Tuesday 3 November 2015

பேரன்பு

காற்றில் கரையும் கற்பூரமாய்
காணாமல் போகிறாய்
அழுது உருகி ஈரம் வற்றி
பாலையாய் வெடித்து
ஏகாந்தம் நோக்கி
வெறித்து கிடக்க
எதிர்பாரா தருணமொன்றில் பெருமழையென பொழிந்த
உன் அன்பில்
குழைந்த கணத்தில்
விரிசல்கள் சுவடற்று மறைய
குளிர்ந்து முளைக்க தொடங்குகிறது
பேரன்பின் விதை

இது தான் வாழ்கை - பஞ்சாபி கதையின் மொழிபெயர்ப்பு



இதுதான் நம் வாழ்க்கை தலீப் கௌர் டிவானா எழுதிய பஞ்சாபி நாவலின் மொழிபெயர்ப்பு. நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு.எனக்கு மொழிபெயர்ப்பு நாவல்கள் மேல் தனி மோகமுண்டு. மொழி பெயர்ப்பின் மூலம் முற்றலும் நமக்கு தெரியாத மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் எல்லாம் தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம். மொழிப்பெயர்ப்பு உணர்வை துல்லியமாக பிரதிபலிக்காது என்ற கூற்று இருக்கும்போதும் வேறு ஒரு மொழி இடம் சார்ந்த வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் மொழிப்பெயர்ப்பின் மீது ஈர்ப்பு குறையாமல் வைத்திருக்கிறது.

பானோ என்கிற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் கங்கையில் தற்கொலைக்கு முயல அவளை நாராயணன் என்கிறவன் காப்பாற்றி அவன் வீட்டுக்கு கூட்டி வருவதில் கதை தொடங்குகிறது. பானோ ஏற்கனவே திருமணமானவள் கணவர் இறந்துவிட கணவரின் தம்பிகள் அவளை அடைய முயற்சிக்க அது பிடிக்காமல் அப்பா வீட்டுக்கு வருகிறாள். ஒரே தம்பி நோய வாய்ப்பட்டு கிடக்க அவனுக்கு வைத்தியம் செய்வதில் அவர் தந்தை தன்னிடம் இருக்கும் எருது, நிலம் எல்லாம் வைத்தியத்துக்காக செலவு செய்தும் அவன் பிழைக்காமல் இறந்து விடுகிறான். 

அந்த ஊரில் பெண்களை விற்கும் பழக்கம் இருக்கிறது. பானோவின் தந்தை அவளை விற்றுவிட முனைய அப்போது தான் கங்கையில் உயிரை மாயத்து கொள்ள முயற்சிக்க காப்பாற்றபடுகிறாள் நாராயணனால். நாராயணனும் குடிகாரம் ஹூக்கா, மது என்று போதையில் கிடப்பவன். பெண்கள் யாருமில்லாத அந்த வீட்டுக்கு வரும் பானோ அந்த வீட்டை சீராக்குகிறாள். இவன் குடிகாரன் என்பதால் குத்தகைக்காரர்கள் சரியாக கணக்கு தராமல் ஏமாற்ற இவள் எல்லாம் சீராக்குகிறாள் ஆனாலும் நாராயணனிடம் மனம் ஒட்டாமல் அவள் முன்னாள் கணவன் சரவணன் நினைவிலேயே இருக்கிறாள். அவனுக்கு மனைவியாக இல்லாமல் ஆனால் அந்த வீட்டில் ஒருத்தியாக ஒன்றுகிறாள். நாராயணன் எவ்வளவு முயற்சித்தும் அவனிடம் ஒட்டாமல் இருக்கிறாள்.

