Sunday 27 December 2015

“ செஸர்யோஷா” - வேரா பானோவா - ரஷ்ய மொழிப்பெயர்ப்பு பற்றிய ஒரு பார்வை

“ செஸர்யோஷா” வேரா பானோவா என்ற ருஷ்ய எழுத்தாளரின் படைப்பு. கதையின் நாயகன் செஸர்யோஷா என்ற ஐந்து வயதுக்குள் இருக்கும் சிறுவன் தான். இவ்வளவு துல்லியமாக ஒரு குழந்தையின் உலகத்துக்குள் வளர்ந்துவிட்ட மனிதர்களால் ஊடுருவ முடியுமா என்று ஆச்சரியமும்., தான் மட்டும் ஊடுருவாமல் வாசிப்பவரையும் அதற்குள் ஊடுருவ செய்ய முடியுமா என்ற பிரமிப்பும் இன்னும் அகலவில்லை.

செஸர்யோஷாவின் உலகம் ஒரு ருஷ்ய கிராமத்தில் ஆரம்பிக்கிறது. தாய் மற்றும் பாசா அத்தை, லுக்யானிச் மாமா ஆகியோருடன் வசிக்கிறான். அவனுக்கு தந்தை கிடையாது. அதை பெரிதாக உணர தெரியவில்லை. அந்த தெரு குழந்தைகளுடன் விளையாடுவதும் அத்தை அம்மாவிடம் கதை கேட்பதும், தன்னை சுற்றியுள்ள உலகத்தை உற்று கவனிப்பதும், எல்லாவற்றையும் வியந்து ஆச்சரியப்படவும் பிற உயிரினங்களில் சிலவற்றை கண்டு பயப்படுவதும, சிலவற்றுடன் நட்பு பாராட்டுவதும் எங்காவது ஏறுவதும் கீழே விழுவதும் அதை அவன் பார்வையில் இருந்து பெரிய விஷயமாக பார்ப்பதும் பெரியவர்கள் அவனின் பெரிய விஷயத்தை சின்ன விஷயமாக நினைப்பதுவும், ஓடத்தில் ஏறி தண்ணீரில் விழுவதும் நீச்சல் தெரியாமல் காப்பாற்றப்படுவதும் அதை அவன் பார்வையில் என்று கதை விரியும் கோணத்தில் நாம் ரஷ்ய கிராமத்தில் அந்த சிறுவனுடன் சிறுவனின் உணர்வுகளில் ஒன்றிவிடுகிறோம.

ஒருநாள் செஸர்யோஷாவின் தாயார் அவனை கூப்பிட்டு உனக்கு அப்பா வரப்போகிறார் என்கிறாள். தாயின் முழங்காலுக்கிடையில் நின்று குழம்பி அம்மாவை பார்க்கிறான். அம்மா அப்பா வந்தால் என்னவெல்லாம் அவனுக்கு கிடைக்கும் என சொல்ல அவன் சந்தோசமாகி தன் சக நண்பர்களுடன் பெருமை பட்டு கொள்கிறான். ஆனால் நண்பர்களில் சிலர் அப்படி எல்லாம் இல்லை அப்பா என்றால் தோல் பெல்ட்டால் விளாசுவார் என்று சொல்ல பயப்படுகிறான். கொரஸ்தெல்யான் என்ற முன்னாள் இராணுவ வீரனும் இந்நாள் பண்ணை உயரதிகாரியும் தான் தந்தை என்று தாய் சொல்கிறார். ஏகப்பட்ட கலக்கம் இருந்தாலும் வீடே அவனை வரவேற்க தயாராகும் நிகழ்வில் சிறுவனும் கரைந்துவிடுகிறான்.

கொரஸ்தெல்யா வீட்டுக்கு வர அவன் செஸர்யோஷாவிடம்
நான் உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டேன் உனக்கு ஆட்சேபனை இல்லையே என கேட்கிறான்.

செஸர்யோஷா நீ எங்களுடன் எப்போதும் இருக்க போகிறாயா எனக்கேட்கிறான்

ஆமாம் எப்போதும் என்று பதில் சொல்கிறான்

நீ என்னை இடுப்பு வாரால் அடிப்பாயா என்று கேட்கிறான்
அவன் ஆச்சரியமடைகிறான்

நான் உன்னை எதற்காக இடுப்புவாரால் அடிக்க போகிறேன்?

நான் சொன்னபடி கேட்காவிட்டால் என்று விளக்குகிறான் செஸர்யோஷா

மாட்டேன் என் கருத்துப்படி இடுப்புவாரால் அடிப்பது முட்டாள்தனம் இல்லையா என்றான்.

முட்டாள்தனம் என்று உறுதிப்படுத்தினான் செஸர்யோஷா, குழந்தைகளும் அழுவார்கள் என்றான்.

நீயும் நானும் ஆம்பிள்ளைகள் ஆயிற்றே , ஒருவருக்கொருவர் பேசி சரி கட்டிக்கொள்வோம் என்கிறான். சரி ஞாயிற்றுக்கிழமை நீயும் நானும் விளையாட்டு சாமான்கள் விற்கும் கடைக்கு போவோம் உனக்கு வேண்டியதை நீயே தேர்ந்தேடுத்துக்கொள் சரி தானா என்கிறான்
அப்போ எனக்கு சைக்கிள் வேண்டும் என்கிறான்.

சரி என்கிறான் . ஞாயிற்றுக்கிழமையை ஆவலுடன் எதிர்ப்பார்க்க தொடங்குகிறான்.

அப்பா வந்த முதல் நாள் அவன் பாசா அத்தை அறையில் படுக்க வைக்கப்பட இனம்புரியாத உணர்வால் அலைக்கழிக்கபடுகிறான். காலை கண்விழித்து பார்க்கும்போது தான் தெரிகிறது, அம்மாவை தேடி அவன் அறைக்கு செல்ல அறை தாழிடப்பட்டு இருக்கிறது, கதவை தட்டுகிறான் அத்தை வந்து தூங்குபவர்களை எழுப்ப கூடாது என்கிறாள் என் விளையாட்டு சாமான் எல்லாம் அங்கே இருக்கு என்று சொல்ல அவர்கள் எழுந்த பின் எடுத்து கொள்ளலாம் என்று சொல்ல நிம்மதியின்மையுடன் தெருவுக்கு வருகிறான். அங்கு அமைதியாக உட்கார்ந்திருக்க அவன் சக நண்பர்கள் இவன் ஏங்கி போயிருப்பதை பார்த்து கவலைப்படாதே அவர் ஒன்றும் மோசமானவர் இல்லை என்று அந்த கூட்டத்திலேயே பெரிய பையன் சொல்கிறான். அவன் ஆமாம் எனக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்கிறான்.

ஒரு குழந்தையின் உணர்வு எப்படி இருக்கும் தான் ஆசைப்பட்டதை வாங்க போகும் போது, எப்படி பொறுமையிழந்து தவிக்கும், எப்படி பரபரக்கும் என்பதை எல்லாம் ஆசிரியர் நடையில் வாசிக்க இது போல ஒரு பரபரப்பை நாமும் சின்ன வயதில் அனுபவத்திருப்பதால் அத்தனையும் உள்வாங்கி சிறுவனாக மாறுகிறோம்.

