ஒவ்வொரு வருடமும் சந்தோசங்களும் துக்கங்களும் கலந்து தான் நம் வாழ்வை கடந்து செல்கிறது… சில கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிடுகிறது....சில கல்வெட்டுகளாக சாகும் வரை பதிந்து விடுகிறது... சந்தோசத்திற்கு குதுகாலித்து துக்கத்திற்கு மனம் வெம்பி என்று நம் மனமும் கூடவே பக்குவப்படாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இரண்டையும் சமமாக பார்க்கும் நிலையை அடைய எவ்வளவு வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை.
சில நண்பர்கள் என்னை விட்டு விலகியதும் சிலரிடம் இருந்து நான் விலகியதும் எதுவும் திட்டமிட்டு எல்லாம் இல்லை. அந்ததந்த உணர்வு கணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளே. பெரும்பாலும் யார் மீதும் தனிப்பட்ட விரோதமில்லை. இவர்களின் கருத்துடன் என்னால் ஒத்து போக முடியாது மாற்று கருத்து என்ற பெயரில் பெரும்பாலும் குதர்க்க கருத்துக்களே வருவதால் தொடர்ந்து நட்பில் இருப்பது எனக்கு மன உளைச்சலை தரும் என்று தோன்றியவர்களிடம் இருந்து விலகிவிட்டேன். நான் விலகிய விலக்கிய யாரையும் புண்படுத்த செய்யவில்லை.. யாருடனும் ஒட்டி ஒட்டாமல் பழகியதால் விலகி இருப்பதும் எனக்கு எளிதாகவே படுகிறது.
இந்த வருடம் எனக்கு பல புதிய அனுபவங்களை கொடுத்து கடந்து செல்கிறது.. வேலை நிமித்தமாக இந்த வருடம் பெற்ற அனுபவங்கள் மறக்க முடியாதது. என் மனதில் ஆழ பதிந்துள்ளது சில நிகழ்வுகள். அதை கண்டிப்பாக பின்னாளில் எழுத வேண்டும்..
வரும் வருடத்துக்கு என்று எந்த ஒரு குறிக்கோளோ லட்சியமோ எதிர்ப்பார்ப்போ இல்லை. வாழ்வை அதன் போக்கில் ஏற்று கொள்ள முயற்சி செய்து வருகிறேன். கூடுமானவரை யாரையும் எதன் பொருட்டும் சார்ந்திருக்காத மனநிலை வாய்க்க பெற வேண்டும் என்பதை அன்றி பெரிதாக எந்த பிரார்த்தனையுமில்லை...
புத்தாண்டு என்பதும் மற்றொரு நாளே, நாளொன்று கடப்பதை கொண்டாட தேவையில்லை என்போருண்டு. ஆம் எல்லா நாட்களும் கடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்றோ ஒரு நாள் தான் நின்று நிதானித்து நாம் கடந்து வந்த பாதையை பற்றி சிந்திக்க செய்கிறோம். அப்படி திரும்பி பார்க்கும் போது கடந்து வந்த தூரமும் கடக்க வேண்டிய தூரமும் நம் பயணம் எதை நோக்கி என்று நம்மை உணர வைக்கலாம். அதனால் திரும்பி பார்ப்பதில் தவறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது..
எல்லாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment