Thursday, 5 May 2016

“தாசியும் தபசியும்” அனடோல் பிரான்ஸ்


“தாசியும் தபசியும்” அனடோல் பிரான்ஸ் என்பவர் ப்ரெஞ்சு மொழியில் எழுதிய நாவலை தமிழில் எஸ். சங்கரன் மொழிபெயர்த்திருக்கிறார். மதம் மனிதனை எந்தளவு முட்டாளாக்கிவிடுகிறது என்பதை கிண்டலாகவும் அதே நேரம் அதனை விவாதத்துக்கு உட்படுத்தியும் பேசுகிறது நாவல்.

எகிப்தில் கிருஸ்துவம் பரவ ஆரம்பித்த நாட்களில் நடந்த மாற்றங்களும், மக்களின் மனதில் அப்போது இருந்த கடவுள் பற்றிய அபிப்ராயங்களும் அபிப்ராய பேதங்களும் தர்க்க ரீதியாக விவாதிக்கப்படுகிறது. அப்போது இருந்த கிருஸ்துவ மதத்தை அதன் நம்பிக்கைகளை கிண்டலாக சொன்னாலும் அதற்கு பின் இருந்த அரசியலையும் , மக்களின் அறியாமையும் வலுவாக சொல்கிறது நாவல்.

தாயிஸ் என்ற அழகான விபச்சாரியை மீட்டு அவளுக்கு பாவத்திலிருந்து விமோசனம் பெற செய்து அவளை கடவுளுக்கு சமர்பிக்க போவதாக துறவு வாழ்வு வாழ்ந்து வரும் பாப்னூடியஸ் என்ற கிருஸ்துவ மதபோதகர் தாம் தங்கி இருக்கும் பாலைவனத்தில் இருந்து நகரத்துக்கு செல்கிறார்.

தாயிஸ் அந்த நகரத்தின் கனவு கன்னி, நாடக நடிகை, பல ஆண்களின் காதலி, விபச்சாரத்தால் செல்வ செழிப்பாக இருந்தாலும் காதல், காமம், செல்வம் எல்லாம் சலித்து போகிறது. மரணம் பற்றிய பயம் அவளை வாட்டுகிறது.

அந்த தாசியை சந்திக்கிறார் பாப்னூடியஸ், அப்போது அவள் விருந்துக்கு செல்வதால் அவளுடன் வருமாறு அழைக்கிறா தாயிஸ். பாப்னூடியஸும் அவளுடன் செல்கிறார். அங்கு விருந்துடன் மிகப்பெரும் விவாதங்களும், கடவுள் குறித்த, மதம் குறித்த பலவும் சர்ச்சைக்குள்ளாகிறது. குடிபோதையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள அங்கு நடக்கும் தர்கங்களை பார்த்து பாப்னூடியஸ் கொதித்து போகிறார். தாயிஸ் அங்கு நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருக்கும்போதே அவளை வா இங்கு வேண்டாம் உனக்கு நிரந்தர சுவர்கத்தை காட்டுகிறேன். உனது உடலை இந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கொடுத்தன் மூலம் உண்டான பாவத்திலிருந்து மீட்டு உன்னை கடவுளின் பாதத்தில் சேர்க்கிறேன் என்று கூறுகிறார்.

குழம்பிய நிலையில் இருந்த தாயிஸிடம் அவள் உடமைகள் எல்லாவற்றையும் தீயிலிட்டு எரித்து தன்னுடன் துறவு வாழ்வுக்கு வர சொல்கிறார். தாயிஸும் சம்மதித்து அவருடன் எல்லாம் துறந்து பயணம் மேற்கொள்கிறாள். சில நாட்கள் பயணித்து கன்னியாஸ்திரி மடத்தில் இருக்கும் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு மிகுந்த மன திருப்தியுடன் தான் ஒரு பெண்ணை இயேசுவுக்கு அர்பணித்து விட்ட நிறைவில் தன் இடம் செல்கிறார்.

