Thursday 30 January 2014

தலைவலியும் நானும்


கிட்டதட்ட இருபது வருடங்களாக தலைவலியுடன் போராடி கொண்டு இருக்கிறேன். அதுவும் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வலியின் உச்ச்கட்டம வரை சென்று தாங்க முடியாமல் அவஸ்தைப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எல்லாம் வலி எப்போது வரும் என்றே தெரியாது திடீரென்று ஆரம்பித்து என்னை குதறி போட்டுவிடும் தொடர் வாந்தி, வாந்தி எடுக்கும்போது மண்டையே வெடித்து விடுவது போல வலிக்கும்..

எல்லா ஸ்கேன்கள், மருத்துவ பரிசோதனைகள் முடிவில் இது மைக்ரேன் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை..ஆனால ஓரளவு வீரியம் குறைக்கலாம் பழக்க வழக்கங்கள் மூலம் தவிர்க்கலாம் என்று கூறினார்கள்..சித்தா, ஆயுர்வேதிக் என்று எல்லா பக்கமும் சென்று கடைசியில் இப்போது வலியின் காரணிகள் தெரிந்து ஓரளவு முன்ஜாக்கிரதையாக இருக்கிறேன் ஆனாலும் சில சமயம் ஆசை அடக்க முடியாமல் எதையாவது தின்று விட்டு அவஸ்த்தைப்பட்டதும் உண்டு..  

மைக்ரேன் என சொல்லப்படும் தலைவலிகளுக்கான காரணங்களாக டாக்டர்கள் கூறுவதும் அதில் நான் அவஸ்தைபடுவதும். தலைவலியை தவிர்க்கவும், வந்த பின் நான் செய்வதையும் பகிர்கிறேன்..

-          ஒவ்வாமை..இது உணவு, வாசனை, சத்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எனக்கு கொக்கோ, சோயா சாப்பிட்டால் கண்டிப்பாக தலைவலியும் வாந்தியும் உண்டு (அப்படியும் நாக்கு ருசிக்காக ப்ளாக் பாரஸ்ட் pure கொக்கோ கேக் சாப்பிட்டு அவஸ்தை பட்டிருக்கிறேன்)

-          கண்டிப்பாக வெயிலில் வெளியில் செல்லமாட்டேன்..அதிக சத்தம் உள்ள இடங்களை தவிர்த்து விடுவேன். ஆர்கெஸ்ட்ரா, கோவில் திருவிழாவில் போடும் ஸ்பீக்கர் சத்தம் கொடுக்கும் வலி சொல்லி மாளாது..இதனாலேயே சினிமா தியேட்டர் பக்கம் செல்வதில்லை.

-          அதிக வாசனையுடைய எதுவுமே பிரட்டலை, தலைவலியை உண்டாகும்.. அதுவும் குறிப்பாக சில பர்பியூம்கள் கொடுக்கும் தலைவலி ரொம்ப அதிகம்..

-          அதிகம் தூங்கவும் கூடாது, அதிகம் விழித்திருக்கவும் கூடாது.. சரியான நேரத்தில் சாப்பாடு, சரியான நேரத்தில் தூக்கம் இவை இரண்டும் இல்லை என்றால் தொலைந்தேன்..
-          டென்ஷனால் வரும் தலைவலி, மாதாந்திர சுழற்சியில் ஹார்மோர்ன் மாறுபாடால் வரும் தலைவலி என்று என்ன தான் நாம் முன்னேச்செரிக்கையாக இருந்தாலும் வந்து சில சமயம் கபடி ஆடிவிட்டு தான் போகும்..

-          தலைவலி வந்தபின் சத்தம், வெளிச்சம் எதுவும் இல்லாத அறையில் ஏசியை மிதமாக வைத்துவிட்டு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை போட்டு தூங்கி எழுந்தால் ஓரளவு பலன் கிடைக்கிறது..


