Wednesday, 27 April 2016

காதல் தேவதை


“Venus in Furs”  Leopold von Sacher-Masoch என்ற ஆஸ்திரிய ஆசிரியர் ஜெர்மன் மொழியில் எழுதிய இந்நாவல் 1870 களில் வெளிவந்தது. ஐரோப்பிய இலக்கிய உலகில் மிகப்பெரும் சர்சைக்குள்ளாகி விவாதத்துக்குள்ளான நூல். ஜெர்மன் மூலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் வெளியாகி தமிழில் யுனைட்டட் ரைட்டர்ஸ் பப்ளிக்கேஷன்ஸ் மூலமாக "காதல் தேவதை” ஆக 2003 ல் முதல் பதிப்பு கண்டது. தமிழாக்கம் ஜெகதீஷ்.

சாடிஸம் என்றால் பிறரை துன்புறுத்தி மகிழ்ச்சி காணுதல் மிக பரவலாக இந்த வார்த்தை பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. ஆனால் சாடிஸத்துக்கு எதிர் மனநிலையான ”மாஸோகிஸம் (Masochism)” (தன்னை தானே வருத்திக்கொள்ளும் மன இயல்பு) என்ற கலைச்சொல் உருவாக காரணமாக இருந்தது இந்த நூல் தான்.

நாவல் ஆரம்பிக்கும்போது மிகுந்த நாடகத்தன்மையுடன் தான் ஆரம்பிக்கிறது. அநேகமாக முழுமையடையும் வரை நாடகத்தன்மை மிகுதியாக காணப்பட்டாலும், நாவல் உணர்வு தளங்களில் பிரயாணிக்கும் போது தொட்டிருக்கும் ஆழமும் உண்மையும் நம்மை உலுக்குகிறது. இது காதல் கதை என்றாலும் அதன் மூலம் காதலின் இயல்புதன்மை, ஆழ்மனம், ஆணவம், மோகம், ஆண் பெண்ணின் தீரா உணர்வுசிக்கல்கள், என்று பயணிக்க நாம் அணிந்து கொண்டுள்ள முகமூடிகளை எல்லாம் கழட்டி வீசுகிறது.

சமூக நெறிமுறைகளுக்குள் மனதை அடைத்து வைத்துகொண்டு இதை வாசிக்கும் யாராலும் இந்த நாவல் சொல்லும் உளவியலை விளங்கி கொள்ள முடியாது. எல்லாவற்றையும் புறம் தள்ளி நம்மை எதற்குள்ளும் திணித்து கொள்ளாமல் வாசித்தால் மனதின் இருண்ட மூலைகளில் ஒளிந்து கிடக்கும், காம காதல் உணர்வுகள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

நாவலின் நாயகன் செவரின் இலக்கிய, கவித்துவமான, உச்சபட்ட உணர்ச்சிகளை உடையவன், என்றாலும் உளவியல் சிக்கல்கள் உள்ளவன். அவன் கற்பனையில் தன்னை நேசிக்கும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை கொள்கிறான், அதை பற்றி காதல் தேவதையான வீனஸிடம் முறையிடுகிறான். இவன் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிஜமாக பெண் ரூபத்தில் பார்க்கிறான். வாண்டா என்ற அந்த பெண்ணின் அழகில் மயங்கும் அவன் அவளின் அழகுக்கு அடிமையாகிறான்.

கண்மூடித்தனமாக அவளை காதலிக்கும் செவரின், அவளிடம் தன்னை முழுமையாக ஒப்பு கொடுத்துவிட்டு அவள் காலடியிலேயே விழுந்து கிடக்க துடிக்கிறான். ஆனால் வாண்டா அழகும் அறிவும் சுதந்திர எண்ணமும் உடையவள் இவனின் அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கிறாள். மேலும் தான் திருமணம் செய்து தனக்கு கணவராக வருபவன் முழுமையான ஆண்மகனாக இருக்கவேண்டும் என்று கூறுகிறாள். அத்தகைய ஆணை தான் தேடுவதாகவும் கூறுகிறாள்.

