குல்சாரி - நியூ
செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு – ரஷ்ய எழுத்தாளர் – சிங்கிஸ் ஐத்மாதவ். தமிழில் – ரா.
கிருஷ்ணையா.
சிங்கிஸ்சின் ”முதல் ஆசிரியர்” நாவல் நான் வாசித்த முதல் படைப்பு. அதன் பின்னர்
சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று வாசித்தேன். ரஷ்ய இலக்கியத்துக்கே உரித்தான
அக உணர்வுகளை பேசினாலும், இவரின் படைப்புகளில், ரஷ்யாவின் அந்தக்கால அரசியல் மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை காண முடியும்.
அதுவும் ரஷ்ய புரட்சிக்கு பின் கம்யூனிசம் எழுந்ததையும், கம்யூனிஸ ஆட்சி நடத்திய
மாற்றங்கள். அதன் விளைவுகள் அனைத்தையும் ஒரு சாமானியனின் பார்வையில் அதே நேரம் மிக ஆழமாக பதிந்து செல்கிறார் ஆசிரியர்.
ரஷ்ய எழுத்துகளில் ஸ்டெப்பி புல்வெளியின் வாசத்தையும், உயிரை உறைய வைக்கும்
பனியின் ஜில்லிப்பையும், வசந்தத்தையும், உணர முடியும். அநேக ரஷ்ய எழுத்தாளர்கள் மிக
அழகாக வாசகனை அவர்களின் எழுத்துகள் வாயிலாக ரஷ்யாவிற்குள் கடத்துவார்கள். சிங்கிஸ்
கூடுதலாக அப்போதைய அரசியல் நிலைக்கும் வாசகனை கடத்துகிறார்.
கதை ஆரம்பித்து சற்று நேரம் தனது இறுதி மூச்சுக்கு போராடும் குல்சாரி என்ற குதிரையின் பார்வையிலேயே
கதை பிரயாணிக்கிறது. அழகிய பந்தய குதிரையாக அதை வளர்க்கும் தானாபாய், அதை பிரிய நேருவது,
பின் அவனின் வயோதிக காலத்தில் அவனிடம் பார வண்டி இழுக்கும் குதிரையாக குல்சாரி திரும்பி
வருவது. குல்சாரி குட்டியாக இருந்ததில் இருந்து தள்ளாடி விழும் இந்த இடைப்பட்ட காலத்துக்குள்
தானாபாய் வாழ்க்கை, போருக்கு பின்னான கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபோது நடந்தவை அனைத்தும்
சமரசமின்றி தானாபாயின் நினைவுகள் வாயிலாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
கம்யூனிஸ கொள்கையில் ஈடுபாடுள்ள தானாபாய், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராகிறான்.
போரில் ஈடுபட்டு, தனது கிராமத்துக்கு திரும்பியவனை அவனது நண்பனான சோரோ குதிரை மந்தை
பார்க்கும் பொறுப்பை ஒப்படைக்கிறான். கூட்டுப்பண்ணை அமைத்து அனைத்தையும் பொதுவுடைமையாக்கி
அதில் வரும் வருமானத்தை அனைவரும் பங்கிடுவது என்று சோசலிச கொள்கைகள் முன்னிறுத்தியே
யாவும் நடந்தாலும், கொள்கைகள், கருத்துகள் தனிமனிதராக கடைப்பிடிக்கபடுவது போல ஒரு நிறுவனமாக
மாறும்போது கடைப்பிடிக்க முடியாமல் போவது. அதிகார பதவி போட்டிகள், அதற்காக நடக்கும்
ஆள் கவிழ்ப்புகள் என்று தனி மனித சுயநலம் மெல்லிய
கண்ணுக்கு தெரியாத கரையானாக வளர்ந்து நேர்மையானவர்கள் தண்டிக்கப்படுவது ஆகியவற்றின்
வாயிலாக கூறப்படும் அரசியல் அனைத்து கட்சிகளுக்குமானது. ஒரு கட்சியோ, நிறுவனமோ மிக
நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டாலும், அதில் நிர்வாகம் செய்பவர்கள் அந்த நோக்கத்தையே மடைமாற்றி அடிப்படை நோக்கத்தையே
சிதைத்துவிடுவதை சிங்கிஸ் பதிவு செய்திருக்கிறார்.