-          முன்பு அளவுக்கு இப்போது அவ்வளவு தீவிரமாக எனக்கு தலைவலி வருவதில்லை.. வலியின் வீரியம் குறைந்துவிட்டதா இல்லை நான் வலிக்கு பழகிவிட்டேனா என்று தெரியவில்லை.. அல்லது ஓரளவு எனக்கு ஸ்ட்ரெஸ் தற்போது நிறைய குறைந்திருக்கிறது.. அது காரணமா தெரியவில்லை.. 

Monday 27 January 2014

நானும் சேலையும்

ரொம்ப அழகான ஆடை எது பெண்களுக்கு அப்படின்னா கண்ணை மூடிட்டு சேலை அப்படின்னு சொல்லிடுவாங்க... சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு தொடங்கி செந்தமிழ் நாட்டு தமிழச்சின்னா சேலை உடுத்த தெரிஞ்சிருக்கணும் இல்லைன்னா அவள் தமிழ் பெண்ணே இல்லை என்பது போல பிம்பம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.. ஆனால் அந்த சேலை கட்டி அல்லது கட்டும் ஆரம்ப காலகட்டங்களில் அந்த பெண்கள் அடைந்திருக்கும் மன உளைச்சல்கள் எவ்வளவு தெரியுமா??

ஒன்றா இரண்டு எடுத்து சொல்ல அப்படின்றா போல நிறைய நிறைய,, அம்மா பாட்டி எல்லாம் கட்ட தானே செஞ்சாங்க என்னவோ ரொம்ப தான் அலட்டிக்கிறீங்க அப்படின்றவங்களுக்கு அம்மா பாட்டி எல்லாம் சேலை கட்டிக்கிட்டு காலை ஆறு மணி, ஏழு மணிக்கே சமைத்து வெந்து வேகாததை டப்பால அடைச்சுகிட்டு ட்ரெயன் பஸ் பிடிக்க ஓடல... ஓடுறவங்களுக்கு தெரியும் அது எவ்வளவு கஷ்டம்ன்னு..

திருமணம் வரை சேலை கட்டியதில்லை. திருமணத்தின் போது வந்து இருந்தவர்கள் உறவினர்கள் உபயத்தில் ஏதோ கொஞ்சம் கட்டி, சொருகி அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருந்தேன்.. இரண்டாம் நாள் மறுவீட்டுக்கு வந்த என் கணவர் போர் அடிக்குது என்று சினிமாவுக்கு கூப்பிட நானும் சினிமா ஆசையில் சரி என்று கிளம்பிவிட்டேன்.. திருமணம் ஆகி இரண்டாம் நாள் தான் என்பதால் சேலை தான் கட்டி செல்ல வேண்டும் என்று என் அம்மா சொல்லி சேலையும் கட்டிவிட்டார்கள்.. அவர்களுக்கு பின் பண்ண எல்லாம் தெரியாது.. இறுக்கி பிடித்து கட்டி விட்டார்கள்..

இடைவேளையின் போது கொஞ்சம் இறுக்கம் குறைக்க முயற்சிக்க புடவை அவிழ்ந்துவிட்டது எப்படி கட்ட என்று தெரியவில்லை..ஒரு வழியாக சொருகி சீட்டில் வந்து உட்கார்ந்துவிட்டேன்.. அவஸ்தை ஆரம்பித்து அடி எது நுனி எது புரியவில்லை எப்படி வெளியில் வந்து வீடு போய் சேர போகிறோம் அப்போது எல்லாம் ஆட்டோக்கள், டாக்சிகள் கிடையாது எங்கள் ஊரில் டவுன் பஸ் தான்.. நான் நெளிவதை பார்த்து என் கணவர் என்ன என்று கேட்க புடவை அவிழ்ந்துவிட்டது என்று சொன்னேன் அதற்கு அதனால் என்ன பாத்ரூம் போய் கட்டிவா என்றார் நான் அழுதுவிடுவது போல எனக்கு கட்ட தெரியாது என்றேன்..
என் கணவர் அதுக்கு நீ ஏன் அழுவுற நான் இல்லை அழுவனும் என்று நொந்து கொண்டு சரி வா படம் முடியும் போது கூட்டம் அதிகமாக வெளியே வரும் நாம் இப்போதே கிளம்பிவிடலாம் என்று சொல்ல அள்ளி கையில் பிடித்து கொண்டே வெளியே வந்தேன்.. வெளியே வரும்போது அங்கு பெருக்கும் ஒரு அம்மா தென்பட என் கணவர் போய் விஷயம் சொல்ல அந்தம்மா கட்டிவிட வீடு வந்து சேர்ந்தேன்..

