Wednesday, 26 November 2014

கூந்தப்பனை - சு. வேணுகோபால்


கூந்தப்பனை" புத்தகம் குறித்து எல்லாரும் விமர்சனம் எழுதி அதை படித்ததில் இருந்து அந்த புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டனர். ஒரு வழியாக புத்தகம் கிடைக்க வாசிக்க ஆரம்பிக்க அந்த புத்தகம் நான்கு குறுநாவல்களை உள்ளடக்கியது. முதல் கதை " கண்ணிகள்" விவசாயம் சார்ந்த வாழ்வியல் அந்த மனிதர்களை ஆட்டிவைக்கும் வட்டிக்கு விடுபவர்கள் அவர்களால் தோட்டம் இழக்கும் மனிதன் பற்றிய கதை..

கூந்தப்பனை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முதல் கதை முடிந்தவுடன் நேராக கடைசி கதையான அதற்கு சென்று விட்டேன்.. முற்றிலும் புதிய கதை களம். அதில் சதீஷ் என்கிற ஆண்மையற்ற ஒருவனின் மன உணர்வுகள் அவனது மனைவி லதாவின் மன உணர்வுகளை வெகு யதார்த்தமாக விவரித்து சென்று இருக்கிறார் சு. வேணுகோபால்..அதுவும் சதீஷ் தங்கி இருக்கும் விடுதியில் அவனுடன் பேசி கொண்டு இருக்கும் அந்த கிழவன் கேரக்டர் செம. சந்தோசம் பற்றி அவர் கேரக்டர் வாயிலாக ஆசிரியர் சொல்லும் அத்தனையும் படு யதார்த்தம்.....

" சாவு என்பது பேரமைதி"  இறந்தகால இயக்கத்திற்கும் எதிர்கால இயக்கத்திற்கும் இடையில் கிடக்கும் ஓய்வே சாவு விழிக்காதிருந்தால் நினைவுகளின் சாவு, நான் இறந்தபின்னும் உலகம் இயங்குகிறது என்ற வரிகள் அழகு

ஆனால் அக உணர்வுகள் அக உலகம் தாண்டி புற உலக கதையை சொல்லும் இடங்களில் ஒரு நீட்சி தெரிகிறது. அது கொஞ்சம் தோய்வை கொடுக்கிறது சில இடங்களில்... ஆனால் அக உணர்வுகளில் உண்மையும் யதார்த்தமும் அதை புறந்தள்ள வைத்து விடுகிறது.


"கூந்தப்பனை" புத்தகத்தில் இருக்கும் "வேதாளம் ஒளிந்திருக்கும்", "அபாய சங்கு" இரண்டும் செம. கூந்தப்பனை கதை கரு தெரிந்த்விட்டதால் ஒரு எதிர்ப்பார்ப்போடு தான் வாசித்தேன்.. ஆனால் எந்த ஒரு முன் முடிவும் இல்லாமல் வாசித்ததாலோ என்னவோ இந்த கதைகள் ரொம்ப உள்ளே இழுத்து கொண்டது.. வேதாளம் ஒளிந்திருக்கும் கதை ஒரு கீழ் தட்டு கணவன் மனைவிக்குள் சண்டையும் அதை சமரசம் செய்து வைக்க செல்லும் மனிதன் இருவர் பக்க நியாயங்களை பார்த்து தன்னை தானே செதுக்கி கொள்வதுமாக நகர்கிறது.

- பாசம்கிறது மனசுக்குள்ள காச்சு தொங்குறதெல்லாம் பொய்யிடா.. நாம நடந்துக்குறதில்ல தான் பாசம் தங்குது. அத மெயின்டெயின் பண்ண தெரியனும். அது தான் வாழ்க்கை ஒளிச்சு வச்சிருக்கிற ரகசியம்.

- அவரவர் நிலையில் நிற்கும்போது வாழ்க்கை வைத்திருக்கும் சிக்கல்கள் உண்மையாக இருக்கிறன்றன. அந்த சிக்கல்களில் பயமும் சுயகௌரவங்களும் உள்ளுக்குள் கண் விழித்திருக்கின்றன

- விதம்விதமான தனிமைகள் வாழ்வில் நிகழ்ந்து கொண்டுதான் வந்திருக்கின்றன. சில தனிமைகள் பிரத்தியாருடன் பகிர்ந்து சமநிலையை தேடிக்கொண்டதும் ஆசுவாசப்பட்டிருக்கின்றன.சில தனிமைகள் சொல்ல முடியாமல் ததளிக்கச் செய்கின்றன. நிகழ முடியாத விஷயங்கள் மனதைப் புரட்டி அலைகழித்து தனக்குள்ளே வெறிகொண்டு நீள, முடிவில் சிதறிப்போய் விடுகின்றன. சிதறியதில் மிச்சம் மீதியை நினைவில் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது. அப்படியும் நிகழ்ந்து விடுகிறபோது ஓர் அமைதி மட்டும். சொல்ல முடியாத அமைதி....

ஊற்றெடுக்கும் சலனங்களில் தான் எத்தனை வகைகள் .

நிறைய நிறைய வரிகள் மனதை கரையவைக்கிறது..

No comments:

Post a Comment