Wednesday, 8 July 2015

ராஜன் மகள் - பா. வெங்கடேசன்

பா. வெங்கடேசன் அவர்களின் ராஜன் மகள் புத்தகம் அவரின் நான்கு சிறுகதைகளை உள்ளடக்கியது. அந்த கதைகளை சிறுகதை என்று சொல்ல முடியாது ஒவ்வொரு கதையும் ஒரு நாவல் படித்த உணர்வை தந்தது. இந்த கதைகள் வரலாறா புனைவோ என்று பிரித்து பார்க்க முடியாமல் கதைக்குள் நம்மை இழுத்து கொள்வது தான் ஆசிரியரின் வெற்றி. மிக மிக நுண்ணிய மனிதனின் உள்ளுணர்வுகளை ஆசிரியர் புனைவில் புகுத்தியிருப்பதால் உண்மையா புனைவா என்று இனம் பிரிக்க முடியாமல் பல இடங்களில் நாமும் கதைகளின் சூழலுக்குள் சிக்கி கொள்கிறோம்.

நீளம் நீளமான வாக்கியங்கள் கடினம் என்றாலும் எனக்கு சுவராஸ்யம் கொடுத்தது அந்த நீளமான வாக்கியங்கள் தான். படிப்பவர்கள் ஜாக்கிரதையாக உள்வாங்கவில்லை என்றால் கதை நம்மை விட்டு நழுவிவிடும்.. ஆனால் கதைகளின் சுவராஸ்யம் நம்மை அந்த சூழலுக்குள் பொருத்திவிடுவதால் நம்க்கு நகரவும் மனம் வராது.

நான்கு கதைகளின் களங்களும் தருமபுரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நிகழ்வதாக ஆசிரியரால் சொல்லப்படுகிறது..முதல் கதையில் வரும் மழை வீட்டில் ஆரம்பித்து நான்கு கதைகளிலும் நுண்ணுர்வால் நிரம்பி இருக்கும் ஒரு மனிதனின் வெவ்வேறு கதாப்பாத்திரங்களாக அல்லது வெவ்வேறு வடிவமாக தான் எல்லா கதைகளையும் அமைத்து இருக்கிறார் ஆசிரியர்.

மழை வீட்டின் சாரங்கன் ஆகட்டும், ஆயிரம் சாரதா அனுமந்தப்பா, மயில்வாகனன் ஆகட்டும் நீல விதி வஸந்தராம் என்கிற ஸ்ரீவத்ஸ்னாகட்டும் ராஜன் மகளில் வரும் வைத்தியர் (நாவிதர்) ஆகட்டும் அவர்கள் ஆசிரியரின் கற்பனை படைப்பா இல்லை அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்ததற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று அதிகம் குழப்பி கொள்ள விடாமல் கதையில் பயணிக்க தொடங்கும் போது கதையில் நம்மையும் பொருத்தி அந்த காலகட்டத்திற்குள் இழுத்து கொண்டு சென்று விடுவதால் நம்மால் அதை நடந்த ஒரு சம்பவமாக மட்டுமே மனதில் வரிக்க முடிகிறது.

இதில் வரும் நான்கு கதைகளும் பெரும்பாலும் அகத்துகுள்ளே தான் பயணிக்கிறது. மழையின் குரல் தனிமையில் கொஞ்சம் வாஸ்து என்கிற கட்டிடகலையுடன் புற உலகுக்குள் பிரயாணித்தாலும் அதிகம் அக உலகின் விகாரங்களும், ஏக்கங்களும், அக்ச்சிக்கல்களும் அவற்றின் குணங்களும் மணங்களும் நிறங்களும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.. அதிலும் ஆசிரியர் சொல்லும் மணங்கள் ஆச்சரியத்தின் உச்சம்.

கதையை பற்றி நான் விரிவாக எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் இந்த நான்கு கதைகளுமே அகத்தையும் நுண்ணர்வையும் மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் இதை வாசித்து மட்டுமே அனுபவிக்க முடியும்.. (கதை பற்றிய விரிவான பதிவை Raja Rajendran அவரது பிளாக்கில் பதிந்திருக்கிறார் விருப்பமிருப்பவர்கள் அவரது ப்ளாக்கில் வாசிக்கவும்.

கதைகளில் வந்த எனக்கு ரொம்ப பிடித்த சில வரிகளை மட்டும் கீழே பகிர்கிறேன்.

பொறுப்புகளையெல்லாம் அவன் கரைக்க முயன்ற போது பெரியவர்களின் உலகை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கத் துவங்கின. அவனிடமிருந்த குழந்தைமை மெதுமெதுவாக விடைபெற்றுக்கொண்டன.
விலக்கப்பட்டவற்றின் மீதான விருப்பத்தை ஒருவனுக்குள் விதைப்பது அவன் முதியவனாயிருந்தால் தொழில் விரோதியும் இளைஞனாயிருந்தால் காதலியும்..

தலை தரையில் மோத அப்படியே பின்புறமாக சாய்ந்துவிட்டான். அத்தோடு நிஜத்தையும் கற்பனையையும் பிரிக்கும் பிரக்ஞையின் மெல்லிய இழையையும் தவறவிட்டுவிட்டான்.

பெண்ணை அவளின் அந்தரங்கத்தின் மீதான அவமான உணர்விலிருந்து விடுவிப்பவன் அவள் காதலைனத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.
படைப்பின் ஆகச் சிறந்த பொக்கிஷமும் ஆகப் பெரிய ரகசியமுமான பெண்ணுடலை புலன்களால் ஸ்பரிசிக்கும் அதிர்ஷ்டம் காதலனைத் தவிர பிறருக்கு வாய்காதிருக்க கடவது

உமிழ்நீரில் இருந்து பொய்யை பிரித்தெடுக்கும் அன்னம் என்னும் சிறப்பு பெயரால் அறியப்பட்ட நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த ராஜகோபால்

பொய் என்பது பொருந்தி வராத எதிரெதிர் உண்மைகளின் கூறுகளாகவே இருந்ததையும் பொய் தான் உச்ச்சரிக்கப்படுவதற்க்கான சூழலைத் தானே உருவாக்கிக்கொள்வதையும் யதார்த்த உலகிற்கு மாற்றான இன்னொரு கண்ணுக்குத் தெரியாத அற்புதமான உலகத்தைப் பொய்யர்கள் தங்களின் பிரத்யேக சந்தோசத்திதிற்காக கட்டி கொள்கிறார்கள் என்பதை ராஜகோபால் கண்டுபிடித்தார். பொய்க்கு தனி மணமும் நிறமும் உண்டென்றும் அவரின் அறிவுக்கு புலனாயிற்று

ஒரு தனி உயிரின் உடற்காயமும் வலியும் அதை மிகவும் நேசிக்கும் சக உயிர்களில் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது நடக்கிற விஷயம்.
தெரியவில்லை என்கிற பதில் மனப்பிறழ்வையும் ஒன்றுமில்லை என்கிற
பதில் மனச்சஞ்சலத்தையும் காட்டவல்லவை.

வெளியே தப்பிச் செல்லும் வழியைத் தேடித்தேடி உள்ளே தன் மனச்சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்டான்.

எந்த ஒன்று பிறிதொன்றை வீழ்த்தும் போதும் வீழ்த்தியதன் ஆகிருதி வரலாறாக எழுதப்படும்போது வீழ்த்தப்பட்டதன் எச்சம் வரலாற்றினடியில் கதையாக மறைந்து நின்று முற்றான அழிவிலிருந்து தன்னை தப்புவித்துக்கொண்டுவிடுகிறது.

No comments:

Post a Comment