அதன் பின் சைக்கிள் வாங்கி வந்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டி அதை உடைத்து கீழே விழுந்து ஓட்ட கற்று கொண்டு அப்புறம் அந்த சைக்கிள் சலித்து போவது கொஞ்சம் கொஞ்சமாக புது அப்பாவுடன் அவன் ஒட்டி கொள்வது அவருடனும் நண்பர்களுடனும் சந்தோசமாக பொழுதை கழிப்பது, பாட்டி ஒருவர் இறந்து விட அந்த இறுதி சடங்கை பார்க்கும் சிறுவன் பீதியடைந்து கத்துவது, அங்கு வரும் ஒருவர் எல்லாரும் சாகத்தான் போகிறோம் என சொல்ல அப்பாவிடம் அதுபற்றி கேட்க இல்லை நாமெல்லாம் சாகமாட்டோம் என்று அப்பா உறுதியளிக்க சிறுவன் நிம்ம்திய்டைவதும் ,நண்பர் ஒருவரின் மாமா வர அவர் உடம்பில் பச்சை குத்தி இருப்பதை பார்த்து சிறுவர்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் பச்சை குத்தி கொள்ள முயற்சிப்பது அதன் விளைவாக செஸர்யோஷாவுக்கு காய்ச்சல் வருவது மருத்தவரை குழந்தை விரோதியாக பார்ப்பது என்று முழுக்க குழந்தை உலகம் அழகாக பின்னப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இவன் தாய் கர்ப்பமுற அப்பா இவனிடம் என்ன குழந்தை வேண்டும் என்று கேட்க தம்பி என்று சொல்ல குழந்தை எப்படி வரும் என்பதை பற்றி அவனுக்கு இருக்கும் அறிவை கொண்டு ஆஸ்பத்திரியில் குழந்தை விற்பார்கள் என்று நம்புகிறான். தம்பியும் பிறக்க இவன் பார்வையில் இருந்து குழந்தையை எப்படி எதிர்கொள்கிறான் பெரியவர்கள் அதை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்ல வரும் இடத்தில் பெரியவர்களின் அபத்தத்தை ஆசிரியர் சொல்லி இருப்பார்.

காய்ச்சல் சரியாகி கொஞ்ச நாட்களில் இவனுக்கு டான்ஸில் வர அதனால் அதிகம் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் சோர்வாகிறான். பள்ளிக்கு பிள்ளைகள் சென்றுவிட தனிமையில் துவள்கிறான். இதற்கிடையில் இவன் தந்தைக்கு ஹோல்ம்கோரீ என்று தொலைதூர ஊருக்கு மாற்றல் வர புது இடம் என்று சிறுவனை பாசா அத்தையிடம் விட்டு செல்ல முடிவெடுக்கிறார்கள். கோடை காலத்தில் வந்து கூட்டி செல்லலாம் என.

ஆனால் செஸர்யோஷா அழுது முரண்டு பிடிக்கிறான், தாய் கண்டிக்கிறார். அப்பா அவனை கூட்டி போய் ஆறுதல் நிறைய சொல்கிறார். இருந்தாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை சிறுவனால் அவன் அப்பா வாக்குறுதி தருகிறார் அதில் சிறிதளவு நம்பிக்கை வைத்தாலும் சந்தேகம் நிறைய ஆட்கொள்ள அழுது கொண்டே இருக்கிறான். ஒரு நாள் இரவு எல்லாரும் சாமான்களை மூட்டை கட்டி அயர்ச்சியில் தூங்க செஸர்யோஷா அப்பாவின் கழுத்தை கட்டி கொண்டு அழுகிறான். அவர் நிலைமையை சொல்லி டாக்டர் உன்னை கூட்டி போககூடாது என்று சொல்லி இருக்கார் இல்லையா நான் கண்டிப்பாக கோடையில் கூட்டி போகிறேன் அழகூடாது என்கிறார்.

அதன் பின் அழாமல் இருக்க முயற்சித்தாலும் உள்ளுக்குள் புழுங்குகிறான். பெரியவனாகி என்னலாம் செய்யணும் என்று எல்லாம் சொல்லி கொண்டாலும் வீட்டில் சாமான்கள் கட்டி அடுக்கப்பட தனித்து விடப்பட்ட உணர்வில் இருந்து அவனால் வெளியேவர முடியாமல் வெளியேயும் காட்டாமல் தவிக்கிறான்

புறப்படும் நாள் வந்து லாரியில் எல்லாம் ஏற்றப்பட செஸர்யோஷா அழுகையை அடக்கிக்கொண்டு பார்க்கிறான். அம்மா அணைக்க வர அவள் அணைப்பில் இருந்து விலகி மருகுகிறான். வண்டி புறப்பட சிறுவன் ஓவென வெடித்து அழ தயார் நிலையில் அதே நேரம் அப்பா அழக்கூடாது என்று சொன்னதுக்கு கட்டுப்பட்டு நிற்கிறான்.

லாரி புறப்பட தொடங்க அவன் அப்பா லாரியில் இருந்து குதிக்கிறார். செஸர்யோஷா ம்ம் தயாராகு மளமளவென்று புறப்படு என்று சொல்ல பாசா அத்தை உனக்கு மூளை பிசகிவிட்டதா டாகடர் சொன்னதை மறந்து விட்டாயா என்று கேட்க நான் பொறுப்பேற்று கொள்கிறேன் அவனை விட்டு போவது ஏதோ ஒரு அங்கத்தை விட்டு போவது போல இருக்கு நீ போ உன் சாமான்களை எடு செஸர்யோஷா என்று சொல்ல முதலில் மலைத்து நிற்கும் அவன் பின் அத்தை மற்றவர்கள் எல்லாம் பேசி அப்பா மனதை மாற்றிவிட கூடாதே என்று பரபரப்பில் கிளம்பும் வேகம் ஹப்பா செஸர்யோஷாவுடன சேர்ந்து வாசிப்பவர்களும் கண் கலங்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். இந்த கடைசி அத்தியாயம் முழுதும் ஆசிரியர் சிறுவனின் உணர்வுகளில் நம்மை சொருகி விடுகிறார்.

நம் சிறுவயதின் ஏக்கம், ஆசை, பொருமல் எல்லாவற்றையும் அதன் அடி ஆழம் சென்று கண்டுவிட்ட உணர்வும் நம் பிள்ளைகளை நாம் புறக்கணிக்கும் போது அவர்கள் உலகம் புரியாமல் அவர்கள் மீது நாம் ஆதிக்கம் செலுத்தும் போது அவர்கள் இப்படி தானே இருந்திருப்பார்கள் என்ற உணர்வும் ஒரு சேர எழுகிறது.

Friday 25 December 2015

"பாரென்ஹீட் 451" ரே பிராட்பரி என்ற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய நாவல் தமிழில் வெ.ஸ்ரீராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. க்ரியா பதிப்பக வெளியீடு.

ஸ்ரீராமின் பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பான சின்ன சின்ன வாக்கியங்கள் ஏற்கனவே வாசித்திருப்பதால் நம்பிக்கையுடன் தான் புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன். ஆனால் முதல் பாகம் புரிந்து கொள்ள ரொம்ப சிரமப்பட்டேன். இந்நாவலுக்கான முன்னுரை ஏதும் கொடுக்கப்படாமல் புத்தகம் ஆரம்பத்திலேயே கதைக்குள் பிரவேசிக்கிறது. புத்தகம் முழுதும் வாசித்த பின் தான் பின்னுரை இருப்பதை பார்த்தேன். அதை முன்பே படித்திருந்தால் இன்னும எளிதில் கஷ்டப்படாமல் வாசித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் கஷ்டப்பட்டு நாமாக கண்டடையும் புரிந்துகொள்ளும் எதுவும் கொடுக்கும் கிளர்ச்சி அலாதியானது. அதை விரும்புவோர் பின்னுரை பக்கம் போகாமல் முதலில் நாவலை வாசித்துவிட்டு பின் பின்னுரையுடன் நம் புரிதலையும் ஒப்பிட்டு சந்தோசப்பட்டு கொள்ளலாம்..

