Monday, 16 February 2015

"கன்னி" நாவல் - ஒரு பார்வை

" கன்னி "பிரான்சிஸ் கிருபா எழுதிய இந்நாவல் காதலை பற்றி சொல்லி அதனால் மனப்பிறழ்வு ஏற்பட்ட சந்தன பாண்டி என்கிற பாண்டியின் கதையை சொல்லி இருக்கிறது என்பதை விட ஒரு மென்மையான் மனதின் அன்புக்கான ஏக்கத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறது என்று சொல்லலாம்.

பெண்களை விட ஆண்களுக்கு அன்புக்கான ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது சிறுவயதில் அம்மா, அக்கா, தங்கை அதன் பின் தோழி காதலி என்று ஒவ்வொருவரிடமும் அவன் அந்த அன்பை தேடிக்கொண்டே இருக்கிறான். கவிதைகளிலும் கதைகளிலும் தேடி அலைகிறான்.

கடற்கோள் என்னும் அத்தியாயத்தில் முழுக்க பாண்டியின் மனப்பிறழ்வு நிலை அந்த மனப்பிறழ்வின் ஊடாக ஆசிரியர் பயணித்திருக்கிறார். மிக நுட்பமாக செதுக்கி இருக்கும் இந்த பகுதி புரிந்து கொள்ளவும் கடினம். ஒரு மன்ம்பிரல்ந்தவனின் செயல்களுக்கு பின் இருக்கும் உள்ள கிடக்கை ஆசிரியர் அனாயசமாக எழுதி இருக்கிறார்.. மனம் பிறழ்ந்த நிலையிலும் அவனுக்குள் பொங்கும் வார்த்தைகளின் மூலமும் அவன் செயல்கள் மூலமும் ஆசிரியர் பாண்டியை பற்றி சொல்லிவிட முனைகிறார். “அரிசியை உமி போர்த்தியிருப்பது போல அந்த எழுத்துகள் விளைந்திருந்தன அதை பார்த்துக்கொண்டே இருந்தான். மஞ்சள் உமித்துகிள்களோடு பறந்து பறந்து அவை ஒளி மின்மினிகளாகி அவனை சுற்றி சுற்றி இருளில் ஏதோ கிறுக்கின. மனம் பிரளந்த நிலையில் தெரியும் மஞ்சள் நிறத்துக்கும் அவன் வாழ்வில் அந்த நிறத்துக்குமான தொடர்பை பாண்டியின் வாழ்வை வாசிக்கும்போது உணர முடிகிறது..

அவன் பெரியம்மா மகள் அமலா அக்காவுக்கும் இருக்கும் பாச பிணைப்பை சுனை, அருவி, காட்டாறு வரை கொண்டு செல்கிறார் ஆசிரியர். யதார்த்த நடையும், கதையும் கிருத்துவ பின்புலமும், என்று மிக வேகமாக வாசகனை ஆக்ரமிக்கும் அத்தியாயங்கள் இவை என சொல்லலாம். அதுவும் அமலாவுக்கும் அவனுக்குமான சிறு பிராயத்து அன்பு அதை ஆசரியர் விவரித்திருக்கும் அழகு இவற்றை வாசித்து தான் அனுபவிக்க முடியும். இந்த காலகட்டங்களில் பாண்டியின் அன்புக்கான ஏக்கத்தை, தவத்தை கள்ளம்கபடமில்ல்லாத அந்த மென் உணர்வுகளை ஆசிரியர் அழகாக சொல்லி இருப்பார். பின் இருவரும் வளர்ந்த நிலையில் அமலா பாண்டியிடம் நாம சின்ன பிள்ளைகளாவே இருந்திருக்க்லாம்லடா என்றும் இடத்தில் பிள்ளை பிராயத்தில் பூரண அன்பை அனுபவித்த எல்லாரையும் அம்லாவுடன் சேர்த்து ஏங்க வைத்துவிடுகிறார்.

