Tuesday, 9 December 2014

நாளை மற்றொரு நாளே - புத்தகம்



“நாளை மற்றொரு நாளே ஜி. நாகராஜன் எழுதிய நாவல் கிளாசிக் வரிசை, காலச்சுவடு வெளியீடு. ஒரு கீழ்த்தட்ட மனிதனின் ஒரு நாளை வெகு பக்கத்தில் சென்று நமக்கு காட்டியிருக்கிறார் எழுத்தாளர். அவர்களின் வாழ்வியலை உற்று நோக்கும்போது பல விஷயங்கள் புரிகிறது. 

எந்த வேலையும் இல்லாமல் கட்ட பஞ்சாயத்து, அல்லது கொஞ்சம் சபலக்காரர்களை மிரட்டி காசு வாங்கி, மனைவியாக விபச்சாரம் செய்யும் பெண்ணை காசு கொடுத்து சேர்த்து கொள்ளும் குடிகார கந்தனின் காலை ஆரம்பிப்பது குடியுடன், மனைவியான பின்னும் அவளை விபசாரத்துக்கு அனுப்பும் அதை பெரிதாக அலட்டிகொள்ளாமல் ஏற்று கொள்ளும் மீனாவும் அவர்கள் வாழ்வியலும் கொஞ்சம் மனதை புரட்டி போடுகிறது..
.குடியினால் கந்தன் மோசமாக பாதிக்கப்பட மீனாவுக்கு எதாவது ஒரு வழி காட்ட வேண்டும் என்று தன்னை போல கட்டப்பஞ்சாயத்து பண்ணும் வசதியாக இருக்கும் அந்தோணியிடம் செல்ல அவர் சொல்லும் வாழ்க்கை தத்துவம் அதிர்ச்சியடைய வைத்தாலும் உண்மை நிலையை உணர்த்துகிறது.

ஏமாத்துறவங்களும் ஏமாறுறவங்களும் இருக்கிறது தான் உலகின் தன்மை. எல்லாரும் நேர்மையா நடந்துக்கிட்டா வாழ்க்கையில் போட்டியோ முன்னேற்றமோ இருக்காது. வாழ்க்கை சப்ப்னு இருக்கும்.. என்னை பொறுத்தவரை யாரையாவது கவுக்க சூழ்ச்சி செய்யும்போதுதான் உயிரோடிருப்பதாகவே தெரியுது. அந்த திறமை தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம். சூழ்ச்சி செய்ய தெரியாதவன் வாத்தியாராகவோ, குமாஸ்தாவாகவோ வாழ்நாள் பூரா  இருக்க வேண்டியது தான். அவன் அரசியல்வாதியாகவோ, வக்கீலாகவோ, போர்வீரனாகவோ வியாபாரியாகவோ முடியாது. மந்திரம் கிந்திரம்னு பேசுறாங்க அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது தந்திரம் தான் மந்திரம் ...
பைபிள், கீதை, ராமாயணம் எல்லாமே தந்திரங்களை தான் முன்னிலைப்படுத்தி இருக்கு. நல்லவனா இருந்தா கூட தந்திரம் பண்ணினா தான் ஜெயிக்க முடியும்னு சொல்லுது என்று உதாரணங்களுடன் சொல்ல புனித நூல்களின் இன்னொரு கோணத்தை ஒரு சாமானிய கட்டப்பஞ்சாயத்து அந்தோணியின் பார்வையில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்..

முடிவென்று ஒன்று இல்லாமல் கதையை கந்தனின் அன்றைய வாழ்வு முடியும் இரவுடன் முடித்திருக்கிறார். சில விஷயங்களுக்கு முடிவென்பது இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்..எந்த காலத்திலும் சில மனிதர்களுக்கு நாளை என்பது மற்றொரு நாளே...

1 comment:

  1. இந்த புத்தகத்தை படிக்கவில்லை. உங்கள் பதிவுகளில் இருந்து உணர்கிறேன். எளிய மனிதர்கள் எப்போதும் மாறுபட்டே இருப்பார்கள். தங்களின் வாழ்நிலைக்குத் தகுந்தே சிந்திக்கின்றனர். அதைப்போன்ற உயர்நிலை மக்களும் தங்களின் வாழ்நிலைக்குத் தகுந்தாற்போன்றுதான் சிந்திக்கின்றார்கள். என்னவென்றால் தன்னுடைய உயர்ந்த சூழ்ச்சித்திறனும், வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ளும் போக்கினாலும் மேலும், மேலும் வளர்ச்சியடைகின்றார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோன்று தந்திரங்களினாலே உயர்கின்றார்கள்.

    ReplyDelete