Wednesday 29 October 2014

முரண்

பிறந்த கணத்தில் காற்றை எதிர்ப்பார்த்து
அடுத்த சில நிமிடங்களில் 
வயிற்றுக்கு உணவை எதிர்ப்பார்த்து
கிடைக்கவில்லை என்றால் 
அழுது கவனம் ஈர்த்து
அதன் பின் பின் ஒவ்வொரு கணமும்
ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு உந்தி தள்ள
வாழ்க்கை
மரணம் வரை தொடர
எதிர்பார்ப்புகளற்று இருக்க சொல்வது
என்ன முரண் என புரியவில்லை.

சக்கர வியூகம்

வெளியேறும் வழி தெரியாது
சக்கரவியூகத்தின் வெளியே நின்ற 
அனைவரையும்
தடுத்தோ வெட்டியோ 
தன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து 
உள் சென்று
எல்லா தர்மங்களும் பொய்த்து போக
நிராயுதபாணியாய் நின்ற
வீரஅபிமன்யூவாக தான்
அதிகம் பேர் சிக்கிகொள்கின்றனர்
காதலின் வியூகத்தில்.

கொக்கு

கொக்கின் தவம் 
தன்னை இரையாக்க
என்பது தெரியாமல்
கொக்கின் மேல் பரிதாபம் கொண்டு
அதன் முன் துள்ளி குதித்து
விளையாடி தவம் கலைக்க
முயற்சிக்கும் அப்பாவி மீன்கள்..

மழை

பெருமழைக்கு பயந்து 
விரைந்து செல்லும் வாகனங்கள்
மரம் தேடி ஒதுங்கும் மனிதர்கள்
துள்ளலுடன் ரசித்து செல்லும் யுவதி
குதூகலத்துடன் அம்மாவின் 
கைப்பிடி உதறி குடைக்கு வெளியே
எட்டி பார்க்கும் சிறுபிள்ளை
வியாபாரத்தை கெடுத்துவிட்டதாக
புலம்பும் தெருவோர கடைக்காரர்
டீக்கடையில் நிதானமாக
தேநீர் அருந்தியபடி
போவார் வருவோரை
கண்களாலும் தன் அனுபவத்தாலும்
அளக்கும் மத்திம வயதுக்காரர்
எல்லாரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே
அகத்தின் அரற்றும் அழுகுரல் மறைத்து
நானும் கடந்து செல்கிறேன்.....

Tuesday 28 October 2014

ஆனந்தமே

சேமித்து வைக்கவுமில்லை
செலவழிந்த கவலையுமில்லை
அந்ததந்த கணத்தின் உணர்வுகளை
எந்த இலக்கண இலக்கிய மரபை
பற்றியும் அலட்டிகொள்ளாமல்
வார்த்தைகளாக உதிர்த்து விட்டு
அடுத்ததை நோக்கிய நகர்வுகூட
ஆனந்தமே...

உறவுகள் மதிப்பு

செக்ஸ் கல்வி வேண்டும் வேண்டாம் என்பது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். மனித உறவுகளின் மதிப்பீடுகள் குறித்து நாம் நம்முடன் ஏறக்குறைய முன் பின் வயதில் இருப்பவர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் கண்டிப்பாக சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இன்றைய சமூக வலைதளங்களும் ஊடகங்களும் நம்மை இட்டு செல்கிறது.

முன்பு எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரளவு அதிகம் வெளி உலகுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருந்த உறவு பிறழ்ச்சி (இந்த வார்த்தை பிரயோகம் சரியா என்று தெரியவில்லை) இன்று சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக மாறி வருவது, சமூகமும் தனிமனிதனும் அதை பெரிதுபடுத்தாமல் இதெல்லாம் தவறே இல்லை என்பது போன்ற மாயையை உருவாக்கி குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட மனிதனுக்கு இல்லாமல் செய்கிறதோ என தோன்றுகிறது.

“ ஆண்ட்டி” என்ற வார்த்தையே கேவலப்படுத்தபட்டு விட்டது. முப்பத்தைந்து வயதை கடந்த திருமணமான பெண்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் திருப்தி இல்லாது அலைவது போலவும் யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்பது போலவும் ஊடகங்களும், இணைய தளங்களும் சித்தரித்து கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த லிஸ்டில் அக்கா என்ற உறவையும் சேர்த்தது கொடுமை.

தோழி ஒருவர் இன்பாக்ஸில் லிங்க் அனுப்பி ப்ளாக் செய்ய சொன்ன ஒரு தளத்துக்கு க்ளிக் செய்து ப்ளாக் செய்ய முற்பட்ட போது அதிர்ச்சி. சொல்லவே நா கூசுகிறது அந்த முகநூல் பக்கத்தின் தலைப்பே தாயுடன்.. அருவெருப்பின் உச்சமும் மனதுக்குள் சொல்ல முடியா கோவமும்.. மிருகத்திடம் கூட இல்லாத இந்த வக்கிரம் எப்படி மனிதனுக்குள்?

ஆண்களை மட்டும் குறைசொல்லவில்லை.. ஆண் பெண் ஈர்ப்பு என்பது பொதுவானது. ஆனால் அதை தாண்டி உறவுகளின் மதிப்புகளை பற்றி இரு பாலருமே உணர வேண்டாமா?

