Wednesday, 4 March 2015

பா. சிங்காரம் - புயலிலே ஒரு தோணி - ஒரு பார்வை



புயலிலே ஒரு தோணி பா. சிங்காரத்தின் இரண்டாவது நாவல், கடலுக்கு அப்பால் கதையின் நீட்சி என்று கூட இந்த கதையை சொல்லலாம். இந்நாவல் வாசிக்கும் முன் சிங்காரத்தின் முன்னுரையை வாசித்தல் அவசியம் அப்போது புழங்கிய வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் விளக்கங்கள் கொடுத்திருப்பார். ஓரளவு நாவல் புரிபட இது உதவுகிறது.

சாதாரண குமாஸ்தாவாக இந்தோனிசியாவில் நடக்கும் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாக அறிமுகமாகும் பாண்டியன் என்பவனிடம் இருந்து கதை தொடங்குகிறது.

இந்தோனிசியாவில் ஆரம்பிக்கும் கதை பிரிட்டிஷ் படையை எதிர்த்து ஜப்பான் படை உள்ளே நுழைய அவர்களை வரவேற்கும் அந்த நகர மக்கள் ஆட்சி சண்டையால் பாதிக்கப்படும் மக்கள் அங்கு நடக்கும், கொள்ளை, வன்புணர்வு என்று ஒரு போர் கால காட்சியை சிங்காரம் விவரிக்கும் விதம் எங்கு போர் நடந்தாலும் என்ன நடக்கும் என்பதை உணர முடிகிறது.. பார்வையாளனாக அதை பார்க்கும் பாண்டியன் மனதில் “ கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு என்று யோசித்து கொண்டே சங்க காலத்தில் கூலவாணிகன் சாத்தன் எழுதிய “ மாதவர் நோன்பும், மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனில் இன்றால் என்ற காட்சி கண் முன் விரிவதை பார்த்து கொண்டே கடக்கிறான்..

கலவரத்தை கொலை கொள்ளையை தடுக்க ஜப்பான் ராணுவம் ஐவரின் தலையை வெட்டி கொள்ளை அடித்த பொருட்கள் எல்லாம் வரவில்லை என்றால் இந்த ஐவரின் கதி தான் என்று பொது இடத்தில் பார்வைக்கு வைக்கின்றனர்.

போரின் காரணமாக வியாபாரம் நடக்கும் தெரு மந்த நிலையை நோக்கி நகர்கிறது. பாண்டியன் பினாங் நோக்கி செல்ல முடிவெடுக்கிறான். இதற்கிடையில் அங்கிருக்கும் நண்பர்களுடன் பேசும் போது அலசப்படும் சங்க இலக்கியங்கள் அந்த புலவர்கள் குறித்தான விமர்சனங்கள் எல்லாம் கண்டிப்பாக வேறு கோணத்தில் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்கள் விவாதத்தின் ஒரு வரி, தமிழகத்தின் மான வீரப் பரம்பரை பற்றிய உன் கருத்து விபரீதமானது, தமிழ் உணர்வு கொண்ட எந்த தமிழனும் ஏற்கமாட்டான் என்று ஒருவர் கூற  “ விபரீதம் அல்ல, உண்மை, தமிழ், வீரம், தமிழ் நாகரிகம் என்பதெல்லாம் நம் புலவர்களின் தோப்பி மயக்கத்தில் தோன்றிய வெறும் கற்பனையாக இருக்கலாம் என தோன்றுகிறது என்று பாண்டியன் மறுக்கிறான்.

அதன் பின் வேசையர் பற்றிய உரையாடல், அவர்க்ளுடனான உறவு மூலம் ஆணுக்கு பெண் மீதான அந்த கால மதிப்பீடுகளை உணர முடிகிறது.

பினாங் பயணமாகிறான் பாண்டியன். கப்பலில் கூட வருபவர்களுடன் பேச்சும் அவர்கள் கதையுமாக கடல் பயணம் செல்கிறது. இதில் பணத்தை பற்றி வரும் பத்திகள் எல்லாம் எக்காலாத்துக்கும் பொருந்தும். பாண்டியன் கப்பலின் மேற்பரப்பில் நின்று கடலை வெறித்து கொண்டே போர் முடிந்தவுடன் முதல் கப்பலில் மதுரைக்கு போய்விட வேண்டும் என்று நினைக்க அவன் மனத்திரையில் மதுரையில் சின்னமங்கலத்தில் சிறுவயதில் அவன் வாழ்ந்த நாட்கள் விரிகிறது.. அந்த இடத்தில் மதுரை சின்னமங்கலம் இரண்டு அத்தியாயங்களில் ஆசிரியரின் எழுத்து நடை அனாயசம் அதை வாசித்து தான் ரசிக்க முடியும். இவனின் சிந்தனையை கடற்கூத்து கொலைக்கிறது. கடலில் புயலை கப்பலில் இருந்து எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று அக்காட்சிகள் நம் கண் முன் விரிகிறது. ஒரு வழியாக பத்திரமாக பினாங் வந்து சேர்கிறான்.

