Tuesday, 13 June 2017

ஆ. மாதவனின் - சிறுகதை தொகுப்புகள்

கோபி கிருஷ்ணனின் படைப்புகளுக்கு பிறகு , தற்போது ஆ. மாதவனின் சிறுகதை தொகுப்பை முழுவதுமாக வாசித்தேன். ஒரே மூச்சில் எழுத்தாளரின் படைப்புகளை வாசிக்கும்போது, அந்த எழுத்து மிகவும் வசீகரமானதாக இருந்துவிட்டால், வாசகனுக்கு திகட்டாத விருந்து தான். அந்த வகையில் மாதவனின் தொகுப்பை கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக மெல்ல மெல்ல ரசித்து உள்வாங்கி திளைத்தேன்.. வாசித்து முடித்த பின் பத்மநாப கோயில் குளத்தையும், அந்த சாலைக்கடையையும் பார்க்க மனம் ஏக்கங் கொள்கிறது.

நாவலில் எப்போதும் எழுத்தாளர்களுக்கான ஸ்பேஸ் நிறைய இருக்கும். கதைக்களத்தை பற்றிய விவரணைகளுக்கு நிறைய இடமிருக்கும். ஒரு கதாபாத்திரத்துடன் வாசகனை ஒன்றச்செய்ய அகச்சிக்கல்களையும், புறசிக்கல்களையும் விஸ்தாரமாக ஆலாபனை செய்யலாம், தத்துவ விசாரங்களை அடுக்கலாம். இன்னும் இன்னும் நிறைய வெளிகள் இருக்கும்.
ஆனால் சிறுகதைகளுக்குள் இவ்வளவையும் இதன் வீரியம் குறையாமல் கொண்டு வரமுடியுமா என்றால் நான் வாசித்ததில் வெகு சொற்ப ஆசிரியர்களே அதை நடத்தியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்த சிறுகதை தொகுப்பில் ஆ. மாதவன் வெகுவாக ஈர்க்கிறார் எழுத்து நடையால்.

மாதவனின் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் போது அந்த மலையாள வட்டார தமிழ் வழக்கு நெஞ்சை அள்ளுகிறது. கதை தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலுக்கு அருகில் உள்ள சாலைக்கடை என்ற ஒரு தெருவையும், அங்குள்ள வணிகர்கள், அந்த சாலைக்கடையில் உலவும் எளிய மனிதர்கள், அவர்கள் வாழ்வியல் முறை, அவர்களின் சிக்கல்கள், இதனூடாக அப்போதைய காலகட்டம் பற்றியே பேசினாலும், அந்த காலகட்டம் வாசகன் கண் முன் விரிகிறது. அந்த சாலைக்கடை தெருவில் வசிப்பவர்களை சுற்றியே கதைகள் நீளுகிறது. துளி கூட சலிப்பு தட்டாமல்.

மாதவன் அழகியலாக வார்த்தைகளை மலையாளம் கலந்த தமிழில் கோர்த்திருக்கிறார் என்றாலும், எந்த வார்த்தையும் துருத்திக்கொண்டு இல்லாமல் கதை வழக்கோடு இயைந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலாக கதை கதையாக வாசிக்க சாலைக்கடை மனிதர்களுடன் இரண்டற கலந்து உலவி வந்தது போன்ற உணர்வு. சிறுகதைகளுக்குள் வாசகனை இந்த அளவு கடத்த முடியுமா என்ற பிரமிப்பு வாசித்து முடித்த பின்னும் அகலவில்லை. மனிதர்கள் மட்டுமன்றி, அந்த தெருவில் சுற்றி திரிந்த நாயை பாச்சியாக்கி, பசுவை கோமதியாக்கி, பூனைக்கென்று இரண்டு கதைகளும் ஒதுக்கி, அந்த வாயில்லா ஜீவன்களின் உணர்வுகளில் ஒன்றச்செய்து, வாசிக்கும்போதே அவைகளுடனும் நமக்கு ஒரு சுகந்த நட்பு விரிகிறது.

