Monday 30 June 2014

கூடு

கூட்டில் நம்பிக்கையில்லாத போதும்
அழகிய பொருட்கள் சேர
மரத்தின் மீது
கூடோன்று அமைத்தேன்

வானமே எல்லையாக இருந்த போதும்
கூட்டிற்குள் அமர
அதன் பாதுகாப்பில்
புது சுகமொன்றும் கண்டேன்

கூடு போதும்
அந்த சுகம் சாஸ்வதம் என்று
சிறகிருந்தும் பறக்காமல் அடைந்தேன்

பெரும் புயலிலும், பெரும் மழையிலும்
உதிரும் இலைகளும் கிளைகளும்
கிலியை தந்து கூட்டை விட்டு
நெடுந்தூரம் பறந்திட எத்தனித்தாலும்

கூடு தந்த சுகமும் பாதுகாப்பும்
மீண்டும் கூட்டுக்கு
திரும்பும் வழியில் தான்
சிறகை திருப்பின..

புதிதாக துளிர்த்த
இலைகளும் கிளைகளும்
நம்பிக்கையை தர
லேசாக கலைந்த கூட்டை
செப்பனிட்டு
மீண்டும் கூட்டுக்குள் சுகமாய்
முடங்கி கிலிகள் மறந்தேன்.

கோடாலி கொண்டு
வேரை சாய்த்த பின் தான்
கூடு இளைப்பாறலே அன்றி
என்றும் நிரந்ததரமில்லை
பறத்தலே சுகம் என புரிகிறது..

பெண்மை

மழலையில் கரைந்து போகும் குழந்தை உள்ளம் உண்டு
வலிகளை மறந்து சிரிக்கும் வழியும் தெரியும்
காதலில் குழைந்திடும் இதயம் உண்டு
காமத்தில் உடல் அனிச்சையாய் இயங்க
வேடிக்கை பார்க்கும் வெற்று மனமும் உண்டு

பொறாமையில் புழுங்கி வெந்திடும் நெஞ்சம் உண்டு
சிறுமை கண்டு பொங்கிடும் ஆற்றல் உண்டு
அகங்காரத்தில் ஆர்பரிக்கும் கர்வமும் உண்டு
துரோகத்தில் கொதித்து துரோகியை
துவம்சம் செய்திடும் வீரமும் உண்டு

உடைந்து போன உள்ளத்தை ஆறுதல்படுத்தும்
கருணை உண்டு.
கோவத்தில் எரிமலையாய் குமுறிடும்
குணமும் உண்டு
கோபப்பட்ட வேகத்த்தில் குளிர்ந்து போகும்
நேசமும் உண்டு.
அறிவை சிலாகிக்கும் விவேகமும் உண்டு

எல்லாம் இருந்தும் அன்பின் முன
நிராயுதபாணியாக நிற்கும் பெண்மையை
என்ன செய்யவென தெரியவில்லை...