பின் அங்கு சில நண்பர்களை சந்தித்துவிட்டு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். அங்கிருக்கும் தமிழ் பேரவையில் நண்பர்கள் சந்திப்பும் விவாதங்களும் என்று நகர்கிறது கதை.

பாண்டியன் இந்திய தேசிய ராணுவ பயிற்சியில் சேர்ந்து அங்கு நடப்பது என கதை வேறு ஒரு தளத்துக்கு நகர்கிறது. கொரில்லா பயற்சி பெறும் பாண்டியன் ராணுவ வீரர்களுக்குள் நடக்கும் உள் கலவரங்கள் வெளி விவகாரங்கள் நேதாஜியிடம் இருந்து அழைப்பு வர அவர் பொருட்டு ஒரு கொலையை நிகழத்தி கொடுத்து அவரிடம் நற்பெயரும் பாராட்டும் பெறுகிறான். முழுக்க முழுக்க இந்திய தேசிய ராணுவம் அப்போதைய அரசியல் கொலைகள், போர் கால சூழல் என வழுவி செல்கிறது  பின் பாண்டியன் ஒரு புரட்சி கூட்டத்துக்கு போர் பயிற்சிகள் சொல்லி தருகிறான். ஒரு கட்டத்தில் எல்லாம் விட்டு ஊருக்கு கப்ப்லேறிவிட முடிவு செய்கிறான். ஆனால் எதிர்பாராதவிதமாக குண்டடிப்படுகிறான். இறக்கும் தருவாயில் அவன் மன கண் முன் வந்து போகும் நினைவுகளை ஆசிரியர் சொல்லி இருக்கும் விதம் க்ளாஸ். முழு நாவலையும் ஆங்கிலத்தில் டெவலப்பிங் தி ஹிண்ட்ஸ் பாணியில் சொல்லி இருப்பார்... அருமையான இடம் அது.

நெஞ்சுத் தொண்டை உருண்டுருண்டு பாதாள வெற்றுவெளி பாழ்வெளி காயம் குருதிவெளி, பாழ்வெளி பினாங் ரஜூலா நாகப்பட்டினம், மதுரை சின்னமங்கலம் சந்தை வேப்பண்ணை மருக்கொழுந்து கடக்டவண்டி, ஆளுயரப் பொரி உருண்டைக் கூடை, புழுதி வட்டக் குடுமி, பழுக்காக் கம்பி வெட்டி, சாக்கு புகையிலை, ஓடியா ராசா ஓடியா போனா வராது பொழுது விழுந்தா சிக்காது, அம்மன் கோயில் பொட்டல் பால் நிலவு சடுகுடு, நான்டா ங்கோபபன்டா நல்ல தம்பி பேரன்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாரேண்டா, மதுரை இம்பீரியல் சினிமா, தெற்குவெளிவீதி வியாபாரி வீடு மஞ்சனக்காரத் தெரு, குயவர் பாளையம் ஒண்ணாம் நம்பர், சந்து “ஞே இவட நோக்கே மெடான் மொஸ்கி ஸ்ட்ராட், பிலேதொன் ஸ்ட்ராட் ஆயிஷா தங்கத் தந்தப் பளிங்குப்பட்டு “ சாயா பூஞா சிந்தா சாயா பூஞா ராஜா யுத்தம் கொள்ளை ஐந்து தலைகள் அர்னேமியா ஆறு, ரோல்ஸ் லாயர் டில்டன் தொங்கான புயல் பினாங் மாணிக்கம் நான்யாங் ஹோட்டல் நீசூன் கோத்தா பாலிங் ஜாராங் பலவேசமுத்து ரக்பீர்லால் சிறை களிகுஸ்மான் விலாசினி யாசமாக்கி நேதாஜி “ விதித்த கடமையை வலுவின்றி நிறைவேற்றினாய் பினாங் நடராஜன், சூலியா தெரு சுந்தரம் “ அண்ணே காப்பாத்துங்கண்ணே பேங்காங் ரேசன் தீர்க்கதரசி மெடான் ஆயிஷா தங்கையா காடு சண்டை கங்கசார் ஊர் ஊர் ஊர் பதக்கம் நரக் ஸ்ட்ராட் குடின் டில்டன் ஆ என்ன விபரீதமான சந்திப்பு நெஞ்சு தொண்டை மூச்சு நான் நான் நான் புல் மரம் புல் விலங்கு நிலம் நீர் நெருப்பு வளி வான் அண்ட பிண்ட சராசரங்கள் நான் நான் நானேஏஏஏ ...............................

மொத்த கதையயும் இந்த் கடைசி பத்திக்குள் அழகாக வார்த்தை குறியீடுகளாக அடுக்கி இருக்கும் இடம் அசத்தல். 

No comments:

Post a Comment