மூட சொர்க்கம் கதையில் மிக நுட்பமாக பாலியல் அக சிக்கல்கள் ஏற்படுத்தும் புறசிக்கல்களை பதியும் ஆசிரியர். நாயனம் கதையில் இறந்து போனவர் தனது சவ ஊர்வலத்திற்கு நாயனம் வேண்டும் என்று கூறியிருக்க, அவரின் அந்திம ஆசையை நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் படும் அவஸ்தையும், ஒருவழியாக நாயனத்துக்கு ஏற்பாடு செய்து வர நடக்கும் கூத்தும் அந்த கதையில் தெறிக்கும் நகைச்சுவையும் அந்த கதை முடிந்திருக்கும் விதமும் தெளிவு.

காளை என்ற கதையில் வரும் பாப்பி கதாபாத்திரம் அந்த கதையை ஆசிரியர் நகர்த்தியிருக்கும் விதம் , ஒரு முதிர் கன்னி(!), அதே வீட்டில் அப்பாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக சினிமா சென்று வரும் அவள் தங்கையும். அவர்கள் வீட்டுக்கு வரும் குஞ்ஞி என்கிற வேலை செய்கிற பெண் என்று இந்த மூன்று பெண்களை வைத்து நகரும் கதை. மிக பவ்யமாக வீட்டோடு இருக்கும் பெண் சட்டென்று ஏதோ ஒரு தருணத்தில் சோரம் போவதை, அதை கூட கனவுப்படலம் போல அழகாக முகச்சுளிப்பில்லாமல் எழுதியிருப்பார்.

பண்பாடு என்ற கதையில் ஒரு அழுகி சீழ் பிடித்த நோயாளி பிச்சைக்காரியை கூட விட்டுவைக்காத ஆணின் பண்பாட்டை படிக்கும்போது கொஞ்சம் திக்கென்று தான் இருக்கிறது.

ஒரு விபச்சார பெண்ணை கூட்டி வந்து மூன்று நண்பர்கள் விடிய விடிய புணர்ந்து, அவள் இறந்தவிட குப்பை குழிக்கு எருவாக எடுத்து செல்லும் பட்டாணி அதனை ஒருவருக்கும் தெரியாமல் மூடி மறைத்தாலும், பட்டாணியின் மரணமும், அதற்கு நிகராக அவன் அனுபவிக்கும் மனவேதனைகளும், இளம் ரத்தத்தில் எந்த அநியாயத்தையும் செய்ய துணியும் ஒருவனின் வாழ்வு அந்திமத்தில் எவ்வாறாக இருக்கும் என்பதை எட்டாவது நாள் கதையில் சொல்லியிருக்கிறார். பாவத்தின் சம்பளம் கதை பாவத்துக்கு பரிகாரம் தேடுகிறது என்றால் , தூக்கம் வரவில்லை கதை பேசும் அறமோ தாயையே விஷம் வைத்து கொல்வதற்கு பின் இருக்கும் நியாயத்தை வாசகனின் பார்வைக்கு முன் வைக்கிறது.

விரும்பியே அந்நிய ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பெண்ணிலிருந்து, காசுக்காக உடலை விற்கும் பெண், ஆனைசந்தம் கதையில் மலையாளம் பேசும் ஒருவனை மணந்து கொள்ளும் தமிழ் பிராமின பெண் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களின் காதல் வழியாக அப்போதைய அரசியல் மற்றும் சமூக நிலை, பொருந்துவது போல தோற்றம் அளித்த பொருந்தாமல் போகும் காதல் திருமணங்களின் முடிவு பற்றி நச்சென சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

மிக அடக்க ஒடுக்கமாக அனைவராலும் பார்க்கப்படும் பெண் சட்டென ஒரு நாளில் வேறாக மாறுவதையும், அதை ஜீரணிக்க முடியாத சமூகத்தை விஸ்வரூபம் கதை மூலமும் வெளிப்படுத்தியிருக்கும் மாதவன், பெண் கதாபாத்திரங்கள் வழியாக விவரித்திருக்கும் உலகம் அந்த காலக்கட்ட பெண்களின் நிலையை பேசுகிறது.

