Thursday 25 June 2015

நேசத்தின் வாசம்

அறிவியல் கொஞ்சம் அறிவேன்
அழகை ஆராதிக்கவும் செய்வேன்
தத்துவமும் கொஞ்சம் புரியும்
தர்கவாதமும் பேச தெரியும்

பேசுவது கொண்டு
ஆராய்ச்சி செய்து
என் நேசம் கண்டிடவோ
கடந்திடவோ இயலாது

கோட்பாடுகளுக்குள்ளும்
அறிவியலுக்குள்ளும்
தர்கவாதத்துக்குள்ளும்
செல்லாமல்
எல்லா சிந்தனையும் நிறுத்தி
கண் பார்த்து
கைக்கோர்த்து
மடியில் சாய்ந்து
கரைந்து போக
முடியும்போது
என் நேசத்தின் வாசம்
கொஞ்சம் உணரக்கூடும்.

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் - பிரபஞ்சன் - இலக்கிய ஆய்வு கட்டுரை தொகுப்பு

பிரபஞ்சனின் எழுதிய “ ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் “ சிறுகதை தொகுப்பு ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவரின் எழுத்து பிடித்து போக சென்ற வாரம் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிய போது “துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்” புத்தகம் எடுத்தேன். கதை பிடிக்குமளவு எனக்கு கட்டுரைகளும் பிடிக்கும். இந்த புத்தகம் இலக்கிய ஆய்வுக்கட்டுரை அதுவும் சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்த தொகுப்பு என்றவுடன் தெரிந்து கொள்வோம் என்று வாங்கினேன்..

சங்க காலங்களில் பெண்களின் நிலை கொஞ்சம் மேம்பட்டிருக்கும என்று நினைத்து இருந்தேன். ஆனால் படித்த போது சங்க காலத்தில் தான் பெண்கள் அடிமைப்படுத்தும் முறையே தொடங்கி இருக்கிறது என்பது புரிந்தது.
அகநானூறு புறநானுறு தொல்காப்பியம் ஆரம்பித்து பழம் பெரும் காப்பியங்கலான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி வரை இருந்த காப்பிய பெண்கள் பற்றியும், காப்பியங்களின் ஊடாக பெண்களின் நிலை குறித்தும் கட்டுரை பேசுகிறது.

தமிழர் வாழ்வில் வைதீக சடங்குகள் புகுந்ததும் அதன் பின் உண்டான சாதீய பாகுபாடுகள் எப்படி தோற்றுவிக்கப்பட்டது எப்படி பிரித்து உயர்ந்தோர் தாழ்ந்தோர் பிரிவினை பாணர்கள் என்பவர்கள் யார் படித்த புலவர்கள் என்பவர்கள் வந்து அவர்கள் எப்படி மறைந்து போனார்கள் அல்லது திரிந்து போனார்கள, உழைப்பு சுரண்டல் என்பது சங்க காலம் தொட்டே எப்படி இருந்திருக்கிறது என்று பலவற்றையும் அலசி இருக்கிறார்.

பெண்கள் மீதான அடக்குமுறையும் பெண்களின் இலக்கணம் குறித்தும் கற்பு களவு என்று பெண்கள் கைக்கொள்ள வேண்டிய மாண்பு என்று மாய்ந்து மாய்ந்து அடிமைத்தனத்தை திணித்திருக்கிறது. பரத்தையர் பற்றி அவர்கள் எப்படி உருவாகி இருக்ககூடும் அவர்கள் வாழ்க்கை முறை சங்க காலம் தொட்டு மாதவி மணிமேகலை காலம் வரை சொல்லி இருக்கிறார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை குண்டலகேசி என்ற காப்பிய பெண்மணிகளில் குண்டலகேசி மட்டுமே சுயமான பெண்ணாக துணிவான பெண்ணாக காட்டப்பட்டிருப்பதை சுட்டி காட்டுகிறார். அறச்செல்வியாக நாயகியாக காட்டப்படும் மணிமேகலை சுயமாக தன வாழ்வை வாழாமல் தன மீது திணிக்கப்பட்ட பரிதாப வாழ்வை வாழ்ந்ததை சொல்லி இருக்கிறார்.