அதன் பின் பாவாடை சட்டையலிருந்து தாவணிக்கு அமலாக்கா மாறும் நேரம் ஆடைகளில் ஏற்படும் மாற்றமும் அதனால் அக்கா முன்பு போல இல்லாமல் விலகி விடுவாளோ என்று பாண்டி அடையும் தடுமாற்றமும் அவனது மன உளைச்சல்களையும் கோடு காட்டியது போல ஆசிரியர் சொல்லி இருக்குமிடம் ஆனால் அமலா அதை பெரிதாக எடுத்துகொள்ளாமல் முன்பு போலவே அவனிடம் பழக பாண்டி அடையும் ஆசுவாசத்தின் மூலம் அவனின் மென் மனதின் வெளியே சொல்ல முடியா கலக்க்கங்களை ஆசரியர் சொல்லி இருக்கிறார்.

அமலாவுக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுப்பதில் ஆரம்பித்து பாண்டி அவள் நிழல் போல் அவள் மீது கொண்டிருக்கும் பாசத்தை விவரித்திருக்கும் பாங்கு பாண்டி மட்டும் தான் பாசமானவனா அமலா செல்ல குட்டியாக இருப்பதால் எல்லாரும் அவளை தாங்க பாண்டியும் தன்னை தாங்கும் ஒரு ஏவலோ என்ற நினைப்பிற்கு இடமில்லாமல் ஒரு முறை ஆசரியர் குளித்ததை மாணவர்கள் மறைந்திருந்து பார்த்தார்கள் என்று பார்த்த மாணவர்களின் பெயருடன் தவறு செய்யாத பாண்டியின் பெயரையும் ஆசரியர் பிராது கொடுக்க அமலா ஆசிரியரிடம் பாண்டியை அழைத்து கொண்டு போய நியாயம் கேட்டு பொங்கும் இடத்தில் அமலாவுக்கு பாண்டியின் மீது இருக்கும் வாஞ்சையும் அமலா பாண்டி மனதில் பல படிகள் முன்னேறி அவளை கிட்டத்தட்ட தொழும் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கிறானோ என்று தோன்றுகிறது.

கல்லூரி படிப்பு என இருவரும் தனிதனி விடுதி நோக்கி விலகி நகர அவர்களுக்கான பாச பிணைப்பு விலகாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சிறு சிறு கலக்கங்கள் அப்போதும் பாண்டியை ஆக்ரமிக்கிறது.அமலாவின் பேச்சு மனம் புரிபடாமல் சில இடங்களில் குழம்புகிறான். கடிதம் மூலம் இருவரும் பேசிகொள்கிறார்கள். நேரில் பேசும்போது ஒருவிதமாகவும் கடிதத்தில் பேசும்போது வேறு விதமாகவும் தெரிவதாக நினைக்கும் பாண்டி பின் நேரடி சந்திப்புகளில் அவள் வாய் தான் பேசுகிறது எழுத்தில் அவள் இதயம் ஒலிக்கிறது என்று சமாதனமடைகிறான்.அவன் கல்லூரியில் இருந்து இதழ்களுக்கு அனுப்பி அச்சான கவிதைகள, கதைகள் அவன் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் என்று எல்லாவற்றையம் கடிதத்தில் அமலாவிடம் பகிர்ந்து கொண்டே இருக்கிறான்.

அமலா கன்னியாஸ்திரி ஆக நேர்ந்துவிடப்பட்ட பெண் அவள் அதற்கான படிப்பையும் அதற்கான வாழ்க்கை முறையும் விரும்பி ஏற்றுகொண்டாளா இல்லை எந்த விருப்பு வெறுப்புமின்றி வருவதை ஏற்று கொள்ளும் அலட்சியமா எதுவொன்றும் தெளிவாக அமலாவுக்கும் புரியவில்லை வாசிக்கும் நமக்கும் அவளின் வார்த்தைகள் ஊடாக அவளின் மன ஓட்டத்தை அறியவே முடியவில்லை. இன்னும் சில நாட்களில் கன்னியாஸ்திரி ஆக போகும் அவளை சந்திக்கும் பாண்டி அவளுக்கு மஞ்சள் சுடிதார் பரிசளிக்கிறான்.