எதிர்காலத்த்தை பற்றி அவநம்பிக்கை தருவதாக, நடந்துவிட வேண்டாம் என்ற அச்சத்தை தெரிவிப்பதாக இருந்தால் அது மருட்சி இலக்கிய வகை (dystopian literature) . இந்த புத்தகம் அந்த இலக்கிய வகையை சார்ந்தது.

இந்த நாவல் புனைவு என்ற போதும் எதிர்காலத்தில் நடக்க சாத்தியமிருக்கும் விஷயமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளில் தான் கதை வித்தியாசப்படுகிறது. முற்றிலும் தொழில்நுட்பமும் கேளிக்கைகளும் மனிதனை ஆக்ரமிக்க தொடங்க மனிதன் எதை நோக்கி பயணிப்பான், அவனை ஆளும் ஆட்சியாளர்கள் என்ன மாதிரி இருப்பார்கள், அறிவு மழுங்கடிக்கப்பட்டு எப்படி மக்கள் மாற்றப்படுவார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். தொலைகாட்சி வந்து ஏற்கனவே நம்மை ஆக்கிரமித்து கொண்டுவிட்டதையும் இப்போது சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமிப்பதையும் கொஞ்சம் ஆராய தொடங்கினால் உண்மை புலப்பட தொடங்கும். 1951 –ல் ஆசிரியர் இந்த கதையை எழுதியிருக்கிறார். அதாவது டெக்னாலஜி எல்லாம் அவ்வளவாக ஆக்ரமிக்கபடாத காலகட்டத்தில் எதிர்காலத்தை குறித்து அவர் எழுதியது ஆச்சரியப்பட வைக்கிறது.

மேன்டாக் என்ற தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஒருவன் புத்தகங்களை எரிப்பதில் இன்பம் காண்பதில் ஆரம்பிக்கும் கதை அவனை சுற்றியே பயணிக்கிறது. அவன் மனைவி மில்ட்ரெட் தொலைகாட்சியுனே தன் வாழ்வை பிணைத்து கொண்டு வெறுமை தாக்க தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்க அவளை மேன்டாக் காப்பாற்றுவதில் தொடங்குகிறது. ஆடை அணிந்த ஊரில் ஆடை அணிந்தவன் பைத்தியக்காரன் என்பது போல இந்த கேளிக்கைகளில் எல்லாம் நாட்டமில்லாமல் இயற்கையில் நாட்டம் கொண்ட க்லாரின் என்ற பதினேழு வயது பெண்ணை மேன்டாக் சந்திக்கிறான். மிக சாதாரணமாக தொடங்கும் உரையாடல்கள் மூலம் மக்களின் அப்போதைய நிலையும் அதன் அபத்தமும் பட்டும் படாமல் புரிவது போல மேன்டாக் உணர்கிறான்.

முதல் அத்தியாயம் முழுதுமே மேன்டாக்கின் தொழில் பற்றி விரிவாக செல்கிறது. மக்களை சிந்திக்க தூண்டும் புத்தகங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாக பார்க்கப்பட்டு அவை இருக்கும் வீடுகள் எரிக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது. மேன்டாக் ஒரு தீயணைப்பு படை வீரன் ஆனால் தீயணைப்பு துறை அரசால் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்படுகிறது. ஒரு வீட்டில் புத்தகங்கள் இருப்பதாக தகவல் வர மேன்டாக்கின் மேலதிகாரி பியாட்டி உத்தரவின் பேரில் ஒரு வீட்டுக்கு செல்கிறார்கள் தீயணைப்பு குழுவினர்.

அங்கு ஒரு முதியவள் புத்தகங்கள் எரிக்கப்படப்போவதை அறிந்து ஆனால் எந்த எதிர்ப்பும் செல்லாது என்று தெரிந்து மௌனமாக அதை எதிர்கொள்வதும் தீயணைப்பு அதிகாரிகள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் புத்தக குவியலுடன் தன்னை மாய்த்து கொள்கிறாள். தன்னையே மாயத்து கொள்ள துணியும் அளவு புத்தகத்தில் என்ன இருக்கும் என்ற சிந்தனை மேன்டாக்குக்கு வர ஒரு புத்தகத்தை தனது தீயணைப்பு உடைக்குள் பிறரறியாமல் வைத்து எடுத்து செல்கிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக தீக்கிரையாக்கும் இடங்களில் இருந்து எல்லாம் புத்தகங்களை எடுத்து தன வீட்டில் மனைவிக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிறான். மேன்டாக்கின் மேலதிகாரியாக பியாட்டி என்பவர் கதையில் நுழைந்த பின் தான் கதை புரிபடவே தொடங்குகிறது.. இன்னும் சொல்லப்போனால் மூன்று பகுதிகளாக பிரிக்க்பட்டிருக்கும் கதையில் இரண்டாம் பகுதிக்குள் செல்லும் வரை தான் தடுமாற்றம் வாசிப்பவருக்கு அதன் பின் வெண்ணையாக வழுக்கி செல்கிறது நாவல்.
அந்த முதியவள் தீக்கிரையானது மேன்டாக் மனதை பாதிக்க அவன் உடல்நிலை சரியில்ல்லாமல் போகிறான் அப்போது அவனை காண வரும் உயரதிகாரி அவனுடன் பேச தொடங்க மேன்டாக்குக்கு பல கேள்விகள் எழுகிறது.

அவர் சென்ற பின் புத்தகங்களை எடுகிறான் மறைவிடங்களில் இருந்து புத்தகங்களை எடுக்க அவன் மனைவி அஞ்சி கத்துகிறாள். இந்த விஷயம் தெரிந்தால் வீடு தீக்கிரையாக்கப்படும் என்று அழ அவளுக்கு ஆறுதல் சொல்லி முதலில் இதை வாசித்து பார்ப்போம் அப்படி என்ன இருக்கு என்று எதுவும் இல்லையென்றால் அரசு சொல்வது போல நம்மை அழ வைக்கும் விஷயங்கள் இருந்தால் நாமே கொளுத்திவிடுவோம் என்ற உத்திரவாதத்துடன் வாசிக்க தொடங்குகிறான். வாசிக்க வாசிக்க அவனுக்கு நிறைய சந்தேகம் எழுகிறது அதை விளக்க பேபர் என்கிற வயது முதிர்ந்தவரை நாடி செல்கிறான்.

அவனுக்கும் அவருக்கும நடக்கும் உரையாடல்கள் எல்லாம் க்ளாஸ். அதை வாசித்து தான் உணர முடியும். எழுத்தால் என்ன செய்ய முடியும் என்பதையும் எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் வகைப்படுத்தி பேபர் சொல்வதை மட்டும் இங்கு சொல்கிறேன். “ நல்ல எழுத்தாளர்கள் மனிதர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் தொட்டுவிடுகிறார்கள், சாதாரணமானவர்கள் அதன் மேல் கையை ஓடவிடுகிறார்கள், மோசமான எழுத்தாளர்கள் அதனுடன் வன்புணர்ச்சி கொண்டு அதன் மேல் ஈக்களை மொய்க்கவிடுகிறார்கள்.