இக்கட்டுரை தொகுப்பை முழுதும் வாசிக்க சங்க காலம் தொட்டு இருந்த பெண்களின் நிலையை பற்றி நிறைய விஷயங்கள் தெரிநது கொள்ள முடிகிறது.

அமிர்தம் - தி.ஜாவின் நாவல்




 
“ அமிர்தம் தி.ஜானகிராமனின் முதல் நாவல். முத்ல் நாவல் என்பதாலோ என்னவோ ரொம்ப எளிய கதையை எளிய நடையில் எழுதி இருக்கிறார். இவரது மரப்பசு, அம்மா வந்தாள், உயிர்த்தேன் இதெல்லாம் பார்க்கும்போது இது அதிகமாக அகத்துக்குள் பிரயாணிக்காமல் ஒரு நாவலாகவே நின்று விடுகிறது.. தி.ஜா வின் இலக்கிய டச் ரொம்ப பிடிக்கும் இந்த நாவலிலும் அதெல்லாம் அழகாக கொடுத்திருக்கிறார்.

 தாசிக்குலத்தில் பிறந்த அமிர்தம் அந்த வாழ்க்கை பிடிக்காமல் ஒருவனை காதலித்து திருமணம் புரிந்து வாழும் குடும்ப வாழ்கையை விரும்புகிறாள். ஆனால் அவளது தாய் அதற்கு சம்மதிக்காமல் அவளை சபேச முதலியார் என்பவளுக்கு அரங்கு பண்ண பணம் வாங்கி விடுகிறாள். அமிர்தத்தின் அழகில் மயங்கும் நாற்பது வயது சபேச முதலியாரை ஏற்று கொள்ள அமிர்தத்தால் முடியவில்லை அம்மாவிடம் எவ்வளவோ சண்டையிட்டும் அம்மா தன் முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.

அமிர்தம் சபேச முதலியாரிடமே பேசி தன மனமாற்றம் வரும் வரை கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என்கிறாள். அவரும் சம்மதிக்கிறார். இதற்க்கிடையில் அமிர்தத்தின் தாயார் இறந்துவிடுகிறார். சபேச முதலியார் கொஞ்ச நாள் அவள் துக்கம குறையட்டும் என்று பொறுமை காக்கிறார்.

அமிர்தம் இதற்கிடையில் அந்த ஊருக்கு வரும் ஒரு இளைஞனை பார்த்து மையல் கொள்கிறாள். அவனிடம் தான் அந்த தாசி குலத்தில் பிறந்தாலும் இதுநாள் வரை அந்த தொழிலில் ஈடுபடாததை சொல்லி அவனும் திருமணத்துக்கு சம்மதிக்க எதிர்பாராத திருப்பம் வருகிறது.

முடிவில் அமிர்தம் சொத்துக்களை எல்லாம் அநாதை ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்து விட்டு சென்னைக்கு சென்று விடுகிறாள் ஆசிரியையாக..

தி.ஜா வின் சில வரிகள் சபேச முதலியார் அமிர்தம் வீட்டுக்கு வந்துவிட்டு அவள் செயல்களால் புரியாமல் இரவு தனியே நடந்து வரும் போது அவரது மனநிலையை சொல்லி இருக்கும் விதம் அலாதி..

