ஒரு முறை ட்ராவல் லிவ்விங் சேனலில்
துருக்கி மற்றும் இஸ்தான்புல் பற்றிய ஒரு நிகழ்ச்சி பார்க்க பனி தோய்ந்த அந்த நகரத்தையும்,
அங்குள்ள ஆண் பெண்களையும் பார்த்து ஏதோ ஒரு அதீத பரவச உணர்வு தொற்றிக்கொண்டது. வாழ்க்கையில்
ஒரு முறையாவது இஸ்தான்புல் சென்று வர வேண்டுமென்ற ஆசையும். எதனால் அந்த நகரம் ஈர்த்தது
என்று இதுவரை தெரியவில்லை.
துருக்கியின் மீதான இந்த என் காதலில்
தான் துருக்கிய எழுத்தாளரான ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலை வாங்கினேன்.
ஆனால் நாவல் வாசித்த சில அத்தியாயங்களிலேயே புரிந்து கொள்ள கடினமாகவும், எழுத்து நடையும் விவரணைகளும் சலிப்பூட்டுவதாக இருந்ததால் ஒரிரு அத்தியாயங்களிலேயே
புத்தகத்தை தூர வைத்துவிட்டேன். அப்போது என்
மகன் கோவை புத்தக கண்காட்சியில் இருந்து எனக்காக
ஓரான் பாமுக்கின் பனி நாவலை வாங்கி வந்தான். என் பெயர் சிவப்பு கொடுத்த அயர்ச்சியால்
பனியை தொடாமலேயே ஓராண்டுக்கு மேலாக வைத்திருந்தேன்.
பதினைந்து இருபது நாட்களுக்கு முன் தான் வாசிக்க எடுத்தேன்.
எனக்கு தெரிந்து நான் வாசிக்க அதிக காலம் எடுத்துக்கொண்ட புத்தகம் பனி தான். துருக்கிய அரசியல் அதுவும் இந்த நூற்றாண்டு அரசியலை
பேசுகிறது. ஐரோப்பாவிலும் இல்லாமல் கீழை நாடுகளிலும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் இருக்கும் துருக்கியின் வரலாறை தெரிந்து கொண்டால்
தான் இந்த கதையில் நுழைய முடியும். அதற்காக இந்த கதை வாசிக்கும்போதே இடையிடையே துருக்கிய
வரலாற்றையும் கொஞ்சம் தேடி தேடி வாசிக்க வேண்டியதாகியது. அதனாலும் நாவல் வாசித்து முடிக்க
தாமதமாகியது. நாவலுக்குள் செல்வோம்.
மிகவும் பழமையான கலாச்சார மதிப்பீடுகளை கொண்ட துருக்கியின் கார்ஸ் என்னும் நகரத்தில்
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மக்களின் மீது மதத்தை திணிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும்,
அவற்றை சுத்தமாக அழித்தொழிக்க நினைக்கும் மதசார்பற்றவர்களுக்கும் இடையே நடக்கும் அரசியலில்
கார்ஸ் நகர மக்கள், மாணவர்கள், கலைஞர்கள், ராணுவ வீரர்கள், மதத்தலைவர்கள், ஒருபுறம்
நாத்திகம், மறுபுறம் அடிப்படைவாதம் இரண்டுக்குமிடையே எந்தப்பக்கமும் போக முடியாமல்
தவிக்கும் நடுநிலையாளர்கள் என அரசியலையும் அத்துடன் இபெக், கா, கடிஃபே, நீலம், பாசில்
இவர்கள் வழியாக காதலையும் நாவலில் விவரித்திருக்கிறார்,
பனியின் நாயகன் “கா” . கவிஞனான இவன், ஜெர்மனியின் ஃப்ராங்ஃபட் நகரில் வசித்து
வருகிறான். தனது குழந்தை பருவத்தை கழித்த கார்ஸ்க்கு ஒரு உறை பனி காலத்தில் வருகிறான்.
நகரத்தில் பல மாற்றங்களை பார்க்கிறான், அந்த மாற்றங்கள் ஊடாக கா சிறுவனாக இருந்ததற்கும்
இப்போதிருக்கும் காலத்திற்குள்ளான அரசியல் மாற்றங்களை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
கார்ஸில் பெண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போவது குறித்து ஆராய்வதற்காக
புகழ்பெற்ற பத்திரிக்கையின் சார்ப்பாக வந்திருப்பதாக கூறினாலும் உண்மையில் அவன் காதலிக்கும்
ஐபெக் என்ற அழகியை பார்க்க வருகிறான். அவளுக்கு திருமணமாகி இருந்தாலும், கணவரை பிரிந்து
வாழ்ந்து வருவது தெரிய வந்ததால், அவளின் அன்பை பெற்று எப்படியும் அவளை தன்னோடு ஜெர்மனி
கூட்டி செல்ல வேண்டும் என்ற எண்ண ஓட்டமே அவனை விடாப்பிடியாக துரத்தி வந்திருந்தது அந்த
நகரத்துக்கு. அவன் வரும்போது பனிப்புயல் மற்றும் கடுமையான பனிபொழிவு காரணமாக அந்த நகரம்
பிற நகரங்களில் இருந்து முற்றிலும் துண்டிக்கபட்டுவிடுகிறது. இதனால் அந்த நகரத்தில்
நடப்பது துருக்கி ஊடகங்களுக்கு தெரியாமல் போகிறது.