புத்தகங்கள் ஏன் வெறுக்கப்பட்டு பயம்ளிக்கிறது தெரியுமா? வாழ்க்கையின் முகத்திலுள்ள நுண்ணிய துவாரங்களை அவை காட்டுகிறது. துவாரங்கள் இல்லாத, உணர்ச்சிகள் இல்லாத, ரோமம் இல்லாத மெழுகு முகங்கள் தான் வசதியாக இருக்க விரும்பும் மனிதர்களுக்கு தேவையாக இருக்கிறது.
இப்படியாக நீளும் உரையாடலில் மேன்டாக் பேபரிடம் தனக்கு அவர் தான் வழிகாட்ட வேண்டும் என்று கூற முதலில் அவனை நமப மறுக்கும் அவர் பின் மேன்டாக்கின் உறுதியால் நம்பி அவனுக்கு காதில் பொருத்திக்கொள்ள ஒரு கருவியை தருகிறார். இதன் மூலம் நீ எங்கிருந்தாலும் என்னை கேட்கலாம் நீ ஓய்வில் இருக்கும்போது உனக்கு நான் புத்தகங்களை உன் காதில் வாசிப்பேன் என்கிறார். அவரிடம் விடைப்பெற்று வீட்டுக்கு வரும் மேன்டக் அலுவலகம் செல்ல அதன்பின் பியாட்டிக்கும் மேன்டாக்குக்கும் நடக்கும் உரையாடலை எல்லாம் காதில் வாங்கும் பேபர் அவனுக்கு காதில் ஆலோசனைகள் வழங்கிறார்.

இதற்கிடையில் மேன்டாக் புத்தகம் ஒளித்து வைத்திருப்பதை அவன் மனைவியே அரசுக்கு சொல்ல அவன் வீடு அவனாலேயே பியாட்டியின் உத்தரவின் பேரில் தீக்கிரையாக்கப்படுகிறது. அப்போது மேன்டாக் காதில் பொருத்தியிருக்கும் கருவி பியாட்டிக்கு தெரிய வர அதை பறிக்கிறார் இதனால் ஆவேசமடையும் மேன்டாக் பியாட்டியை கொல்கிறான். சக ஊழியர்களை அடித்துவிட்டு தப்புகிறான். அவனை தேடி அரசு இறங்க அவன் பேபர் வீட்டுக்கு சென்று அவருடன் பேச அவர் சில வழிமுறைகள் சொல்ல அதை பின்பற்றி தப்பிக்கிறான்.அதன் பின் அவன் சந்திப்பது சிந்திப்பது இரண்டுமே நாவலின் முக்கிய பகுதி.
 
இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்க அரசை பற்றி கொண்ட பயம் குடிமக்களின் நடவடிக்கைகள் என்ன எழுதிகிறார்கள் என்ன படிக்கிறார்கள் என்பதெல்லாம் கண்காணிக்கப்பட்டு தடைகள் விதிக்க்ப்பட்டது.

உலகப்போருக்கு பின் அமெரிக்காவிடம் தாராளமாக புழங்கிய பணம் நுகர்வு க்லாச்ச்சரத்துக்கு வாசல் திறந்ததையும் தொலைகாட்சி அவற்றில் முக்கியமாக எப்படி மக்களை ஆக்கிரமித்தது சிந்தனைகளை மழுங்கடிக்க செய்தன என்பதை நாவல் பேசுகிறது.
 
சிந்தனையிலிருந்து மக்களை விலக்கிவைக்கும் இந்த வெகுஜன கலாச்சாரம் அரசுக்கும் எதிர்ப்பின் பயம் இல்லாமல் ஆள வசதியாக அமைந்தது. . சிந்தனைகளை ஒதுக்கும் கலாச்சாரமும் சமூகத்தின் அழிவுக்கு அடிக்கல் என்பது தான் நாவலின் மையம். 
 
மக்களை கண்காணித்துச் சுதந்திரத்தை குறைக்கும் அரசைவிட மக்களை கவர்ச்சியால் கிறங்கடிக்கும் ஜனரஞ்சக கேளிக்கைகள் தான் அதிகம் பயப்பட வைக்கிறது என்கிறார் ஆசிரியர். அவர் சொன்னது அறுபது ஆண்டுகளுக்கு முன். ஆனால் இப்போது சமூக ஊடகங்களில் சில நிமிடங்களுக்கு மேல் ஒரு செய்தியை கிரகிக்க பல மனதுக்கு பொறுமை இல்லாமல் போய்விட்ட சூழல் இக்கதை உண்மையாகி வருவதை சொல்வதாக பின்னுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நாவல் பல விஷயங்களில் நமது சிந்தனை தடத்தை இன்னும் கூர்மையாக்குகிறது.


Monday 21 December 2015

மலேசியன் ஏர்லைன் 370 - ஆசிரியர் நடேசன் - புத்தகம் பற்றி ஒரு பார்வை

“மலேசியன் ஏர்லைன் 370” சிறுகதைகளின் தொகுப்பு. நடேசன் எழுதியது. மலைகள் வெளியீடு. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆ(வு)ஸ்திரேலியாவில் கால்நடை வைத்தியராக பணியாற்றிய எழுத்தாளர் அவரது பார்வையில் இலங்கையையும் அவர் பணிபுரிந்த அவர் சென்று பார்த்த இடங்களையும் பற்றிய அனுபங்களையும் அழகாக தொகுத்திருக்கிறார்.

இலங்கை தமிழர்கள் என்ன தான் சொந்த மண்ணை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வசதியாக வாழ்கின்ற போதும் தங்கள் மண்ணை மக்களை பிரிந்த வேதனையை சுமக்கவே செய்கிறார்கள். சிங்களவர்கள் எல்லாரையும் எதிரியாகவும் இயக்க்கத்தவர் எல்லாரையும் கடவுள் போலவும் பார்க்கும் மனிதர்களை நோக்கி தமது அனுபவங்களை சொல்லிவிட்டு எந்த நியாயமும் கேட்காமல் வாசிப்பவரின் பார்வைக்கே சில கதைகளில் விட்டு விடுகிறார் ஆசிரியர்.

ஆஸ்திரேலியா சென்று செட்டிலாகிவிட்ட ஒருவர் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின் சொந்த மண்ணை பார்க்க நண்பருடன் வருகிறார். அப்போது இயக்கத்தை சேர்ந்தவருக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி

“போருக்கு பிறகு நிலைமை எப்படி? என்றேன்

என்னத்தை சொல்ல மக்கள் உயிர் வாழ்கிறார்கள். உணவுக்காக மட்டும் தான் வாயை திறக்கிறார்கள். மலஜலம் கழிக்கும் இடத்தில் கூட ராணுவம் நிற்கிறது  எனச்சொல்லிய போது முகத்தில் சோகம் தெரிந்தது.

இந்த மாதிரி தான் வன்னியில் விடுதலைப்புலிகள் காலத்திலும் மக்கள் வாழ்ந்தார்கள். இது புதிய விடயம் இல்லையே என்றேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தவர் பிறகு அவரை மவுனத்தை கலைத்தார்.

“ விடுதலைப்புலிகள் காலத்தில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்தார்கள்தான். அதை ஏற்றுகொள்கிறேன். அப்போது விடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு  இருந்தது, கஷ்டம் தெரியவில்லை ஆனால் இப்போது எதிர்காலத்தை நினைக்காமல் கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.

இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம்.. விடுதலைப்புலிகள் ஆட்சியில் தமிழ்ப்பிரேதசங்களில் பதினைந்து வருடங்கள் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கட்டாய வரிகள், கட்டாய ஆட்சேர்ப்பு, தண்டனைகள் எனக் கொடூரமாக இருந்தது. உடலுறுவுக்கு மட்டும் வரிவிதிக்காமல் மற்ற எல்லாவற்றுக்கும் வரி விதித்தார்கள் என்று வன்னியில் இருப்பவர்கள் சொன்னார்கள்.

அப்படி செய்ய காரணம் தமிழ் ஈழத்திற்கு அதிகமானவர்கள் தேவை என்பதாலாகும் எனச் சொல்லிவிட்டு நீங்கள் விடுதலைப்புலிகள் எதிர்ப்பவரா?

நான் விடுதலைப்புலிகள் போராட்ட வழி முறைகளை மட்டுமல்ல இலங்கையில் பிரிவினையும் எதிர்ப்பவன்.

நீங்கள் சிங்களவர்களை நம்புகிறீர்களா?

நம்புவது நம்பாதது இங்கே விடயமல்ல. இந்த நாடு பிரிந்து வாழ சர்வதேசம் அனுமதிக்காது. இந்த பிரிவினை போராட்டம் ஒடுக்கப்படும் போது மக்கள் அநியாயமாக அழிவார்கள்.. என்று நீளும் உரையாடலின் பின் இருக்கும் உண்மை யோசிக்க வைக்கிறது.

இது போல இயக்கத்தால்  தற்கொலைப்படைக்கு  தயாராகும் ஒரு சிறுவனை பற்றிய கதை படித்த போது துக்கம் மனதை பிசைய அசுவாசம் அடையும் வரை புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். புலிகளால் ஒரே இரவில் வெளிய்ற்றப்பட முஸ்லீம்கள் அனுபவத்தில் மிளிரும் கதை தொட்டிருக்கும் ஆழமும் அனாயசமானது.

சிங்கள ராணுவத்தில் பணிபுரியும் ஒருவன் ஒரு பெண் மீது கொண்ட மோகத்தால் செய்யும் செயல்கள் அதனால் அவள் இறுதியில் புலிகளால் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகி கயிற்றில் நாற்சந்தியில் துரோகிக்கு தண்டனை என்ற வாசகத்துடன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கதை இரண்டு திமிர் எடுத்த போராட்ட குழுக்களுக்கிடையே அப்பாவியாக உயிரை விட்ட பெண்ணின் கதையை பேசுகிறது.

இயக்கம் போராட்டம் தாண்டி அவர் வாழ்வில் நடந்த சிறு சிறு அனுபவங்களை கோர்த்திருக்கிறார். மனநோயாளி ஒருவன் அவர் மருத்துவமனையில் புகுந்து தொலைபேசியை கையில் வைத்து கொண்டு செய்யும் செயல்கள் அவனை போலீசில் ஒப்படைக்க முயல அப்போது நடக்கும் நிகழ்வுகள், எமி என்கிற டீன் ஏஜ் பெண் சிறைச்சாலைகளில் இருக்கும் மனிதர்களுக்கு அன்பாக அனுப்பும் கடிதங்கள் என்று மனிதனின் மெல்லுணர்வுகளை சொல்லும் கதைகளையும், இலங்கை வட்டார மொழியில் ஆசிரியர் விவரித்திருக்கும் முறை இக்கதை தொகுப்பில் இருக்கும் பன்முகத்தன்மை எல்லாமாக  தொகுப்பு நம்மை வெகுவாக ஈர்க்கிறது. 

சிவப்பு விளக்கு எரியும் தெரு என்ற கதை கூட அழகாக ஆரம்பித்து அழகாக பயணித்து கடைசியில் முடித்திருக்கும் விதம் கொஞ்சம் கதையின் சுவராஸ்யத்தை குறைத்துவிட்டது. அனேகமாக கதையை ஹாஸ்யமாக முடிக்க ஆசிரியர் அந்த முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை ஆனால் பட்டி மன்ற துணுக்கு தோரணம் ஒன்றை கேட்டது போல சட்டென  இயல்பான ஒரு அழகிய கதையை ஏன் இப்படி என்று கேள்வி எட்டி பார்க்கிறது.

இயக்கம் பற்றிய மாற்று பார்வையை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க செய்கிறது இத்தொகுப்பில் இருக்கும் சில கதைகள். போர் சூழல் தாண்டிய கதைகள் காமம், காதல், அன்பு, நகைச்சுவை, அழுகை, சந்தோசம், துக்கம் என்று மனித வாழ்வியலின் அனைத்து பக்கங்களையும் கண் முன் நிறுத்துகிறது.

Monday 14 December 2015

நிலவளம் - க. நா. சு. மொழிப்பெயர்ப்பு



The growth of Soil நட்ஹாம்சன் ஆங்கிலத்தில் எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. நிலவளம் என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். வ.உ.சி. நூலக வெளியீடு. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனும் பருவ காலங்களுடனும் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தான். என்ன விளைவித்தான். காட்டை ஒரே நாளில் சீராக்கிவிட முடியாது. பல ஆண்டுகள் கடின உழைப்பு தேவை. அதற்கு பக்க பலமாக இருக்கும் பெண் வரும்போது அவன் வாழ்க்கை எப்படி மலர்கிறது,  அப்போதைய வாழ்க்கை முறை (பெண்களுக்கு ஓட்டுரிமை எல்லாம் இல்லாத காலகட்டம்) அப்போது ஆண் பெண் உறவு நிலை, அவர்களின் உணர்வுகள் எல்லாம் இன்றைய காலகட்டத்துடன் பொருந்தி போவதாகவே இருக்கிறது. 

காட்டை செப்பனிட்டு விளைச்சல் ஆரம்பித்து மெல்ல மெல்ல பண்ணையாக தனி ஒரு மனிதன் உருவாக்குவதும் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவனுக்கு சக மனிதர்களின் உதவியும், பிரச்சனையும் கடினமாக உழைக்கும் ஒருவனின் மனநிலையும் இயற்கையை இறை நம்பிக்கை எப்படி வருகிறது என்று எல்லாம் இந்த நாவல் பயணிக்கும் இடங்களுக்கு நம்மையும் ஆசிரியர் இட்டு செல்கிறார். 

ஐசக் என்ற அந்த அவ்வளவு நாகரீகமில்லாத காட்டாள் கிராமத்தை விட்டு பல மைல் தள்ளி இருக்கும் காட்டில் முதலில் ஒரு குடிசை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மரங்களை வெட்டி கிராமத்துக்கு சுமந்து சென்று விற்று பொருட்கள் ஆடு வாங்குவதும் கூட ஒரு பெண் வேலைக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று விசாரிக்க அவனின் உருவம் பார்த்து எந்த பெண்ணும் வர மறுக்க உதடு பிளவின் காரணமாக கிராமத்தில் புறக்கணிக்கப்பட்ட இங்கர் வந்து ஐசக்குடன் காட்டில் சேர இருவருமாக உழைத்து காட்டை சீராக்கி ஆடு மாடுகளை பெருக்கி உருளை பயிரிட்டு வைக்கோல் போர் அடித்து குடிசையை மரவீடாக்கி அவர்கள் இடத்துக்கு sசெஸ்ஸன்ரா எனற பெயரையும் இடுகிறார்கள. அவர்களின் காதல் அவர்களுக்கு குழந்தைகள் என்று குடும்பம் விரிகிறது. இங்கரை மிகபெரும் பொக்கிசமாக கருத்தும் ஐசக் அவளை அசத்த செய்யும் செயல்கள் வார்த்தைகள் இல்லாமல் ஆதி மனிதன் காதலை வெளிப்படுத்தி இருக்கும் விதம் என்று வியப்படைய செய்கிறது.

