Sunday 27 December 2015

“ செஸர்யோஷா” - வேரா பானோவா - ரஷ்ய மொழிப்பெயர்ப்பு பற்றிய ஒரு பார்வை

“ செஸர்யோஷா” வேரா பானோவா என்ற ருஷ்ய எழுத்தாளரின் படைப்பு. கதையின் நாயகன் செஸர்யோஷா என்ற ஐந்து வயதுக்குள் இருக்கும் சிறுவன் தான். இவ்வளவு துல்லியமாக ஒரு குழந்தையின் உலகத்துக்குள் வளர்ந்துவிட்ட மனிதர்களால் ஊடுருவ முடியுமா என்று ஆச்சரியமும்., தான் மட்டும் ஊடுருவாமல் வாசிப்பவரையும் அதற்குள் ஊடுருவ செய்ய முடியுமா என்ற பிரமிப்பும் இன்னும் அகலவில்லை.

செஸர்யோஷாவின் உலகம் ஒரு ருஷ்ய கிராமத்தில் ஆரம்பிக்கிறது. தாய் மற்றும் பாசா அத்தை, லுக்யானிச் மாமா ஆகியோருடன் வசிக்கிறான். அவனுக்கு தந்தை கிடையாது. அதை பெரிதாக உணர தெரியவில்லை. அந்த தெரு குழந்தைகளுடன் விளையாடுவதும் அத்தை அம்மாவிடம் கதை கேட்பதும், தன்னை சுற்றியுள்ள உலகத்தை உற்று கவனிப்பதும், எல்லாவற்றையும் வியந்து ஆச்சரியப்படவும் பிற உயிரினங்களில் சிலவற்றை கண்டு பயப்படுவதும, சிலவற்றுடன் நட்பு பாராட்டுவதும் எங்காவது ஏறுவதும் கீழே விழுவதும் அதை அவன் பார்வையில் இருந்து பெரிய விஷயமாக பார்ப்பதும் பெரியவர்கள் அவனின் பெரிய விஷயத்தை சின்ன விஷயமாக நினைப்பதுவும், ஓடத்தில் ஏறி தண்ணீரில் விழுவதும் நீச்சல் தெரியாமல் காப்பாற்றப்படுவதும் அதை அவன் பார்வையில் என்று கதை விரியும் கோணத்தில் நாம் ரஷ்ய கிராமத்தில் அந்த சிறுவனுடன் சிறுவனின் உணர்வுகளில் ஒன்றிவிடுகிறோம.

ஒருநாள் செஸர்யோஷாவின் தாயார் அவனை கூப்பிட்டு உனக்கு அப்பா வரப்போகிறார் என்கிறாள். தாயின் முழங்காலுக்கிடையில் நின்று குழம்பி அம்மாவை பார்க்கிறான். அம்மா அப்பா வந்தால் என்னவெல்லாம் அவனுக்கு கிடைக்கும் என சொல்ல அவன் சந்தோசமாகி தன் சக நண்பர்களுடன் பெருமை பட்டு கொள்கிறான். ஆனால் நண்பர்களில் சிலர் அப்படி எல்லாம் இல்லை அப்பா என்றால் தோல் பெல்ட்டால் விளாசுவார் என்று சொல்ல பயப்படுகிறான். கொரஸ்தெல்யான் என்ற முன்னாள் இராணுவ வீரனும் இந்நாள் பண்ணை உயரதிகாரியும் தான் தந்தை என்று தாய் சொல்கிறார். ஏகப்பட்ட கலக்கம் இருந்தாலும் வீடே அவனை வரவேற்க தயாராகும் நிகழ்வில் சிறுவனும் கரைந்துவிடுகிறான்.

கொரஸ்தெல்யா வீட்டுக்கு வர அவன் செஸர்யோஷாவிடம்
நான் உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டேன் உனக்கு ஆட்சேபனை இல்லையே என கேட்கிறான்.

செஸர்யோஷா நீ எங்களுடன் எப்போதும் இருக்க போகிறாயா எனக்கேட்கிறான்

ஆமாம் எப்போதும் என்று பதில் சொல்கிறான்

நீ என்னை இடுப்பு வாரால் அடிப்பாயா என்று கேட்கிறான்
அவன் ஆச்சரியமடைகிறான்

நான் உன்னை எதற்காக இடுப்புவாரால் அடிக்க போகிறேன்?

நான் சொன்னபடி கேட்காவிட்டால் என்று விளக்குகிறான் செஸர்யோஷா

மாட்டேன் என் கருத்துப்படி இடுப்புவாரால் அடிப்பது முட்டாள்தனம் இல்லையா என்றான்.

