அ.முத்துலிங்கத்தின் “பிள்ளைகடத்தல்காரன்”
சிறுகதை தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு. இருபது
சிறுகதைகள் இதில் இலையுதிர் காலம் என்ற ஒரு சிறுகதை மட்டும் வேறு தொகுப்பில் படித்திருக்கிறேன்.
மற்றவை எல்லாம் முதல் முறை வாசிப்பு தான். அவரது எழுத்தில் எனக்கு பிடித்த விஷயம் உலகில்
பல்வேறு இடங்களுக்கு அவர் பயணம் செய்த அனுபவங்களை, மிக எளிமையாகவும், அங்கத சுவை குறையாமலும்
வாசகனுக்கு தருபவர். அதனாலேயே இவரது எழுத்துகள் எனக்கு பிடிக்கும். இந்த சிறுகதை தொகுப்பும் நிறைவையே தந்தது.
இயக்கம் பற்றியும், ஈழ மக்களின் துயர்
பற்றியும் இவர் எழுத்துகள் பேசவில்லை என்று இவர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் அந்த
இயக்கங்கள் பற்றிய சிறு சிறு ரசனையான கூறுகளை சிறுகதையாக முற்றிலும் வேறு ஒரு கோணத்தில்
இவர் எழுத்தில் உணர முடியும். அதுபோல இயல்பான சம்பவங்களை நுணுக்கமாக கவனித்து அதை கதையாக
வடிக்கும் இவர் அந்த கதையை விவரிக்கும் போது, ஊடாக ஓடும் சில வரிகளில் தெறிக்கும் இலக்கிய
சுவை அநாயசமானது. இந்த தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளில் பலவும் நாம்
அன்றாடம் கடக்கும் சம்பவங்கள் தான், உப்பு சப்பில்லாத அதிக சுவராஸ்யமற்ற சம்பவங்களை
கூட இவ்வளவு சுவையாக சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
அதுபோல நம் வாழ்க்கையில் சந்திக்கவே
முடியாத தருணங்கள் பற்றியும், அதை சாதாரணமாக கடந்து வந்ததையும் அலட்டல் இல்லாமல் அவர்
முன்வைக்கும் விதமும் பிடிக்கும்.
பிழிய பிழிய அழவைக்கும் சோகம் இவர்
கதைகளில் இருக்காது, ஆனால் அங்கத சுவையின் ஊடாக போகிற போக்கில் ஒரு சுமையை நம் இதயத்தில்
வைத்துவிட்டு போகிற லாவகம் இவர் எழுத்தில் நான் வியப்பது. கடினமான இலக்கியத்திற்குள்
தலை கொடுக்கும் முன் ஒரு நல்ல ஸ்டார்ட் அப்பாக நான் முத்துலிங்கத்தை கையில் எடுப்பேன்.
நான் பார்த்தே யிராத கனடாவின் குளிர் பிரதேசங்களுக்கும், பாகிஸ்தான் மக்களின் வீடுகளுக்கும்,
ஆப்ரிக்க மக்களின் வெள்ளை மனசுக்குள்ளும், சென்று வந்த ஒரு புத்துணர்வு கிடைக்கும்.
அதே போல இலங்கை மக்களின் பழக்க வழக்கங்களும், புலம் பெயர்ந்து பல இடங்களுக்கு சென்று
விட்ட போதும் தொடரும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் , அனைத்தையும் விட அந்த அழகு இலங்கை தமிழையும் நுகரும் போது கிடைக்கும்
புத்துணர்ச்சி அலாதியானது.
அந்த வகையில் இந்த கதை தொகுப்பில் தொகுக்கப்பட்டிருக்கும்,
உன்னுடைய கால அவகாசம் இப்போது தொடங்குகிறது (திகில் கதை ஆசிரியருக்கு கை கூடவில்லை ) கதை தவிர
மற்றவை அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்தவை.
Hello Madam,
ReplyDeleteCould you please advice how to follow your blog?
நேற்று இந்த புத்தகத்தை நான் படித்து முடித்தேன் ...பெரும்பான்மை யானவை மிக சிறப்பாக உள்ளது ...உங்கள் மதிப்பீடும் மிக அருமையாக விவரிக்கிறது .அருமைங்க
ReplyDeleteஅருமை. 10 கதைகளை முடித்துவிட்டேன்.
ReplyDelete