“ அந்த மையிருட்டில் துல்லிய வெள்ளை உடையுடன் முதலியார் ஆவி போல நடந்து போனார். இருளில் பார்வையிழந்த செருப்பு மேட்டிலும், பள்ளத்திலும் சாணத்திலும் விழுந்து தடுமாறி அவரைச் சுமந்து போய்க்கொண்டிருந்தது. எதிரே நடமாட்டமே தெரியவில்லை. கும்மிருட்டுத் தெருவில் போகும்போது, மனிதனாகப் பிறந்த எவனும் சிகப்பு அல்லது கறுப்புச்சேலை உடுத்தியவர்கள் மீதோ, இருட்டில் உலக நினைவற்றுப போய் நிம்மதியாக மூன்றாம் ஜாமத் தூக்கம் தூங்கும் நாய் மீதோ மோதி மிதிக்கும் அனுபவத்தை அடைந்து தானாக வேண்டும். இந்த அனுபவத்திலிருந்து தப்ப முயன்று கொண்டே சென்ற முதலியார் அமிர்தத்தின் நினைவிலிருந்தும் தப்பியிருந்தார்.

அடுத்த தெருவில் விளக்குகள் கருணையுடன் எரிந்து கொண்டு தீராப் பழியாகக் கடமையைச் செலுத்திக் கொண்டிருந்தன. அந்த தெரு வெளிச்சத்தில் வந்ததும், மழை நின்றவுடன் ஒதுங்கியிருந்தவன் மீண்டும் தெருவுக்கு வருவது போல அமிர்தமும் அவர் மனதில் நடக்க ஆரம்பித்தாள்.

இது போல ஆங்காங்கு வரும் தி.ஜா வின் எழுத்து நடைக்காக இந்த நாவலை ரசித்து வாசிக்கலாம்...

Monday 22 June 2015

தேடுகிறேன்

கூடி களைத்த பின
மார்பில
முகம் புதைத்து
உன் அணைப்பில்
ஆசுவாசமடைந்து
மெல்ல தலை நிமிர்த்தி
முகம் பார்க்க
இருவரின் விழிகளிலும்
இதழ்களிலும்
நெளியும் புன்னகை
சொல்லும் காதலை
வடிக்க வார்த்தைகளை தேடுகிறேன்

சிலுவை

என்னை புதைத்து
கனத்த மரச்சிலுவையும்
அறைந்தாயிற்று

தொடர்ந்து பெய்யும்
பெருமழை மரச்சிலுவையை
உதிர்த்து போக செய்யும்
ஒரு நாளில்
உயிர்ப்பெற்று வரக்கூடும்
மென் தென்றலாய்..

Wednesday 10 June 2015

சிதம்பர நினைவுகள் - புத்தகம் பற்றி ஒரு பார்வை..

“ சிதம்பர நினைவுகள்” மலையாளத்தில் பாலசந்திரன் எழுதிய சுள்ளிக்காடு என்ற புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. ஏற்கனவே சைலஜாவின் கல்பபட்டா நாராயணன் நாவலின் மொழி பெயர்ப்பான “சுமத்ரா” வாசித்திருக்கிறேன். என்னை மிகவும் ஈர்த்தது சைலஜாவின் தமிழ் மொழிபெயர்ப்பு நடை. அதனாலேயே இந்த புத்தகத்தில் சைலஜாவின் பெயரை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.
சிதம்பர நினைவுகள் என்ற இந்த நூல் பாலசந்திரன் என்கிற கவிஞர் எழுத்தாளரின் வாழ்க்கை தொகுப்பு. கொஞ்சம் கூட ஒளிவு மறைவின்றி மனத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் வல்லமை இருப்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்னை பொறுத்த வரை.. நம்மால் அப்படி வாழ்வில் ஒரிருவரிடமாவது இருக்க முடியுமா என்பதே சந்தேகம். ஆனால் பாலசந்திரன் அப்படியே மனதில் உள்ள அவருடைய இயலாமையை, வறுமையை, அவமானத்தை, அசிங்கத்தை, காமத்தை, காதலை, சலனத்தை, கொடூரத்தை, அன்பை, எல்லாம் தாம் சந்தித்த மனிதர்களிடம் எதிர்கொண்டதை எல்லாம் சொல்லி இருக்கிறார்.

ஒரு மனிதன் ஒரே பிறப்பில் நல்லவனாக, கேவலமனாவனாக நம்பிக்கைக்குரியவனாக, மட்டமானவனாக எல்லாமாகவும் இருக்கிறான். காலமும் சூழ்நிலைகளும் தான் ஒரு மனிதனை தீர்மானிக்கிறது.. பாலச்சந்திரன் என்கிற மனிதனின் வாழ்க்கை தான்..