உங்களின் தனிப்பட்ட வக்கிரங்களுக்கும், உணர்வுகளுக்கும் உறவுகளை பலியாக்காதீர்கள். அக்கா, அம்மா என்ற வார்த்தைகளை ஆண்கள் அந்த உறவுக்கு உரிய மதிப்பை கொடுக்க முடியும் என்றால் சொல்லுங்கள் இல்லை தயவு செய்து சொல்லாதீர்கள்.. பெண்களுக்கும் அதே தான் உங்களால் ஒரு அண்ணன், தம்பி, மகன் என்ற உறவுக்கான மதிப்பை கொடுக்க முடியுமானால் அப்படி அழையுங்கள். அதை விடுத்து வெறும் வார்த்தைகளாக உபயோகப்படுத்தி பிறரை ஏமாற்றுவதாக நினைத்து உறவின் மதிப்புகளை குறைக்காதீர்கள். நம் அடுத்த தலைமுறைக்கு நல்ல விஷயங்களை கொடுக்கிறோமோ இல்லையோ உறவுகளின் மதிப்புகளையாவது கொண்டு சேர்ப்போம்..

ஆண்கள் சரியில்லை. பெண்கள் சரியில்லை என்று பஞ்சாயத்துக்காக இந்த பதிவை இடவில்லை.. இருப்பாலரும் உறவுகளின் மதிப்புகளை பற்றி கொஞ்சம் யோசியுங்கள் என்று சொல்ல தான்..

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளங்கள் நல்ல பல விஷயங்களுக்கு வாசல் திறந்திருப்பது ஒரு புறம் இருக்க மோசமான சில விஷயங்களுக்கும் வாசல் திறந்து விட்டிருக்கிறது. அதில் ஒன்று உறவுமுறைகளை எந்தளவு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவு கொச்சைப்படுத்துவது.. நடப்பது தானே என்று சொல்பவர்கள் நடப்பதை எல்லாம் நாம் ஏற்று கொள்ளவோ ஆட்டு மந்தைகள் மாதிரி நான் மட்டுமா சொல்றேன் என்று சொல்லும் முன் தான் கொஞ்சம் யோசிக்கலாமே.

சமூக வலைத்தளங்களால் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை “ஆன்ட்டி”. முப்பதைந்துவயது முதல் நாற்பத்தைந்து ஐம்பது வயது வரை இருக்கும் பெண்களை ஆன்ட்டி என்றும் அவர்கள் எல்லாம் திருப்தியில்லா தாம்பத்ய வாழ்க்கை வாழ்வது போலவும் யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்பது போலவும் ஒரு மனப்போக்கு பலருக்கு. நீங்கள் “ஆன்ட்டி” செம கட்டை என்று மட்டமான மனதோடு ஒரு பெண்ணை பார்க்கும் முன் இதெல்லாம் யோசித்து பாருங்கள்.

- அவளின் மகள் அல்லது மகனின் படிப்பு, அல்லது அவர்களின் பருவ மாற்றம் காரணமான ப்ரிச்சனை அந்தப பெண்ணின் மனதை ஆக்கிரமித்து கொண்டிருக்ககூடும்

- திருமண வயதில் பெண் இருந்தால், திருமணம் பற்றிய கவலை இருக்க கூடும்.

- பள்ளி பருவத்திலேயே தன் பெண்/பையன் காதல் வயப்பட்டு இருந்தால் அதை தவறு என்று தன் பெண்/பையனுக்கு புரிய வைக்க போராடி கொண்டு இருக்கலாம்

- குடிபழக்கத்துக்கு அடிமையான கணவர் இருந்தால் அவருடன் போராடி கொண்டு இருக்கலாம்.

- உடல்நிலை சரியில்லாத கணவர் அலல்து குடும்பத்தினரின் கவலைகள் சுமந்து இருக்கலாம்.

- தனக்கு மார்பில் வந்திருக்கும் கட்டி ஹார்மோன் கட்டியா கேன்சர் கட்டியா என தெரியாமல் குழப்பத்தில் இருக்கலாம்.

- கட்டுக்கடங்காமல் போகும் உதிரபோக்கால் பயமும் பீதியும் அடைந்து இருக்கலாம்.

- மாதம் ஒரு முறை சீரான இடைவெளியில் வந்து மூன்று நாட்கள் இருந்து மறையும் மாதாந்திர உதிரபோக்கு மாதம் இருமுறையோ எப்போது வரும் எப்போது நிற்கும் என்றோ சொல்ல முடியாமல் அவளை ஒரு எரிச்சலான மனநிலைக்கு தள்ளி இருக்கலாம்.

- ஹார்மோன் இம்பாலன்ஸ் காரணமாக உடலின் மாற்றங்கள் புரிபடாமல் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் சுமந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கலாம்.

- அந்த கால கட்டத்திலும் ஓய்வில்லாமல் வீட்டில் வேறு யாரும் துணைக்கு இல்லாமல் வீட்டு வேலையும் அலுவலக பணியும் தனி ஒருவளாக சுமப்பவளாக இருக்கலாம்.

- அவள் ஏதோ ஒரு நோயுடன் போராடி கொண்டு இருக்கலாம்

- குடும்பத்தில் சண்டை தீர்க்கமுடியாத சுமையாக மனதை அழுத்தலாம்..

- இந்த சமூக வலைத்தளம் தன் கவலைகளை மறக்க செய்கிறது, மிக பெரும ஆறுதல் என்று வந்திருக்க கூடும்.

இவ்வளவு சாத்தியகூறுகள் இருக்கு. ஒரு பெண் இதை எல்லாம் போர்ட் வைத்து எல்லாருக்கும் தெரியுமாறு தொங்க விட்டு கொண்டு நடமாட முடியாது. எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லி கொண்டும் இருக்க முடியாது. அதனால் வக்கிரங்களை சுமந்து ஆன்ட்டி என்று ஏளனமாக விளிக்கும் முன் அல்லது பிகர் என்றோ கோழி குருடா இருந்தா என்ன என்பது போன்ற வசனங்களை சொல்லும் முன் மேலே சொன்னதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.