தன் இடம் வந்தவுடன் தான் பாப்னூடியஸ் வெறுமை உணர்கிறார். சில நாட்கள் பழக்கத்தில் தாயிஸ் மீது ஏற்பட்ட காதலும் காமமும் அவரை அலைகழிக்க தொடங்குகிறது. தான் பாவம் செய்துவிட்டதாக தன்னையே தண்டித்து கொள்கிறார். தாயிஸை மறக்க பிடிவாதமாக தியானம், பட்டினி என்று தன்னை தானே தண்டித்து கொள்கிறார். ஆனாலும் தோற்றங்களாக எங்கு பார்த்தாலும் தாயிஸின் உருவமே இவர் மனக்கண்ணில் தோன்றுகிறது.

சரியாக படுக்க கூட வசதி இல்லாத ஒரு தூணின் மீது ஏறி இன்னும் கடுமையாக தன்னை தண்டித்து கொள்கிறார். ஆனால் என்ன செய்தும் அவரால் தாயிஸின் நினைவிலிருந்து மீளமுடியவில்லை. கதறி அழுகிறார். அப்போது அவருக்குள் நடக்கும் போராட்டங்கள் மதம் மனிதன் மீது திணித்திருக்கும் சுமைகளை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கடவுளின் துணையுடன் உடலுணர்ச்சியை அடக்கிவிடுவேன் என்று தன்னை வருத்தியும் முடியாமல் அமைதி இழக்கிறார் பாப்னூடியஸ் . கனவிலும், நினைவிலும் தாயிஸின் முகம் வந்து அவரை வாட்டி எடுக்கிறது. அப்போது சில நாட்களில் கடவுளிடம் சேரப்போகும் மததுறவியான அந்தோணியை சந்திக்கிறார். அப்போது மதத்துறவிக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலில் அவர் எது துறவு என்று உணர்கிறார்.

முட்டாள்தனமாக தாயிஸை சொந்தமாக்கி கொள்ளாமல், இந்த உலகில் அவளை தவிர வேறு ஏதோ இருப்பதாக கடவுளை பற்றியும், அழிவில்லாத வாழ்வு பற்றியும் கனவு கண்டது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் அவள் இல்லாத வாழ்க்கை உயிரற்றது என்று உணர்கிறார். அப்போது அவள் மரணப்படுக்கையில் இருப்பதாக உணர்ந்து அவளை காண செல்கிறார்.

அப்போது அவளை பற்றி அந்த மடத்தின் தலைவி சொல்கிறார். மிக அமைதியாக ப்ரார்த்தனை ஒன்றிலேயே தன்னை கரைத்து கொண்டு இப்போது மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறாள் என்கிறாள். அவளை சாக விட மாட்டேன் என்று அவளருகில் செல்கிறார். அவள் நன்றி சொல்கிறாள் இப்படி ஒரு அமைதியான வாழ்வை கொடுத்தற்கு. ஆனால் பாப்னூடியஸ் செத்து போகாதே என்று அழுது அரற்றுகிறார்.

தாயிஸ் நான் உன்னை ஏமாற்றிவிட்டேன், கடவுள், சுவர்க்கம் என்றெல்லாம் கிடையாது, இந்த உலக வாழ்க்கையும், அன்பையும் அன்றி உண்மையான வேறொன்று கிடையாது, வா என்னுடன் நாம் பறந்து போவோம், நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார். ஆனால் அவள் கடவுளை காண்பதாக சொல்லி இறக்கிறாள்.

இவர் வாம்பயராக மாறுவதாக கதை முடிகிறது.

இந்த நாவல் வாசித்து முடிக்கும்போது கடவுள், மதம் இரண்டும் அந்த காலத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து மனிதர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும், அதற்கு எதிரான தர்க்கங்களும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாத மனிதனின் உணர்வுகளும், பயங்களும், அவனின் மூடநம்பிக்கைகளும் உண்மையான தேடல் உள்ள மனிதர்களின் வாழ்க்கை என்று பல தரப்பட்ட தரவுகளில் செல்கிறது. வாசித்து முடிக்கும்போது மரணம், வாழ்க்கை, கடவுள் குறித்தான எண்ணங்களில் மாற்றம் நிச்சயம்.
  

No comments:

Post a Comment