ஒரு ஆணிடம் என் வாழ்நாள் முழுதையும் ஒப்படைத்து விடுவேன். ஆனால் அவன் தன் அக ஆற்றலால் என்னை ஆளுமை செய்பவனாக இருக்க வேண்டும்.. ஆனால் அத்தகைய ஆண் கிடைப்பதில்லை”.

நீ காதலிக்கும் தகுதியுடையவனாக இருந்தாலும் அடிமையாக இருக்க விரும்பவது காதலில் சரிபட்டு வரும் என்று தோன்றவில்லை என்று மறுக்கிறாள். ஆனால் அவன் தொடர்ந்து காதலுக்காக இறைஞ்ச சரி நாம் இருவரும் ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்போம், காதலனுக்கான அனைத்து உரிமைகளையும் தருகிறேன் ஆனால் இறுதியில் எனக்கு பிடித்தால் தான் நீ என் கணவன் என்கிறாள்.

ஆனால் அவன் வற்புறுத்துகிறான், நான் என்னை சிறுமைப்படுத்தும், கொடுமைப்படுத்தும், ஒரு பெண்ணிடம் காதல் துய்க்க விரும்புகிறேன் , உன்னிடம் எனக்கு அந்த இன்பம் கிடைக்கும் நீ என் மீது இரக்கம் காட்டாமல் என்னை ஆளுமையும், அதிகாரமும் செய்ய வேண்டும்,என்னை சாட்டையால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறான். ஆனால் வாண்டா மறுக்கிறாள் இதெல்லாம் மிக மோசமாக முடியும் என்கிறாள். ஆனால் செவரின் மறுக்கிறான். இல்லை அப்படி இருந்தால் சாவு தவிர நம்மை வேறு எதுவும் பிரிக்க முடியாது காலம் முழுதும் உன் அடிமையாக காதலித்து கொண்டே நான் வீழ்ந்து கிடக்கிறேன் என்கிறான்.

அவனிடம்  உனக்கு புரியவில்லை அடிமையாக இருந்தால், நான் உன்னை கொடுமைப்படுத்த தொடங்கினால் கண்டிப்பாக என்னை வெறுக்க தொடங்குவாய், உனக்கு என் மீது காதல் வராது என்று எவ்வளவோ சொல்லியும் மறுக்கிறான் செவரின், சரி இந்த ஊரில் நீ என் அடிமையாக இருக்கமுடியாது நாம் வேறு புது ஊர் செல்வோம் அங்கு நம்மை யாருக்கும் தெரியாது நீ என் அடிமையாக தொடரலாம் என்கிறாள்.

ஊருக்கு கிளம்பும் முன் நான் நேசிக்கிறேன் ஆனால் இந்த அடிமை விளையாட்டு தேவையா, நாம் இப்போது நண்பர்கள் நாளை முதல் நீ அடிமையானால் உன் நிலையில் இதையெல்லாம் இழப்பாய் என்று சொல்லியும் தன் முடிவில் பிடிவாதமாக அவளுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்கவும் சம்மதிக்கிறான் செவரின்.

அடிமையாக கிரிகர் என்று பெயர் சூட்டப்பட்டு வாண்டாவுடன் வேறு ஊருக்கு செல்கிறான். அவளிடம் சாட்டையால் அடிபடுகிறான், ஆனாலும் அவளின் காலடியில் கிடக்க ஏங்குகிறான். அவள் வேறு ஆண்மகனின் பால் ஈர்க்கப்படும்போது அவளை இழந்துவிடுவோமோ என்று அஞ்சி நடுங்குகிறான். அவளிடம் நான் உன் காலடியிலேயே கிடக்கிறேன் வேறு ஆணிடம் செல்லாதே என்கிறான்.

