Thursday, 11 December 2014

பிள்ளைகளுக்காக

என் பிள்ளைக்கு பெண்ணுக்கு எதுவுமே தெரியாது என்று பீற்றி கொள்ளும் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் அவர்களையே தெரியாமல் போகும் போது நொந்து போகிறார்கள். கூட்டு குடும்பம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட இந்த நாளில் நேரடி உடல் விளையாட்டுகளையும் டிவியும் கம்ப்யூட்டரும் வீடியோ கேம்ஸ் அபகரித்து கொண்டதில் நம் பிள்ளைகள் நாம் நாற்பது வயது கடந்து அனுபவிக்கும் ஸ்ட்ரஸ்களை இன்றே அனுபவிக்கிறார்கள்.

சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமில்லை சிறு ஊர்களில் கூட இதே நிலை தான் பிள்ளைகள் பள்ளி பள்ளி முடிந்தவுடன் டியூசன் பின் இரவு சோட்டா பீம், ஏதோ ஒரு கார்ட்டூனோ பார்த்து தூக்கம் லீவ் நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்போ அல்லது வீடியோ கேம்ஸ் டிவியுடன் ஐக்கியம்.

பிள்ளைகளுக்கு உறவுகளை சொல்லி தருவதுமில்லை உறவுகள் சங்கமிக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வதுமில்லை காரணம் ஒன்று பிள்ளையின் படிப்பு, தேர்வு அல்லது பெரியவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் அல்லது அதெல்லாம் பிள்ளைகள் பழக மாட்டார்கள் அவர்களுக்கு அதெல்லாம் ஒத்த்க்காது என்று ஏதோ ஒரு காரணத்தை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.. ஆனால் பிள்ளைகளின் மனநிலை பற்றி அறிய ஆர்வம் கூட காட்டுவதில்லை..

ஒரு முறை பிள்ளைகளை கூட்டி போய் சொந்தங்களின் திருமண வீடுகளில் அவர்களை விட்டு பாருங்கள் ஆனால் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி அதை செய்யாதே இதை செய்யாதே அவரிடம் பேசாதே இவரிடம் பேசாதே என்ற விழி மிரட்டல், மொழி மிரட்டல் எல்லாம் விட்டு சுதந்திரமாக அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு பாருங்கள். உறவுகளை இவர் பெரியப்பா இவர் சித்தி, இவர் மாமா இது அவர்கள் பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்துங்கள். யாருக்கும் இவர் நல்லவர் இவர் கெட்டவர் என்று நீங்கள் டிஸ்க்ளெய்மர் கொடுக்காதீர்கள். அவர்களுக்கே பழக பழக புரியும்.

கோடை விடுமுறைகளுக்கு அல்லது சேர்ந்தாற்போல ஒரு பத்து நாட்கள் விடுமுறை என்றால் அவர்களின் பாட்டி தாத்தா வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். ஏ ஸி இல்லைன்னா என் பிள்ளை தூங்க மாட்டான், நடக்கவே தெரியாது என்று எல்லாம் நீங்களே பில்டப் கொடுக்காதீர்கள். சிறு வயதில் இருந்தே கொஞ்சம் உங்கள் விடுமுறை சிறப்பு வகுப்புகளை எல்லாம் விட்டு விட்டு அவர்களை அவர்கள் உலக்த்தில் சுதந்திரமாக உலவ விட்டு பாருங்கள்..

உங்கள் பிள்ளைகள் டீன் ஏஜ் வரும்போதோ அதற்கு முன்னோ புத்தகம் வாசிக்க கற்று கொடுங்கள். அதன் பின் அவர்களை பற்றி நீங்கள் எந்த வயதிலும் கவலைபப்ட வேண்டி இருக்காது. எந்த கெட்ட பழக்கம் பக்கமும் போக மாட்டார்கள். என் பிள்ளைகளை முக்கிய உறவினர் திருமணங்கள், அலல்து எங்கள் குடும்ப ஒன்று கூடுதல் எதையும் எந்த கிளாஸ் படிக்கும்போதும் நான் படிப்புக்காக காம்பரமைஸ் செய்து கொண்டதில்லை இன்று வரை.. அதனால் என் பிள்ளைகள் படிப்பில் சோடை போகவும் இல்லை..

வாழ்க்கையை அவர்கள விருப்பத்துக்கு அனுபவிக்கட்டும் சிறு வயதில் நாம் சரியான வழியை காட்டிவிட்டால் எந்த வயதிலும் அவர்கள் தவறான வழிக்கு செல்ல மாட்டார்க்ள் என உறுதியாக நம்புகிறேன்.. இன்று என் பிள்ளைகளுக்கு சென்னையில் எவ்வளவு நண்பர்கள் உண்டோ அதே அளவு அவன் தாத்தா ஊரிலும் உண்டு. என் கணவரின் உறவினர்கள் வீட்டுக்கு போய்விட்டால் எங்கள் குடும்ப உறவுகளே போதும் நட்பு தேவையே இருக்காது எல்லா கலாய்த்தலும் எங்கள் குடும்பத்திலேயே நடக்கும்... ஆயிரம் அறிவுரைகளையும், நூறு பயிற்சி வகுப்புகளையும் விட பிள்ளைகளை சிறு வயதில் இருந்து பட்டாம்பூச்சியாக பறக்க விட்டால் அவர்கள் வளர்ந்த பின் ரொம்ப தெளிவாக இருப்பார்கள்....பிள்ளைகளை வளர்க்கிறோம் என்று வளர்ப்பதை விட நமது பாதுகாப்பில் அவர்களாக வளர விடுங்கள்..

No comments:

Post a Comment