மொத்தம் இருபத்தி ஒரு கதைகள் இல்லை கதைகள் இல்லை அவர் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் அவருக்கும் அந்த மனிதர்களுக்கும் இடையே இருந்த வாழ்வியல் தான் அழகிய ஓவியமாக மலர்ந்திருக்கிறது.

முதல் சிதம்பர நினைவுகளில் வயது முதிர்ந்த ஒரு தம்பதியரை நெருங்கி சிதம்பரத்தில் சந்திக்கும் ஆசிரியர் அவர்களுக்கிடையில் இருக்கும் அன்பையும் அன்யோன்யத்தையும் பிரியத்தையும் அந்தவயதிலும் பின்னி பிணைந்திருக்கும் அவர்களிடம் பேசி அவர்கள் கதையை கேட்டு அறிந்த பின் ஆசிரியருக்குள் நடக்கும் ஆத்ம நிறைவும் அவர்களை விட்டு விலகி நாட்கள் கடந்த பின் அந்த இருவரில் முதலில் யார் இறந்திருப்பார்கள் என்று எண்ணி மருகுவதுடன் விடையில்ல்லா கேள்வியாக முடிந்திருக்க்றது..

அப்பா கதை அவருக்கும் அவர் அப்பாவுக்குமான உறவு, அவர் இறந்த பின் அவருக்கு ஈமக்கிரியைகள் நடத்தி வைப்பதும் அப்போது அவரின் மனதில் ஓடும் எண்ணங்களும், துக்கமும் எல்லாம் அவரின் அஸ்தியை கரைக்கும்போது மூழ்கி எழுவதுடன் முடித்திருக்கிறார்.

தீப்பாதி கதையின் சாஹினா பள்ளியில் படித்த காலத்தில் அவளின் அழகில் மயங்கி அவளுக்கு அவளிடம் ஒரு முத்தம் பெற அவள் பள்ளிக்கு செல்லும் படகை கவிழ்த்துவிடுவதாக பயம் காட்டி எல்லார் முன்னிலையிலும் அவளிடம் மிரட்டி வாங்கும் முத்தத்தை திருப்பி கொடுக்கும் அவளுக்கு கொடுக்கும் இடம் சாஹினாவைவிட படிக்கும் நம்மை நெகிழ்த்துகிறது..

காலடிச்சுவடுகள் கடவுளின் பெயரை சொல்லி பிச்சை எடுக்கும் ஒரு வயதான பெண்மணியின் கதை. அவள் மீது பரிதாப்பட்டு அவளுக்கு உணவு கொடுக்கும் ஆசிரியரிடம் அவள் கதையை சொல்லி அழும் அவள் செல்லும் போது விட்டு செல்லும் காலடிச்சுவடுகளை ஆசிரியர்சொல்கிறார்.

பைத்தியக்காரன் கதை மனதை கொஞ்சம் பிசைந்து விட்டது. ஆசிரியரின் இயலாமை மீது கோவம் கொள்ள முடியவில்லை. ஆனால் கோவப்படாமலும் இருக்க முடியவில்லை.. ஆசிரியரின் இளவயதில் உள்ள வசதியான நண்பனை பைத்தியக்காரனாக பார்த்ததும் அதிர்ந்து அவனை அழைத்து போய் குளிக்க வைத்து அழுக்கு ஆடைகளை அகற்றி நல்ல உடைகளை உடுத்த வைத்து அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து கவனிக்கும் ஆசிரியர் அதன் பின் என்ன செய்ய என்று தெரியாமல் அவனை அப்படியே நிராதரவாக விட்டுவிட்டு பேருந்து ஏறி தன் வழி சென்றதை எந்த நியாயப்படுத்தலும் இல்லாமல் சொல்லி இருக்கிறார்.. அதில் தன் நண்பனை பைத்தியமாக பார்க்கும் போது ஆசிரியர் மனதுக்குள் சொல்லும் ஒரு வரி “ வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாக இருந்தது வாழ்க்கை என்று எனக்கு அன்றெனக்கு புரிந்தது”

திருவோணவிருந்து கதையில் பசி என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணர்ந்து சொல்லி இருப்பார். “ மதிப்பு மரியாதையும் விடப் பெரியது பசியும் சோறும்தான்” என்று தன் அனுபவத்தை அப்படியே சிறிது கூட மறைக்காமல் சொல்லி இருக்கறார்.

