Sunday 1 November 2015

பைத்திய ருசி - கணேசகுமாரன் புத்தகம் பற்றி ஒரு பார்வை



“பைத்திய ருசி” கணேசகுமாரன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. தக்கை வெளியீடு. அவரின் பதினைந்து சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. எல்லா கதைகளும் மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சத்தை நூலிழை போலும், மெழுகுவர்த்தி போலும், சில இடங்களில் சூரிய வெளிச்சத்துக்கு ஒப்பான வெளிச்சத்தையும் பாய்ச்சி இருக்கிறார் எழுத்தாளர். சில இருண்ட பக்கங்களை திடுக்கிடலுடன் தான் கடக்க முடிகிறது.

"பாதரச பூனைகளின் நடனம்" அணு உலை பற்றிய உண்மையை வரலாற்று உண்மையுடன் புனைய பட்டிருக்கும் விதத்தில் இருக்கும் உண்மை அடிவயிற்றில் அச்சத்தை உறைய வைக்கிறது." இசை " கதையில் பீத்தோவன் இசைக்கு பின் இருக்கும் கதையில் இலக்கியம் பீத்தோவன் இசை போல அவ்வளவு அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. 

எத்தனை விதமான உணர்வு சிக்கல்களில் மனிதன் அலைக்கழிக்கப்படுகிறான். அதில் சிலவற்றை ஆசிரியர் தம் எழுத்தின் வன்மையால் வாசிப்பவர் மனதில் ஆழ பதிய வைக்க முயற்சித்திருக்கிறார். அதில் ஒன்று சந்திரன் பானுமதி மற்றும் வில்சன் கதையில் வரும் ஓரினச்சேர்க்கை மனிதனின் உணர்வுகளை எழுத்தில் கையாண்டிருக்கும் விதம்.

"பைத்திய ருசி" கதை (!) யில், (கதை அல்ல வாசிக்கும் போது உணர முடியும்) இருந்து மீண்டு வர எனக்கு நீண்ட நேரம் பிடித்தது.

"அக்காக்களின் கதை" எளிய நடையில் ஒரு மத்திய தர குடும்பத்தில் வளரு"ம் பெண்களுடன் வளரும் தம்பியின் பார்வையில் மிக யதார்த்த நடையில் யதார்த்தங்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது. இக்கதை நம்மை சுற்றி இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அல்லது நாம் கடந்து கொண்டிருக்கும் நண்பர்களின் குடும்பங்களின் அல்லது நம் குடும்பங்களில் கூட நடக்கும் கதை தான். சொல்லப்பட்டிருக்கும் விதம் கொடுக்கும் உணர்வு நன்றாக இருக்கிறது.

தந்தூரி கசானா 400 ரூபாய் கதையில் பிழைப்புக்காக இலட்சியத்துடன் சென்னை வந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் இளைஞனின் பசி பசியுடன் மயங்கி விழும் அவனின் நினைவில் தேடிச்சோறு தினம் தின்று பாடலுடன் மயங்கி விழுவதாக அந்த கதையை முடித்திருக்கும் விதம் பசியின் வலியை உணர முடிந்தது.

"கொம்பன்" கதை மனிதனின் பேராசையை வீரம் என்ற பெயரில் அவன் கொன்று குவிக்கும் பிற உயிரை இயற்கையை சூறையாடி மிருகங்களை நிலை குலைய செய்யும் மனிதனின் சுயநலத்தை வாசிக்க குருதி உயிர்களை நேசிக்கும் எல்லார் இதயத்திலும் வரும்.

"அழுகிய புத்தனிடம் சொன்ன கதை" காலம்காலமாக மனிதனின் மனதில் உறைந்திருக்கும் குரூரம் எதேச்சையாக பார்க்கும் ஒரு சின்ன பெண்ணின் மனப்பிறழ்வை சொல்கிறது.

"அண்ணகர் கதை" எனக்கு புரிந்துகொள்ள சற்று கடினமாக இருந்தது." மார்ச் 13" என்று சில கதைகளில் முழுக்க முழுக்க இலக்கிய ருசியே இருப்பதால் கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. எல்லா கதையும் அக்காக்களின் கதை போல எளிமையாக இருக்க வேண்டுமென்று இல்லை ஆனால் ""தேவைதைக்கு வாழ்க்கைப்பட்டவன்" போன்று எளிதில் புரிந்து கொள்ளுமாறு இருந்திருக்கலாமே என்று தோன்றியது.

2 comments: