Thursday, 11 December 2014

ஆணின் வெட்கம் - :)

எப்போதும் தானியங்கி படிக்கட்டுகளில் (எக்ச்லேட்டர்) ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பயமும் தயக்கமும் காட்டுவார்கள். நான் செல்லும் போது அப்படி யாராவது தடுமாறி தயங்கினால் அவர்களை கை பிடித்து கூட்டி செல்வேன்.

இன்று அவ்வாறு வரும் போது இரு இளைஞர்கள் இசை கலைஞர்கள் தடுமாறி கொண்டு நின்றார்கள். . நாதஸ்வரம் தோளில் மாட்டி ஒருவரும், தவில் மாட்டி கொண்டு இருந்த ஒருவரும். இருவரும் தழைய தழைய வேஷ்டி உடுத்தி இருந்தனர். அதில் தவில் மாட்டி இருந்தவர் ஒருவாறு சமாளித்து ஏறிவிட்டார், ஆனால் நாதஸ்வரம் மாட்டியவர் முன்னும் பின்னும் அலைமோதினார். நான் அவரிடம் வேஷ்டியை அந்த கையால் கொஞ்சம் தூக்கி பிடித்து என் கையை பிடித்து கொள்ளுங்கள் என்னுடன் சேர்ந்து காலை எடுத்து வையுங்கள் என்று சொல்ல தயங்கி பின் பிடித்து கொண்டார்.

என் கையை பிடித்த அவரின் கையில் பயத்தையும் பதட்டத்தையும் உணர முடிந்தது. ஏறி முடித்த பின் கையை விடுவிக்க சொன்னேன். அப்போது தான் அவரின் செயல் அவருக்கு உரைத்து இருக்கு போல கூச்சத்துடன் கையை விடுவித்து கொண்டார்.. இன்னும் சென்னையின் இயந்திர "தாங்கஸ்" க்கு பழகவில்லை போலும். இதுதாங்க முத தடவ அதான் கொஞ்சம் பயமா இருந்துச்சு என்று முகத்தில் ஒரு வெட்கம் காட்டினார் பாருங்கள்.. சான்ஸே இல்லை.. நான் வேஷ்டியை மட்டும் கொஞ்சம் தூக்கி கட்டி கொள்ளுங்கள் போக போக பயம் இருக்காது என்று சொல்லி விடை பெற்று ரயில் நிலையம் விரைந்தேன்..

யாருங்க சொன்னது பெண்ணின் வெட்கம் தான் அழகு என்று..கள்ளம்கபடமற்ற ஆணின் வெட்கம் பெண்ணின் வெட்கத்தை விட கொள்ளை அழகு..

வளர் இளம் கவிஞர்களே கொஞ்சம் இதை எல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. ஏற்கனவே பெண்ணின் வெட்கத்தை பி.ஹெச். டி லெவலுக்கு எல்லாரும் ஆராய்ந்து விட்டார்கள். நீங்களாவது கொஞ்சம் ஆண்கள் வெட்கப்படும் தருணம் குறித்து எழுதுங்களேன்.....



No comments:

Post a Comment