என் கணவர் எப்போ உனக்கு புடவை கட்ட சரியா வருதோ அப்போ கட்டு அதுவரை எது வேண்டுமானாலும் போட்டுக்கோ ஆனால் இப்படி எல்லாம் வந்து அழுவாத என்று சொல்ல அதை வீட்டில் வேறு வந்து சொல்லி வெறுப்பேற்ற சேலை இப்படி தான் டெரராக என் வாழ்வில் நுழைந்தது.. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்தும் இன்று வரை சில பல நேரங்களில் பயமுறுத்தி கொண்டு தான் இருக்கிறது

நானும் ஆடைகளும்

நானும் ஆடைகளும்:

ஆடைகளின் அணிவகுப்பு பிறந்தவுடனே தொடங்கி விட்டாலும் எனக்கு நினைவில் ஆரம்பிப்பது பள்ளி பிராயத்து சீருடைகள்..என் முதல் பள்ளி சீருடை”pinafore” என்று அழைக்கப்படும் வகையான உடைகள்.. வெள்ளை அரை கை சட்டையும் அதன் மேல் சிகப்பு ஹாப் ப்ராக்குமாக இருக்கும்.. அதற்கு மேட்சாக வெள்ளை அல்லது சிகப்பு கலரில் முத்து தோடுகள், சிகப்பு ரிப்பன், கருப்பு சூ. ஐந்தாம் வகுப்பு வரை இந்த உடையும் வெள்ளி கிழமை முழு வெள்ளை “Pinafore” தான் அதிகம் அணிந்தது..அதை தாண்டி அப்போது உடை பற்றிய பெரிய நியாபகங்கள் இல்லை..

பின் ஆறாம் வகுப்பு வந்த பின் பச்சை ஸ்கர்ட்டும், மஞ்சள் சட்டையும் எட்டாம் வகுப்பு வரை. எட்டாம் வகுப்பிற்கு பின் கண்டிப்பாக பாவாடை சட்டை. சில பிள்ளைகள் தாவணி அணிந்து வரவேண்டும் என்பது வலுக்கட்டாயமாக சொல்லப்படும்.. அந்த கால கட்டங்களில் தான் உடை பற்றி கொஞ்சம் அக்கறை அப்போது மாடர்ன் ட்ரஸ் எல்லாம் கிடையாது.. பாவாடை சட்டை தான் பெரும்பாலும் பூ போட்ட பாவாடை சட்டை மட்டுமே.. பாவாடை கட்டினால் கயிறு மேலே ஒன்று கீழே ஒன்று இறங்கி சில சமயம் முடிச்சு படு முடிச்சாகி ரொம்ப அவஸ்த்தைப்படுத்தும். அத்துடன் பாவாடை கட்டி கொண்டு சைக்கிள் ஓட்டினால் எதிர் காற்றில் ஒரு கையால் இழுத்து விட்டு கொண்டு மகா அவஸ்தை..

இப்படி இருக்க எங்கள் எட்டாம் வகுப்பில் தான் இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வந்தது இங்கு பள்ளிகளில் சேர்ந்தது.. அவர்கள் மிடியும், சுடியும் அணிந்து வர எங்களுக்குள்ளும் ஆசை துளிர்விட ஆரம்பித்தது.. வீட்டில் எப்படியோ கெஞ்சி கூத்தாடி ஒரு சுடிதார் வாங்கி விட்டேன்.. அதை சும்மா போட்டு சென்றால் அதற்கு மரியாதை உண்டா அதற்காக ஹீல்ஸ் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி ஏற்கனவே குதிரை மாதிரி நடப்பா உங்க பொண்ணு இதில் ஹீல்ஸ் வேற கேக்குதா என்று அப்பாவுக்கு ரெண்டு அர்ச்சனை வேறு..