ஒரு கவிதை மனதுக்குள் பிறக்கும் கனத்தில் இருந்து அது முழுமை பெறும்வரை இருக்கும் அவஸ்த்தையை பாண்டி மூலம் சொல்லும் ஆசிரியர் அந்த கவிதை முற்றுபெற்றவுடன் அவனுக்குள் வரும் உறக்கம் மூலம் கவிஞரின் பிரசவ வலியை சொல்ல முயற்சித்திருக்கிறார். செல்வா அக்காவின் ஊரில் இருந்து பாண்டி விடைப்பெற்று போகும் போது அமலா அவனுக்கு சொல்லும் ஆறுதலும் தன்னம்பிக்கை வார்த்தைகளும் தரும் இதத்தை விட பிரிவின் வலியை அதிகம் பாண்டி உணர்கிறான். அமலா அவனை எங்காவது தூரமாக போக சொல்கிறாள் இப்படி இருந்தா பைத்தியமாகிவிடுவ நான் அடுத்த வருடம் லெக்சரர் ஆகிவிடுவேன் எனக்கான திட்டங்கள் நிறைய இருக்கு அதற்கே நேரம் காணாது உனக்கு என்ன பார்க்கிறப்போ எல்லாம் நேர்ந்துவிட்ட ஆடு போலவே தோணுது நேர்ந்துவிட்டத்துக்காக மட்டும் நான் கன்னியாஸ்திரி ஆகல எல்லாம் தெரிஞ்சு நானே தெளிவா விவேகத்தோட எடுத்த முடிவு. .

மனுஷன் ஆதி மனுஷன் தான் உணர்வுகளும் ஆதி உணர்வுகள் தான் அறிவு ரொம்ப லேட்டா தான் வந்தது. மனசுக்குள்ள அறிவைவிட உணர்ச்சிகள் தான் அதிகம் ஆதிக்கம் பண்ணுது ஆனாலும் அறிவ தான் நீ நம்பனும் இல்லைன்னா ஆதிவாசி ஆகிடுவோம்டா என்று சொல்லி அவனை தேற்ற முயற்சி செய்து தோற்று அழுது நீ நல்லா இருக்கனும்டா ஆல் தி பெஸ்ட் சொல்லி செல்கிறாள். அவள் பிரிந்து சென்ற போது அவள் பிரிவை தாங்கி கொள்ள முடியாத அவன் பரந்து விரிந்த கடலின் முன்னே எல்லையில்லா வானத்தின் மீது நிழலன்றி ஏதுமற்று நின்றிருந்தான் எனும் வார்த்தைகளிலேயே பாண்டியின் உள்ள கிடக்கை தனக்குள் அவன் அனாதையாக உணர்வதை அவன் பலகீனமாக உணர்வதை எல்லாம் ஆசிரியர் சொல்லிவிடுகிறார்.

மும்பை செல்கிறான் பாண்டி. பாண்டியை கடல் தான் மிகுதியாக ஆக்ரமிக்கிறது. கனவுகளிலும் கடலே பெரும்பாலும் அலைக்கழிக்கிறது. சிறு வயதில் க்டலை பார்த்து பிரமிக்கும் அவன் கடல் மீது ஒரு சேர பயமும் பிரியமும் கொண்டு அல்லாடுகிறான். அந்த அல்லாட்டங்கள் எல்லாம் அவன் மன பிறழ்வின் போது வந்து வந்து போகிறது காட்டாறு அத்தியாயம் ஆரம்பத்தில் இருந்து பாண்டி கொஞ்சம் கொஞ்சமாக மனித உலகில் அன்னியப்பட்டு போவதை கனவுலகில் அதுவும் அதி பயங்கர கனவுகளினால் அலைக்களிக்கப்டும் அவன் உள்ள கிடக்கை கவிதைகலில் வடித்து பார்க்கிறான். கடலை தேடி தேடி அலைகிறான்.. காட்ட்றில் அவன் மனபிறழ்வுக்குள் மெல்ல மெல்ல நுழைவதை ஆசரியர் சொல்ல்கிறார்.
கார்முகில் மழை இரண்டிலும் ஒரு ஆணின் காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை சொல்கிறார். அமலாவின் பிரிவில் இருந்து மீட்சி கிடைக்காமல் போராடி கொண்டு இருக்கும் பாண்டி தேர் திருவிழாவுக்காக பெரியம்மா ஊருக்கு பாட்டியுடன் வருகிறான்.