நாராயணின் குடிகார நண்பர்கள் ஆசை காட்டி அவளை இழுக்க முயற்சிக்க அவர்களிடம் இருந்து போராடி தப்பிக்கிறாள். அதன் பின் குருத்துவாரிலேயே பலியாக பூசை பஜனை என்று இருக்க அந்த பூசாரியும் ஒரு நாள் அவளை அடைய முயற்சிக்க அங்கு போவதையும் குறைத்து கொள்கிறாள். இதற்கிடையில் அவள் கணவர் வாரிசுக்காக வேறு திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்கிறான்.
திக்பிரமை பிடித்தாற்போல பானோ வீட்டு வேலைகள் செய்ய மயக்கமுற்று கீழே விழுந்து மண்டை உடைகிறது. மருத்துவமனையில் ஒன்றரை மாதம் போல தங்கி சிகிச்சை பெறுகிறாள். தினமும் சாப்பாடு கொண்டு வந்து தருகிறான் நாராயணன். சிகிச்சை முடிந்து வீடு வரும் போது வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்திருப்பது தெரிகிறது. மனம் கனக்கிறது எதுவும் செய்ய இயலா கையாலாகாத்தனத்துடன் தன படுக்கையை மொட்டை மாடிக்கு மாற்றி கொள்கிறாள்.

குழந்தை பிறக்கிறது. இவள் இளைய தாரத்தின் ஏச்சுக்கும பேச்சுக்கும் ஆளாகிறாள். கடைசியில் நாராயணன் பாவனாவை வேறு ஒருவனுக்கு விற்று விடுகிறான். வாங்குபவன் வரும் போது உணர்ச்சியற்று நடை பிணமாக அவன் பின் செல்கிறாள். 

இது கதை மட்டுமே இதில் எழுத படிக்க தெரியாமல் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமே தெரிந்த பஞ்சாப் கிராமத்து பெண்களின் நிலை கண் முன் விரிகிறது. ஏறக்குறைய அநேக இந்திய பெண்களின் நிலை சற்று முன்பின்னாக இப்படி தான் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த நாவலில் ஸிந்தியாக வரும் பக்கத்து வீட்டு பெண்ணும் பாவனாவும் உரையாடும் இடங்களில் எல்லாம் பெண்களின் அறியாமையும், ஆண்களை சார்ந்திருக்கும் பெண்களின் நிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம். நாராயணன் குடித்து வந்து பாவனாவை அடிக்குமிடம் அனாதையாக போக்கிடம் இல்லாத பாவனா கங்கையிலேயே மூழ்கி செத்திருக்கலாம் உயிரோடு இருப்பதனால் என்ன சுகம் என்ற ரீதியில் சிந்தனை ஓடவிட பெண்களின் நிலை மனதை அழுத்துகிறது.

நாராயணன் ஒன்றும் கொடுமைக்காரன் இல்லை பாவனாவிடம் அவன் நன்றாக தான் பேசுகிறான் அன்பாகவும் இருக்கிறான் என்கிற போதிலும் அவளை பற்றி அவன் குடிகார நண்பன் சொன்ன பேச்சை கேட்டு அடிக்கும்போதும் பின் தவறு உணர்ந்து அவளுக்கு ஒத்தடம் கொடுப்பதும் அவன் திருமணம் செய்து கொள்வதும் புதிதாக வந்தவள் கொடுமைப்படுத்த அவளை கண்டித்து பாவனாவிடம் இரக்கம் காட்டினாலும் கையாலாகாதனத்துடன் அவளை வேறு ஒருவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் அங்கு ஆண்கள் எல்லாம் இப்படி தான் இதெல்லாம் சகஜம் தான் என்று ஆசிரியர் சொல்லி இருப்பதன் மூலம் சராசரி இந்திய ஆணின் மனநிலையை நாராயணன் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

Sunday 1 November 2015

பைத்திய ருசி - கணேசகுமாரன் புத்தகம் பற்றி ஒரு பார்வை



“பைத்திய ருசி” கணேசகுமாரன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. தக்கை வெளியீடு. அவரின் பதினைந்து சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. எல்லா கதைகளும் மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சத்தை நூலிழை போலும், மெழுகுவர்த்தி போலும், சில இடங்களில் சூரிய வெளிச்சத்துக்கு ஒப்பான வெளிச்சத்தையும் பாய்ச்சி இருக்கிறார் எழுத்தாளர். சில இருண்ட பக்கங்களை திடுக்கிடலுடன் தான் கடக்க முடிகிறது.

