Wednesday, 4 March 2015

பா. சிங்காரம் - கடலுக்கு அப்பால்

பா. சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி இரண்டு நூல்களும் எனது பார்வையில். முதலில் “ கடலுக்கு அப்பால்” நாவல் பற்றி சொல்லி விடுகிறேன்.

இந்த இரு நாவல்களும் ஒரு குறிப்பிட்ட கால அளவை பதிவு செய்யும் வரலாற்று புனைவு என்று கூட சொல்லலாம். இரண்டு நாவல்களும் தனித்தனியாக படிப்பதை விட ஒன்றாக படிக்கும்போது இன்னும் கொஞ்சம் எளிதில் புரிபடலாம். எழுத்து நடை ஆயாசமாக தான் இருந்தது ஆரம்பத்தில் வாசிக்க. அந்த கால கட்டத்துக்குள் நுழைய இருக்கும் சிரமம் தான். இரண்டாம் உலக போர் பற்றிய புத்தகங்கள் வாசித்தவர்க்ளால் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் போர் தொடர்புடைய நிகழ்வுகளுக்குள் எளிதில் புகுந்து விட முடியும். நான் மிகுந்த சிரமத்த்துடன் தான் வாசித்தேன். அப்படி சிரமத்துடனாவது வாசிக்க தூண்டியது வித்தியாசமான எழுத்து நடை, கதைக்களம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், அந்த மாந்தர்கள் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே.

நேதாஜி படையில் பணியாற்றிய இளைஞர்கள், இரண்டாம் உலக போரில் ஜப்பானின் வீழ்ச்சி அதனால் ஏற்பட்ட பின்னடைவால் நேதாஜி ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் இளைஞர்களின் நிலை தான் கதையின் பின் புலம் இரண்டு கதைகளிலுமே.

கடலுக்கு அப்பாலில் இரண்டாம் உலக போர் நெருக்கடிகளிலும் செல்லையாவின் மனதில் மலரும் காதலை பற்றி அழகாக சொல்கிறது அந்த கால சூழ்நிலையில் அவனுக்கு ஏற்பட்ட காதலும் அது நிறைவேறாமல் போவதன் காரணமும் அக்கால மனித வாழ்வை மனிதர்களின் மனநிலையை விரிவாக கூறுகிறது.. பெண்ணின் தகப்பனாரான முதலாளியான வானாயீனா செல்லையாவை தன் மருமகனாக ஆக்கி கொள்ளலாம் என்ற நினைப்புடன் அவனை தன்னுடன் பினாங்குக்கு கூட்டி வருகிறார். ஆனால் புரட்சி செல்லையாவை ஈர்க்க முதலாளியின் சொல்லை மீறி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருகிறான். நேதாஜியின் திடீர் மரணம், ஜப்பானின் பின்னடைவு காரணமாக ராணுவத்திலிருந்து வெளியேறி மீண்டும் முதலாளியிடம் சேருகிறான் மரகதத்தை மணக்கும் ஆசையுடன்.
முதலாளியான வானாயீனாவால் இராணுவத்தில் சேர்ந்து உடை, நடை மாற்றி கொண்ட அவனை ஏற்று கொள்ள மனம் வரவில்லை. தம் தொழிலுக்கு தேவையான பணிவு அவனிடம் இல்லாததால் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழில் நசிந்து விட கூடும் என்று அஞ்சி வேறொருவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார் பெண்ணுக்கும் மனைவிக்கும் இதில் உடன்பாடில்லாத போதும். மரகதம் செல்லையாவை காதலித்தாலும் தன்னால் குடும்பத்தை விட்டு வெளியே வர முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்கிறாள்.

இருவரும் சந்திக்கும் இடமும், காதலில் உருகி இணைய முடியாது என்பது தெரிந்து அடையும் மனவேதனையும், கலக்கும், கண்ணீரும், காதலும் அவ்வளவு அழகாக அந்த கால காதலர்களின் மனநிலையை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்கிறது.

செல்லையாவின் நண்பனாக வரும் மாணிக்கம் இடையிடையே பேசும் இலக்கிய விவாதங்கள் அவன் மூலம் சொல்லும் தத்துவ விசாரங்கள் எல்லாம் அருமை. மரகதம் கப்பலேறி திருமணத்துக்காக போனவுடன் மனமுடைந்து வரும் செல்லையா தனக்குள் பேசி தன்னை தேற்றி கொள்ளும் இடத்தில் வரும் எழுத்து மிக யதார்த்தம்.

மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை.மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பத்தில்லை என்ற வரியுடன் முதல் நாவல் முடிவு முடிவு பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment