Wednesday, 26 November 2014

"முதல் ஆசிரியர்" - புத்தகம்

“முதல் ஆசிரியர்” சிங்கிஸ் ஐத்மாத்தவ், சோவியத் கிர்கீஸிய எழுத்தாளர், தமிழில் பூ. சோமசுந்தரம். கிர்கீசிய கிராமத்து பள்ளிக்கூட கட்டிட திறப்பு விழாவிற்கு வருகிற கல்வித்துறை அறிஞர் “அல்டினாய்” விழாவிலிருந்து குழப்பமும், தடுமாற்றமுமாக வெளியேற அதே விழாவிற்கு வந்த ஓவிய ஆசிரியர் இளைஞர் அவரின் பதற்றம் காராணம் கேட்க மௌனமாக சென்ற அல்டினாய் சில நாட்களில் எழுதுகிற தன வரலாற்று கடிதத்தின் மூலம் நாவல் வளர்ந்து முடிகிறது.

துய்ஷேன் என்ற கம்யூனிஸ்ட் இளைஞர் கிர்கிஸ்தான் மக்களிடம் படிப்பின் அவசியத்தை சொல்லி இவ்வளவு நாள் அடிமைகளாக இருந்தோம் இனி அடிமையாகாமல் இருக்க கண்டிப்பாக படிப்பு அவசியம் தேவை அதற்காக தனக்கு தெரிந்த அடிப்படை கல்வியை எழுத படிக்க தெரிந்ததை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க விரும்புவதாக ககூற கிராமத்தில் இடம் கூட தர மறுக்கின்றனர். எதற்கு படிப்பு அதெல்லாம் அதிகாரிகளுக்கு தான் விவசாயத்தை நம்பி இருக்கும் நமக்கு அதெல்லாம் அவசியம் இல்லாதது இதற்கு எல்லாம் செலவளிக்க தயாரில்லை என்று சொல்ல குன்றின் மீது இருக்கும் குதிரை கொட்டகை போதும் அதை சீர் பண்ணி குடுங்கள் என்று சொல்ல அதற்கும் மக்கள் ஒத்துழைப்பு தர மறுக்க தனி ஒருவராக அந்த கொட்டகையை சீர் செய்து கிராமத்து பிள்ளைகளை எல்லாம் பள்ளிக்கு தினமும் வந்து கூட்டி செல்கிறார்.

அல்டினாய் பதிமூன்று வயது சிறுமியாக அப்பா அம்மா இல்லாமல் சித்தப்பா சித்தி வீட்டில் வளரும் சிறுமி. அவர்களின் கொடுமையில் மூச்சு திணறி கொண்டிருந்தவளுக்கும் போராட்டத்துக்கு பின் பள்ளிக்கூடம் போக முடிகிறது.. கடும் பனியிலும் பல கஷ்டங்களை எதிர்கொண்டு பிள்ளைகளுக்கு தன்னால் இயன்ற அளவில் தனக்கு அவசியம் என்ற பட்ட முறையில் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதன்படி படிப்பு சொல்லி தருகிறார். அவர் செய்தது ஒரு வீரச்செயல் கிராமத்தை விட்டு வெளியில் எங்குமே செல்லாத, பரம்பரை பரம்பரையாக படிப்பறிவே இல்லாத கிர்கீசிய குழந்தைகளுக்கு அந்த கிராமத்தை தாண்டி உலகம் இருக்கு என்பதை பேச்சிலும் கதையிலும் படிப்பிலும் துய்ஷேன் குழந்தைகள் மனதில் ஆழ பதிய வைத்தார்.
உடலை இறுக செய்யும் உயிரை குளிர வைக்கும் பனிக்காலம் வந்தாலும் அதை தாண்டி வசந்தம் வரும் என்ற துய்ஷேன், அல்டினாய் நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக் அல்டினாய் எழுத படிக்க கற்கிறாள். இதறகிடையில் அவள் சித்தி அவளுக்கு மாப்பிளை பார்த்து அதுவும் இரண்டாம் தாரமாக ஒரு முரட்டு பண்ணையாருக்கு கட்டி வைக்க முற்பட துய்ஷேன் அவள் சித்தியிடம் அவள் குழந்தை அவளுக்கு எப்படி திருமணம் என்று சண்டையிட்டு அவளை பள்ளிக்கூடத்திலேயே தங்க வைத்து அவளை அந்த சோகத்தில் இருந்து மீட்க இரண்டு பாப்ளார் மரக்கன்றுகளை நட்டு அவளிடம் பேசும் இடம் கவிதை. காலங்கள் உருண்டோட கதை தூரத்தில் இருந்து தெரியும் அந்த பாப்ளார் மரத்தின் மூலம் தான் உயிர்பெறுகிறது..
துய்ஷேனை அடித்து அல்டினாவை தூக்கி சென்று விடும் முரட்டு பண்ணையார் அவளை பலாத்காரம் செய்ய இரண்டு நாளில் அவள் உடலில் வலுவில்லாமல் சுருண்டு விட ஆனால் மனதில் இங்கிருந்து தப்பியோட வேண்டும் அல்லது சாக வேண்டும் அடங்கி மட்டும் போக கூடாது என்று தப்பிக்க முயற்சிக்க இதனிடையில் துய்ஷேன் காவலர்களுடன் வந்து அவனை கைது செய்து இவளை மீட்டு கூட்டி செல்கிறார்.