"பாதரச பூனைகளின் நடனம்" அணு உலை பற்றிய உண்மையை வரலாற்று உண்மையுடன் புனைய பட்டிருக்கும் விதத்தில் இருக்கும் உண்மை அடிவயிற்றில் அச்சத்தை உறைய வைக்கிறது." இசை " கதையில் பீத்தோவன் இசைக்கு பின் இருக்கும் கதையில் இலக்கியம் பீத்தோவன் இசை போல அவ்வளவு அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. 

எத்தனை விதமான உணர்வு சிக்கல்களில் மனிதன் அலைக்கழிக்கப்படுகிறான். அதில் சிலவற்றை ஆசிரியர் தம் எழுத்தின் வன்மையால் வாசிப்பவர் மனதில் ஆழ பதிய வைக்க முயற்சித்திருக்கிறார். அதில் ஒன்று சந்திரன் பானுமதி மற்றும் வில்சன் கதையில் வரும் ஓரினச்சேர்க்கை மனிதனின் உணர்வுகளை எழுத்தில் கையாண்டிருக்கும் விதம்.

"பைத்திய ருசி" கதை (!) யில், (கதை அல்ல வாசிக்கும் போது உணர முடியும்) இருந்து மீண்டு வர எனக்கு நீண்ட நேரம் பிடித்தது.

"அக்காக்களின் கதை" எளிய நடையில் ஒரு மத்திய தர குடும்பத்தில் வளரு"ம் பெண்களுடன் வளரும் தம்பியின் பார்வையில் மிக யதார்த்த நடையில் யதார்த்தங்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது. இக்கதை நம்மை சுற்றி இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அல்லது நாம் கடந்து கொண்டிருக்கும் நண்பர்களின் குடும்பங்களின் அல்லது நம் குடும்பங்களில் கூட நடக்கும் கதை தான். சொல்லப்பட்டிருக்கும் விதம் கொடுக்கும் உணர்வு நன்றாக இருக்கிறது.

தந்தூரி கசானா 400 ரூபாய் கதையில் பிழைப்புக்காக இலட்சியத்துடன் சென்னை வந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் இளைஞனின் பசி பசியுடன் மயங்கி விழும் அவனின் நினைவில் தேடிச்சோறு தினம் தின்று பாடலுடன் மயங்கி விழுவதாக அந்த கதையை முடித்திருக்கும் விதம் பசியின் வலியை உணர முடிந்தது.

"கொம்பன்" கதை மனிதனின் பேராசையை வீரம் என்ற பெயரில் அவன் கொன்று குவிக்கும் பிற உயிரை இயற்கையை சூறையாடி மிருகங்களை நிலை குலைய செய்யும் மனிதனின் சுயநலத்தை வாசிக்க குருதி உயிர்களை நேசிக்கும் எல்லார் இதயத்திலும் வரும்.

"அழுகிய புத்தனிடம் சொன்ன கதை" காலம்காலமாக மனிதனின் மனதில் உறைந்திருக்கும் குரூரம் எதேச்சையாக பார்க்கும் ஒரு சின்ன பெண்ணின் மனப்பிறழ்வை சொல்கிறது.

"அண்ணகர் கதை" எனக்கு புரிந்துகொள்ள சற்று கடினமாக இருந்தது." மார்ச் 13" என்று சில கதைகளில் முழுக்க முழுக்க இலக்கிய ருசியே இருப்பதால் கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. எல்லா கதையும் அக்காக்களின் கதை போல எளிமையாக இருக்க வேண்டுமென்று இல்லை ஆனால் ""தேவைதைக்கு வாழ்க்கைப்பட்டவன்" போன்று எளிதில் புரிந்து கொள்ளுமாறு இருந்திருக்கலாமே என்று தோன்றியது.