முட்டாள்தனம் என்று உறுதிப்படுத்தினான் செஸர்யோஷா, குழந்தைகளும் அழுவார்கள் என்றான்.

நீயும் நானும் ஆம்பிள்ளைகள் ஆயிற்றே , ஒருவருக்கொருவர் பேசி சரி கட்டிக்கொள்வோம் என்கிறான். சரி ஞாயிற்றுக்கிழமை நீயும் நானும் விளையாட்டு சாமான்கள் விற்கும் கடைக்கு போவோம் உனக்கு வேண்டியதை நீயே தேர்ந்தேடுத்துக்கொள் சரி தானா என்கிறான்
அப்போ எனக்கு சைக்கிள் வேண்டும் என்கிறான்.

சரி என்கிறான் . ஞாயிற்றுக்கிழமையை ஆவலுடன் எதிர்ப்பார்க்க தொடங்குகிறான்.

அப்பா வந்த முதல் நாள் அவன் பாசா அத்தை அறையில் படுக்க வைக்கப்பட இனம்புரியாத உணர்வால் அலைக்கழிக்கபடுகிறான். காலை கண்விழித்து பார்க்கும்போது தான் தெரிகிறது, அம்மாவை தேடி அவன் அறைக்கு செல்ல அறை தாழிடப்பட்டு இருக்கிறது, கதவை தட்டுகிறான் அத்தை வந்து தூங்குபவர்களை எழுப்ப கூடாது என்கிறாள் என் விளையாட்டு சாமான் எல்லாம் அங்கே இருக்கு என்று சொல்ல அவர்கள் எழுந்த பின் எடுத்து கொள்ளலாம் என்று சொல்ல நிம்மதியின்மையுடன் தெருவுக்கு வருகிறான். அங்கு அமைதியாக உட்கார்ந்திருக்க அவன் சக நண்பர்கள் இவன் ஏங்கி போயிருப்பதை பார்த்து கவலைப்படாதே அவர் ஒன்றும் மோசமானவர் இல்லை என்று அந்த கூட்டத்திலேயே பெரிய பையன் சொல்கிறான். அவன் ஆமாம் எனக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்கிறான்.

ஒரு குழந்தையின் உணர்வு எப்படி இருக்கும் தான் ஆசைப்பட்டதை வாங்க போகும் போது, எப்படி பொறுமையிழந்து தவிக்கும், எப்படி பரபரக்கும் என்பதை எல்லாம் ஆசிரியர் நடையில் வாசிக்க இது போல ஒரு பரபரப்பை நாமும் சின்ன வயதில் அனுபவத்திருப்பதால் அத்தனையும் உள்வாங்கி சிறுவனாக மாறுகிறோம்.

அதன் பின் சைக்கிள் வாங்கி வந்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டி அதை உடைத்து கீழே விழுந்து ஓட்ட கற்று கொண்டு அப்புறம் அந்த சைக்கிள் சலித்து போவது கொஞ்சம் கொஞ்சமாக புது அப்பாவுடன் அவன் ஒட்டி கொள்வது அவருடனும் நண்பர்களுடனும் சந்தோசமாக பொழுதை கழிப்பது, பாட்டி ஒருவர் இறந்து விட அந்த இறுதி சடங்கை பார்க்கும் சிறுவன் பீதியடைந்து கத்துவது, அங்கு வரும் ஒருவர் எல்லாரும் சாகத்தான் போகிறோம் என சொல்ல அப்பாவிடம் அதுபற்றி கேட்க இல்லை நாமெல்லாம் சாகமாட்டோம் என்று அப்பா உறுதியளிக்க சிறுவன் நிம்ம்திய்டைவதும் ,நண்பர் ஒருவரின் மாமா வர அவர் உடம்பில் பச்சை குத்தி இருப்பதை பார்த்து சிறுவர்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் பச்சை குத்தி கொள்ள முயற்சிப்பது அதன் விளைவாக செஸர்யோஷாவுக்கு காய்ச்சல் வருவது மருத்தவரை குழந்தை விரோதியாக பார்ப்பது என்று முழுக்க குழந்தை உலகம் அழகாக பின்னப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இவன் தாய் கர்ப்பமுற அப்பா இவனிடம் என்ன குழந்தை வேண்டும் என்று கேட்க தம்பி என்று சொல்ல குழந்தை எப்படி வரும் என்பதை பற்றி அவனுக்கு இருக்கும் அறிவை கொண்டு ஆஸ்பத்திரியில் குழந்தை விற்பார்கள் என்று நம்புகிறான். தம்பியும் பிறக்க இவன் பார்வையில் இருந்து குழந்தையை எப்படி எதிர்கொள்கிறான் பெரியவர்கள் அதை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்று சொல்ல வரும் இடத்தில் பெரியவர்களின் அபத்தத்தை ஆசிரியர் சொல்லி இருப்பார்.