கடின உழைப்பால் மட்டும் செழிக்கும் அழகிய இவள் குடும்பத்தை கண்டு ஓலைன் என்ற கிராமத்தை சேர்ந்த கிழவி பொறாமை கொள்கிறாள். இதற்கிடையில் காட்டில் தனியே இரு பிள்ளைகள் பிரசவிக்கும் இங்கர் மூன்றாவதாக உதடு பிளந்து பிறந்த குழந்தையை கொன்று புதைத்து விடுகிறாள் யாருக்கும் தெரியாமல். காட்டில் சுற்றும் லாப் என்னும் நாடோடி மூலம் ஒலைன் விஷயம் அறிந்து இங்கரை சட்டத்தின் கைகளில் ஒப்படைத்துவிடுகிறாள். இங்கர சென்றவுடன் சொத்தை அபகரிக்கலாம் என்று ஐசக் வீட்டில் நுழையும் அவளின் எண்ணம் ஐசக்கால் நிறைவேறாமல் போகிறது ஆனால் ஒலைன் ஐசக்கின் இரண்டு குழந்தைகளையும் கவனித்து காட்டு வேலைகளை செய்வதால் அவள் செய்யும் சில்லரைதனங்களை பொருத்து கொள்கிறான். 
.
இங்கர் சிறைக்கு செல்கிறாள். வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு. சிறையில் தையல் உள்ளிட்ட பல வேலைகளை கற்கிறாள். அவள் உதட்டு பிளவையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்கிறாள். எழுத படிக்க கற்கிறாள். நூல் நூற்க, நகரத்து பெண்மணிகள் போல ஆடை அணிகலன் அணிந்து கொள்ள என்று நாகரீகமானவளாக மாறுகிறாள்.
பழைய கிராம அதிகாரி கெய்சர் என்பவரின் உதவியால் இங்கரின் தண்டனை காலம் எட்டு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட தண்டனை முடிந்து காட்டுக்கு மீண்டும் ஐந்து வயது குழந்தையுடன் வருகிறாள். ஐசக்குடன் அவள் குடும்பம் செய்து பழைய மாதிரி வேலைகள் செய்தாலும் நாகரீக வாழ்க்கைக்கு ஏக்கம் கொள்கிறாள். அதன் பின் சில வருடம் சென்று மனம் மாறி இறைப்பணியில் தன்னை எப்படி ஐக்கியபடுத்துகிறாள். அவளின் தடுமாற்றங்கள் அவள் பிள்ளைக்கு எழுத படிக்க கற்று கொடுக்க அவள் பிள்ளைகளில் ஒருவன் பலமில்லாமல் போவதும் படிக்காத ஒருவன் அப்பாவுக்கு துணையாக கைகொடுப்பதும். இவன் பண்ணை விரிவை பார்த்து மெல்ல மெல்ல பண்ணைகள் உருவாவதும் அங்கிருக்கும் மனிதர்கள் அவர்கள் வாழ்க்கை என்று கதை பயணிக்கும் இடமெல்லாம் நாமும் பயணிக்கிறோம் சுகமாக.

இந்த புத்த்கததை முழுதாக வாசித்து முடித்த போது ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை, கடின உடல் உழைப்பு இருப்பவர்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள். இயற்கையோடு எப்படி இணைந்து வாழ்கிறார்கள் கொஞ்ச நாள் நகரம் கிராமம் சென்று வந்தவர்கள் பண்ணையில் இருக்க முடியாமல் எப்படி பரபரப்பில் (restlessnes) சிக்கி தவிக்கிறார்கள். என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார். 

கெயிஸ்ஸர், பார்ப்பாரா, ஆகஸ்டேல், பிரட்ரிக், எல்யூஸ் , ஸிவெர்ட், ரிபெக்கா, ஜென்சன், லெபலட்டின் என்று கதை மாந்த்தர்களின் பெயர்கள் தான் அந்நியம், ஆனால் உணர்வுகள் எல்லாம் எல்லா மனித்ரக்ளுக்கும் ஆதி காலம் தொட்டு இப்போது வரை வித்தியாசமில்லை என்பதை இப்புத்தகம் வாசித்து முடிக்கும் போது உணர முடியும். 

காலசக்கரத்தில் பின்னோக்கி சுகமாக பயணித்த ஒரு அழகிய உணர்வு கடந்து இரண்டு நாட்களாக இந்த புத்தகம் வாசிக்கும் போது.....

Saturday 12 December 2015

தனிமைத் தளிர் - ஆசிரியர் ஆர். சூடாமணி



“தனிமைத் தளிர் ஆர். சூடாமணி அவர்களின் சிறுகதை தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.

அறுபத்திமூன்று சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மனிதர்களின் அன்பு கருணை என்று வெளிச்சமான பக்கங்களை தான் அதிகம் காட்டியிருக்கிறார். அதற்காக யதார்த்தத்துக்கு முரணாக இல்லாதவாறு கருவை தேர்ந்தெடுத்து அழகிய கதையாக பின்னி அதில் மனதின் இருண்ட பக்கங்களையும் அழகாக காட்டி இருக்கிறார். கடினமான இலக்கிய நடை இல்லை என்றபோதிலும் அவர் சொல்ல வந்த கருத்தை எந்த சமூக போலித்தன வரையறைக்குள்ளும் உட்படுத்தாமல் சொல்லியிருப்பதில் அவரின் எழுத்தின் வலிமை தெரிகிறது. 

இவர் எழுதியிருக்கும் கதைகளில் சில மட்டுமே புனைவு வகையை சாரும். மற்ற எல்லாமே நிதர்சனம் தான். கதைகள் பெரும்பாலும் நுண்ணர்வுகளை மையப்படுத்தியே. விளையாடும் சின்ன பிள்ளையின் மனநிலைகள் அவர்கள் உலகம் எப்படி இருக்கும் அவர்கள் உலகத்தின் நியதிகள் அவர்கள் உணர்வுகள் அவர்களின் உளவியல் அதை தாண்டி பதின்பருவம் வரும்போது ஆணகுழந்தையும் பெண் குழந்தையும் என்ன மாதிரி மனநிலைக்கு உள்ளாகும், பெண்ணின் தாய்மை, அந்த தாய்மைக்கு பின் இருக்கும் சுயநலம், பொறாமை, சென்சிடிவ்னஸ், அமைதியான வன்மம், குரூரம், அவளின் தேடல், தியாகம், என்று எல்லாவற்றையும் பேசுகிறார். 

மனித மனத்தின் சிக்கல்கள் பல எழுத்தாளர்கள் எழுதியது தான் எனும்போதும் சொல்லப்படும் விதத்தில் தான் அதற்கான முக்கியத்துவம் கிடைக்க பெறுகிறது. இவரது காலகட்டத்தில் இருந்த பெண் எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட தளத்துக்குள் தன்னை பொதித்துகொள்ள இவர் எல்லா இடங்களிலும் பயணித்திருக்கிறார். அறிவான பெண்ணின் தேடலை சொல்லும் “நான்காம் ஆசிரமம் ஆகட்டும், பெண்ணின் அமைதியான வன்மத்தை சொல்லும் “ பெருமையின் முடிவில் கதை, உரிமையை நிலைநாட்ட குழந்தையின் மீது தாய்மை என்ற பெயரில் காட்டும் ஆதிக்கத்தை சொல்லும் “உரிமைப் பொருள் கதை, விடலைப்பருவத்தில் ஆண் கொடுத்த காதல் கடிதத்தை வைத்து கொண்டு விழிக்கும் விடலை பருவத்து பெண்ணின் உணர்வுகளை சொல்லும் “கடிதம் வந்தது கதை, விவரம் தெரியா வயதில் அம்மாவின் மறுமணத்தை மறுத்த மகன் அம்மாவின் மரணப்படுக்கையில் அந்த அம்மாவை நேசித்த மனிதரை தேடி கண்டடைய முயற்சிப்பதும் அந்த மனிதர் அம்மாவை மரண தருவாயில் சந்திக்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கான நேரத்தை கொடுத்து விலகி நின்று தவறை நினைத்து புழுங்கும் மகனின் உணர்வுகளை “ இறுக மூடிய கதைகள் கதையில் என்று ஒவ்வொரு கதையில் இவர் தொட்டிருக்கும் ஆழ்மன உணர்வுகள் அசாத்தியமானது. 

இந்த அறுபத்திமூன்று கதைகளில் ஒன்றிரண்டு கதைகள் தான் கொஞ்சம் வலிய திணிக்கப்பட்ட உணர்வுகளை சொல்வதாகப்படுகிறது.. மற்ற எல்லாமே படித்து முடித்தவுடன் நம் அகத்தை கூறு போட்டு பார்ப்பது போன்ற உணர்வை தரும். 

