Saturday, 30 June 2018

ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேவி



ஏழு தலைமுறைகள் அலெக்ஸ் ஹேவி எழுதிய மிகப்பெரிய நாவலை தமிழில் சுருக்கி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சினுவ அச்சிபிக்கு பிறகு நான் வாசிக்கும் மற்றொரு ஆப்ரிக்க எழுத்தாளரின் கதை. இல்லை ஆப்ரிக்க எழுத்தாளர் இல்லை, ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளர். மிக சுதந்திரமாக இனங்களாக காட்டில் சுற்றித்திரிந்து, கிராம வாழ்க்கையை அனுபவித்து பால்யத்தை தன் குடும்பம், தன் சார்ந்த மக்களுடன் கொண்டாடிய ஒரு 16 வயது சிறுவன் வெள்ளையர்களுக்கு அடிமை வேலை செய்வதற்காக கடத்தி வரப்படுகிறான்.

குண்டட்டா என்னும் அந்த சிறுவன் பிறப்பிலிருந்து அவன் கடத்தப்படும் வரை வாழும் வாழ்க்கையும், அதன் ஊடாக ஆப்ரிக்க கிராம மக்களின் கலாச்சாரம், பண்பாடு, அந்த கால கட்டத்தில் அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களின் பண்டிகைகள், ஆட்டம் பாட்டம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். வரலாறா புனைவா என்று பிரித்து பார்க்க முடியாதளவு , கதையின் ஆரம்பத்திலேயே குண்ட்டாவுடன் நம்மை இருத்தி ஆணி அடித்து விடுகிறார் ஆசிரியர்.

காலை ஒரு நூறு பக்கம் வரை வாசித்து பின் அன்றாட வேலையில் மூழ்கிவிட இரவு உணவிற்கு பிறகு கையில் எடுத்த புத்தகத்தை இன்று காலையில் முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.

அடிமைகளின் வலியை பேசுகிற நாவலை புனைவு என்று ஒற்றை வர்த்தையில் புறம் தள்ளி விட முடியாது. தனது வேரை தேடி அலையும் அலெக்ஸ் ஹேவி, அதற்காக  மேற்கொண்ட பயணமும், இறுதியில் ஏழு தலைமுறைகளுக்கு பிறகு தனது வேரையும், தனது மக்களையும் கண்டு அடையும் பரவசம், இந்த ஏழு தலைமுறைகள் வரை அந்த வேரை விடாமல் கொண்டு சேர்த்த நீக்ரோ பெண்கள் என்று கதை சொல்லப்பட்டிருக்கும் போக்கில்  ஆப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்கப்பட்ட அடிமைகளின் வாழ்வியலை முற்றிலுமாக பதிவு செய்துள்ளார். 

கருப்பர்களில் சிலரே தங்கள் இனத்தவரை காட்டி கொடுப்பதுடன், அவர்களை அடிமைகளாக கடத்தி செல்லவும் துணை புரிகின்றனர். காட்டிற்கு தனித்து வரும் திடகாத்திரமான ஆண், பெண்களை கடத்தி படகின் மூலம் கப்பல் கொண்டு சென்று சங்கிலிகளால் பிணைத்து மொத்தமாக அமெரிக்கா கூட்டி சென்று ஏலத்தில் விற்கின்றனர். கப்பலில் கறுப்பர்கள் படும் நரக வேதனைகளை வாசிக்க இது கதையல்ல உண்மை என்பது முகத்திலறையும் .. அந்த நாவலில் வரும் வரி, மனிதர்களை விட மோசமான மிருகம் கிடையாது. ஆம் என்பதை காலம் இன்றளவும் பதிவு செய்து கொண்டு தான் உள்ளது.

அடிமைகளாக வரும் பெண்களின் நிலை ஆண்களின் நிலைக்கு சற்றும் சளைத்ததல்ல.. அவர்கள் உழைப்பை சுரண்டி நகரங்களும், பண்ணைகளும் உருவாகின்றன.   ஆனால் அவர்களின் வாழ்க்கையில்  சந்திக்கும் அவமானங்கள், வலிகள்,  நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவை. கிட்டத்தட்ட ஐந்தாறு தலைமுறைகளில் பலரின் குடும்ப வேர்கள் முற்றிலும் அழிந்து போய்விட, அலெக்ஸ் ஹேவி போன்ற  ஒரு சிலர் சிரமப்பட்டு தங்கள் வேரை கண்டைந்துள்ளனர். இதற்கு காரணம் அவ்வளவு வலிகளிலும் ஒரு சிலர் தங்கள் வேரை, வரலாறை, அடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டே செல்வதால் தான்.. செவி வழி கதைகளாக சிறுவயதிலேயே ஆழமாக பதிக்கப்படுகிறது. 

இந்த நாவலின் மூலம் துயரத்தையே சுமந்து கிட்டத்தட்ட ஏழு தலைமுறைகள் கடந்து அவர்கள் சுவாசிக்கும் சுதந்திரம் என்னும் வார்த்தைக்கு பின் இருக்கும் வலிகளை உணர முடியும். உலகுக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்ததாக கூறும் வெள்ளையர்களின் அநாகரீகமான, மனித தன்மையற்ற, மிருகத்தை விட கொடூரமான மறுபக்கத்தை தோலுரித்து காட்டியுள்ளது இந்நாவல்.

இந்த நிறவெறிக்கு சற்றும் குறைவில்லாத ஒன்று தான் நமது நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அரங்கேறிய, அரங்கேறி வரும் வன்முறைகள்.. இந்த அநாகரீக செயலை செய்து கொண்டிருக்கும், அல்லது செய்பவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் அனைவரும் வரலாற்றின் பக்கங்களில் மிக மோசமான முன்னுதாரணங்களாக  இருக்க போவது தவிர்க்கமுடியாதது.




3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆங்கில மூலம் இன்னும் பிரமாண்டமாக இருக்கும், இந்த விமர்சனத்தை வாசித்த பிறகு இந்த நாவலை வாசிக்கவே கொஞ்சம் பயமாக உள்ளது...

    ReplyDelete