப்படும்போது பின்னால் எதிர்பாராத தருணங்களில் அவை வெளிக்கிளம்பி பொருத்தமற்ற காட்சிகளுக்கு அடிகோலுகின்றன.

“மனிதனின் சிந்தனை மாறுதல்களுக்கு ஏங்குகிறது, பரபரக்கிறது. வேகம் வேகம் வேகம் ஆனால் உடல்?

“மனிதர்களுடைய பெரும் பிரச்சனை பேச்சு தான். தினசரி புதிதாக பேசவேண்டும் என்ன பேசுவது?

“மரணத்தின் வாயிலிலும் பெண் உடம்பினருகிலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் தாம்

“எல்லாருக்குமே தர்க்க ரீதியான, ஆதார பூர்வமான சிந்தனைகளிலிருந்து இளைப்பாறல் தேவைப்படுகிறது

“மனிதனின் இயல்பே ஆக்கிரமிப்பு தானா? இயற்கையை சூழ்நிலையை , வடுப்படுத்த்தி தன்னைத்தானே நிரூபித்து கொள்வது தானா! (இதில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக அடுத்தவரை ஆக்கிரமித்து கொள்ள தான் முயற்சிக்கிறோம். ஆனால் சுதந்த்திரமகவும் இருக்க முயலுகிறோம் என்று யோசித்த போது ஹப்பா நம் முரண் களையவே ஒரு ஜென்மம் போறாது போல என்று தோன்றியது)

“இயற்கையின் சூழ்நிலைகளின் இயல்பு ஒழுங்கீனம் தான். மனிதன் இவற்றிலிருந்து ஒழுங்கை உருவாகக் முயலுகிறான்

“பிம்பங்கள் கனவுகள் இவை தான் மனிதனுக்கு உந்துதலை அளிக்கின்றன அவன் வாழ்க்கையை உருவாக்குகின்றன

“மந்தையிலிருந்து வேருபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் ஜனநாயகம் மந்தைத்தனத்தை உருவாக்குகிறது. காந்தியை போன்றவர்கள் மந்தைக்கு அறிவூட்ட முயலுகிறார்கள் ஹிட்லர் போன்றவர்கள் மந்தையின் மனப்போக்கை, முடமான உணர்ச்சித் தாகத்தை தம்முடைய சொந்த நோக்கங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்

பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் வார்த்தைகள் – பல வருடங்கள் புழக்கத்திலிருந்து வரும் தூசும் அழுக்கும் படிந்த வார்த்தைகள் – இந்த வார்த்தைகள் சார்ந்து ஸதிரப்பட்டிருக்கும் பிம்பங்கள் ஆகியவை மூலம் ஒருவரையொருவர் அணுகாமல் இருப்பது நல்லது

உன் இயல்புகள் என்னைப் பலவிதங்களில் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்புகள் தவிர்க்க முடியாமல் வார்த்தைகளாக உருப்பெறுகின்றன.

இந்த வார்த்தைப்படுத்துதல் என் இயல்புகளையும் சரி, அவை உன்மேல் நிகழ்த்தும் பாதிப்புகளையும் சரி கொச்சைப்படுத்துவதாகும். அரூபமானவற்றுக்கு ரூபம் கொடுக்க அவசரப்படுகிறாய். நாமிருவரும் ஒருவர்மேல் ஒருவர் நிகழ்த்தும் பாதிப்புகள் பிரத்யேகமானவை. இந்த பாதிப்புகளால் எழும் உணர்வுகளின் உலகம் பிரத்யேகமானது. திறந்த மனதுடன் இறுதிவரையில் ஒருவரையொருவர் கண்டுபிடித்துக்கொண்டேயிருப்போம். சௌகரியமான பிம்பங்களை ஒருவர் மேல் ஒருவர் திணித்து உண்மையை உணரும் பொறுப்பிலிருந்து நலுவாமலிருப்போம்.

“ஒவ்வொருவரிடமும் ஏதோ சில அம்சங்கள் நம்மைப் பரஸ்பரம் ஈர்க்கின்றன.. நம் அம்சங்கள் எல்லாவற்றையுமே ஒரு ஆண் அல்லது ஒரு பெண் நிறைவு செய்வது சாத்தியமில்லை என்ற உண்மையை உணர வேண்டும். பெரும்பாலான அம்சங்கள் நிறைவு பெறச் செய்யும் ஒருவரிடம் சமரசம் செய்து கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.
" பிறரை நாம் நம் உருவத்தில் காண்கிறோம்" நல்ல இயல்புடைய ஒருவன் பிறரையும் அவ்வாறு காண்பான், அப்படியல்லாதவன் கோணலாக தான் காண்பான்"

" இயற்கை பெண்ணைப்போல, மனிதனை இயங்க வைக்கும் சக்தி, மனித குலத்துக்குத் தொடர்ச்சியை அளிப்பது, அதை மிகையாக இலட்சியப்படுத்தி பூஜை செய்யாமல் அன்னியோன்யமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த வேண்டும் அதே சமயத்தில் அதை சூறையாடிவிடக்கூடாது"

"அவன் சமைப்பதில் ஆர்வமெடுத்துக்கொள்வது ஒரு வேஷம், அவனுக்கேற்ற இன்டெலெக்சுவல் கம்பானியனாக அவனைக் கருதி ஏற்றுகொண்டது ஒரு வேஷம். அவனைத் தனியாளாகக் காட்டும் சில தனித்த இயல்புகளுக்காக அவளை நேசிப்பது ஒரு வேஷம் . அவனையறியாமல் அவன் அணியும் அவனையே ஏமாற்றும் வேஷங்கள். உண்மையில்..............

ஆம் உடம்பு, உடம்பு, அது தான் உண்மை அதன் பசி ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சியை மறைத்து கொள்ள மனம் உருவாக்கும் இதமான பிம்பங்கள் -  ஒத்துழைப்புக்குரிய துணைவி, பரிவுக்குரிய தோழி, போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு தாயாக போகிறவள்..

எத்தனை பொய்கள் !!!!!!!

ஆம் அவள் கொஞ்சம் பழங்காலத்து டைப் தான். ஆனால் அதில் சில சௌகரியங்கள் இருக்கின்றன. என்னை கட்டுப்படுத்தும் ஒரு கடிவாளமாக நான் அவளை நினைக்கிறேன். இரண்டு பெரும் ஒரே மாதிரியான மதிப்பீடுகள் உள்ளவர்களாயிருந்தால் எங்கே கோடு போடுவது, எங்கே போய் நிற்பது என்று நிச்சயமில்லாமல் போய்விடுமென்று எனக்கு தோன்றியது. - அதனால் உண்டாகும் விளைவுகள் இருவருக்குமே நன்மை தராது.

நான் எடுத்து தொகுத்திருப்பது எல்லாமே உணர்வுகளின் நுட்பங்கள் எளிதில் நமக்கே பிடிபடாத ஒன்றை இது தான் அகம் பார் என்று பல இடங்களில் அவர் காட்டி இருப்பதை.. இந்த புத்தக்ததில் உணர்வுகள் எப்படி புழங்குகிறதோ அதே அளவுக்கு அறிவியல், அரசியல் என்று ஆதவன் தொட்டிருக்கும் எல்லாமே ஆழம் தான். அதை பற்றி தொகுத்தால் பதிவு இன்னும் விரிவாக கூடும் என்பதால் எனக்கு பிடித்த உணர்வு தளங்களை மட்டும் தொகுத்திருக்கிறேன்..

No comments:

Post a Comment