ஒரு கிருஸ்துவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள் நடக்கிறது. அந்த பத்து நாட்களுக்குள் ஒரு மனிதன் மனம் பிறழ்ந்து போகும் அளவு ஒரு பெண்ணை நேசிக்க முடியுமா அவனின் உள்ளத்துள் இவ்வளவு காதல் பொங்குமா. அதுவும் அதிகம் பேசாமல் வெறும் கண்ணால் பார்க்கும்போது மனசுக்குள் இவ்வளவு எண்ணங்கள் சுழன்று கிறங்கடிக்குமா. காதல் இப்படி எல்லாம் கூறு போடுமா ஒருவனின் உள்ளத்தை. உலகையே மறக்க செய்யுமா? ஒரு பெண்ணின் பார்வையில் சுருண்டு போகும் அளவு மென்மையானவனா, இவ்வளவு உருகுவானா? என்று வாசிக்கும் நம்மை அந்த நேரம் இதை எல்லாம் யோசிக்கவிடாமல் அந்த உணர்வுக்குள் இழுத்து சென்றுவிடுகிறார். அந்த திருவிழா ஆரம்பித்த நாட்களில் பார்வை இன்பத்தின் தாக்கத்தை வலியை விஸ்தீரணமாக விவரிக்கிறார். சாராவின் பார்வைகள், அதிலேயே சிநேகம், ஊடல், கோவம், வெறுப்பு அத்தனையும் உணர்கிறான். இந்த இரண்டு அத்தியாயங்களில் காதலில் ஒரு ஆணின் மன அலைகழிப்பை நுட்பமாக செதுக்கி இருக்கிறார்.

அவ்வளவு மென்மையான காதலை பெண் உணர்கிறாளா அவளால் புரிந்துகொள்ள முடிகிறதா. ஆம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் சாராவின் மூலம். புரியாமல் இருந்தால் சாரா எப்படி பேசிய அன்றே தன்னை தருகிறாள். சாரா அப்போது அணிந்திருப்பதும் மஞ்சள் வர்ண உடையே.
ஒரு பெண்ணால் ஒரு ஆணின் உணர்வை புரிந்துகொண்டு தன்னையே கொடுக்கும் அன்பு இருந்தாலும் பெண் இங்கு சமூக சூழ்நிலைகளால் சுற்றி உள்ளவர்களால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறாள். ஆண் வார்த்தைகளாக உருகி உருகி கொட்டிய அன்பை காதலை அவள் தன்னை தந்து நிறைவு செய்ய முயற்சிக்கிறாள். கடைசியில் அவனுக்கு கடிதம் கொடுத்து சாரா இதை நீங்கள் இப்போது படித்தால் இந்த சந்தோசத்த்தின் ருசியை அனுபவிக்க முடியாமல் போய்விடும். இதை நேரில் சொல்லும் தைரியமும் எனக்கில்லை தயவு செய்து இப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லும் இடத்தில் அவனை கஷ்டப்படுத்த போகிறோம் என்பது தெரிந்து தனக்குள் அழுது எந்த முடிவும் எடுக்க முடியாமல் பாண்டியின் காதல்  உணர்வால் கட்டுண்டு கிடக்கும் சாரா சொல்கிறாள் பெண்ணின் காதல் உணர்வை.

உண்மையான அன்பை தேடி அலையும் மனிதனின் உள்ள கிடக்கு எப்படி இருக்கும், காதலில் மூழ்கியவன் எப்படி இருப்பான் மென்மையான ஒரு இதயம் எப்படி சட்டென உடைந்து போகும். அந்த மென்மையான இதயத்தின் தேடல் தான் என்ன. கன்னியில் மூழ்கி போனால் ஓரளவு புரிபடலாம்.

No comments:

Post a Comment