Saturday, 21 March 2015

நான் ஆண்

காரணங்கள் இன்றி
வெறுமனே பார்வை இன்பத்துக்கு
அறைக்குள் அடிக்கடி வரவழைப்பேன்
பெருகும் உதிர போக்கால்
காலும் இடுப்பும் உளைந்து அதிகம் எழ முடியாமல்
அழுத்தும் உன் சோர்வை பற்றி எனக்கென்ன அக்கறை

நான் ஆண்

உள்ளே நுழைந்த உன்னை உட்கார சொல்லாமல்
வாய் கடித சாராம்சத்தை சொல்ல
பார்வையாலே மேலும் கீழும் மேய்வேன்
அறை அல்மாரியினுள் இருக்கும் கோப்பு ஒன்றை
மேலே எம்பியோ கீழே குனிந்தோ தேட சொல்லி
உன் வளைவு நெளிவை வெறிப்பேன்
நான் ஆண்

தேடி எடுத்து வரும் கோப்பை
கையில் தருகையில் கைவிரல் தீண்டுவேன்.
கணினியில் தகவல் தேட சொல்லி
அருகமர்ந்து கோப்பை திருப்புவது போல
இடுப்பை முழங்கையால் உராய்வேன்
கணினிக்குள் தகவல் தேடுவது போல
மெல்ல கழுத்தோடு உராய்ந்து வாசம் பிடித்து
ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து
நேர் பார்வையாகவே என் விரசத்தை வெளியிடுவேன்
நான் ஆண்

பணி நேரம் முடிந்த பின்னும் பணி இருப்பதாக சொல்வேன்
நேரமாகிவிட்டால் காரில் இறக்கிவிடுகிறேன் என்பேன்
காரில் போகும்போது மேலதிகாரி எல்லாம் அலுவலகத்தில்
பக்கத்தில் அமர் என கதவை திறந்துவிடுவேன்
சீட் பெல்ட்டை மாட்டிவிடுகிறேன் என்று
மார்பை லேசாய் உராய்ந்திடுவேன்
கியர் மாற்றும் சாக்கில் தொடையில்
பட்டும் படாமல் உரசிடுவேன்
நான் ஆண்

லேசாக முறைத்தாலோ
எரிச்சலை பார்வையில் வெளிப்படுத்தினாலோ
சரியாக வேலை செய்யவில்லை
வேலைக்கு வந்தால்
எல்லாமும் தான் எதிர்கொள்ள வேண்டும்
எதுக்கு வேலைக்கு வருகிறீர்கள்
வீட்டில் சமைத்து பிள்ளைகள் பார்க்க வேண்டியது தானே
என்பேன்.
நான் ஆண்...

No comments:

Post a Comment