தான் சந்தித்த நல்ல மனிதனான ஜோசப்பண்ணன் என்பவரை பற்றி சொல்லி இருக்கிறார் நாடகந்தானா அதுவில்

கர்ப்பவதம் கதை வறுமையில் போராடிகொண்டிருக்க மனைவி கர்ப்மடைந்துவிட அதை கலைக்க அவளை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பிறக்காத மகனுக்காக கண்ணீருடன் கவிதை எழுதும் கவிஞனின் இயலாமையை சொல்லி இருக்கிறார்.

கவிஞன் வாழ்வில் சந்தித்த பெண்கள் அக்கம்பக்கம் குடும்ப பெண்ணில் இருந்து தெருவோர வேசி வரை அவர்களும் ஆசிரியரும் சந்திக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களுக்கும் இவருக்குமான நிலைப்பாடுகள் தன் பலகீனங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு தன்னை எண்ணி வெட்கப்படுவது வரை அழகாக ஆணாகிய அவரின் உள்ளக்கிடக்கை கொட்டி இருக்கிறார். அதுவும் கடற்கரையில் சந்திக்கும் வேசியுடன் இவர் பழகும் விதம் அந்த பெண் அந்த நடுஇரவில் பாடும் பாட்டு அவள் மடியில் தம்பியாக தலைவைத்து தூங்கிவிடும் மென்மையான அன்பு அவள் அக்காவாக விடைபெறும்போது கவிஞருக்கு பணம் தந்து செல்ல அதையும் பெற்று கொள்ளும் அவரின் மனம் என்று வெவ்வேறு விதமான ஆணின் உணர்வு தளங்களை அனாயசாமாக அப்படியே கொட்டி இருக்கிறார்.

கமலாதாஸ் பற்றி ஒரு கதை. சமீபத்தில் ஒரு நண்பர் தான் என்னை கமலாதாசின் வாழ்கை கதை படிக்க சொல்லி சொல்லி இருந்தார். பனுவலில் இருக்கும் என்றும் சொல்லி இருந்தார். ஆனால் நான் பனுவலில் இந்த முறை கேட்ட போது இல்லை என்றார்கள். இந்த புத்தகத்தில் அவருடனான சந்திப்பை எழுத்தாளரும் அவருக்கு அன்பை தர சொல்லி சொன்ன ஸ்வீடிஷ் கவிஞரும் கண்டிப்பாக கமலா தாசை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிரார்கள்.

சிவாஜியுடன் ஆசிரியருக்கு உண்டான சந்திப்பை அவருக்குள் சிவாஜி என்கிற மாமனிதர் ஏற்படுத்திய பிரமிப்பை அவருடன் விருந்துண்டதை, கவிஞர் என்று தெரிந்தவுடன் சிவாஜி இவருக்கு கொடுத்த மரியாதையை எல்லாம் அந்த பிரமிப்பு மாறாமல் பகிர்ந்திருக்கிறார்..

சிதம்பர நினைவுகள் வாசித்து முடிக்கும் போது ஏற்படும் உணர்வை என்னவென்று சொல்வது.. ஒரு கவிஞனின் மனிதனின் வாழ்வை சைலஜா தன எழுத்தின் மூலம் அப்படியே உணர வைத்திருக்கிறார் பாலசந்திரனை மிக நெருக்கமாக உணர முடிகிறது வாசித்து முடித்த பின் கண்டிப்பாக நீங்களும் உணரலாம்..