வரும்வழியில் அவளை ஆற்றில் இறங்கி சோப்பு தந்து குளிக்க சொல்லும் ஆசிரியர் நடந்ததெல்லாம் மற அதை திரும்ப நினைச்சு பார்க்காதே குளி பாரம் குறையும் என்று சொல்லி குதிரையை மேய்க்க கூட்டி போகிறார். இரண்டு நாள் கழித்து புகைவண்டி நிலையம் அழைத்து செல்லும் அவர் தாஸ்கன்ட் நகரிலிருக்கும் அநாதைக குழந்தை இல்லத்திற்கு அனுப்பப்பட்ட சில குழந்தைகளோடு ஒரு ருஷ்ய பெண்மணியோடு அனுப்புகிறார்.
இறுதியாக் அங்கே அவர் அஸ்தினாவிடம் நீ ஓரடி கூட என்னை விட்டு பிரிய விடமாட்டேன் ஆனால் உனக்கு குறுக்கே நிற்க எனக்கு உரிமையில்லை நீ படிக்க வேண்டும். எனக்கொன்றும் அதிக படிப்பறிவு கிடையாது நீ புறப்பட்டு போ. நீ ஒரு நல்ல ஆசிரியராகலாம். இதோ இப்ப கிளம்ப போறே என்று நடுங்கும் குரலில் சந்தோசமா இரும்மா அஸ்தினாய் முக்கியமானது என்னன்னா படி படி என்று சொல்ல அஸ்தினாய் துக்கம் தொண்டை அடைக்க அழுகிறாள். நாம் நட்டோமே பாப்ளார் மரக்கன்றுகள் அவற்றை நான் பார்த்துக்குறேன் நீ பெரியவளாகி வரும்போது அவை எவ்வளவு அழகாக மாறுகிறது என்று பார் என்று சொல்லி அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ரயில் புறப்படும் போது “அஸ்தினாய்” என்று மனதின் அடியாழத்தில் இருந்து கத்தும் குரல் அஸ்தினாவின் காதில் மட்டுமல்ல நம் காதிலும் ரீங்காரிக்கிறது.

எவ்வளவோ இடர்பாடுகளை சநதித்து படித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து கிராமத்துக்கு வந்து துய்ஷேனை விசாரிக்க அவர் நடக்கும் யுத்தத்தில் பங்கேறக சென்றுவிட்டதாக கூற அவரை பற்றி எந்த தகவலும் இல்லாமல் போக கிராமத்துக்குள் போகாமலே திரும்புகிறாள்.அவர் இறந்தாரரா உயிரோடு இருக்கிறாரா என்று தெரியாமல் காலம் உருண்டோட ஒரு முறை ரயிலில் பயணிக்கும்போது விளக்கு காண்பிக்கும் ஒருவர் அவர் ஜாடையில் தெரிய ரயிலின் அவசர சங்கிலியை பிடித்திழுத்து இறங்கி கதறி ஓடி வர அவர் வேறு யாரோவாக இருக்க மனதில் சுருண்டு விழுகிறாள். அதன் பின் திருமணம், குழந்தைகள் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள், தத்துவஞானத்தில் டாக்டர் பட்டம் பெறுகிறாள் பல இடங்களுக்கு செல்லும் அவள் கிராமத்திற்கு மட்டும் போகவில்லை.

அதன் பின் பள்ளி திறப்பு விழாவிற்கு வரும்போது துய்ஷேன் உயிரோடிருப்பது தெரியவர குற்ற உணர்வில் கூனி குறுகி உடனே புறப்படுகிறார். பள்ளிக்கு அவரின் பெயர் தான் வைக்க வேண்டும் நான் மீண்டும் வருவேன் அவரை சந்திப்பேன் என்பதாக சொல்லி நிறைவு செய்கிறார் கடித்ததை.. சிறிய நாவல் தான் ஆனால் அதன் தாக்கம் என்னுள் இருக்கிறது.. நமக்கு இன்று சாதாரணமாக கிடைக்கும் விஷயங்களுக்கு பின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும், காதலும், கருணையும் மனிதமும் நிறைந்த மனிதர்களின் போராட்டமும் வலியும் நிறைந்திருக்கிறது என்று நம்மை யோசிக்க வைக்கும் கதை.

No comments:

Post a Comment