ஆரம்பத்தில் அவன் காதலில் கிறங்கினாலும், அவனின் பைத்தியகாரத்தனம் அவளுக்கு சலிப்பூட்டுகிறது. அதனால் மனதளவில் விலகுகிறாள். இதனிடையில் ஒரு ஒவியன் மீது காதல் வந்ததாக அவனின் ஈகோவை தூண்ட முனைகிறாள். ஆனால் அதிலும் தோல்வியே மிஞ்சுகிறது. மீண்டும் அவனை தனது காதலனாக மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் அவளின் முயற்சி வெற்றி பெறவில்லை. செவரினை கூப்பிட்டு காதலின் ஸ்னேகத்தை கொடுக்கிறாள். அதை ரசித்தாலும், அவன் அவளின் கொடூரத்தை தான் விரும்புவதாக பிதற்றுகிறான். 

நீ செய்வதை நன்றாக பரிசீலித்து பார். நான் அளவற்று உன்னை காதலித்தேன். உன் கனவு நிறைவேற உன்னிடம் கொடுமைக்காரியாக நடந்து கொண்டேன். உன் மீதான தற்போதைய உணர்ச்சி ஆரம்ப நாட்களின் காதலால் ஏதோ ஒரு பரிதாப உணர்வு, அது இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. அது போய்விட்டால் உனக்கு விடுதலை அளிப்பேனா இல்லை மேலும் ஈவு இரக்கமற்ற கொடியவளாக மாறி உன்னை சித்ரவதை செய்வேனா தெரியவில்லை. இன்னொருவனை கூட காதலிக்கலாம். நன்றாக யோசித்து முடிவெடு ..என்கிறாள்.

ஆனால் அப்போதும் நீயில்லாமல் வாழ முடியாது, நீ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தால் செத்து போவேன், உன் அடிமையாக இருக்க செய் என்கிறான். அப்படியானால் என் அடிமையாகவே இரு நான் இனியும் உன்னை காதலிக்கவில்லை, உன் காதல் ஒரு நாயின் விசுவாசம் என்பதை நினைவில் கொள் என்கிறாள்.. 

அப்போது ஒரு கிரேக்க ஆணை சந்திக்கிறாள். அவன் பால் ஈர்க்கப்படுகிறாள் வாண்டா. அவனை காதலிக்க தொடங்குகிறாள். அதை பொறுக்க முடியாமல் செவரின் சண்டையிடுகிறான். கோவத்தின் உச்சத்தில் உன்னை கொலை கூட செய்வேன் என்கிறான். அப்போது வாண்டா கூறும் அனைத்தும் உணர்வு தளத்தில் மிக ஆழமாக  பேசுகிறது.

வாண்டா பொறுமையாக நான் உன்னை தண்டிப்பேன் சவுக்கால் அல்ல உண்மைகளால் என்று பேச தொடங்குகிறாள். என் மீது குற்றம் சுமத்த உனக்கு உரிமை கிடையாது. நான் உன்னிடம் நேர்மையாக நடக்கவில்லையா? பலமுறை உன்னை நான் எச்சரிக்கவில்லையா?என் முழு மனதுடன் உன்னை காதலிக்கவில்லையா? நானா உன்னை அதிகாரம் செய்ய விரும்பினேன்? உன்னை முற்றாக என்னிடம் ஒப்படைப்பது ஆபத்தானது என்று எத்தனை முறை சொன்னேன்? என் முன் உன்னை சிறுமைப்படுத்தி கொள்ளாதே என்று சொல்லவில்லையா? காலடியில் விழுந்து கிடப்பதில் நீ உச்சகட்ட இன்பத்தை விரும்பினாய். இப்போது நீ என்ன விரும்புகிறாய்? என்னுள் தூங்கி கிடந்த ஆழ்மனதில் புதைந்து கிடந்த அதிகார இச்சைகளைத் தூண்டிவிட்டவன் நீ. நான் இப்போது உன்னை கொடுமைப்படுத்துவதில் இன்பம் காண்கிறேன் என்றால் அதற்கு முழு முதல் காரணம் நீயே தான். இப்போது என் மீது பழி போடுகிறாய் என்கிறாள்.