குட்டியான குல்சாரி மீது தனிப்பாச பிணைப்பு உண்டாகிறது தானாபாய்க்கு, அதை நன்கு
பழக்குகிறார். குல்சாரியால் அவருக்கு பல வெற்றிகள் கிட்டுகிறது. ஒரு விதவை காதலி கிடைக்கிறாள்.
பின்னர் அவளை பிரியவும் செய்கிறார். குதிரையின் புகழ் பரவ அதை அடைவதில் போட்டி ஏற்படுகிறது.
அதை கட்சி அலுவலுக்காக வலுக்கட்டாயமாக கூட்டி செல்கின்றனர். தன் உயிரே தன்னை விட்டு
பிரிவது போல துடித்துப்போகிறார் தானாபாய். அந்த குதிரை அதிகாரிகள் லாயத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தாலும்,
கட்டுகளை அறுத்துக்கொண்டு தனது மந்தைக்கு அடிக்கடி திரும்புகிறது. இதனால் அதன் ஆண்மை
நீக்கப்படுகிற கொடுமையும் நடக்கிறது. அதைக்கண்டு துடித்து போகிறார் தானாபாய்.
பின்னர் நண்பர் சோரோவின் வற்புறுத்தலால் ஆட்டு இடையை மேய்ப்பாளர் பொறுப்பை ஏற்கிறார்.
மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார். அவர் படும் கஷ்டங்கள் புரியாமல் அவரை பார்வையிட்டு
அவரிடம் விசாரிக்க வரும் மேலதிகாரியிடம் சண்டையிட்டதற்காக கட்சி உறுப்பினர் பதவியில்
இருந்து நீக்கப்படுகிறார். இதற்குள் நடக்கும் அரசியல் எல்லா காலத்துக்கும் எல்லா கட்சிக்கும்
பொருந்தும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக, அதனை நேசிப்பவனாக, பதவி சுகத்துக்கு ஆசைப்படாமல்
கொள்கைக்காக உயிரையே கொடுத்து உழைக்கும் அடிமட்ட தொண்டர்கள் தான் ஒரு கட்சியின் பலம்
என்றாலும், அவர்களுக்கு பரிசாக கிடைப்பதென்னவோ அவமானங்களும், தண்டனைகளும் தான். தன்
இளமை, உழைப்பு அனைத்தையும் நேசித்த கட்சிக்காக தாரை வார்த்து இறுதியில் வெறுமையை மட்டுமே
சந்திக்கும் தானாபாய்கள் மீது வாஞ்சையும் பரிதாபமும் ஒரு சேர எழுகிறது.
நண்பன் சோரோ இறக்கிறான். அவன் கடைசியாக தானாபாயை பார்க்க துடிக்க அவன் மீது
இருந்த வெறுப்பில் பார்க்காமல் தவிர்க்கும் தானாபாய், சோரோ இறந்தபின் கதறுகிறான். அதன்பின்
வெற்று வாழ்க்கை வாழ்கிறான் தானாபாய். இறுதியில்
பிழைக்க தெரியாதவன் என்று பலராலும் எள்ளி நகையாடப்பட்டு மருமகளாலும் இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறான்.
நான் இதுவரை வாசித்த சிங்கிஸ் நாவல்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத போதும், சிங்கிஸின்
கதை மாந்தர்களாக வரும் பெண்கள், மிகுந்த தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக தான்
இருக்கிறார்கள். அவ்வகையில் இதில் தானாபாய் மனைவியாக வருபவரும், காதலியாக வருபவரும்
இருவேறு மெச்சூர்ட் பெண் கதாப்பாத்திரங்கள்.
குல்சாரி வாசிக்கும்போது குல்சாரி மீது எழும் அபரிதமான வாஞ்சையும், அது இறக்கும்
போது தானாபாய்க்கு மட்டுமல்ல, நமக்குள் ஏற்படும் இனம்புரியாத விடுதலையும் கதை முழுமையும்
தாங்கி நிற்கிறது. இனி எங்கு குதிரையை பார்த்தாலும் குல்சாரி மனக்கண்ணில் வந்து போகும்,
விலங்கு பண்ணை நாவலில் வரும் பாக்சர் என்னும் குதிரை நீண்ட நாட்கள் என் நினைவை ஆக்ரமித்திருந்தது.
அந்த வரிசையில் இப்போது குல்சாரியும் சேர்ந்து கொண்டது.
No comments:
Post a Comment