சில கதைகளில் சொல்லப்பட்ட உணர்வுகளை அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் பகிர்கிறேன்.

“இரண்டின் இடையில் என்ற சிறுகதையில் விடலை பருவத்தில் அடி எடுத்து வைக்கும் பதினாலு வயது பையனின் மனதில் இருக்கும் குழப்பம் உணர்வுகள், ஆசிரியை மீது அவனுக்கு வரும் விடலைக் காதல் அது உடையும் போது அவனின் கண்ணீர் அதை எதிர்கொள்ளும் அவன் தாயின் முதிர்ந்த மனநிலை என்று ஒரு ஆண் பிள்ளையின் விடலை பருவத்து உணர்வுகளை ஆசிரியர் சொல்லி இருக்கும் விதம் அழகாக இருக்கும்.
“அன்னையின் முகத்துப் புன்னகை என்ற கதையில் இளவயதில் கைக்குழந்தையுடன் விதவையாகும் அவனை சுற்றி தன் உலகத்தை சிருஷ்டித்து கொள்ளும் தாய் மகன் வளர்ந்து திருமண பருவம் வர அவள் அடையும் பதட்டம் ஆனால் அந்த பதட்டத்தை வெளியே காட்டாமல் போடும் வேஷம், என்று அந்த தாயின் உணர்வுகளின் சுயநலத்தை அது தெரியாமல் நாடக மேடை வசனம் போல தனக்கு மகனின் திருமணத்தை முடிப்பதில் ஆர்வம் காட்டுவது போல நடிக்கும் அவளின் உணர்வை அவள் மனதை படிக்கும் மகன் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதும் இறுதியில் கதையின் முடிவை வாசகரின் ஊகத்துக்கு விட்டு முடித்திருக்கும் விதம் எழுத்தின் தனித்தன்மையை காட்டுகிறது. இக்கதையில் பெண்ணின் தாய்மைக்குள் ஒளிந்திருக்கும் சுயநல உணர்வை இது போன்ற வேறு சில கதைகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

“மன்னிப்புக்காக எனற கதையில் தன் மனைவி இறந்துவிட அவளின் சடலத்தை அணைத்து கதற துடிக்கும் அவன் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இந்த சமூகம் சடங்குகள் என்ற பெயரில் அவன் மகனையும் ஏனைய உறவுகளையும் வைத்து செய்ய தன மனைவியின் பிரேதத்தை தொட முடியாமல் தவிக்கும் அவன் இறுதியல் எதற்க்காக மன்னிப்பு கேட்க நினைத்தானோ அதே இடத்திற்கு சென்று கதறி அழும் கதையில் சொல்லப்பட்டிருக்கும் உணர்வுகள் இந்த சமூகம் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் எப்படி மனிதனின் ஆழ மன தவிப்பை புறக்கணிக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார். 

நான்காம் ஆசிரமம் கதை எழுபதுகளில் ஒரு பெண் படைப்பாளியால் துணிச்சலுடன் சொல்லப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியம். ஏன் இந்த படைப்பாளி அதிகம் பேரால் அறியப்படாமல் போனார் என்பது அதைவிட ஆச்சரியம். உணர்ச்சியும் கனவும் உயிர்சிலிர்ப்பும் அரும்பிய வயதில் மனோகரன் என்பவனை மணக்கும் சங்கரி அவன் இறப்புக்கு பின் மூர்த்தி என்பவரை மணந்து இயல்பான தாம்பத்யம் நடத்தி குழந்தைகளையும் பெறுகிறாள். உடலாய் பெண்ணாய் தாயாய் அவள் பூரனம்டைந்தாலும் உடல் தாண்டி அறிவும சிந்தனையும் உள்விரிவும் அலைகழிக்க மூர்த்தியை விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு அறிவின் சுவையை காட்டும் வயதான ப்ரொபசர் ஒருவரை மணக்கிறாள். அறிவையும் கடந்து “தான் என்கிற தனிமையில் மட்டுமே நிறைவடைகிற முதிர்ச்சி வந்த பின் ப்ரோபசரிடமிருந்து மண விலக்கு கோருகிறாள். ஆனால் அவரால் அவளை விட்டு விலக முடியாமல் விவாகரத்துக்கு மறுக்க தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த கதையில் தனித்துவமான ஒரு பெண்ணின் உணர்வை இரு ஆண்களின் பார்வையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.

“பெருமையின் முடிவில் என்ற கதையில் ஒரு பெண்ணின் அமைதியான வன்மத்தை ஆசிரியர் சொல்லியிருப்பார். திருமணமாகி அவள் பிறந்த வீட்டுடன் சண்டை வர அவள் பிறந்த வீட்டுடன் இருக்கும் உறவை முற்றிலும் துண்டித்தால் தான் தன்னுடன் வாழ இயலும் என கணவன் கட்டளையிடுகிறான். ஆறுவயது தம்பி உட்பட தங்கை பிறந்த வீட்டை முற்றிலும் துறந்து வரும் அவள் அதன் பின் பிறந்த வீட்டை பற்றி எந்த சந்தர்பத்திலும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்கிறாள். வருடங்கள் உருண்டோட தம்பி இளைஞனாகிறான். அவள் கணவரின் நண்பர் தம் மகளுக்கு திருமணம் முடிக்க முயற்சிக்கும்போது வரும் மாப்பிள்ளை ஜாதகத்தில் அவள் தம்பியின் ஜாதகமும் அவன் ராணுவத்தில் பணி புரிவதும் தெரிகிறது. சில நாட்களில் அவன் ஒரு போரில் இறந்துவிடுவதும் அந்த நண்பர் மூலம் தெரியவர அவள் அப்போது கூட கணவரிடம் கதறி அழாமல் தனியாக அழுதுவிட்டு கண்ணீரை துடைத்து கொண்டு கணவரிடம் இயல்பாக பேசும் போது தான் கணவருக்கு அவள் முழுமையில் அவன் இல்லை மனதளவில் எப்போதோ ஒதுக்கிவிட்டாள் என்று புரிந்து அதிர்ச்சியில் உறைகிறார். அவரின் உணர்வுகளை பெண்ணின் அமைதியான வன்மத்தை இதைவிட சிறப்பாக யாராவது எழுதியிருக்க முடியுமா தெரியவில்லை..

“மேதையின் மனைவி கதையும் ஒரு புகழ் பெற்ற சங்கீத வித்வானின் மறைவுக்கு பின் அவரை பற்றிய விஷயங்களை கேட்க வரும் பத்திரிகை நிருபர்களிடம் முகம் கொடுத்து பேச மறுக்கும் அவரின் மனைவி அதன் பின் தனிமையில் கணவரின் புகைப்படத்தை வெறித்து பார்த்து உலகே கொண்டாடும் அவரின் மேல் இருக்கும் வன்மத்தையும் அது எவ்வாறு தணிகிறது என்பதையும் வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறார். 

“வீடு திரும்பினாள் கதையில் மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு வரும் ஒரு மத்திம வயது பெண்ணை அவள் குழந்தைகள் உட்பட எப்படி எதிர்கொள்கிறது என்பதும் அவள் எப்படி புரிந்துகொள்ளபடுகிறாள் என்பதும் சொல்லப்பட்டிருக்கும்..

பெரும்பாலான கதைகள் வித்தியாசமான கோணத்தில் உணர்வுகளை பேரன்பை, மனிதர்களின் தனித்தன்மையை பேசுகின்றன. வார்த்தை ஜாலங்களில் வர்ணிப்புகளில் நம்மை கட்டி போடவில்லை ஆனால் எளிமையில் நேர்மையில் எல்லாரும் வாசிக்க கூடிய சாதாரண நடையில் எழுதியிருக்கும் சூடாமணி அவர்களின் கதை தொகுப்பு வாசிப்பின்பத்தை தாண்டி பேரன்பின் ஒரு பகுதியை நம்மில் இருந்து பீறிட்டு எழச்  செய்கிறது பல கதைகளில்....