முதல் முறை சுடிதார் போடும் போது அதில் ஒரு பெருமை மட்டுமே எங்கள் ஊரில் எல்லாரும் பாவாடை சட்டையில் இருக்க நாம் சுடிதார் போடுகிறோம் என்று ஆனால் சைக்கிள் ஒட்டிய போது வாலிபால் விளையாடிய போது தோன்றியது அந்த உடையின் வசதி..ஆனாலும் வீட்டில் ஏதோ ஆசைக்கு வாங்கி கொடுத்தோம் அவ்வளவு தான் பொம்பளை பிள்ளையா லட்சணமா தாவணி போடு என்று குரல் ஓங்கி ஒலிக்க வேறு வழி இல்லாமல் தாவணிக்கு மாறினேன்.. தாவணி அழகு தான் என்றாலும் திரும்ப பாவாடை நாடா அவஸ்தையுடன் மாராப்பை இழுத்து விடும் அவஸ்தையும் தொடங்க உடை ஒரு எரிச்சலாகவே மாறிவிட்டது..

அடுத்து திருமணம். இருபது வருடஙகள் முன் திருமணமாகிவிட்டால் அப்புறம சேலை தவிர வேறு உடை உண்டா அதுவும் கும்பகோணம் போன்ற ஊர்களில்.. எப்படியோ அள்ளி அள்ளி கொஞ்சம் சொருகி வைப்பேன்.. இரவில் சேலையை அவிழ்த்து விட்டு கணவரின் சட்டை அதில் கொஞ்சம் comfort comfort உணர்வேன். இப்படியாக ஏதோ ஒரு போராட்டத்துடன் தான் நானும் உடைகளும்.
    
அதன் பின் சென்னை வந்தேன்.. ஹப்பா முதல் சுதந்திரம் ஆடை சுதந்திரம் தான்.. என் கணவர் உன் விருப்பம், உனக்கு எது சௌகரியமோ அதை உடுத்திக்கோ.. உனக்கு தெரியும் எது போடலாம் எது வேண்டாம் என்று சொல்லி முதல் முறை இரண்டு சுடிதாரும் (அப்போது ரெடிமேட் தான் மெட்டிரியல் எல்லாம் இல்லை.. என் உயரத்துக்கு கிடைக்க அப்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்) இரண்டு நைட்டியும் வாங்கி தந்தார்கள்...சுடிதார் உடுத்த அப்போது அடைந்த ஆனந்தம் இருக்கே வார்த்தையில் சொல்ல முடியாது.. பரபரவென்று இருக்கும் நான் சென்னையில் ஓட சுற்ற வசதியாக இருந்தது..  

அதன் பின் ஆடைகள் என் இஷ்டம் என்று ஆன பின் எனக்கு எதெல்லாம் சௌகரியமாக இருக்கோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க ஆரம்பித்து விட்டேன் சேலை அழகு தான் ஆனால் அவசரத்துக்கு உடுத்த பிரயாணத்தின் போது எல்லாம் சுத்தபப்டாது.. சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ் போன்றவை வேலைக்கும் (இப்போது கொஞ்சம் சேலைகளும் அதிகம் கட்ட ஆரம்பித்திருக்கிறேன்.. காலையில் கிடைக்கும் நேரம் பொருத்து) சென்னைக்கும் என்றும், டைட்ஸ், இன்னும் சற்று மாடர்ன் ட்ரெஸ்கள் டூர் போகும்போதும் என்று வகை பிரித்து  விதவிதமாக உடுத்தி மகிழ்கிறேன்..ஓரளவு ஆடையில் எதெல்லாம் அணிய ஆசைப்பட்டேனோ அதை எல்லாம் அணிந்து விட்டேன்... J J J