இந்நிலையில் கார்ஸ் நகரத்தில் அரசு தங்கள் நாடு மதச்சார்பற்ற நாடு என்று காட்ட
வேண்டும் என்பதற்காக பெண்கள் அணிந்துள்ள முக்காடுகளை விலக்க சொல்கிறது. பள்ளிகள் கல்லூரிகளில்
இருந்து முக்காடிடும் பெண்கள் நீக்கப்படுவார்கள் என்று சட்டம் இயற்றுகிறது. ஆனால் தலைமுடி
மூடாமல் இருப்பவர்கள் அல்லாவை மதிக்காதவர்கள், விபச்சாரிகள் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள்
திணித்து வைத்துள்ளதில் இருந்து வெளியே வரமுடியாமல் பெண்கள் குழப்பமடைந்து தவித்து
மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள் என்பது”கா” விற்கு தெரிய வருகிறது.
இபெக்கின் தந்தை நடத்தும் ஹோட்டலில் தங்கும் “கா” தனது காதலியான இபெக்கை சந்திக்கிறான்.
முதல் சந்திப்பு காபி ஷாப்பில் நடக்க, அப்போது அதே ஷாப்பில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால்
கல்வியக இயக்குநர் சுடப்படுகிறார். அந்த கொலையில் சாட்சியாக ”கா” சேர்க்கப்படுகிறான்.
இதனைத்தொடர்ந்து அரசு தரப்பில் மத்தியஸ்தராகவும், உளவாளியாகவும் ஆகிறான். அதே போல இஸ்லாமிஸ்ட்
அடிப்படை வாதிகளும் இவனை மத்தியஸ்தராக ஆக்குகிறார்கள். இதற்கிடையே இபெக்கின் காதலையும்
பெறுகிறான். காதல், கார்ஸ் நகரத்தின் பனிப்பொழிவு, கார்ஸ் நகரை சுற்றி வரும் அவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கம்,
கிட்டத்தட்ட அவன் சில வருடங்கள் மறந்தே போயிருந்த கவிதை அவனுக்குள் ஊற்றெடுக்க தொடங்குகிறது.
அவன் முதல் கவிதையை வாசிக்கும் நேஷனல் திரையரங்கில் புரட்சி வெடிக்கிறது. இஸ்லாமிஸ்ட்
அடிப்படை வாதிகளையும், சமயக்கல்லூரி மாணவர்களில் சிலரையும் சுட்டு கொல்கிறது. பலரை
சிறை பிடிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நீளும் கதையில் இபெக்கின் காதல், அவள் தங்கை கடிஃபேக்கு
இஸ்லாமிஸ்ட் அடிப்படைவாதி நீலத்துடனான உறவு, கடிஃபேவை காதலிக்கும் நெஸிப் துப்பாக்கி
சூட்டில் இறக்க, அவன் நண்பனான பாசிலுக்கு கடிஃபேவுடன் ஏற்படும் காதல் என பலதரப்பட்ட
காதலை இந்த அரசியல் பின்னணிக்கிடையே அழகாக பின்னி பிணைத்திருக்கிறார் ஆசிரியர். இபெக்
“கா” வின் காதல் உணர்வுகளை ஆசிரியர் விவரித்திருக்கும் விதத்தில் இபெக் மீது நமக்கே
காதல் பிறக்கிறது.
”கா” ஒரு சிலர் நாத்திகன் என நம்ப தொடங்க, ( அவனே அப்படி நம்புகிறான் முதலில்
) ஆனால் கடைசி வரை நாத்திகம், ஆத்திகம் இரண்டிற்குமிடையே அல்லாடும் மனமுடையவனாக தான்
இருக்கிறான்.இதே ஊசலாட்டம் இபெக்குடனான காதலிலும் அவனுக்கு வருகிறது. அவனது மனக்குழப்பங்கள்
மூலம் வாசகனின் சில அகதரிசன குழப்பங்களுக்கும் விடை கிடைப்பது நாவலுடன் நம்மை ஒன்ற
செய்கிறது.
கடைசியாக ஒரு நேரடி ஒலிபரப்பு நாடகத்தில் கடிஃபே தனது முக்காடை நீக்கினால்,
ராணுவத்திடம் சிக்கியிருக்கும் நீலத்தை விடுவிப்பதாக “கா” மூலம் தூது அனுப்பபடுகிறது.