Tuesday 3 November 2015

பேரன்பு

காற்றில் கரையும் கற்பூரமாய்
காணாமல் போகிறாய்
அழுது உருகி ஈரம் வற்றி
பாலையாய் வெடித்து
ஏகாந்தம் நோக்கி
வெறித்து கிடக்க
எதிர்பாரா தருணமொன்றில் பெருமழையென பொழிந்த
உன் அன்பில்
குழைந்த கணத்தில்
விரிசல்கள் சுவடற்று மறைய
குளிர்ந்து முளைக்க தொடங்குகிறது
பேரன்பின் விதை

இது தான் வாழ்கை - பஞ்சாபி கதையின் மொழிபெயர்ப்பு



இதுதான் நம் வாழ்க்கை தலீப் கௌர் டிவானா எழுதிய பஞ்சாபி நாவலின் மொழிபெயர்ப்பு. நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு.எனக்கு மொழிபெயர்ப்பு நாவல்கள் மேல் தனி மோகமுண்டு. மொழி பெயர்ப்பின் மூலம் முற்றலும் நமக்கு தெரியாத மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் எல்லாம் தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம். மொழிப்பெயர்ப்பு உணர்வை துல்லியமாக பிரதிபலிக்காது என்ற கூற்று இருக்கும்போதும் வேறு ஒரு மொழி இடம் சார்ந்த வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் மொழிப்பெயர்ப்பின் மீது ஈர்ப்பு குறையாமல் வைத்திருக்கிறது.

பானோ என்கிற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் கங்கையில் தற்கொலைக்கு முயல அவளை நாராயணன் என்கிறவன் காப்பாற்றி அவன் வீட்டுக்கு கூட்டி வருவதில் கதை தொடங்குகிறது. பானோ ஏற்கனவே திருமணமானவள் கணவர் இறந்துவிட கணவரின் தம்பிகள் அவளை அடைய முயற்சிக்க அது பிடிக்காமல் அப்பா வீட்டுக்கு வருகிறாள். ஒரே தம்பி நோய வாய்ப்பட்டு கிடக்க அவனுக்கு வைத்தியம் செய்வதில் அவர் தந்தை தன்னிடம் இருக்கும் எருது, நிலம் எல்லாம் வைத்தியத்துக்காக செலவு செய்தும் அவன் பிழைக்காமல் இறந்து விடுகிறான். 

அந்த ஊரில் பெண்களை விற்கும் பழக்கம் இருக்கிறது. பானோவின் தந்தை அவளை விற்றுவிட முனைய அப்போது தான் கங்கையில் உயிரை மாயத்து கொள்ள முயற்சிக்க காப்பாற்றபடுகிறாள் நாராயணனால். நாராயணனும் குடிகாரம் ஹூக்கா, மது என்று போதையில் கிடப்பவன். பெண்கள் யாருமில்லாத அந்த வீட்டுக்கு வரும் பானோ அந்த வீட்டை சீராக்குகிறாள். இவன் குடிகாரன் என்பதால் குத்தகைக்காரர்கள் சரியாக கணக்கு தராமல் ஏமாற்ற இவள் எல்லாம் சீராக்குகிறாள் ஆனாலும் நாராயணனிடம் மனம் ஒட்டாமல் அவள் முன்னாள் கணவன் சரவணன் நினைவிலேயே இருக்கிறாள். அவனுக்கு மனைவியாக இல்லாமல் ஆனால் அந்த வீட்டில் ஒருத்தியாக ஒன்றுகிறாள். நாராயணன் எவ்வளவு முயற்சித்தும் அவனிடம் ஒட்டாமல் இருக்கிறாள்.

நாராயணின் குடிகார நண்பர்கள் ஆசை காட்டி அவளை இழுக்க முயற்சிக்க அவர்களிடம் இருந்து போராடி தப்பிக்கிறாள். அதன் பின் குருத்துவாரிலேயே பலியாக பூசை பஜனை என்று இருக்க அந்த பூசாரியும் ஒரு நாள் அவளை அடைய முயற்சிக்க அங்கு போவதையும் குறைத்து கொள்கிறாள். இதற்கிடையில் அவள் கணவர் வாரிசுக்காக வேறு திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்கிறான்.
திக்பிரமை பிடித்தாற்போல பானோ வீட்டு வேலைகள் செய்ய மயக்கமுற்று கீழே விழுந்து மண்டை உடைகிறது. மருத்துவமனையில் ஒன்றரை மாதம் போல தங்கி சிகிச்சை பெறுகிறாள். தினமும் சாப்பாடு கொண்டு வந்து தருகிறான் நாராயணன். சிகிச்சை முடிந்து வீடு வரும் போது வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்திருப்பது தெரிகிறது. மனம் கனக்கிறது எதுவும் செய்ய இயலா கையாலாகாத்தனத்துடன் தன படுக்கையை மொட்டை மாடிக்கு மாற்றி கொள்கிறாள்.

குழந்தை பிறக்கிறது. இவள் இளைய தாரத்தின் ஏச்சுக்கும பேச்சுக்கும் ஆளாகிறாள். கடைசியில் நாராயணன் பாவனாவை வேறு ஒருவனுக்கு விற்று விடுகிறான். வாங்குபவன் வரும் போது உணர்ச்சியற்று நடை பிணமாக அவன் பின் செல்கிறாள். 

இது கதை மட்டுமே இதில் எழுத படிக்க தெரியாமல் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமே தெரிந்த பஞ்சாப் கிராமத்து பெண்களின் நிலை கண் முன் விரிகிறது. ஏறக்குறைய அநேக இந்திய பெண்களின் நிலை சற்று முன்பின்னாக இப்படி தான் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த நாவலில் ஸிந்தியாக வரும் பக்கத்து வீட்டு பெண்ணும் பாவனாவும் உரையாடும் இடங்களில் எல்லாம் பெண்களின் அறியாமையும், ஆண்களை சார்ந்திருக்கும் பெண்களின் நிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம். நாராயணன் குடித்து வந்து பாவனாவை அடிக்குமிடம் அனாதையாக போக்கிடம் இல்லாத பாவனா கங்கையிலேயே மூழ்கி செத்திருக்கலாம் உயிரோடு இருப்பதனால் என்ன சுகம் என்ற ரீதியில் சிந்தனை ஓடவிட பெண்களின் நிலை மனதை அழுத்துகிறது.

நாராயணன் ஒன்றும் கொடுமைக்காரன் இல்லை பாவனாவிடம் அவன் நன்றாக தான் பேசுகிறான் அன்பாகவும் இருக்கிறான் என்கிற போதிலும் அவளை பற்றி அவன் குடிகார நண்பன் சொன்ன பேச்சை கேட்டு அடிக்கும்போதும் பின் தவறு உணர்ந்து அவளுக்கு ஒத்தடம் கொடுப்பதும் அவன் திருமணம் செய்து கொள்வதும் புதிதாக வந்தவள் கொடுமைப்படுத்த அவளை கண்டித்து பாவனாவிடம் இரக்கம் காட்டினாலும் கையாலாகாதனத்துடன் அவளை வேறு ஒருவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் அங்கு ஆண்கள் எல்லாம் இப்படி தான் இதெல்லாம் சகஜம் தான் என்று ஆசிரியர் சொல்லி இருப்பதன் மூலம் சராசரி இந்திய ஆணின் மனநிலையை நாராயணன் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.