காய்ச்சல் சரியாகி கொஞ்ச நாட்களில் இவனுக்கு டான்ஸில் வர அதனால் அதிகம் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் சோர்வாகிறான். பள்ளிக்கு பிள்ளைகள் சென்றுவிட தனிமையில் துவள்கிறான். இதற்கிடையில் இவன் தந்தைக்கு ஹோல்ம்கோரீ என்று தொலைதூர ஊருக்கு மாற்றல் வர புது இடம் என்று சிறுவனை பாசா அத்தையிடம் விட்டு செல்ல முடிவெடுக்கிறார்கள். கோடை காலத்தில் வந்து கூட்டி செல்லலாம் என.

ஆனால் செஸர்யோஷா அழுது முரண்டு பிடிக்கிறான், தாய் கண்டிக்கிறார். அப்பா அவனை கூட்டி போய் ஆறுதல் நிறைய சொல்கிறார். இருந்தாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை சிறுவனால் அவன் அப்பா வாக்குறுதி தருகிறார் அதில் சிறிதளவு நம்பிக்கை வைத்தாலும் சந்தேகம் நிறைய ஆட்கொள்ள அழுது கொண்டே இருக்கிறான். ஒரு நாள் இரவு எல்லாரும் சாமான்களை மூட்டை கட்டி அயர்ச்சியில் தூங்க செஸர்யோஷா அப்பாவின் கழுத்தை கட்டி கொண்டு அழுகிறான். அவர் நிலைமையை சொல்லி டாக்டர் உன்னை கூட்டி போககூடாது என்று சொல்லி இருக்கார் இல்லையா நான் கண்டிப்பாக கோடையில் கூட்டி போகிறேன் அழகூடாது என்கிறார்.

அதன் பின் அழாமல் இருக்க முயற்சித்தாலும் உள்ளுக்குள் புழுங்குகிறான். பெரியவனாகி என்னலாம் செய்யணும் என்று எல்லாம் சொல்லி கொண்டாலும் வீட்டில் சாமான்கள் கட்டி அடுக்கப்பட தனித்து விடப்பட்ட உணர்வில் இருந்து அவனால் வெளியேவர முடியாமல் வெளியேயும் காட்டாமல் தவிக்கிறான்

புறப்படும் நாள் வந்து லாரியில் எல்லாம் ஏற்றப்பட செஸர்யோஷா அழுகையை அடக்கிக்கொண்டு பார்க்கிறான். அம்மா அணைக்க வர அவள் அணைப்பில் இருந்து விலகி மருகுகிறான். வண்டி புறப்பட சிறுவன் ஓவென வெடித்து அழ தயார் நிலையில் அதே நேரம் அப்பா அழக்கூடாது என்று சொன்னதுக்கு கட்டுப்பட்டு நிற்கிறான்.

லாரி புறப்பட தொடங்க அவன் அப்பா லாரியில் இருந்து குதிக்கிறார். செஸர்யோஷா ம்ம் தயாராகு மளமளவென்று புறப்படு என்று சொல்ல பாசா அத்தை உனக்கு மூளை பிசகிவிட்டதா டாகடர் சொன்னதை மறந்து விட்டாயா என்று கேட்க நான் பொறுப்பேற்று கொள்கிறேன் அவனை விட்டு போவது ஏதோ ஒரு அங்கத்தை விட்டு போவது போல இருக்கு நீ போ உன் சாமான்களை எடு செஸர்யோஷா என்று சொல்ல முதலில் மலைத்து நிற்கும் அவன் பின் அத்தை மற்றவர்கள் எல்லாம் பேசி அப்பா மனதை மாற்றிவிட கூடாதே என்று பரபரப்பில் கிளம்பும் வேகம் ஹப்பா செஸர்யோஷாவுடன சேர்ந்து வாசிப்பவர்களும் கண் கலங்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். இந்த கடைசி அத்தியாயம் முழுதும் ஆசிரியர் சிறுவனின் உணர்வுகளில் நம்மை சொருகி விடுகிறார்.

நம் சிறுவயதின் ஏக்கம், ஆசை, பொருமல் எல்லாவற்றையும் அதன் அடி ஆழம் சென்று கண்டுவிட்ட உணர்வும் நம் பிள்ளைகளை நாம் புறக்கணிக்கும் போது அவர்கள் உலகம் புரியாமல் அவர்கள் மீது நாம் ஆதிக்கம் செலுத்தும் போது அவர்கள் இப்படி தானே இருந்திருப்பார்கள் என்ற உணர்வும் ஒரு சேர எழுகிறது.

No comments:

Post a Comment