வெளியில் வருவதற்காக அதற்கு ஒப்புக்கொள்ளும் நீலம், வெளியில் வந்த பின் “கா” வை வரவழைத்து
கடிஃபே தனது முக்காடை நீக்க கூடாது என்று ஒரு கடிதம் எழுதி இதை கடிஃபேவிடம் தருமாறு
அனுப்புகிறான். (அப்போது அவனை மடக்கும் போலீஸ் தான் நீலத்துக்கும் இபெக்குமான உறவை சொல்கிறது.)
இருபுறமும் மத்தியஸ்தராக இருக்கும் கா கடைசியில் இஸ்லாமிய மத அடிப்படைவாதியான
நீலம் தனது காதலியான இபெக்கின் முன்னால் காதலன் என வரும்போது உடைந்து போகிறான். ஆனால்
இபெக் மீதான தன் காதலை இழக்க விரும்பாமல், அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல் அவளிடமே
அழுது அடைக்கலமாகிறான். அவள் நீலத்தை காதலித்தது உண்மை என்றும் அதற்கு தன் கணவரே காரணம்
என்றும், இப்போது அவனுடன் தொடர்பில் இல்லை என்றும் எவ்வளவோ எடுத்து கூறுகிறாள் ஆனாலும்
நம்பியும், நம்ப மறுத்தும் பல்வேறு உணர்வு சுமைகளுக்குள் “கா” உழலுகிறான்.
இபெக்கிடம் கடைசியாக பேசிவிட்டு நீ ஜெர்மனிக்கு செல்ல காத்திரு, பாதைகள் இன்று
இரவு திறக்கப்படும் முதல் ரயிலில் நாம் சென்றுவிட வேண்டும் என்று கூறிவிட்டு இதை தொடர்ந்து
கடிஃபே வை சந்திக்கிறான், அவனையறியாமல் நீலத்தின் மீதான பொறாமை வலுக்கிறது. இதனிடையே நீலம் ராணுவத்தாரால் சுட்டு கொல்லப்படுகிறான்.
அவன் இருக்கும் இடம் “கா” ஒருவனுக்கே தெரியும் என்பதால் நீலம் மீதான பொறாமையால் தான்
அவனை காட்டி கொடுத்துவிட்டான் என்று இபெக் அவனுடன் ஜெர்மன் வர மறுத்திவிட்டு, தனது
தங்கை கடிஃபேவிடம் முக்காடை நீக்கி இஸ்லாமிஸ்டுகளின் வெறுப்புக்கு ஆளாக வேண்டாம் என்று
சொல்ல ஓடுகிறாள். ஆனால் நீலம் இறந்ததை கேட்ட பின்பும், நாடகத்தில் கடிஃப முக்காடை நீக்குகிறாள், ஆனால் புரட்சிக்கு
காரணமான நாடக நடிகனான சுனய்யை சுட்டு கொன்ற வழக்கில் சிறை செல்கிறாள்.
ப்ராங்க்பெட் செல்லும் “கா” நான்கு வருடங்கள் கழித்து சுட்டு கொல்லப்படுகிறான்.
அதை தொடர்ந்து நாவலின் ஆசிரியர் கா வின் நண்பனாக அவனது கவிதை நூலை தேடி அலைகிறார்.
கா வின் விவரணை வழியாக அனைத்தையும் பார்க்கும் அவர் அதன் தொடர்ச்சியாக கார்ஸ்க்கும்
வருகிறார். இபெக்கின் மீது அவரும் காதல் வசப்படுகிறார். ஆனால் இபெக் காதலை மறுத்து
கூறும் வார்த்தைகள் பெண்ணின் ஆழ்மனத்தில் புதையுண்டு கிடக்கும் வரிகள்.
இதில் இபெக், கடிஃபே பேசும் பெண்கள் உலகம் தனித்துவமானது. ஆசிரியர் இவர்களுக்கிடையயான
உறவை, உணர்வுகளை, பொறாமைகளை, அதை தாண்டிய பாசத்தை மிக மிக நுணுக்கமாக விவரித்திருக்கிறார்.
அதேபோல தனது காதலி வேறு ஒருவனின் மனைவியாக இருந்து அவனுடன் வாழப்பிடிக்காமல் திரும்பியிருப்பதை
ஏற்றுக்கொளும் ”கா”, இபெக் வேறு ஒருவனின் காதலி என்பதை ஏற்கமுடியாமல் நொறுங்கும்
இடத்தில் ஆண் தன்மையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அரசியலும், காதலும், அடிப்படை மதவாதமும் அது மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கததையும்
ஒரு சேர ஒரு நாவலில் விவரித்திருக்கும் விதத்தில் ஓரான் பாமுக் தனித்து தெரிகிறார்.
No comments:
Post a Comment