ஆம் நான் தவறிழைத்துவிட்டேன், ஒப்புகொள்கிறேன், இந்த ஆட்டத்துக்கு முடிவுக்கட்டலாம் என்கிறான் செவரின்.

“தீப்பற்றிய வைக்கோற்புதர், நிறையப் புகை வீசி சீக்கிரமே எரிந்து கருகிவிடும், என் மீது நிறைய பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நினைத்தூ உன்னையே நீ அபத்தமாக்கி கொள்கிறாய். நான் முதன்முதலில் நினைத்தபடி உறுதியான, தீவிரமான ஆணாக நீ இருந்திருந்தால் நான் உன்னை காதலித்து, உன் மனைவியாகி, விசுவசமானவளாக இருந்திருப்பேன். ஆனால் என் காலடியில் உன் கழுத்தை வைக்கிறாய். பெண் பொம்மைகளை ரசிப்பாள், ஆனால் சலிப்படையும் போது தூக்கி வீசி விடுவாள்.

இறுதியில் இவன் தனக்கேற்றவன் இல்லை என்று வாண்டா அவன் பித்து நிலையில் இருந்து தெளிவடைய மிக கொடூரமாக அவனிடம் நடந்து கொண்டு அவனை பிரிந்து செல்கிறாள். அதன் பின் பெண்கள் பற்றிய வழக்கமான புலம்பலான இயற்கையில் ஆணின் எதிரி பெண் என்கிற புலம்பலும் பெண் எப்போதும் ஆணுடன் தோழமையாக இருக்க முடியாது என்று செவரின் மூலம் சொல்லும் ஆசிரியர் அதற்கு தீர்வாக அந்த எதிரித்தன்மையை உருவாக்குவதும் ஆண் என்கிறார். சமூக உரிமைகளிலும், வேலைகளிலும், கல்வியிலும் அவளுக்கு ஆணுக்கு நிகரான இடம் கிடைத்தால் தான் பெண் தோழமையாக மாறுவாள் என்கிறார். ஆனால் இருபதாம் நூற்றாண்டு முடிந்த பின்னும் அது மட்டும் நடக்கவில்லை..

நாவல் பேசும் உளவியல் சற்றும் நாம் எதிர்பார்க்காத, நம் ஆழ் மனதின் விலங்குதன்மை. எல்லா மனிதனுக்குள்ளும் இருப்பது ஆதி விலங்குத்தன்மை. அது வெளியே வரும்போது எவ்வாறு இருக்கும் என்று நினைத்தால் நம் மீதே நமக்கு அச்சம் வரும். அதனாலேயே இது தனித்து தெரிகிறது. இந்த புத்தகத்தை வரி வரியாக படிக்கும் போது கிடைக்கும் கிளர்ச்சியை வாசித்து அனுபவித்து மட்டுமே உணர முடியும். இந்நாவல் முழுதும் வாசித்து முடித்த போது தோன்றிய சிந்தனைகளும், இது விதைத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இறக்கும் வரை தொடரும்………

1 comment:

  1. அழகான விமர்சனம் .இந்த நூலின் ஆசிரியர் சமூக உரிமைகளிலும், வேலைகளிலும், கல்வியிலும் பெண்களுக்கு ஆணுக்கு நிகரான இடம் கிடைத்தால் தான் அவர்கள் தோழமையாக மாறுவாள் என்பது கூறி இருப்பது ஓரளவிற்கு உண்மை தான் என்றாலும் ஒரு பெண் தன்னிலையிலிருந்து எப்போது மாறுவாள் என்பது யாருக்குமே தெரியாது .என்றாலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிராக உள்ள தடைகள் சிறிது சிறிதாக குறைந்து கொண்டு தான் வருகின்றன என்பது மகிழ்ச்சியான விஷயம் .காதல் தேவதையை உடனே வாங்கி படிக்க வேண்டும் என்கிற ஆவலை நமக்குள் நன்றாகவே விதைத்து விட்டது இந்த அற்புதமான விமர்சனம்

    ReplyDelete