நாற்றம் கதையிலும், நாலு மணி கதையிலும் மறைமுகமாக அகசிக்கலை பேசியிருக்கிறார். இந்திய குணம் என்ற கதையில் நாகரீக உடையணிந்த ஒருவர் செய்யும் சில செயல்களால் மனம் குமுறும் ஒருவர் அதை எதிர்கொள்ள அதைவிட கீழ்தரமாக ஒரு செயலை செய்துவிட்டு சுய அலசலில் ஈடுபடும் மனிதனை பேசுகிறது என்றால், இலக்கியம் பேசி என்ற கதை ஏமாற்றுபவர்களின் சாமர்த்தியம் எந்த காலத்திலும் தொடர்ந்து வருவதை பதிவு செய்கிறது.

அந்த காலகட்டத்தில் யானைக்கால் வியாதி விரவி இருந்ததை மாதவன் தனது சில கதாபாத்திரங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

தமிழும், மலையாளமும் கலந்த ஒரு கலந்து கட்டிய பண்பாட்டு கலாச்சாரக்கூறை மாதவனின் எழுத்துலகம் பேசுகிறது. அதன் அழகியல் நம்மையும் அதன் ஆழத்துக்குள் இழுத்து செல்கிறது. கதைக்காக மாதவன் தேர்ந்தெடுத்திருக்கும் மாந்தர்ககள் நம் அன்றாட வாழ்வில் வேறு வேறு ரூபத்தில் காணக்கிடைக்கிறவர்கள் தான். பெரும்பாலும் அவர்களை வாழ்வில் கடந்து தான் வந்திருப்போம், ஆனால் அவர்களை எந்தளவு கூர்ந்து உள்வாங்கி இருக்கிறார் ஆசிரியர் எனும்போது பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

சில கதைகளில் இலக்கிய வர்ணணைகள், உவமைகள் அதிகமிருப்பது போல, கொஞ்சம் மரபின் நீட்சியோ என்று தோன்றினாலும் சில உவமைகளை நான் வெகுவாக ரசித்தேன். அதில் நீரின் மேல் பாசியை விலக்கிவிட்டு தலைமுழுக இறங்குவது போல , கள்ளத்தனம் தீயின்மேல தவமாக , என்ற வரியை எடுத்தாண்டிருக்கும் இடம், கதையையும் மீறி வார்த்தையின் அழகியல் இறுக பற்றிக்கொள்கிறது. இது போல பல இடங்களில் மாதவன் எடுத்தாளும் உவமைகள் ஆங்காங்கு அள்ளித்தெளித்தது போல விரவி இருப்பதால், சில கதைகளில் எட்டிப்பார்க்கும் அயர்ச்சியை சட் சட்டென நீர்க்க செய்கிறது.

ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக புதுமைப்பித்தனை சொல்வார்கள், ஆனால் மாதவன் தமிழ் இலக்கிய உலகில், சிறுகதை வடிவமாக கதையை வார்த்தெடுத்திருக்கும் விதத்தில் தவிர்க்கவே முடியாத எழுத்தாளர். இவரின் சிறுகதை தொகுப்பை வாசித்தவர்கள் அவரின் கதையை, எளிதில் கடக்க முடியாத அவரின் கதை மாந்தர்களை, சாலைதெருவை, சிறுகதையில் அவர் புகுத்தியிருக்கும் அநாயசமான தனித்துவமான எழுத்து நடையை எளிதில் கடக்க முடியாது. வாசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.

மனசை அள்ளும் மாதவனின் மலையாளத்தமிழை ருசிக்க ஒரு முறையாவது மாதவனின் எழுத்தில் மூழ்கி எழவேண்டும்.


No comments:

Post a Comment